முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேரளாவும் தமிழ்நாடும் எழுத்தாளர்களை நடத்தும் விதம்

 மூன்றாண்டுகளுக்கு முன்பு நான் சுமார் 90 பேர் கொண்ட என் வகுப்புக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்தேன். தனியாகவோ நான்கைந்து பேர் சேர்ந்தோ தமது தாய்மொழியில் அல்லது இந்திய மொழி ஒன்றில் இருந்து ஒரு கதையை ஆங்கிலத்தில் மொழியாக்க வேண்டும். அக்கதைகளில் பத்தை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தேன். அப்போது நான் ஒரு விசித்திரத்தைக் கண்டேன். எங்கள் பல்கலைக்கழகத்தில் மலையாளிகள் அதிகம், ஓரளவுக்கு தமிழ் மாணவர்களும் உண்டு, அடுத்து இந்திக்காரர்கள் வருவார்கள். கன்னட மொழி பேசும் மாணவர்கள் அமைதியாக நிழலைப் போல் இருப்பார்கள். ஒரு மாணவர் கூட கன்னடக் கதையை மொழியாக்கவில்லை. முப்பதுக்கு மேல் மலையாள சிறுகதைகளும், இருபதுக்கு மேல் இந்திக் கதைகளும் (நிறைய பிரேம் சந்த் கதைகள்) மொழியாக்கப்பட்டு வந்தன. நான் தமிழ் பேசத் தெரிந்த ஒரு மாணவியை அழைத்து அவரை ஒரு கதையையாவது மொழியாக்கக் கேட்டேன். அவர் தனக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்றதால் யுடியூபில் இருந்து ஒரு பு.பியின் கதையின் வாசிப்பு ஒன்றை எடுத்துக் கொடுத்தேன். அவர் அதைக் கேட்டு எப்படியோ போராடி மொழியாக்கினார். மற்ற தமிழ் மாணவர்கள் சிலர் இந்த விளையாட்டுக்கு வரவே தயாரில்லை. அப்போது என்னை ஆச்சரியப்படுத்தியது கதைகளை மொழியாக்குவதில் மலையாள மாணவர்கள் காட்டிய ஆர்வம் தான். (இந்திக்கதைகளையும் கூட அவர்களே மொழியாக்கினார்கள்.) சில மாணவர்கள் இணைந்து எம்.டி வாசுதேவன் நாயரின் நூறு பக்கங்களுக்கு மேலான ஒரு சுயசரிதையை மொழியாக்கி அளித்தார்கள். நான் அசந்து போனேன். ஒன்று ஒரு நூலை மொத்தமாக மொழியாக்குவதில் அவர்களுக்கு இருந்த பண்பாட்டு ஆர்வமும், தமது மொழியின் சிறப்புகளை அயல் மொழிக்கு கொண்டு போவதில் அவர்கள் காட்டிய துடிப்பும்.

இரண்டு, அந்த கதைகளை நான் பரிந்துரைக்கவில்லை. அவர்களாகவே தேடி அடைந்தார்கள். அவர்களுக்கு முக்கியமான படைப்பாளிகளின் பெயர்கள் தெரிந்துள்ளதே ஆச்சரியமளித்தது. விசாரித்த போது தமது பள்ளி நூல்களில் முக்கியமான கதைகள் அறிமுகமாயின என்றார்கள்.

எம்.டியின் அந்த நூலை ஒரு தனிப்புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என விரும்பினேன். ஆனால் அதில் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்ததாலும், எம்.டியிடம் உரிமை பெற வேண்டி இருந்ததாலும் பிறகு கொண்டு வரலாம் என எடுத்து வைத்தேன். தமிழ் பள்ளி / கல்லூரி மாணவர்கள் எங்காவது இப்படி ஒரு முக்கியமான தமிழ் நவீன இலக்கிய நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கிக் கொடுத்திருக்கிறார்களா? எனக்குத் தெரிந்து இல்லை.
இதை எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால் இன்றைய தலைமுறை மலையாளிகளுக்கு இலக்கிய ஆர்வம் இல்லை என ஒரு கருத்து சிலர் மத்தியில் நிலவுவதால் தான். நாம் வெளியே காணும் ஒரு சிலரை வைத்து அந்த முடிவுக்கு வரக் கூடாது. நான் நூற்றுக்கணக்கான மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் காண்கிறவன் எனும் முறையில் இது உண்மையில்லை என்று உறுதியாகக் கூற முடியும். ஆனால் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்த எத்தனை தமிழக மாணவர்களுக்கு தமிழ் இலக்கியம் தெரியும்? நூற்றில் ஒருவர் கூட இருந்தால் ஆச்சரியம்!

