முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சக்லைன் முஷ்டாக்: உள்ளே வெளியே…



சக்லைன் முஷ்டாக் தொண்ணூறுகளில் off ஸ்பின் பந்து வீச்சை புதுப்பித்தவர். அவர் இல்லாவிட்டால் ஒருவேளை off ஸ்பின் இன்று கிட்டதட்ட காணாமல் போயிருக்கலாம். அவர் இல்லையென்றால் ஹர்பஜன், அஜ்மல், அஷ்வின் ஆகியோர் இத்துறையில் ஜொலித்திருக்க முடியாது. சக்லைன் தூஸ்ரா எனும் ஒரு புதுவகை பந்தை கண்டுபிடித்து off ஸ்பின்னுக்கு புது உயிர் அளித்தார்.

தூஸ்ரா என்றால் என்ன? வழக்கமான Off ஸ்பின் பந்து வெளியே இருந்து உள்ளே ஸ்டம்பு நோக்கி வரும். ஆனால் தூஸ்ரா உள்ளே இருந்து வெளியே போகும். ஆனால் பந்து வீசும் பாணி இரண்டு பந்துகளுக்கும் ஒரே போல இருக்கும். சக்லைன் தூஸ்ராவை கண்டுபிடித்த பின் off ஸ்பின் என்றால் பேட்ஸ்மேன்கள் அஞ்ச ஆரம்பித்தார்கள். குறிப்பாக 1997இல் இருந்து 2000 வரை சக்லைன் முஷ்டாக் ஒரு ஒருநாள் ஆட்டத்தின் இறுதி பத்து ஓவர்களில் பந்து வீசி ஏகப்பட்ட விக்கெட்டுகளை குவித்தார். 40வது ஓவரில் சக்லைன் பந்து வீச வந்தால் மளமளவென விக்கெட்டுகள் சரியும். எந்த நிலையில் உள்ள ஆட்டத்தையும் சக்லைனால் இந்த கட்டத்தில் வென்று தர முடிந்தது. இறுதி பத்து ஓவர்களுக்கு death overs என்று பெயர். சக்லைன் முஷ்டாக் இந்த ஓவர்களை பேட்ஸ்மேன்களின் death உறுதி செய்யும் கட்டமாய் மாற்றினார்.
தூஸ்ரா: பெயர் தோன்றின கதை
சக்லைன் கண்டுபிடித்த இந்த பந்துக்கு அவர் பெயர் வைக்கவில்லை. சக்லைன் 1995இல் ஆடத் துவங்கிய காலத்தில் அவருக்கு எப்போது தூஸ்ராவை போட வேண்டும் எனத் தெரியாது. அனுபவமின்மையால் அவர் திணறினார். அப்போது அணியின் சீனியரான விக்கெட் கீப்பர் மோயின்கானின் அறிவுரைக்கு ஏற்றபடியே சக்லைன் வீசுவார். பேட்ஸ்மேன் கவனம் இழக்கிறார், அதிகம் கால்பக்கம் ஆடவே முனைகிறார் எனத் தோன்றினால் மோயின்கான் உருதுவில் சக்லைனிடம்உன்னுடையரெண்டாவது பந்தைவீசுஎன கூறுவார். ரெண்டாவது பந்துக்கு உருதுவில்தூஸ்ராஎன்று பெயர். ஒரு நாள் ஒரு நேரலை ஆட்டத்தில் மோயின்கான் இந்த தூஸ்ராவை போடும்படி சக்லைனிடம் கூறும் போது ஸ்டம்ப் மைக் மூலம் அது டிவி வர்ணணையாளர்களுக்கு கேட்கிறது. அவர்கள் உடனே சக்லைனின் அந்த ரெண்டாவது பந்தை கவனித்தார்கள். அதன் பெயர் தூஸ்ரா என அறிவித்தார்கள். அப்படித் தான் தூஸ்ரா அதிகாரபூர்வ கிரிக்கெட் சொல் ஆனது.
