முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடி எனும் சமூகமாக்கல் நிபுணர்



பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஷேகர் குப்தா தனது கட்டுரை ஒன்றில் என்னதான் சமூக வலைதளங்களில் கலாய்க்கப்பட்டாலும் மோடி தன் ஒவ்வொரு அடியிலும் வெற்றிபெறுகிறார் என்கிறார். அவர் எந்தளவுக்குத் திறமையான புத்திசாலித்தனமான ஒருபேச்சாளர்’, சமூகமாக்கல் நிபுணர் என்பதைக் குறிப்பிடுகிறார். எப்படி
 மற்ற தலைவர்கள் மக்களிடம் தன் கருத்துக்களைக் கூறுவார்கள், சமூகப் பிரச்சனைகளைப் பற்றி ஆவேசமான மொழியில் உரையாடுவார்கள். ஆனால் அப்போது மக்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பர். ஆனால் மோடிக்கு மக்களின் நாடித்துடிப்பு தெரிகிறது. எவ்வளவு நெருக்கடியான சமயத்திலும் மக்களின் நற்பெயரை சம்பாதிக்கத் தெரிகிறது. அதற்கு அவர் பயன்படுத்தும் ஒரு உத்தி சமூகவலைதளங்களில் இருந்து உருவியது. என்ன உத்தி?


 சமூக வலைதளங்கள் ஏன் இவ்வளவு வசீகரமாய் போதையூட்டும்படியாய் இருக்கின்றன? அங்கு நாம் எவ்வளவு படித்தாலும்படிப்பதாகஉணர்வதில்லை. யாரோ ரொம்ப பக்கத்தில் நின்று நம்மிடம் அரட்டை அடிக்கிற உணர்வு வருகிறது. அந்த நபர் தொடர்ந்து நம்முடைய உணர்ச்சிகளை மதிக்கிறார், கருத்துக்களை பொருட்படுத்துகிறார். (அவரைப் பிடிக்காவிட்டால் நாம் அவரிடம் இருந்து விலகிட முடியும்.) முதன்முதலாக நாம் மதிக்கப்படுவதாக, பொருட்படுத்தப்படுவதாக உணர்கிறோம். மோடி நம்மை கொரோனாவுக்கு எதிராக கைதட்ட சொல்லும் போதும், விளக்கணைத்து டார்ச் அடிக்க சொல்லும் போதும் அவர் நம்முடன் ஒரு பேஸ்புக் பதிவரைப் போன்றே நடந்து கொள்கிறார் - அவர் நம்மை சமமாக நடத்துவதாய், நம்முடனே இருப்பதாய் ஒரு பிரமையை ஏற்படுத்துகிறார். நம்மிடம் கோரிக்கைகள் வைக்கிறார். அவற்றை நாம் ஏற்று நடந்து கொண்டால் நாம் அவரது அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதாய், அவரிடத்தில் இருந்து தேசத்துக்காக சேவை செய்வதாக உணர்கிறோம்.
 தொடர்ந்து தனிமையில் தவிக்கிற, போதிய கவனம் கிடைக்கவில்லை என வாடுகிற ஒரு பெரும் ஜனக்கூட்டத்துக்கு இந்த சின்னச்சின்ன செய்கைகள் பெரிய நம்பிக்கையை, நிறைவை அளிக்கிறது. இத்தனை கோடி பேர்கொண்டாடுகிறஒரு பெரும் தலைவன் தன்னிடம் கைகூப்பிக் கெஞ்சுகிறானே, அவனுக்காக நாம் பதிலுக்கு ஒன்றை செய்தோமோ என நெகிழ்கிறார்கள். எப்படி பேஸ்புக் பதிவர்களிடம் நாம் நம்முடன் வாழும் குடும்பத்தினரை விட அதிக அணுக்கத்தை உணர்கிறோமே அதைப் போல மெல்ல மெல்ல மோடியிடமும் உணரத் தொடங்குகிறோம்.
 இன்று இரவு விளக்கேற்றி வைத்து என் அண்டை வீட்டார்கள் கொண்டாடியதைக் கண்டேன். அத்தனை பேரும் சங்கிகள் அல்ல. அவர்களில் கிறுத்துவர்கள், இஸ்லாமியர், இந்துத்துவ எதிர்ப்பாளர்கள் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் தம் பிரதமருக்கு அணுக்கமாய் சில நொடிகளாவது உணர்ந்த வாக்காளர்கள். அவர்கள் விளக்கணைத்து மெழுகுவர்த்தியை ஏற்றும் போது தாம் தனிமையாக பலவீனமாக இல்லை என உணர்கிறவர்கள். இவ்வளவு சமூகத்தனிமையும், பாதுகாப்பின்மையும் கொண்ட ஒரு காலத்தில் அது அவர்களுக்கு அதிகாரத்தின் ஒரு தற்காலிக அரவணைப்பை, நம்பிக்கையை, வலிமையை அளிக்கிறது