அடுத்த சல்ஜாப்பு தமிழ் நவீன இலக்கியம் மக்களிடம் ‘கனெக்ட்’ ஆவதில்லை, மக்களிடம் இருந்து விலகி பூடகமாக இருக்கிறது என்பது. ஆனால் கேரளாவில் எல்லா வகையான எழுத்தாளர்களும் கவனிக்கவும் வாசிக்கவும் படுகிறார்கள். சிக்கலான இருண்மையான படைப்பாளிகளும் அங்கே விறப்னையாகிறார்கள். “கஸாப்பின்றே இதிகாசம்” ஒரு சிக்கலான பிரதி தான், அது மலையாள படங்களில் ஒரு ஜோக்காகக் கூட குறிப்பிடப்படுகிறது. அந்தளவுக்கு மக்களிடம் போய் சேர்ந்துள்ளது. அங்கு இறுக்கமான, நுட்பமான மொழியில் எழுதப்பட்ட, தோல்வியின் இருத்தலிய சித்திரத்தை கட்டியெழுப்பும் எம்.டியின் எழுத்துக்களும் தாம் நன்றாக விற்பனை ஆகின்றன. அவரையும் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதே எம்.டி தமிழகத்தில் இருந்திருந்தால் யாரும் மதித்திருக்க மாட்டார்கள். அதனால் பிரச்சனை கனெக்ட் ஆவதில் இல்லை, நம் பண்பாட்டில் தான் உள்ளது.

இங்கே மாற்று சினிமா, ஒவியம், சாஸ்திரிய சங்கீதம் போன்றவற்றுக்கும் வெகுமக்கள் இடையே முக்கியத்துவம் இல்லை என்பதை கவனியுங்கள். பிராமணர்கள் இல்லாவிடில் கர்நாடக சங்கீதம் என ஒன்றே இங்கு இருக்காது. சூப்பர் சிங்கரில் பாடுபவர்கள் அனேகமாக அனைவரும் மலையாளிகள் அல்லது பிராமணர்கள். கடந்த நாற்பதாண்டுகளின் சிறந்த பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் நிறைய பேர் வேற்றுமொழிக்காரர்களே.
நீங்களே ஒரு கணக்கெடுங்கள் - இலக்கியத்தை விடுங்கள், உங்கள் பக்கத்து வீடுகளில் எத்தனை பிள்ளைகள் சதவீதம் பிள்ளைகள் சாஸ்திரிய சங்கீதம் (மேற்கத்திய இசையோ, கர்நாடக சங்கீதமோ, இந்துஸ்தானியோ) படிக்கிறார்கள்? சாஸ்திரிய நடனம், சிலம்பம், கிரிக்கெட் என எதையாவது கற்கப் போகிறார்கள்? மிக மிக சொற்பமாகவே இந்த எண்ணிக்கை இருக்கும். கலை, இலக்கியம், இசை, நடனம், விளையாட்டு என எதிலும் பங்கெடுக்காத ஒரு கும்பலாகவே நாம் இருக்கிறோம். கிட்டார், சேர்ந்திசை போன்ற விசயங்களில் பயிற்சி பெற்றவர்களுக்குக் கூட கிறித்துவ தேவாலய பின்னணியே உதவியிருக்கிறது. கிறித்துவமும் இல்லையெனில் தமிழ்நாட்டில் இசையின் வாசனையே, பயிற்சியே மக்களுக்கு இருக்காது என நினைக்கிறேன்.
நாம் கேரளாவுக்கே போக வேண்டாம், நம் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு பிராமணக் குடும்பத்தையும் எடுத்துப் பாருங்கள் - படிப்புக்கு அப்பால் இசை, நடனப் பயிற்சியில் தம் பிள்ளைகளை சேர்த்து விட மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள் இப்பெற்றோர்கள். கிரிக்கெட் பயிற்சியிலும் சேர்த்து விடுகிறார்கள். அவர்களுக்கு ஓரளவுக்கு இலக்கிய ஆர்வமும் வந்து விடுகிறது. இந்த பயிற்சிகளால் பணம் கிடைக்காது என்றாலும் அதில் மதிப்பும், மரியாதையும் உண்டு, அது பெருமைமிகு மரபு என நினைத்து முன்னெடுக்கிறார்கள். இதுவே கிறித்துவர்கள் அல்லாத மற்ற சாதி மத்திய வர்க்கத்தினரின் குடும்பங்களைப் பாருங்கள் - வெறும் படிப்பு, டிவி, தெருவில் விளையாடுவது, மொபைலை நோண்டுவதைத் தாண்டி அந்த பிள்ளைகளின் வாழ்வில் ஒன்றுமே இருக்காது. பெற்றோர்கள் வேறெதையும் அனுமதிக்கவோ அறிமுகப்படுத்தவோ ஊக்குவிக்கவோ மாட்டார்கள். இப்பிள்ளைகள் வளர்ந்து எப்படியே தப்பித்து இலக்கியம் பக்கம் வந்தால் உண்டு.

நாம் எல்லா நூற்றாண்டுகளிலும் இப்படி இருந்ததில்லை. நம்மிடம் தமிழிசை, நடனம், சிற்பக்கலை, சங்க இலக்கியம், தமிழ் பௌத்தம், தத்துவ நூல்கள், தற்காப்புக் கலைகள், மருத்துவம் என என்னென்னமோ இருந்தது. ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி சோறு தான் முக்கியம், சினிமா தான் அடைக்கலம் என மாறி விட்டோம். அதன் பின்னர் நமக்கு வயிற்றுப்பாடு மட்டுமே முக்கியமாக இருக்கிறது, நீண்ட காலமாக. இந்த கெடுநிலையை மாற்ற முயலாத, வேலைவாய்ப்பு, பிம்ப அரசியல், புலன்கிளர்ச்சியே முக்கியம் எனக் கருதுகிற அரசுகளுக்கு, பள்ளிக் கல்வித்துறைக்கு, ஊடகங்களுக்கும் இதில் ஒரு முக்கிய பங்குள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.