சுய அறிதலின் கதை
சக்லைன் முஷ்டாக் 1976இல் பாகிஸ்தானில் லாகூரில் பிறந்தார். அவருடைய அப்பா ஒரு குமாஸ்தா. சக்லைனுக்கு இரு மூத்த சகோதரர்கள். சிப்தைன் முஷ்டாக் மற்றும் ஸுல்குர்னைன் முஷ்டாக். இருவரும் சக்லைனின் உருவாக்கத்தில் முக்கியமானவர்கள். இருவரும் ஸ்பின்னர்கள். அவர்கள் தம் குட்டித் தம்பிக்கு ஸ்பின் வீச சொல்லிக் கொடுத்தார்கள். சக்லைன் சின்ன வயதில் ஒடிசலான குள்ளமாய் இருப்பார். இம்ரான்கான், வாசிம் அக்ரன், வகார் யூனிஸ் ஆகியோரை கிட்டத்தட்ட வழிபட்ட அந்த சின்ன பையனுக்கு அவர்களைப் போல் வேகமாய் பந்து வீச ஆசை. ஆனால் அந்த சோனி உடலைக் கொண்டு அவரால் முடியாது. அதனால் ஸ்பின்னில் கவனம் செலுத்தினார். தெருவில் விளையாட இடம் இல்லாததால் மாலையில் மொட்டை மாடியில் சகோதரர்கள் மூவரும் டேபிள் டென்னிஸ் பந்து கொண்டு கிரிக்கெட் ஆடுவார்கள். மாலையில் ஆட்டம் எப்போதுமே இரண்டு அண்ணன்களும் டியூசன் முடித்து வந்த பிறகு தான் ஆரம்பிக்கும். அதுவரை சின்ன தம்பி சக்லைன் தனியாய் மாடியில் டேபிள் டென்னிஸ் பந்தைக் கொண்டு விதவிதமாய் வீசி பழகி நேரத்தை கழிப்பான். அப்படித் தான் ஒருநாள் off ஸ்பின் வீசும் போது அது வழக்கம் போல் உள்ளே வராமல் வெளியே போனது. பின்னர் அதை தன் அண்ணன்களிடம் வீசிக் காட்டிய போது அவர்கள் வியந்தனர். இது என்ன ஒரு விநோதப் பந்து என குழம்பினார்கள். ஆனால் தம் தம்பியை பாராட்டி ஊக்குவித்தார்கள்.
சக்லைன் பின்னர் இப்படி வெளியே போகும் பந்தை டென்னிஸ் பந்தால் வீச பழகினார். அதன் பின்னர் மெல்ல மெல்ல கிரிக்கெட் பந்தில் பழகினார். கிரிக்கெட் பந்தில் கட்டுப்பாட்டுடன் தூஸ்ரா வீச தனக்கு இரண்டு வருடங்களுக்கு மேல் பயிற்சி தேவைப்பட்டது என்கிறார் சக்லைன்.
சக்லைன் அப்போது ஒரு பேட்ஸ்மேனாக கிளப் ஆட்டங்களில் இடம் பெற முயன்றார். ஆனால் கிளப் அணியில் ஏற்கனவே சிறந்த பேட்ஸ்மேன்கள் நிறைய இருந்ததால் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. “உன்னுடைய ஸ்பின் பந்து வீச்சில் கவனம் செலுத்து. பவுலராக உனக்கு இடம் கிடைக்கும்என அண்ணன்கள் சக்லைனுக்கு அறிவுரை கூறினர். அப்போது உலகமே போற்றும் சிறந்த ஸ்பின்னராய் தம் தம்பி உருவாகப் போகிறான் என அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள்.
தன்னுடைய தூஸ்ரா மூலம் சக்லைன் விரைவில் கிளப் போட்டிகளில் மட்டுமல்ல மாநில அணியிலும் சோபித்தார். 1995இல் சக்லைன் PIA (பாகிஸ்தான் இண்டெர்நேசனல் ஏர்லைன்ஸ்) கிளப் அணியில் ஆடினார். அந்த அணியின் தலைவர் வாசிம் அக்ரம். ஆனால் அக்ரம் சர்வதேச ஆட்டங்களில் பிஸி என்பதால் கிளப்புக்கு பெரும்பாலும் ஆட மாட்டார். ஆனால் சக்லைனின் அதிர்ஷ்டம் ஒரு ஆட்டத்தில் அக்ரம் பங்கு பெற்றார். அப்போது அவர் சக்லைனின் தூஸ்ராவை கண்கூடாக கண்டு வியந்தார். “நான் பல off ஸ்பின்னர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் பார்த்ததிலேயே சிறந்த off ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் தான்என்கிறார் அக்ரம்.
