முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் இதையே திரும்பத் திரும்ப எழுதுகிறேன்?

 நான் ஏன் இப்படி தொடர்ச்சியாக ஆண்-பெண் பிரச்சினைகள், விவாகரத்து, குடும்ப ‘நல’ சட்டங்களின் ஏற்றத்தாழ்வு, பாலின பாகுபாடு என்றே பேசிக்கொண்டிருக்கிறேன் என ஒரு நண்பர் கேட்டார். ஏன் என்றால் வேறு யாரும் பேச மறுக்கிறார்கள். நான் ஏன் ஆண்களைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆண்களில் பலர் இவ்விசயத்தில் அடிமுட்டாள்கள். பெண்களுக்கு இயற்கையே நிறைய நடைமுறை அறிவைக் கொடுத்திருக்கிறது. அதனாலே ஒரு வழக்கு முடியும் போது ஆண்கள் முடிவில் எல்லாவற்றையும் இழந்து தெருவில் நிற்கிறார்கள். பெண்கள் கையில் சில / பல லட்சங்களும் குழந்தைகளுமாக திரும்ப செல்கிறார்கள். இந்த யுத்தத்தில் எல்லாவற்றையும் இழக்கப் போகிற ஆண்களுக்காக நான் ஒருத்தன் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கிறேன் என நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது - இம்மாதிரி பிரச்சினைகளில் மாட்டி அடிவாங்கிய, தம் மொத்த சம்பாத்தியமான நாற்பது, ஐம்பது லட்சங்களை இழந்த எழுத்தாள நண்பர்களை அறிவேன். ஆனால் அவர்களும் அமைதியாக கடந்து விடவே எத்தனிக்கிறார்கள். நாம் ஊரில் இருக்கிற அத்தனை அநீதிகளைப் பற்றியும் தேடித்தேடிப் பேசுவோம். ஆனால் நமக்கு நம் கண்முன் நடந்த ஒன்றை நோக்கி கண்ணை மூடிவிடுவோம். அதைப் பேசினால் அசிங்கம் என நினைப்போம். நான் அப்படி செய்ய மாட்டேன். 

நான் இதை எழுதுவதால் என்னை நவீன சிந்தனைகளை ஏற்காமல் பின்னுக்குப் போகிறவன் என ஒரு எழுத்தாள நண்பர் குறிப்பிட்டு எழுதினார். அதனால் எனக்கு கவலையில்லை - இந்த முற்போக்கு-பிற்போக்கு, நவீனம்-பழமை போன்றவை கோட்பாட்டில் உள்ளவை. அன்றாட உலகில் அவற்றை நீங்கள் காண்பவை அதிகாரத்தை, சட்டத்தை, போலீசை, நீதிமன்றத்தை, அங்குள்ள கட்டப்பஞ்சாயத்தை, கருப்பு இறகுகள் பறக்க வந்தமரும் வக்கீல் கழுகுகளை, அரசலுவலகங்களில் ஆட்சி செய்யும் அலுவலர்களை, அதிகாரிகளை. பொருளாதார ஏற்றத்தாழ்வின் சிக்கல்களைக் கூட நீங்கள் நிஜவாழ்வில் பார்ப்பதில்லை - பணத்துக்காக நாம் சகிக்க நேரும் அநீதிகளை, அவமதிப்புகளை, நமதுடல் அடிமையின் உடலாக மாறும் விசித்திரத்தை, விலைவாசி உயர்வினால் நமது சட்டையில் உள்ள பணம் குறைவதை. ஆனால் இவற்றைப் பேசாமல் நாம் கோட்பாடுகளுக்குள், லட்சியவாதத்துக்குள் ஒளிந்துகொள்வது ஒருவித தப்பித்தல் என்றே தோன்றுகிறது. 
நமது போலி அரசியல் கோட்பாட்டாளர்களை மட்டும் படித்தால் இந்த நடப்புலகில் பலனே இல்லை. ஒரு பொய்யைப் பற்றி ஒரு பொய்யை எழுதி அதன் மீது பொய்களின் மாளிகையை கட்டமைப்பது என்று மட்டும் கற்றுக்கொள்ளலாம். பிளேட்டோ ஏன் தனது லட்சிய உலகில் கவிகளைத் தடை பன்ணுவேன் எனக் கோரினார் என எனக்கு இப்போது புரிகிறது. அன்று கவிகள் என்றால் இன்று படைப்பாளிகள். ஒரு கன்னத்தில் பளாரென அடிவாங்கிக் கொண்டு “ஒரு ரோஜா தனிமையில் இருக்கிறது, அதில் ஒரு பனித்துளி அமர்கிறது, அது கருணை கருணை என கையேந்தி உனக்காக ஒரு சொல்லைத் தருகிறது” என கவிதை எழுதுவார்கள். இல்லாவிட்டால் கம்போடியாவில் நடக்கும் இனப்படுகொலை பற்றி ஒரு கட்டுரையை எழுத ஆரம்பிப்பார்கள். அல்லது என்னைப் போல குழந்தையை, பணத்தை இழந்து தெருவுக்கு வந்த பிறகு அதைப் பற்றி பேசாமல் இயற்கையை, பெண்களை, காதலை, மானுட நேயத்தைக் கொண்டாடி கதைகளும் கவிதைகளும் எழுதி பிரசுரிப்பார்கள். இதையெல்லாம் படித்துவிட்டு இன்னும் சிலர் படுகுழிக்குள் விழுவார்கள். இவர்கள் ஒருவித தமிழ் நண்டுகள் - தாம் கிடக்கும் குப்பைத்தொட்டியைப் பற்றியும் எழுத மாட்டார்கள், புதிதாக அந்த பக்கம் வருகிறவர்களை இழுத்து உள்ளே போடுவார்கள். அப்புறம் அவர்களும் இவர்களுடன் சேர்ந்து “அன்பே அழகே சமத்துவ சமூகமே போராட்டமே கலகமே” என எழுதிக்கொண்டிருப்பார்கள். 

