முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சொந்த அனுபவங்களை ‘அப்படியே’ கதையாக எழுதலாமா?



ஓரளவுக்கு எழுதத் தெரிந்தவர்களால் கூட ஒரு நாவலை தமது சொந்த வாழ்க்கை அனுபவங்களைக் கொண்டு எழுத முடியும் என நான் நம்புகிறேன். இன்னும் சொல்லப் போனால் தம் முதல் நாவலை அதுவரையிலான வாழ்க்கை அனுபவங்களின் படி எழுதுவதே நல்லது என்று கூறுகிறேன்

 நண்பர் கண்ணன் அடிக்கடி தான் எழுதப் போகும் தன் முதல் நாவலைப் பற்றி சொல்லுவார். அதை ஏன், எதற்காக, எப்படி எழுதப் போகிறேன் என்று அவருக்கு ஒரு திட்டம் உள்ளது. நான் அப்போதெல்லாம் உங்கள் கதையை சற்று மாற்றாமல் அப்படியே எழுதுங்கள் என்று சொல்வேன். அதற்கு ஒரு காரணம் உள்ளது:


 நமது முதல் நாவலில் நமது தனிப்பட்ட அனுபவங்களுக்கு வெளியே கற்பனையாக பாத்திரங்களையும் அவர்களுடைய அகவுலகையும் வர்ணித்து கட்டியெழுப்புவது சற்று சவாலானது. சில நேரங்களில் புதிய பாத்திரங்களை கற்பனையில் உருவாக்கினால் அவர்களுடைய அடிப்படையான நோக்கம், சவால்கள், நெருக்கடி, விளைவு ஆகியவற்றை கண்டடைய முடியாமல் போகக் கூடும். அவை நமக்குத் தெரியாததால் கதையின் போக்கில் பல தடங்கல்கள் ஏற்பட்டு நாவலோ முட்டிக்கொண்டு நின்று போகும். ஆனால் நமது சொந்த அனுபவமெனும் போது நமக்குநோக்கம், சவால்கள், நெருக்கடி, விளைவுஎன்பன முன்கூறாகவே தெரிந்திருக்கும் என்பதால் நம் அனுபவங்களின் கோவையானது ஒரு முழுமையான கதையாகவே எழுதப்படுமுன்னரே நம் முன் இருக்கும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதை எடுத்தாள்வதே.


இதையே தான் நாம் நாம் நமது அன்றாட உலகில் பார்க்கும் மனிதர்களுக்கும் சொல்வேன். அவர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்ட சம்பவங்கள், தகவல்கள், நம்பிக்கைகளை வைத்து நம் கற்பனையில் ஏற்கனவே ஒரு சித்திரம் ஏற்பட்டிருக்கும். இது முழுமையாகி இருந்தால் இதை சிறிது மாற்றி ஒரு அழகிய பாத்திரத்தை உருவாக்குவது நமக்கு சுலபமாக இருக்கும். இல்லாவிட்டால் இதில் ஒவ்வொன்றையும் நாம் நமது பிரயத்தனம், ஆய்வு மூலமாக கட்டியெழுப்ப வேண்டியிருக்கும்


அதனால் நம் கதையில் ஒரு கராத்தே ஆசான் வருகிறார், அவருடைய பாத்திர அமைப்பை நம் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் இருந்து எடுத்துக் கொண்டு சிறிது மாற்றி எழுப்பலாம். அல்லது நாம் கராத்தே பயிலும் போது  ஆசான் இருந்திருந்தால் அவரது இயல்புகளை வைத்து நம் கற்பனையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யமான பாத்திரத்தை தீட்டலாம். நாம் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் நாம் பார்க்கும் நிஜத்தை அப்படியே நகலெடுத்து எழுதுவது எழுத்தல்ல. நமது அனுபவத்தை சித்தரிப்பது எதார்த்தம் அல்ல. மாறாக நிஜம் என நாம் நினைப்பதே நடப்பில் காணும் ஒரு நிகழ்வை, மனிதரிடம் உள்ள இடைவெளிகளை நமது கற்பனை மூலம் மிக இயல்பாக நாம் நம் மனக்கண்ணில் சித்தரிப்பது தான். ஆம் நமக்குள் நாம் ஒவ்வொருவரும் ஒரு எழுத்தாளன் தான். நாம் இந்த கற்பனையான அனுபவத்தை மேலும் கற்பனையால் மீளுருவாக்கம் பண்ணுவதேஅனுபவ ரீதியான புனைவெழுத்து’. இது இரண்டாவது முறை நிகழ்வதால் இது மிக அனுக்கமாக நமக்கு மாறுவதால் இதில் இருந்து ஒரு உயிர்ப்பு, தன்னம்பிக்கை நமக்கு கிடைக்கும்


