முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேலை நீக்கம் எனும் மனித உரிமை மீறலும் தீர்வும்

நாமெல்லாம் கௌரவமான அடிமைகளன்றி வேறில்லை


இந்த நாடடங்கு வேளையில் வேலை நீக்கம் செய்யாதீர்கள் என பிரதமர் உருக்கமாகக் கேட்கிறார், ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாமல் விகடன் நிறுவனம் கொத்தாக 167 பேரை வேலை நீக்கம் செய்கிறது. இந்த சமயத்தில் அவர்களால் வேறெங்கும் போய் வேலை தேட முடியாது, ஒவ்வொரு ஊழியருக்கும் குறைந்தது மூன்று பேராலான குடும்பம் என இதனால் 668 பேர் தெருவுக்கு வருவார்கள் என்கிற அடிப்படை உண்மை கூட விகடன் நிர்வாகத்துக்கு உறைக்காதா?

 இந்த நெருக்கடியில் வருமானம் இல்லை என்பது காரணமெனில் நிர்வாகம் கணிசமாக ஆனால் தற்காலிகமாய் வருமானத்தைக் குறைக்கலாம், பொருளாதாரம் மேம்பட்ட பிறகு அந்த பணம் திரும்பத் தரப்படும் எனும் வாக்குறுதியுடன். ஏற்கனவே 30% ஊதியம் குறைக்கப்பட்டதை ஏற்றுக்கொண்ட விகடன் ஊழியர்கள் மேலும் கூடுதலாக ஊதியம் குறைக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்வார்கள். சொல்லப்போனால் சம்பளமின்றி வேலையில் இருப்பது கூட வேலையை இழப்பதை விட மேல். வேலையில் இருந்தபடியே வேறு இடங்களுக்குப் பெயர்வது அவர்களுக்கு சுலபமாக இருந்திருக்கும். ஆனால் இப்போதோ அவர்களின் அவல நிலையைக் கண்டு மிகக்குறைவான ஊதியத்துக்கு வேலைக்கு எடுக்க முன்வருவார்கள். மற்றொரு பக்கம் பெரும்பாலான நிறுவனங்களில் அடுத்த ஒரு வருடத்துக்கு வேலை சேர்க்கை நடைபெறுமா என்பதே சந்தேகம். இந்த சந்தர்பத்தை விகடன் நிர்வாகம் நயவஞ்சகமாக பயன்படுத்திக் கொண்டு ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளது என்றே புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.
நாம் ஒரு வேலையில் இருந்து விலகும் முன் ரெண்டு, மூன்று மாதங்களாவது நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஆனால் ஒருவரை வேலையில் இருந்து நீக்கும் போது எந்த நிர்வாகமும் இந்த நடைமுறையை பின்பற்றுவதாகத் தெரியவில்லை. அதுவும் இந்த சந்தர்பத்தில் ஏதோ சேரியை காலி பண்ணுவதைப் போல ஊழியர்களை கும்பலாக அடித்துத் துரத்துவது ஒரு மனித உரிமை மீறல் மற்றும் மன்னிக்க முடியாத அநீதி.

விகடனில் எனக்குப் பிடித்த விசயம் அங்கு நிறைய எழுத்தாள நண்பர்கள் பணி செய்கிறார்கள் என்பது. இப்போது அவர்களில் ஒருவரான அதிஷாவுக்கு வேலை போய் விட்டது என்பது கூடுதல் வருத்தம் அளிக்கிறது.

மூன்று விசயங்கள் இதை ஒட்டித் தோன்றுகின்றன:
1) வலுவான தொழிற்சங்கங்கள் தனியாரிலும் எவ்வளவு அவசியம் என்பதை இது காட்டுகிறது. நாம் இடதுசாரிகளை காலாவதியானவர்கள், முன்னேற்றத்துக்கு எதிரிகள் என்றெல்லாம் கருதுவது எப்படியான ஒரு ஆபத்தான முனையில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது பாருங்கள். முதலீடு செய்கிறவனுக்கு கட்டற்ற சுதந்திரத்தையும் அதிகாரத்தையும் கொடுத்து உழைப்பை மதிப்பற்றதாக, உழைக்கிறவனை எதிர்காலமற்றவனாக மாற்றி வைத்திருக்கிறோம். வேலையிழந்தால் தெருவுக்கு வர வேண்டியது தான், கூட நிற்க எவனுமில்லை எனும் நிலை. இடதுசாரிகளை காலி செய்து நாமே நமக்கு பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோம்

2) பொருளாதாரம் சற்றே பலவீனமாகும் போது வளர்ச்சியின் நாயகர்களாகக் கருதப்படும் இந்த முதலாளிகள் என்ன பண்ணுவார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஒன்று அவர்கள் தம்மைக் காப்பாற்றி விடுவதற்கு, தமக்கான பல்லாயிரம் கோடி கடனை செலுத்துவதற்கு அரசை நம்பியிருப்பார்கள். ஊழியர்களை நோட்டீஸ் இல்லாமல் வீட்டுக்கு அனுப்பி பொருளாதாரத்தை மேலும் பலவீனமாக்குவார்கள் (மக்கள் வேலை இழந்தால் வாங்கும் திறனை இழப்பார்கள், அவர்களை நம்பியுள்ள பலரும் பாதிக்கப்படுவார்கள், அதனால் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும்.) நமது பொருளாதாரத்தின் மிகப்பெரிய எதிரிகள் இடதுசாரிகள் அல்ல இந்த முதலாளிகள் தாம். அவர்கள் மூழ்கும் கப்பலில் இருந்து தப்பிச்செல்லும் எலிகளைப் போன்றவர்கள். புண்ணில் நெளிந்து நாட்டில் தசையைக் தின்று கொழுக்கும் புழுக்களைப் போன்றவர்கள்