சென்னை இலக்கியத் திருவிழா நிகழ்வொன்றில் சாருவுடன் ஒரு உரையாடல் நடந்தது. நெல்சன் சேவியர் ஒரு எழுத்தாளனின் சமூகப் பொறுப்பு என்ன, மக்களின் பிரச்சினைகளுக்காக அவர்களைத் திரட்டும் போராட்ட முனையாக அவன் இருக்க வேண்டாமா என்பதைப் போலொரு கேள்வியை எழுப்புகிறார். அதற்கு சாரு ஒரு நல்ல பதிலை அளிக்கிறார்: எழுத்தாளனின் கடமை தான் தன் தினசரி உலகில் எதிர்கொள்ளும் அநீதிகளை - அவை எவ்வளவு சின்ன பிரச்சினைகள் என்றாலும் - பொருட்படுத்தி சீரியஸாக எழுதுவதே. உ.தா., தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் நான் வக்கீலுக்கு கொடுக்கப் போகிற 50,000இல் ஒரு ரூபாயாவது குறையுமா? குறையாது. என் குழந்தையை பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காது. நான் என் வேலையை இழந்து தெருவுக்கு வர நேர்ந்தால் தமிழகத்தின் தன்னாட்சி இருந்தால் என் வயிற்றுக்கு கஞ்சி கிடைக்குமா? கிடைத்தாது. அரசியல் என்பது கட்சி அரசியலும் பாராளுமன்ற அரசியலும் மட்டுமல்ல. வீட்டில், தெருவில், வேலையிடத்தில் எதிர்கொள்ளுகிற சின்னச்சின்ன கொடுமைகள், சுரண்டல்கள், அல்லது சாரு சொல்வதைப் போல அன்பின் பெயரிலான அத்துமீறல்களும் அரசியல் தாம், அவற்றை எதிர்ப்பதும் அரசியல் தாம். தன் வாழ்க்கைக்கு நேர்மையாக இருப்பதும் தன் தனிப்பட்ட அரசியலை வெளிப்படையாக முன்வைப்பதுமே ஒரு எழுத்தாளனின் கடமை. அவ்விதத்தில் வேறெந்த படைப்பாளியையும் விட சாருவிடம் அரசியல் நுண்ணுணர்வு அதிகம், சொல்லப்போனால் அவர்கள் எவரையும் விட அவரிடம் நேர்மை அதிகம். சொந்த வாழ்க்கையில் பெரும் அநீதிகளை இழைத்துவிட்டு வெளியே தொண்டை புடைக்க அநீதிக்கு எதிராக குரலெழுப்புவதில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...