"நான் ஒரு இலக்கிய வாசகனாக படிக்கத் துவங்கிய போது, சமூக அரசியல் விசயங்களில் ஆர்வம் கொண்டு தோழர்களுடன் விவாதித்துப் பழகிய போது, பின்னர் எழுத வந்த போது ‘மாற்றுத்திறனாளி’ எனும் சொல் புழக்கத்தில் இல்லை, அதனாலே மாற்றுத்திறனாளிகள் குறித்த கதையாடல்களும் தமிழில் அனேகமாக இல்லை. ஒரு மாற்றுத்திறனாளியின் உலகை ஊடகங்கள் அன்று பொருட்படுத்தவே இல்லை. நான் ஒரு மாற்றுத்திறனாளியின் வாழ்வை, அவனை மையமாக்கி பேசிய முதல் படத்தை ஒரு உலக சினிமா விழாவிலே கண்டேன். இன்றும் அத்தகைய சினிமாக்கள் தமிழிலோ வேறு இந்திய மொழிகளிலோ இல்லை. தமிழ் இலக்கியத்திலோ வேறு இந்திய மொழி இலக்கியங்களிலோ நான் படித்தவரையில் இல்லை. அதாவது மாற்றுத்திறனாளிகளை ஒரு பிரச்சினையின், ஒரு மன இயல்பின் உருவகமாக மாற்றி அவர்களை உடலற்றவர்களாக சித்தரிக்கிற படைப்புகளே இருந்தன, இருக்கின்றன, அவர்களை அவர்களாக மட்டுமே பார்க்கிற படைப்புகள் இல்லை. இன்றும் தமிழ் இலக்கியத்தில் வெகுசொற்பமான மாற்றுத்திறனாளி எழுத்துக்கள் உள்ளன. விவாதங்கள் இல்லை, சித்தரிப்புகள் இல்லை, பேச்சே இல்லை, இதனால் மாற்றுத்திறனாளிகள் ஒரு புலப்படாத உயிரிகளாக மாறியுள்ளதைக் கண்டேன், இந்நிலையை மாற்ற வேண்டும் எனும் நோக்கத்திலே நான் என் முதல் நாவலான “கால்களை” எழுதினேன். அதே நோக்கத்துடனே என்னுடைய கட்டுரைகளில் மாற்றுத்திறனாளி அனுபவங்களைப் பற்றி பேச வேண்டும் என முடிவெடுத்தேன். ஒரு மாற்றுத்திறனாளியாக என்னை அடையாளப்படுத்திக் கொண்டு இச்சமூகத்தைப் பார்க்கவும் விவாதிக்கவும் தொடங்கினேன். இந்த கட்டுரை நூலின் நோக்கமும் உலகம் பேசத் தயங்கும் ஒன்றைப் பேசுவதே. மாற்றுத்திறனாளிகள் பற்றி தமிழில் வெளிவரும் முதல் கட்டுரை நூல் ஒருவேளை இதுவாகவே இருக்க வேண்டும்."
"கால்களின் கேள்விகள் நூலில் இருந்து"

கருத்துகள்