முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“கலிங்கு பட்டாளம்” - முதுமை என்பது நினைவுப் பாதை



மீரான் மைதீன் குமரி மாவட்ட எழுத்தாளர்களில் தனித்துவமானவர். குமரி மண்ணில் தோன்றிய புனைவெழுத்தாளர்களில் பொன்னீலன், ஜெயமோகன், நாஞ்சில், சுந்தர ராமசாமி, லஷ்மி மணிவண்ணன், குமார செல்வா உள்ளிட்டோரிடம் நாம் அம்மண்ணுக்கே உரித்தான பகடியை, நக்கலை, வக்கணையை காண முடியாது. (வெகுஜன தளத்தில் இயங்கும் பிரபுதர்மராஜ் ஒரு விதிலக்கு.) அவர்களுடைய நடை கவித்துவமானது, அல்லது அரசியல் கூர்மை கொண்டது; அவர்களுடைய மொழி குமரி பண்பாட்டின் வேறு இயல்புகளை சித்தரிப்பது, ஆனால் இந்த குணாம்சம் மட்டும் இல்லை: இம்மண்ணில் வெகுசகஜமாக பேச்சிடையே பரஸ்பரம் கிண்டலடிப்பது, அதை தமக்குள் ரசிப்பது, எந்த பிரச்சனையையும் போகிற போக்கில் எடுத்துக் கொள்வது போன்ற இயல்புகள் மக்களின் ரத்தத்தில் கலந்து போனவை. மற்ற தமிழ்ப் பகுதி மக்களிடையே காணப்படும் கோபாவேசம், செண்டிமெண்டுகள், முணுக்கென்றால் அழுது மன்றாடுகிறது, துண்டை உதறிக்கொண்டு வீட்டை விட்டுப் புறப்படுகிற, அருவா தூக்குகிற குணாதசியங்கள் இங்கு இல்லை. அண்மையில் தமிழ்நாடே வெள்ளத்தில் மிதந்து அல்லல்பட்ட போது குமரி மாவட்டத்திலும் வெள்ளம் தேங்கி காணுமிடமெல்லாம் குளமாகின. ஆனால் மக்களோ அங்கு ஜாலியாக குளியல் போட்டு கொண்டாடினர், அந்த வெள்ளத்தில் பந்தாடினர், துணி துவைத்தனர், இந்த காட்சிகள் காணொளிகளாக தமிழகம் முழுக்க கவனம் பெற்று மீம்களாகவும் மாறின. இந்த உலகை தன் புனைவுகளில் தத்ரூபமாக படம்பிடிப்பவர் மீரான் மைதீன் மட்டுமே. ஏனென்றால் அது அவரது இயல்பாகவும் இருக்கிறது. இந்த நாவலில் வரும் பட்டாளம் ஒரு சின்ன விசயத்துக்காக பெரிய கவலைகளில் மூழ்கி பின்னர்எனக்கு அது மயிருடேஎன்று கடந்து விடுவார். இன்னொரு பக்கம் தன்னுடைய பிரச்சனைகளை உலக அரங்குக்கு கொண்டு போனால் அது டிரம்பின் பார்வையில் படும் எனும் அபத்தமான நம்பிக்கையும் அவருக்குண்டு. ஒரு டார்ட் விளக்கைப் பற்றி அவர் நீண்ட நேரமாக, பல நாட்களாக ஆவலாதி கொள்வதும் உண்டு. இவ்விதத்தில் குமரிமாவட்ட தெருவொன்றில் சாரத்தை மடித்துக் கட்டி, ஒரு வாரத்தாடி வெயிலில் மின்ன, கலைந்த தலையும் உதடுகளில் புகையும் பீடியும், உலகை வென்றுமுடித்து சற்று முன் தான் வந்தேன் எனும் மிகைநம்பிக்கையுடனும் நடக்கிற மனிதனை இந்த நாவலில் நீங்கள் காண முடியும்.


