கடந்த பத்திருபதாண்டுகளில் வந்துள்ள மலையாளப் படங்களுக்கு ஒரு பிரச்சினை உள்ளது. அவை பிளாஸ்டிக்காக, ஆனால் மிக புத்திசாலித்தனமாக இருக்கும். திரைக்கதையின் தந்திரங்களால் நம்மைக் கடைசி வரை பார்க்க வைக்கும், ஆனால் முடிவில் ஒரு பெரிய அதிருப்தி நம்மைக் காத்திருக்கும். அது உணர்வுரீதியான வெறுமை. என்னதான் இப்படங்களை நாம் கொண்டாடினாலும் திரும்பத் திரும்ப பார்க்க வைக்கும் ஒரு உணர்வுரீதியான ஒன்றுதல் இப்படங்களில் இருப்பதில்லை. வெற்றான புதிர்களாக இவை மாறி வருகின்றன. அதுவும் கொரோனாவுக்குப் பிறகான மலையாளப் படங்களைப் பார்க்கையில் எனக்கு சற்று பயமாகக் கூட உள்ளது - இப்படங்களைப் பார்த்து உள்வாங்கும் மலையாளிகள் எப்படி இருப்பார்கள்? சகமனிதரிடத்து ஒருவித அன்னியோன்யத்தை, பிரியத்தை, நம்பிக்கையை இழந்தவர்களால் மட்டுமே ஒரு கதையை வெற்றுத் தந்திரங்களுக்காக பார்க்க முடியும். இத்தனைக்கும் 90கள் வரை மலையாள படங்களில் உணர்ச்சிகரமான மோதல்கள் இருக்கும். விழுமியங்களின் வீழ்ச்சியும், அது ஏற்படுத்தும் கோபமும் துயரமும் இருக்கும், குடும்பம், சமூக அமைப்புகளின் (சில குறிப்பிட்ட சாதிகள், பாலினம்) சிதைவு குறித்த பதற்றம், சினம் இருக்க...