நிஜத்தில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஒரு அனுபவத்தை எந்தளவுக்கு உணர்வுசார்ந்த கற்பனையுடன், வேகத்துடன், மனவெழ்ச்சியுடன் நாம் மீளுருவககுகிறோமோ அந்தளவுக்கு அதில் உண்மைத்தன்மை அதிகமாகும், அதை எந்தளவுக்கு நாம் கற்பனையின்றி அப்படியே நகல் எடுக்கிறோமோ அந்தளவுக்கு அது பொய்யாகத் தோன்றும். அதாவது உண்மையென்பது பொய்யாகவும், பொய்யென்பது உண்மையாகவும் தோன்றுவதுமே மனித புரிந்துணர்வின் விசித்திரமாகும்.


ஆம், சொந்த அனுபவங்களைஅப்படியேகதையாக எழுத முடியாது தான். ஆனால் அந்த அனுபவம் எனும் கற்பனையை மேலும் கற்பனையாக்கி நம்மால் எழுத முடியும்


கண்ணன் அடுத்தொரு கேள்வியைக் கேட்டார்: “நம் சொந்த அனுபவத்தை நாம் அலங்கரித்து, இலக்கியதனமாக மாற்றி எழுத வேண்டுமா, அதை நம் மொழித்திறனால் மாற்றியமைக்க வேண்டுமா?”


ஒரு கதையை சொல்வதற்கு நமக்கு அக்கதைக்கு ஏற்ற ஒரு மொழியே அன்றி ஒரு தனித்த மொழி அல்ல. நமது அனுபவத்தை நமக்கு பகர்த்தும் அளவுக்கான மொழி நமக்கு இருக்கிறதென்றால் - அதாவது நமது கதை நமக்கு ஆழமான ஒரு தாக்கத்தை நம்மளவில் நமக்கே ஏற்படுத்தி இருக்கிறதென்றால் நமக்கு அதற்கான மொழி இருக்கிறதென்றே பொருள் - நாம் அம்மொழியிலே எந்த பாசாங்கும் இன்றி எழுதலாம். பாமாவின்கருக்கு”, முத்துமீனாளின்முள்போன்ற நாவல்களும், எம்.ஜி.ஆரின்நான் ஏன் பிறந்தேன்எனும் சுயசரிதையில் உள்ள சில பகுதிகளும் இதற்கு உதாரணம். ஆலிஸ் வாக்கரின் மிக பிரசித்தமான நாவல்கலர் பர்ப்பிள்வேறு வகையான எளிமைக்கு மிகச்சிறந்த உதாரணம். இந்நாவல் அமெரிக்காவில் வாழும் மிகக்குறைந்த படிப்பறிவும், அனுபவ அறிவும் கொண்ட கறுப்பின பெண்ணின் பதின்வயதில் இருந்து மத்திய வயது வரையிலான அனுபவங்களை அந்தந்த நிலைக்குரிய மொழியில் சொல்லுகிறது. இதில் கதைகூறல் மொழியின் எளிமையானது தன்மையில் எழுதப்பட்டு ஒருவித நகைமுரணும், பாசாங்கின்மையும், குழந்தைமையையும் பெறுகிறது. அதாவது ஆசிரியர் இப்பாத்திரத்தின் மனநிலை, மன அமைப்பு, அறிவுத்திறன், குழப்பங்கள், வலியை மனதில் வைத்து அதற்கு ஏற்ப சொற்களை கவனமாக தேர்வு செய்கிறார். படிப்பறிவு குறைவான, புறவுலகில் அதிகம் பயணிக்காத ஒரு பெண்ணின் சொற்தொகுப்பானது மிக மிக சாதாரணமாக, எல்லைக்குட்பட்டதாக இருக்கும், மேலும் ஒரு சொல்லை துல்லியமாக பயன்படுத்தவும் அவளுக்குத் தெரிந்திருக்காது என்பதால் தோராயமான சொற்களையே பயன்படுத்துவார். சில சொற்களை திரும்பத் திரும்ப தவறாக பயன்படுத்தி அதையே அப்பாத்திரத்தின் பிரச்சினையை புரிய வைப்பதற்கான உத்தியாக்கி இருப்பார் ஆலிஸ் வாக்கர். அதெ போன்றே போகப் போக அப்பாத்திரத்தின் அறிவும் அனுபவங்களும் விரிய, ஆழமாக, கூர்மை பெற அதன் விளைவை சொற்களின் தேர்வு, விரிவில் பிரதிபலிப்பார்