இந்த நாவலின் முக்கியமான பலம் அதன் அங்கதம், பக்கத்துக்கு பக்கம் நம்மை வெடிச்சிரிப்பு சிரிக்க வைக்கும் இயல்பான நகைச்சுவை


இது ஒரு சிறிய நாவல், நீளத்தைப் பொறுத்தல்ல, இதன் கதைக்களம் மற்றும் இலக்கைப் பொறுத்து. பட்டாளம் எனும் தனிமையில் உழலுகிற ஒரு முதியவர் தான் தினமும் மதுவருந்தவும், தானியலாசான் மற்றும் சந்திரன் ஆகிய நண்பர்களிடம் அரட்டை அடிக்கவும் போய் அமர்கிற கலிங்கும், அதன் பின்னுள்ள குட்டை, அங்கு கிடந்து சப்தமிடும் தவளைகள் ஆகியோரிடம் அவர் சூழலிடம் கொள்ளும் உறவும், அதன் வழியாக தன்னை ஆட்கொள்ளும் தனிமையில் இருந்து அவர் விடுதலை கொள்ள முயல்வதுமே இதன் கதைக்கரு.

 மீரான் மைதீன் ஏன் தொடர்ந்து இந்த சிறிய பகுதியில் மட்டுமே பட்டாளத்தை வைத்திருக்கிறார், அவர் வேறிடங்களுக்கு ஏன் செல்வதில்லை என சில வாசகர்களுக்குத் தோன்றலாம். கதாசிரியரின் இந்த முடிவு நாவலுக்கு ஒரு மேடை நாடக தொனியைத் தருகிறது என்பது உண்மையே. ஆனால் நாவல் முடியும் போது நமக்கு இக்கேள்விக்கான விடை கிடைத்து விடுகிறது - அந்த கலிங்கும், அதன் பின்னுள்ள சிறிய குட்டையுமே பட்டாளத்தின் சிறிய உலகம். அந்தத் தவளை ஒருவிதத்தில் அவரே தான். கட்டுமானப்பணிக்காக அந்த குட்டையையும் கலிங்கையும் அரசு எந்திரம் நிரத்தி மூடும் போது அவரது வாழ்விடமும், இருப்பும் தான் மூடப்பட்டு விடுகிறது. இது குமரி மண்ணில் இப்போது நிகழ்ந்து வரும் ஒரு பெரிய அவலம் - பல நீர்நிலைகள், வயல்கள் அழிக்கப்பட்ட புதிய கட்டுமானங்கள் எழுப்பப்படுகின்றன. இது புதிய தலைமுறைக்கு ஒரு இழப்பாக இப்போது தெரியவில்லை. ஆனால் முதுமையின் தனிமையிலும் கைவிடப்பட்ட நிலையிலும் இருக்கும் பட்டாளம் போன்ற மனிதர்களுக்கு இந்த சின்னச்சின்ன கலிங்குகளும் நீர்நிலைகளுமே ஒரே புகலிடம். அவர்களுடைய இயற்கை அதுதான். அங்கு தான் அவர்கள் தம் நினைவுப்பாதையில் நடையிடுகிறார்கள், ஆசுவாசம் காணுகிறார்கள், அந்த உலகம் இன்று மெல்ல மெல்ல மண்ணுக்கடியில் போவதை, அத்துயரத்தைப் பேசுவதே இந்நாவலின் நோக்கம். ஆனால் அதை கசப்பான, அடர்த்தியான, சிக்கலான மொழியில் பேசாமல் சரளமான, நகைச்சுவையான நடையில் மீரான் மைதீன் முன்வைக்கிறார். அழியும் குமரியின் துயர கீதம் இந்த சிறிய நாவல்.


