முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹதராபாத் vs பெங்களூர் - அதிர்ஷ்ட தேவதை கோலியின் மடியில்



இன்றைய போட்டியில் 164 எனும் இலக்கை ஹைதராபாத்தால் அடித்திருக்க முடியும் - துரதிஷ்டவசமாக ரன் அவுட்டுகள் இரண்டு, ஒரு காயம் ஆகியவை அவர்களை முடக்கியிராவிட்டால். ஆனால் பெங்களூர் இதை சாதகமாக பயன்படுத்தி பந்து வீசி வென்றனர். குறிப்பாக இன்றைய நட்சத்திரம் வீச்சாளர்கள் சயினி மற்றும் சாஹல். இறுதி ஓவர்களில் துபேவை ஹைதராபாதால் அடிக்க முடியவில்லை என்பது விசித்திரமே. அடித்துப் பிடித்து வென்றிருந்தாலும் பெங்களூர் அணியின் பந்து வீச்சு பெரிதும் நம்பிக்கையளிக்கவில்லை. 


இன்றைய ஆடுதளம், சூழல் - முந்தின ஆட்டங்களில் இருந்து சற்று வித்தியாசமாக உள்ளது - துவக்க 6-8 ஓவர்களுக்கு ஆடுவது சுலபமாகி உள்ளது. குறைநீளத்தில் அதிகம் எகிறவில்லை. பந்து சுழலவில்லை. ஆடுதள அமைப்பாளர்கள் வேலை பார்த்துள்ளார்கள்.


முதலில் மட்டையாடிய பெங்களூர் துவக்க வீரர்கள் சிறப்பாக ஆடினர். குறிப்பாக தேவ்தத் படிக்கல்லின் அரை சதம் - அவர் உயரமான இடதுகையாளர். நன்றாக டைமிங் செய்கிறார். கால்கள் அதிகம் நகர்வதில்லை. நேராகவோ v வடிவிலோ அடிப்பதில்லை. off பக்கம் இடம் விட்டு அடிக்கிறார். கால் பக்கம் வந்தால் flick செய்கிறார். சற்று 90 மற்றும் 2000த்தின் துவக்கத்தின் இலங்கை அணியில் ஆடிய இடதுகை மட்டையாளர்களை நினைவுபடுத்துகிறார்; குறிப்பாக உப்புல் தரங்காவை. ஆனால் இப்போதைக்கு அவரை ஒரு சிறந்த வீரர் என சொல்ல முடியாது. தொழில்நுட்பத்தில் வலுவானவர் அல்ல. ஒரே பாணியில் அநேகமாய் ஒரே இடங்களில அடிக்கிறார். வருங்காலத்தில் அவரது பலவீனத்தை உணர்ந்து வீசுவார்கள். டி-20யில் ஜொலிப்பதற்கான தோள்வலிமையும் இல்லை.


ஒரு விசயம் வினோதமாக இருந்தது - துவக்க வீரர்கள் நன்றாக ஆடி வந்த போதே தொடர்ந்து 15வது ஓவர் வரை அதை எடுத்து செல்லாமல் அவசரப்பட்டு வெளியேறினார்கள். ஒருவேளை 180-200 ரன்களை எதிர்பார்க்கிறார்களோ என நினைத்தேன். ஆனால் இருவரும் போன பிறகு வந்த கோலி மற்றும் டிவில்லியர்கள் பொறுமையாக ஒற்றை இரட்டை ஓட்டங்கள் எடுத்து ரன் ரேட்டை குறைத்தார்கள். இதற்கு துவக்க வீரர்களே ஆடியிருக்கலாமே?


முக்கியமான திருப்புமுனை நடராஜன் கோலியின் விக்கெட்டை எடுத்தது. 


இறுதி 8 ஓவர்களில் ஓட்டமெடுப்பது சிரமமாக உள்ளது. வந்தவுடன் பந்தின் வேகத்தை கணித்து அடிக்க இயலவில்லை. ஒருவேளை டிவில்லியர்ஸ் அரைசதம் அடிக்காவிடில் பெங்களூர் இன்னும் சிரமப்பட்டிருக்கும்.


மைதானத்தின் புல்வெளி, லேண்டிங் இடம் ஆகியவை சற்று இளகின மண்ணால் அமைக்கப்பட்டுள்ளதால் சுலபத்தில் களத்தடுப்பாளர்களுக்கு வழுக்குகிறது. நேற்று அஷ்வின் காயப்பட்டால் இன்று இரண்டு மேல் மேலும் காயப்பட்டார்கள் - மிச்சல் மார்ஷ் மற்றும் சாஹல். அதுவும் சரியாக முதல் 6 ஓவர்களுக்குள் இது நடக்கிறது. என்ன மாயமோ?


நேற்றைக்கும் இன்றைக்குமான முக்கிய வித்தியாசம் இந்த ஆடுதளத்தில் திடீரென சுழல்பந்து திரும்பவில்லை - ரஷீதுக்கு அது நடக்கவில்லை என்றால் பாருங்களேன். (ஆனால் சாஹலின் ஒரு பந்து திரும்பியது - அவர் ரஷீதை விட சரியான நீளத்தில் வீசயதாலா அல்லது இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுதளம் சற்று மாறுகிறதா?) இது மத்திய ஓவர்களில் விக்கெட் எடுப்பதை சிரமமாக்கியது. பொறுமையாக கராறாக வீசி ரன்களை குறைத்து மட்டையாளனை கடுப்பேற்றி விக்கெட் எடுப்பது மட்டுமே சாத்தியம். அதைச் செய்கிற அணியே வெல்லும்.


நவ்தீப் சயினி மிக நன்றாக வீசினார் - 145 கி.மீ வேகத்தில் சரியான நீளத்தில். ஒரு சர்வதேச வீச்சாளரைப் போல அவ்வளவு நிதானமாய் வீசுகிறார். வரும் சீஸனில் இந்திய அணிக்குள் தொடர்ந்து இடம்பெறுவார் என நினைக்கிறேன்.


இது போன்ற ஆடுதளத்தில் 160க்கு மேல் இலக்கை விரட்டும் போது முதல் 10 ஓவர்களில் 90-100 ரன்களைக் குவித்து விட வேண்டும். அல்லாவிடில் ஒன்றிரண்டு மட்டையாளர்கள் இறுதி ஓவர் வரை நின்றாட வேண்டும்.

ஹைதராபாத் முடிந்தவரை ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்திருந்தார்கள் என்றாலும் காயம், துரதிஷ்டமான ரன் அவுட்டுகளை அவர்களை பின்னுக்குத் தள்ளியது. அதிர்ஷ்ட தேவதை இன்று கோலியை தாராளமாக அணைத்துக் கொண்டாள்.


வரும் ஆட்டங்களில் பெங்களூர் இன்னும் சிறப்பாக பந்து வீச்சில் ஆட முயன்றால் இத்தொடரில் இறுதிப்போட்டியைக் கூட அடைய முடியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...