முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நவம்பர் மாத உயிர்மை கட்டுரை

"தமிழ் அறிவுச்சூழலில் கெட்ட வார்த்தைகள் எதிர்மறையாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால் சமகால ஆய்வுகள் கெட்ட வார்த்தைகளை மனித வாழ்க்கைக்கு அவசியமான ஒரு நேர்மறையான மொழிப்பயன்பாடாகவே கெட்ட வார்த்தைகளைப் பார்க்கின்றன. நாம் அடிப்படையில் மிருகங்கள் என்பதால் கெட்ட வார்த்தைகளை மிருகங்கள் எப்படி பயன்படுத்துகின்றன என்பதில் இருந்தே ஆரம்பிக்கலாம். விலங்குகளைப் பொறுத்தமட்டில் காயத்தினால் ஏற்படும் வலியை சீறல், உடல்மொழியினால் மிரட்டுதல், பற்களைக் காட்டுதல் என்றே அவை வெளிப்படுத்தும். இவ்வெளிப்பாடு ஒரு நேரடியான சண்டை நிகழாதிருக்க உதவுகிறது. மிக அரிதாக தவிர்க்க இயலாத சூழலிலே விலங்குகள் பரஸ்பரம் காயப்படுத்தும். அது நிகழாதிருக்க ‘கெட்ட வார்த்தைகளே’ விலங்குகளுக்கு முக்கியமான கேடயமாகின்றன. நாய்களை எடுத்துக் கொண்டால் மனிதர்கள் தம் கோபத்தை, எரிச்சலை சொல்லின் வழியாக வெளிப்படுத்துவதையே அவை ஏற்கின்றன. அதாவது நீங்கள் கையை ஓங்கினால் கூட அதை ஒரு சைகைக் குறிப்பானாகவே அவைப் பார்க்கும். உங்களிடம் வராமல் விலகிப் போகும். கையை ஓங்காது ‘கெட்டப் பையன்’ (bad boy) என்று மட்டுமே சொல்லிப் பழக்கினால் நாய் அதை உங்கள் கெட்ட வார்த்தையாக எடுத்துக்கொண்டு உடனே பணியும். (இதை ஒரு நாய்ப்பயிற்சியாளர் எனக்கு சொல்லித் தந்தார்.) அதாவது கெட்ட வார்த்தையின் பொருள் நாய்மொழியில் வெறுப்போ, சமூக விலக்கமோ அல்ல, “நான் கோபமாக இருக்கிறேன், என்னருகே வராதே” என்பதே. சிம்பன்ஸி குரங்குகள் தம் மலத்தை எடுத்து எறிந்தோ காட்டியோ தம் கோபத்தைக் காட்டும். இச்சிம்பன்ஸிகளை ஆய்வுக்காக வளர்க்கும் போது மலம் கழிக்க வேண்டும் எனும் சொல்லுக்கு சைகை மூலம் ஒரு குறியைக் (sign) காட்ட சொல்லித் தருகிறார்கள். போகப் போக இக்குரங்குகள் தம் கோபத்தைக் காட்ட கெட்ட வார்த்தையாக அந்த குறியை சைகையாக தம் வளர்ப்பாளர்களிடம் காட்ட ஆரம்பித்தன என்கிறார்கள் ஆய்வாளர்கள். 
அப்படியே மனிதர்களுக்கு வருவோம்.
சாலையில் வாகன ஓட்டிகளில் தம் எரிச்சலை, கடுங்கோபத்தை வெளிப்படுத்தி கைக்கலப்புகளை தவிர்க்கவே கெட்ட வார்த்தைகளை வெற்றிகரமாகப் பயன்படுத்துவதாக ஸ்டேப்பிள்டன் தன் ஆய்வில் தெரிவிக்கிறார். எனக்கு இதைப் படித்த போது என்னுடைய பல்கலையில் வேலைக்கு சேர்ந்த சில ஐரோப்பியர்கள் கன்னட மொழியில் கெட்ட வார்த்தைகளைக் கேட்டுக் கற்றுக்கொண்டது நினைவுக்கு வந்தது. அக்கெட்ட வார்த்தைகளே தம்மை நிம்மதியாக காரோட்ட அனுமதித்தாக அவர்கள் என்னிடம் குறிப்பிட்டனர்.

கெட்ட வார்த்தைகளை சொல்லும் போது நமது நரம்பியல் எதிர்வினை எப்படி இருக்கிறது என்பது சுவாரஸ்யமானது. கெட்ட வார்த்தைகளை சொல்லும் போது நம் மூளையில் மொழி மற்றும் நினைவுத்திறனுக்குப் பொறுப்பான பகுதிகள் விழித்துக்கொள்ள நாம் ‘சமரிடு அல்லது தப்பித்துச் செல்’ (fight or flight) எனும் மனநிலைக்குச் செல்கிறோம். அதனாலே விளையாட்டின் போதும் (கிரிக்கெட், குத்துச்சண்டை), செக்ஸின் போதும் கெட்ட வார்த்தைகள் நம்மை அதிக விழிப்புடன், தன்னிலை மறந்து உணர்ச்சிப்பெருக்குடன் செயலில் ஈடுபட உதவுகின்றன. அப்போது நமக்கு அதிக செயலின்பம் கிடைக்கிறது. ஒரு குறிப்பிட்ட ஆய்வில் சிலரை வீடியோ கேம் ஆட வைத்து அவர்களில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவோர் அதிக விழிப்பாக இருந்து கூடுதல் புள்ளிகளை வென்றதைக் கண்டனர். இன்னொரு ஆய்வில் சமூகக் கூச்சத்தைத் தூண்டும் கெட்ட வார்த்தைகள் (தாயின் பிறப்புறுப்பு, தாயுடனான பாலுறவு) விதவிதமாக பயன்படுத்தப்படும் போது அவை வெகுசீக்கிரமாக நம் நினைவில் பதிவதாகவும், அப்போது நமது உணர்ச்சித்தூண்டலும், விழிப்பும் அதிகமாக இருப்பதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள்."

- உயிர்மை, நவம்பர், 2023 இதழில் வந்துள்ள எனது "கெட்டவார்த்தைகளின் 'மகத்துவம்' கட்டுரையில்" இருந்து

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...