முதுமையில் இருப்போரின் உலகம் சட்டென சுருங்கி விடுகிறது. புதிய மனிதர்கள், நாட்டங்கள், சவால்கள், லட்சியங்கள் இல்லாத போது அவர்கள் அந்த வெற்றிடத்தை மொழியால் நிரப்பிக் கொள்ள விழைகிறார்கள், ஓய்வற்று பேசத் தொடங்குகிறார்கள், ஆனால் துரதிஷ்டவசமாக அப்போது தான் அவர்களுடன் பேசுவதற்கு யாரும் தயாராக இருப்பதில்லை. இளம் தலைமுறைக்கோ தாத்தா, பாட்டிகள் ஒரு காலாவதியான உலகில் இருந்து தமக்கு சம்மந்தமில்லாத பிரச்சனைகளைப் பற்றி புலம்புகிறவர்கள் என்று தோன்றுகிறது. “கிழம்” / “கிழவிபேச ஆரம்பித்ததும் அவர்கள் நைசாக நழுவி விடுகிறார்கள். அதனால் தன் மனைவியை இழந்த கணவர்கள் மிகவும் துரதிஷ்டசாலிகள் என்று பட்டாளம் நாவலின் இறுதிப்பகுதியில் அபிப்ராயப்படுகிறார். ஏனென்றால் மனைவியும் போய்விட்டால் பேச்சுத்துணைக்கு சமவயது நண்பர்கள் அல்லாமல் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். பேசாமல் இருக்க நேர்கிற முதியோரின் நிலையானது இந்த நாவலில் பட்டாணிக் குளத்தில் இருந்து பிடிக்கப்பட்ட விலாங்கு மீன்களைப் போன்றதே. ஒரு கட்டத்தில் பேச ஆளில்லாமல் போகையில் முதியோர் தமக்குள் பேசத் தொடங்குகிறார்கள். இல்லாத ரூபங்கள் அவர்களுடைய கண்களுக்குப் புலப்படத் தொடங்குகின்றன. இந்த உளவியல் நுட்பங்களை இந்நாவலில் மீரான் மைதீன் சரியாக கையாண்டுள்ளார். சில இடங்களில் நமக்கு பட்டாளம் பேசுவது நிஜமனிதர்களிடமா அல்லது தன் பிரமைகளிடத்தா எனும் குழப்பம் ஏற்படும்படி எழுதியிருக்கிறார். இது பாராட்டத்தக்கது.


முதியோருக்கு (குறிப்பாக ஐம்பது வயதுக்கு மேலோருக்கான) ஒரு குறிப்பிட்ட இயல்பு காமத்தைப் பற்றி பேசியே அதைக் கடந்து போக முயல்வது. சில முதியோர் சிறுகுழந்தைகளிடம் சேட்டைகளை காட்டுவதும் உண்டு. பட்டாளத்துக்கு நேரடியாக தன் இச்சையை மொழியில் வெளிப்படுத்த தயக்கம் உள்ளதால் அவர் அதிகமாக வசைமொழிகளைப் பேசி அதைக் கையாள்கிறார், தன்னுடைய ஆணுறுப்பைப் பற்றின குறிப்புகள் அவ்வப்போது பேச்சில் வரும்படி பார்த்துக் கொள்கிறார். நாவலின் துவக்கத்தில் பட்டாளம் தான் கன்னிலட்சுமியின் வீட்டு கிணற்றின் மூடியைத் தான் திருடிவிட்டதாக ஒரு புகார் கிளம்பியிருப்பதாகவும், தன்னை விசாரிப்பதற்காக ஒரு கூட்டம் வரப் போவதாக சொல்லிப் புலம்புகிறார். ஆனால் தானியலாசானோ சந்திரனோ இதை சீரியஸாக எடுத்துக் கொண்டு அவருக்கு உதவ முன்வருவதில்லை; மாறாக அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கவே முயல்கிறார்கள். பின்னர் மற்றொரு அத்தியாயத்தில் கன்னிலட்சுமியைப் பற்றி ஒரு காமக்குறிப்புள்ள வசனமும் வருகிறது. இந்த கிணற்றுமூடிப் பிரச்சனை என்னவானது என நமக்கு பிறகு சொல்லப் படுவதும் இல்லை. இதை வைத்துப் பார்க்கையில் இந்த கிணறு பெண்ணுறுப்புக்கான ஒரு உருவகமோ என்று தோன்றுகிறது. இந்த கோணத்தில் பார்த்தால், அதற்கடுத்த அத்தியாயங்களில் வரும் டார்ச் லைட் குறித்த விவாதங்களும் வெறும் டார்ச் லைட் அல்ல என்று தோன்றுகிறது. டார்ச் லைட்டின் நீளம், அது எந்தளவுக்கு சக்தி வாய்ந்தது, அதைக் கொண்டு இருட்டில் வெளிச்சம் பாய்ச்சி நடக்கும் ஆண்களின் கெத்து ஆகியவற்றைப் பார்க்கையில் அது ஆணுறுப்பின் உருவகமாகவும் இருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லாவிடில் இரு முதியோர்களின் உலகில் கிணற்றுமூடியும், டார்ச் விளக்கும் இந்தளவுக்கு மனதை ஆட்கொள்ள வைக்கும் சங்கதிகளாக வேண்டும்?  