மோடியின் இந்த கொரோனா எதிர்ப்பு பரிந்துரைகள் நமக்கு வேடிக்கையாகத் தெரியலாம். அவர் படித்தவரும் அல்ல. ஆனால் இன்றைய காலத்தில் எப்படி மக்களுடன் உரையாட வேண்டும் என கண்டுபிடித்த புத்திசாலி.
 இன்று மக்களுக்கு கேட்க அல்ல பேசவே விருப்பம். ஆகையால் மோடி அனைவரையும் கைதட்டி, டார்ச் அடித்து, சங்கை முழக்கி, பட்டாசு வெடித்து தன்னிடம்பேசஒரு வாய்ப்பை அளிக்கிறார்.
 ஒரு புதுப்படம் வெளியாகும் போது ரஜினி / விஜய்யின் ரசிகர் மன்றங்கள் எப்படி செயல்படும் எனப் பார்த்திருப்பீர்கள். ரசிகர்களுக்கு இந்த நட்சத்திர நடிகர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களைப் பொருட்படுத்தி அங்கீகரிப்பது, பெரிய விளம்பரத் தட்டிகளை எழுப்பி, அதில் பால் ஊற்றி, பெரிய ஆர்ப்பாட்டம் செய்ய இடமளிப்பது மட்டுமே. அந்த ஆர்ப்பாட்டங்கள் ஒருவித உரையாடல். அது அவர்களுக்கு அடையாளத்தை, வாழ்க்கை மீது நம்பிக்கையை அளிக்கிறது. மோடி இதை அடுத்த நிலைக்கு எடுத்து செல்கிறார்.

அவர் யாரையும் தன்னைப் புகழ, பாராட்டக் கோருவதில்லை. அவர் மக்களிடம் தமக்காக சில காரியங்களைச் செய்யக் கோருகிறார். அச்செயல்கள் அபத்தமாக் இருந்தாலும் அவற்றின் வழி இந்த தேசம் மொத்தத்துடன் பேச, தேசத்தின் கவனத்தை தம் பால் திருப்பிட ஒரு வாய்ப்பை அவர் வழங்குகிறார். எப்படி மோடியின் ட்வீட்டுக்கு எல்லாரும் செவிசாய்ப்பார்களோ இப்போது அவருக்கு இசைந்து செயலாற்றுகிறவர்களும் சில நிமிடங்கள் மோடியின் ஒளிவட்டத்தைப் பெற முடியும். ரஜினி / விஜய் ரசிகர்களின் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யாது. ஆனால் மோடி இந்த உத்தி மூலம் தன்னை நேசிக்காதவர்களைக் கூடநேசிக்கவைத்து விடுகிறார். ஒன்பதே நொடிகளில் அவர் பல கோடி பேர்களைத் தன்னுடன் உரையாட வைக்கிறார். அது தான் அவரது அதிகாரம்

ஒரு ஆசிரியனாக நான் இந்த உளவியல் மாற்றத்தை தற்போது கவனிக்கிறேன் - இன்று வகுப்புகளில் மாணவர்களை கவனிக்க வைக்க சிறந்த வழி அவர்களைப் பேச வைத்து அதன் வழியே நாம் பேசுவது தான். இன்று ஸ்மார்ட் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பாடமெடுப்பதில்லை - அவர்கள் செயலிகள் வழி மாணவர்களை தம்மைத் தாமே கற்க செய்கிறார்கள். மாணவர்கள் அப்போது தாம் செயலூக்கத்துடன் உள்ளதாக, அதிகாரம் பெறுவதாக நினைத்து குஷியாகிறார்கள். ஒரு ஆசிரியர் இன்று வகுப்பை நடத்துகிறவர் அல்ல ஒருங்கிணைப்பவர் (facilitator).
மோடியும் இந்த ஸ்மார்ட் வகுப்பறையின் facilitator ஆசிரியர்களைப் போலத் தான் குடிமக்களை நடத்துகிறார். எதிர்கால இளம் தலைவர்களுக்கு மோடியின் இந்த கோமாளித்தனங்கள் ஒரு பாடப்புத்தகமாக இருக்கும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...