அதன் பின்னர் சக்லைன் பாகிஸ்தான் அணிக்கு தேர்வானார். வாசிம் அக்ரம் தலைவராக இருந்த அணியில் சக்லைன் அட்டகாசமாய் பந்து வீசினார். சக்லைன் ஒரு பக்கம்வாசிம் பாயைகடவுளாக வழிபட்டார். வாசிம் அக்ரம் சக்லைனை சொந்த சகோதரனை போல் நேசித்தார். அவர் மீது நம்பிக்கை வைத்தார். அக்ரம் அணித்தலைவராய் விளங்கின நான்கு வருடங்களும் சக்லைனும் அபாரமாய் வீசினார். அக்ரம் தலைமையில் இருந்து நீக்கப்பட்டதும் சக்லைனும் துவண்டு போனார். காயம் காரணமாகவும் போதுமான ஆதரவு இல்லாமலும் 25 வயதுக்கு உள்ளாகவே அவரது ஆட்ட வாழ்வு பெரும்பாலும் முடிந்து போயிற்று.  
2004இல் இந்திய அணி பாகிஸ்தானுக்கு ஆட சென்ற போது சக்லைன் முட்டியில் காயமடைந்திருந்தார். ஆனாலும் அவர் ஆட வேண்டிய நிர்பந்தம். விரேந்திர சேவாக் முல்தானில் 309 அடித்த ஆட்டத்தில் சக்லைனை அவர் கைமா செய்தார். அதன் பிறகு சக்லைன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டியதாயிற்று. ”என் கிரிக்கெட் வாழ்வு முடிந்து போனதற்கு சேவாக் ஒரு காரணம்என சக்லைன் பிற்பாடு தெரிவித்தார்.
1996இல் இருந்தே சக்லைன் இங்கிலாந்தின் Surrey உள்ளூர் அணியில் ஆடி வந்தார். ஓய்வுக்கு பிறகு அவர் முழுதாய் இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ஆடினார். அங்கு அவர் சானா எனும் பெண்ணை சந்தித்து காதல் கொண்டார். அவரையே மணந்தார். இன்று சக்லைன் இங்கிலாந்தில் ஸ்பின் பவுலிங் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்துகிறார்.
தூஸ்ரா வீசுவது எப்படி?
விதிமுறைகளுக்கு உட்பட்டு தூஸ்ரா வீச முடியாது என அஷ்வின் கூறி உள்ளார். ஆனால் சக்லைன் கிளீனாகவே வீசினார். Off ஸ்பின் வீச பெருவிரல், சுண்டு விரல் மற்றும் நடுவிரலை பயன்படுத்துவார்கள். மணிக்கட்டையும் திருப்ப வேண்டும். நடுவிரலை பயன்படுத்தாமல் மணிக்கட்டை திருப்பாமல் வீசினால் தூஸ்ரா ஆகும் என்கிறார் சக்லைன்.

கூடுதல் தகவல்கள்:
மிக குறைந்த ஒருநாள் ஆட்டங்களில் 100, 150 மற்றும் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையாளர் சக்லைன் முஷ்டாக்
இரண்டு டெஸ்டுகளில் தொடர்ந்து ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையை அவர் இந்தியாவுக்கு எதிராய் 1999இல் நிகழ்த்தினார்
ஒரே வருடத்தில் மிக அதிக ஒருநாள் விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையும் இவருடையதே – 69 விக்கெட்டுகள்.
1999 உலகக்கோப்பையின் போது வீரர்கள் தம் மனைவியை ஹோட்டலில் தங்க வைக்கக் கூடாது என பாகிஸ்தான் வாரியம் வலியுறுத்தியது. அப்போது சக்லைன் ரகசியமாய் தன் மனைவியை தன் அறைக்குள் தங்க வைப்பார். அணியின் மேலாளரோ சக வீரர்களோ அறைக்கதவை தட்டினால் மனைவியை பீரோவுக்குள் வைத்து பூட்டி விடுவார். ஒருமுறை இந்த ரகசியம் தெரிந்து தன் நண்பர்கள் ஹோட்டல் அறைக்கு வந்துபீரொவுக்குள் இருக்கும் மனைவியை வெளியே வரச் சொல்என கலாய்த்ததாய் ஒரு பேட்டியில் சொல்கிறார்.
சக்லைன் டெஸ்ட் போட்டிகளில் 208 விக்கெட்டுகளும், ஒருநாள் ஆட்டங்களில் 288 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.