முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலககோப்பை 2023 - முதல் அரை இறுதிப்போட்டி - இந்தியா vs நியுசிலாந்து



நாளை இந்தியா நியுசிலாந்து அரை இறுதிப் போட்டி. தலைவிதியைத் தீர்மானிக்கும் நெருக்கடியான போட்டிகளில் இந்தியா “இதயம்” முரளி போல திக்கித்திக்கி நிற்குமா அல்லது எம்.ஜி.ஆர் போல சரோஜா தேவியை இடுப்பிலேயே வளைத்துப் பிடிக்குமா என்பதை நாளைப் பார்க்கலாம். எம்.ஜி.ஆர் என்றால் இறுதிப்போட்டியை அந்த வேகத்திலே போய் அடித்துவிடுவார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆஸ்திரேலியா நிச்சயமாக இறுதிப்போட்டியில் இந்தியாவை ஆதரிக்கும் பெரும் மக்கள் திரளுக்கு முன் கடும் அழுத்தத்தில் ஆடும். சொதப்பும். ஆக, நாளைய போட்டி உலகக்கோப்பை 2023ஐ ஆஸ்திரேலியா வெல்வதற்கான அதிர்ஷ்டம் எந்தளவுக்கு உள்ளது என்பதைக் காட்டும். மற்றபடி உளவியல் நெருக்கடிக்கு அப்பால் நியுசிலாந்து ஒரு குழந்தைப்பாப்பா அணி என உறுதியாக நம்புகிறேன். ஹீராவோ பீராவோ, காதல் கண்றாவி, அழுகை எல்லாம் வேண்டாம், வாடா அடிப்போம் என இந்தியா இறங்கினால் நியுசிலாந்தை ஊதித் தள்ளிவிடுவார்கள். நாளை களமிறங்குவது முரளியா எம்.ஜி.ஆரா என்பதே முக்கியமான கேள்வி.

நியுசிலாந்திடம் பந்துவீச்சில் விக்கெட் எடுக்க ஆளில்லை. அதுவும் நல்ல ஆடுதளத்தில் அவர்களுக்கு வேகமோ ஸ்விங்கோ சுழலோ இல்லை. முழுக்க மட்டையாட்டத்தையும் களத்தடுப்பையும் நம்பியிருக்கும் அணி அது. அவர்களுடைய பெரிய அனுகூலம் ஜெயித்தாக வேண்டும் எனும் நெருக்கடியை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஒருபோதும். அதனாலே நியுசிலாந்து வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸில் தோனிக்கு நல்ல பொருத்தமாக அமைகிறார்கள். அவர்கள் தோனி வகையறா. அப்படியே கூல் ஸ்டோரேஜிலே பிறந்து அப்படியே ஜில்லென்று வந்து நிற்பவர்கள்.
சரி, ஆட்டச்சூழலுக்கு வருவோம். ஆட்டம் மும்பையின் வான்கடே மைதானத்தில் நடக்கிறது. நல்ல பவுன்ஸும் வேகமும் இருக்கும். தரமான மட்டையாட்ட ஆடுதளம். தொட்டால் பறக்கும். ஷமியை விட பும்ராவும் சிராஜும் நன்றாக வீசுவார்கள். ஜடேஜாவுக்கு பந்து திரும்பாது. ஆனால் குல்தீப்புக்கு அந்த பவுன்ஸ் உதவக் கூடும். மட்டையாட்டத்தில் ரோஹித்துக்கு வான்கடேவில் ஒருநாள் போட்டிகளில் மோசமான ஆட்டசாதனை வரலாறு உள்ளது. ஏனென்றால் வான்கடேவில் பந்துவீச்சாளர்களுக்கு கொஞ்சமாக ஸீம் அசைவு, பவுன்ஸ் கிடைக்கும். கம்பு சுற்றினால் ஸ்லிப்பில் கேட்ச் போகும். ரோஹித்துக்கு அது சொந்த ஊர் மண் என்றாலும் அவர் அதற்கு தயாராக இல்லை என்பது அதிசயம். அரை இறுதியில் அது மாறும் என நான் நம்பவில்லை. ஷ்ரேயாஸ் அந்த பவுன்ஸில் வரும் பெர்குஸனின் வேகப்பந்து பவுன்சரை எங்கே அடிப்பார்? அங்கு ஒரு பலவீனம் உள்ளது. அதனால் இரு மண்ணின் மைந்தர்களிடமும் நான் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. கில், கோலி, ராகுல், சூர்யா தான் என் குதிரைகள்.
இதுவரையிலான போட்டிகளில் அங்கு முதலில் மட்டையாடிய அணிகளே வென்றிருக்கிறார்கள். ஆறு மணிக்கு மேல் வேகப்பந்து ஸ்விங் ஆகிறது, எகிறுகிறது, 20 ஓவர்களுக்குப் பின் நன்றாக ஆடுகிறது. ஆனால் நிறைய அணிகள் இரண்டாவதாக மட்டையாடும் போது 20 ஓவர்களுக்குள் குறைபிரசவமாகி விடுகிறார்கள். அதனால் நாளை யார் டாஸ் வென்றாலும் முதலில் மட்டையாடப் பார்ப்பார்கள். நியுசிலாந்து எப்போதுமே இம்மாதிரி டாஸ், சீதோஷ்ண நிலை அதிர்ஷ்டத்தை நம்பியிருப்பார்கள். நாளை அவர்களுக்கு சாதகமாக எதாவது நடக்குமா எனப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் முதலில் இந்தியா மட்டையாடி பெரிய ஸ்கோர் அடிக்கும். இரண்டாவதாக மட்டையாடும் நியுசிலாந்தால் ஓரளவுக்கு நெருங்கி வரவும், நெருக்கடி கொடுக்கவும் முடியும். குறிப்பாக ரச்சின் சதம் அடித்தால். ஆனால் அவர்கள் முதலில் மட்டையாடி 300ஓ அதை ஒட்டியோ அடித்தால் போல்ட்டும் சௌதியும் மாலை நேரத்தில் வீசும் கடற்கரைக் காற்று, குளிர்ந்த காற்று ஆகியவற்றின் ஸிவிங்கை பயன்படுத்தி முதல் பத்து ஓவர்களில் 3-4 விக்கெட்டுகளை வீழ்த்த முயல்வார்கள். ஆட்டம் பரபரப்பாக இருக்கும். இந்தியா தன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய வேகவீச்சாளர்களுக்கு எதிராக அனுபவித்த அதே நடுக்கத்தை, தடுமாற்றத்தை மீண்டும் அனுபவிப்பார்கள். யார் காப்பாற்றுவார்கள்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...