3) இந்த அரசு இப்போது மின்வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு கட்டாயத்திருமணம் செய்து வைக்க முனைவது இப்போதுள்ளதை விட மோசமான பாதுகாப்பின்மையை மக்களுக்கு ஏற்படுத்தும். தொடர்ந்து மோடி, அமித் ஷா அரசாங்கங்கள் அடுத்த முப்பது வருடங்களுக்கு அரியணை ஏறினால் ஒரு நாள் இங்கே அரசு வேலை என்பதே அபூர்வமாக இருக்கும். இதை எதிர்ப்பது, தடுப்பது சுரணை உள்ள ஒவ்வொருவரின் பொறுப்பாகும்

தனியார் வேலை என்றால் இப்படித்தான் இருக்கும். ஒருவரை வேலையில் தக்க வைப்பதும் துரத்துவது முதலாளியாகப்பட்டவனின் உரிமை என சிலர் சொல்வார்கள். அதிலும் உண்மை உள்ளது. ஓரளவுக்கு மேல் இந்த தாராளவாத பொருளாதார சந்தையில் அரசு தலையிட முடியாது.
சரி, இந்த சாபக்கேட்டிற்கு தீர்வு தான் என்ன?
இந்த பொருளாதார அமைப்பை மாற்றுவது - தனியாரை விட அதிகமான பணமும் அதிகாரமும் படைத்தது அரசு. அரசே நேரடியாக இந்த தொழில்களில் முதலீடு செய்து பெரும் நிறுவனங்களை நடத்த முடியும். எல்லாருக்கும் வேலை அளிக்கவும் லாபத்தில் பெரும்பகுதி ஸ்விஸ் வங்கிகளுக்கு செல்லாமல் கஜானாவுக்குப் போகும்படி பார்த்துக்கொள்ளவும் முடியும். தமிழக அரசு சாராயம் விற்கிறது, அதுவே அதன் பெரும்பகுதி வருமானம் எனும் போது இதை விட மேலான தொழில்களை நடத்தி அதனால் ஏன் லாபம் ஈட்ட முடியாது? தனியார் முதலாளிகளுக்கு வரும் லாபம் எப்போதும் கறுப்புப்பணமாக மாறி பொருளாதாரத்தை நலிவடைய செய்கிறது. ஆனால் அரசு தொழில் செய்தால் அது சாத்தியமாகாது. (ஊழல் இருக்கும் தான், ஆனால் அதை மக்களால் கண்காணிக்க முடியும்.) மக்கள் அனைத்து நிறுவனங்களின் பங்குதாரர்களாக ஆகலாம், ஒரு அரசின் வருடாந்தர லாபத்தின் அடிப்படையில், அது ஊழியர்களை நடத்தும் விதத்தின் அடிப்படையில் தேர்தலில் வாக்களிக்கலாம், இன்றுள்ளது போல பாகிஸ்தானில் ஏவுகணை அனுப்பியதா, எரிவாயு சிலிண்டர் தந்ததா என்பதை வைத்தல்ல.
அப்படி ஒரு புதிய பொருளாதார அமைப்பின் கீழ் அரசு அமைந்தால் யாரும் ஜி.எஸ்.டி, வருமான வரி உள்ளிட்ட எந்த வரியும் செலுத்த வேண்டியிருக்காது. ஒரு குறிப்பிட்ட சதவீதத்துக்கு மேல் லாபம் என்றால் அரசு அத்தொகையை அனைத்து மக்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என சட்டம் இயற்றலாம். இப்போதுள்ளது போல நிவாரணம் என்பது அரசு கருணை அடிப்படையில் வழங்குவது எனும் நிலை இருக்காது. ஒரு நெருக்கடி நிலையின்போது அரசு தயங்காமல் மக்களின் வங்கிக்கணக்கில் ஊதியத்தைப் போடலாம், அப்படி செய்யும்படி தனியாரைக் கெஞ்சத் தேவையிராது. அப்போது ஜனத்தொகையில் 97% பேர் மத்திய வர்க்கம், மேல் மத்திய வர்க்கமாக இருப்பர். இந்த நாட்டின் ரிரையல்ன்ஸ் என்பது ஒரு பனியா குடும்பமாக அல்ல அரசு அமைப்பாக இருக்கும், அரசின் சொத்துக்கு உரிமையாளர் வாக்காளர் நாமனைவருமாக இருப்போம்.

அத்தகைய மாற்றம் வரும் வரை நாமனைவரும் கௌரவமான அடிமைகள் மட்டுமே
இப்போதைக்கு நமது சக அடிமைகளுக்கு இந்த கேடுகெட்ட விகடன் நிறுவனம் செய்த அநீதிக்கு பலத்த கண்டனங்களைத் தெரிவிப்போம்.

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மைகள்...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...