எனக்குத் தெரிந்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் வரலாற்றிலும் குடும்ப ‘நல’ நீதிமன்றத்தில் ஆண்களுக்கு நடக்கும் அநீதியைப் பற்றி பேசிய ஒரே படம் கமல் எடுத்த “அவ்வை சண்முகி” மட்டுமே. அதுவும் கமல் தன் மகள்களை இது போன்ற ஒரு பிரச்சினையில் இழந்து, குடும்பத்தைப் பிரிந்ததாலே அதை தன் படமொன்றில் கொண்டு வந்தார் என நினைக்கிறேன். அப்படத்தில் எப்படி ஒரு வக்கீல் சின்னச்சின்ன சம்பவங்களை எடுத்து ஒரு பூதாகாரமான பிரச்சினையாக்கி கணவன் மனைவியை கொடுமைப்படுத்தினார் என சித்தரிப்பார் எனக் காட்டினார்கள். சில மணிநேரங்கள் மட்டுமே ஒரு அப்பா தன் பிள்ளையைப் பார்க்க முடிவது எப்படியான கொடுமை எனச் சித்தரித்தார். அதற்கு முன்போ பின்போ அப்படி ஒரு காட்சி கூட எங்கும் வரவில்லை. தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் தெலுங்கிலும் கூட நான் கண்டதாக நினைவில்லை. அதன் பொருள் திரைத்துறைக்குள் யாரும் பாதிக்கப்பட்டவில்லை என்றல்ல. அவர்களுக்கு நேர்மை இல்லை. கமல் மீது எனக்கு இது குறித்து மிகுந்த மரியாதை உள்ளது - அவர் தனது அனுபவங்களையும், கருத்துக்களையுமே தன் சினிமாவாக்குகிறார். அதன் மீது நமக்கு விமர்சனமிருக்கலாம், ஆனால் அவர் பொய்களை சமைப்பதில்லை. அவரை விட கலை நுணுக்கத்துடன் படமெடுப்பவர்களிடம் அந்த நேர்மை இல்லை. அவர்கள் தம் வாழ்வனுபவத்துக்கு சம்மந்தமில்லாத கற்பனையான பிரச்சினைகளை, கற்பனையான அநீதிகளை வைத்தே படமெடுக்கிறார்கள்.

கருத்துகள்