ஆக, நாம் அலங்காரமாக, ஸ்டைலாக நம் மொழியை உருமாற்றத் தேவையில்லை. கதைக்காகத் தான் மொழியே அன்றி மொழியின் பொருட்டு கதை அல்ல. கதையின் பல நுட்பங்களுக்கு ஏற்ற கச்சிதமான மொழியே நமக்குத் தேவை. அது தப்புத்தப்பாக பேசுகிற ஒருவருடைய மொழி என்றால் அதிலேயே நாவலை தாராளமாக எழுதலாம். என்னுடைய பாத்திரம் நாகர்கோவிலில் வாழ்பவர். அவர் தன்மையில் தன் கதையை சொல்லிப் போகிறார். அவருக்கு நிறைய சொற்கள் தெரியாது. கதை துவங்கும் போது  அவர் மிகவும் கவலையாக இருக்கிறார். ஆனால் அவர் கவலை எனும் சொல்லை பயன்படுத்த மாட்டார். அதற்குப் பதிலாகசுகமில்லைஎன்றே சொல்லுவார். உடல்நலமில்லாததற்கும், இனிமையாக இல்லை என்பதற்கும் அதே வார்த்தை தான். அவர்சுகமில்லைஎன்று கூட சொல்ல மாட்டார், “சோமில்லதான். அதனால் அவர்நேத்திலேந்தே எனக்கு சோமில்ல, கேட்டியா? சோமில்லேன்னா நிஜமாவே சோமில்ல. ஒரு மாம்பளம் கெடந்துது. அதை வெச்சி புளிச்சேரியும் ஆம்பிளேட்டும் போட்டு வைச்சுத் தின்னேன். அந்தளவுக்கு ஒண்ணும் சோமா இல்லெ. செல நேரம் சோமில்லேன்னா குளுசெ எதையாவது எடுத்து போட்டிட்டு கெடக்கலாம், ஆனா இந்த சோமில்லாதது குளுச போட்டாலும் போவாது கேட்டியா.” இது வட்டார வழக்கு மட்டுமல்ல. இங்கு வழக்கின் துல்லியமோ, அதிகமான வார்த்தைகளின் பிரயோகமோ கதையின் நோக்கத்திற்குள் வராது என்பதால்சோமில்லஎன்பதை வைத்தே நிறைய பிரச்சினைகளை துல்லியமற்ற துல்லியத்துடன் சொல்லிவிட முடியும். பொதுத்தமிழ் இல்லாமலே முழுக்க இப்படி பிழையும் மீள மீள வரும் ஒரே வகையான சொற்களை வைத்தே இக்கதைக்கான மொழியை உருவாக்க முடியும்


இவ்வாறு ஒரு கதையின் இலக்கிய தரத்தை, அதன் ஸ்டைலை அதன் கதையே தேர்வு செய்து உருவாக்குகிறது. எழுத்தாளன் அல்ல