ஒருவேளை இவ்வளவு மறைபொருளாக காமம் இந்த உரையாடல்களில் வந்து போவதற்கு மற்றொரு காரணம் மீரான் மைதீன் தன்னுடைய புனைவுகளில் இச்சையை வெளிப்படையாக சித்தரிப்பதில் தயக்கம் கொண்டவர் என்பதாக இருக்கலாம். அல்லது இது பட்டாளத்தின் பிரத்யேகமான சிக்கலாகவும் இருக்கலாம்.


பட்டாளத்தின் அலட்சியமான, அடாவடியான குணநலன் நமக்கு அவர் மீது நன்மதிப்பை ஏற்படுத்துவதாக இல்லை. அவரது கோணங்கித்தனமான சேட்டைகளே நமக்கு அவர் மீது ஒரு சுவாரஸ்யத்தை முதலில் ஏற்படுத்துகின்றன, ஆனால் அவரது தனிமையான அவலமான வாழ்க்கை, அதை அவர் துணிச்சலாக எதிர்கொள்ளும் பாங்கை நாவலாசிரியர் சொல்லும் இடத்து நமக்கு அவர் மீது கருணை ஏற்படுகிறது. நாவலின் இறுதிப் பகுதியில் விலாங்கு மீன் குட்டையில் தனித்திருக்கலாகாது என அதற்கு துணைகளைக் கொண்டு வரச்செய்து குட்டையில் அவற்றை அவர் விடும் போது அவர் மீது நமக்கு பிரியம் அதிகமாகிறது. (இதை திரைக்கதை எழுத்தில் save the cat எனும் உத்தி என்கிறார் பிளேக் ஸ்நைடர்.) ஆனால் இந்த செய்கையானது வெறுமனே பட்டாளத்தைப் பற்றி நமக்கு நன்மதிப்பு ஏற்படுத்துவதற்காக மட்டுமன்றி இயற்கைக்கும் முதுமைக்குமான உறவை துல்லியமாக்கவும் உதவுகிறது. அதே போல, இந்த செயலுக்குப் பிறகு கலிங்கும், குட்டையும் அழிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக அவரது மரணம் நேர்கையில் நமது மனம் அவருக்காகவும் இயற்கைக்காகவும் துடிக்கிறது. இந்த காட்சிகளை நாவலின் முடிவில் ஆசிரியர் திறமையாக பயன்படுத்தி ஒரு உச்சத்தையும், அதனூடே நாவலுக்கு அர்த்தத்தையும் கொடுக்கிறார் என்பது மெச்சத்தக்கது.


இந்நாவலை எழுதிய மீரான் மைதீனுக்கும், இதைப் பதிப்பிக்கிற புலம் பதிப்பகத்துக்கும், இதைப் படிக்கப் போகும் உங்களுக்கும் என் வாழ்த்துகள்!


(நாவலுக்கு நான் எழுதிய முன்னுரை)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...