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

தவெக: உண்மை இனிமேல் உண்மை அல்ல

  காங்கிரஸுடன் கூட்டணி , விசிக , ஐயுஎமெல்லுக்கு அமைச்சரவையில் இடம் என தற்சமயம் தவெக ஒரு திமுக குளோனாகத் தன்னை மாற்ற உத்தேசிப்பது தெரிகிறது . அண்மையில் அவர்களுடைய அமைச்சர்களின் பதில்களைக் கேட்டால் அதிலும் இந்த திமுக நகல்தன்மையைக் காண இயலும் . அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிர்ப்பு , தமிழ்நாட்டு நலன் , சினிமாத்தனமான தோரணைகள் , ரீல்ஸ் என்று திமுகவின் இடங்களை அள்ளிவிடுவதே திட்டம் . இன்னொரு பக்கம் இதுவரை தவெகவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு உடன் நின்று சில ஊடகங்கள் , ஆர் . எஸ் . எஸ் ஆதரவாளர்கள் , நிதியளித்ததாகச் சொல்லப்படும் பாஜகவின் ஒரு பகுதியினர் கடுமையாக தவெகவைத் தாக்கி எதிர்க்கட்சி குளோனாகத் தம்மை மாற்றுவதையும் கவனிக்க இயலும் . அதாவது திமுக vs பாஜக என்பதை தவெக vs பாஜக என மாற்றப் போகிறார்கள் . பாஜகவின் உத்தேசம் அடுத்த தேர்தலில் இடங்களைப் பெறுவதல்ல . திமுகவை ஒரேயடியாக நாடாளுமன்றத் தேர்தலிலும் பலவீனப்படுத்தி அதன் இடங்களை தவெகவுக்கு அளிப்பது . அதிமுகவும் திமுகவும் இல்லாத தமிழ்நாட்டை அடைந்துவிட்டால் அவர்...

"ஆபீஸ்" நாவல் குறிப்புகள் (1): கலைஞர்களின் கலகத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

  "ஆபீஸ்" நாவலில் கவிஞர் விக்கிரமாதித்யன் (நாவலில் அவர் நம்பி என வருகிறார்) விமலாதித்த மாமல்லனிடம் குடிப்பதற்குப் பணம் கேட்கிற காட்சி ஒன்று வருகிறது. ஒரு இரவில் நண்பர்கள் குடித்து உணவுண்டுவிட்டு கிளம்புகிறார்கள். சம்பளம் வருவதற்கு எட்டு நாட்களே உள்ளன, பாக்கிப் பணத்தை வைத்துச் சமாளிக்க வேண்டுமே என வி.மா கவலையுடன் இருக்கிறார். ஆனால் விக்கிரமாதித்யன் அப்பணத்தை வைத்து அன்றிரவு குடித்து விடுவோமே என்கிறார். வி.மா மறுக்க "ஏன் இப்படிப் பணத்தை எண்ணி எண்ணி செலவழிக்கிறாய்? ஒரு கலைஞன் இப்படி குமாஸ்தாவாக இருக்கக் கூடாது." என்று சொல்கிறார். விக்கிரமாதித்யன் தயங்காமல் குடிக்கப் பணம் கேட்பது ஒரு அதிசயம் அல்ல. இலக்கிய ஆர்வலர்கள், சக எழுத்தாளர்கள் பலருக்கும் அத்தகைய அனுபவம் இருக்கும். குழந்தையைப் போல கேட்டுக் கொண்டே இருப்பார். கொடுக்காமல் இருந்தால் ஒருவித பதற்றமும் குற்றவுணர்வும் நமக்கு ஏற்படும். எனக்கு அது முக்கியமாகத் தோன்றவில்லை. முக்கியமானது இக்கேள்விதான்: உண்மையிலேயே கலகம் என்பது, சுதந்திரமாக இருப்பதென்பது பணத்தின் மீது பொறுப்பில்லாமல் இருப்பதுதானா? பணம் மீதான அக்கறைதான் நம்மை வ...