முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நம் நாவல்களின் போதாமை

 நேற்று நண்பர் கணேஷ் என்னைப் பார்க்க வந்த போது இப்போதைய நாவல்கள் பற்றி ஒரு கேள்வி வந்தது. நான் சொன்னேன், “இங்கு எல்லாருக்குமே இந்த உலகில் யாராக இருக்கிறோம், ஏன் அப்படி இருக்க முடியாமல் போகிறது, அந்த போதாமை என்ன எனும் கேள்வி உள்ளது. பலருக்கும் அப்படி ஒரு கேள்வி உள்ளது பற்றி பிரக்ஞை இல்லாமல் இருந்தாலும் அதுதான் உள்ளுக்குள் அவர்களை தொடர்ந்து செலுத்திக்கொண்டிருக்கிறது. நாம் எழுதும் நாவல்களின் மையமாக இக்கேள்வியே இருந்தாக வேண்டும். அப்போதே வாசகனுக்கு அப்படைப்பு அர்த்தமுள்ளதாகத் தோன்றும். இல்லாவிட்டால் வெறும் தகவல்களாக, வரலாறாக, கருத்துக்களின் தொகுப்பாகத் தோன்றும். எடையற்ற கதையாக ஏமாற்றமளிக்கும். தனது Story எனும் நூலில் ராபர்ட் மெக்கீ இதை கதைகளின் விழுமியம் - value - என்கிறார். தமிழில் சிலர் இதை தரிசனம் என்றும், வேறு சிலர் ஆழம் என்றும் கூறுகிறார்கள். தமிழின் சிறந்த படைப்பாளிகளின் மோசமாக எழுதப்பட்ட நாவல்களில் கூட இந்த கேள்வி இருக்கும், அதுவே வாசகர்களை திரும்பத் திரும்ப ஈர்க்கிறது. நவீன இலக்கியத்தில் மட்டுமல்ல சங்க இலக்கியம், காப்பியங்களில் கூட இந்த கேள்வி முக்கியமாக உள்ளது.

ஒரு சங்கப் பாடலில் (மருதத் திணை) தலைவியான குறப்பெண் தான் காயப்போடும் தானியங்களை குருவிகள் வந்து திசைக்கொன்றாய் கொத்திக்கொண்டு பறந்து போவதைக் குறிப்பிட்டு மறைமுகமாக தன் மனத்துடன் அதை ஒப்பிடுகிறாள். அதில் கேள்வி இப்படி இந்த தெளிவான புத்திசாலித்தனமான உலகிலும் அதற்கு நேரெதிரான இன்னொரு உலகிலும் என் மனம் ஏன் சிதறிப் பறக்கிறது, அதை ஏன் நான் அனுமதிக்கிறேன் என்பதே.
சில நேரங்களில் நாம் வரலாற்றுத் தகவல்களை, பத்திரிகைத்தனமான ஆய்வில் கிடைக்கும் கதைகளை, குடும்பத்தின் வரலாறு எனும் வம்சாவழிக் கதைகளை ஒரு டெம்பிளேட்டில் வைத்து வசவசவென எழுதிக்கொண்டே போகிறோம். அதில் கதையிருக்கும், உணர்ச்சியிருக்கும், தகவல்கள் இருக்கும், ஆனால் மனிதனின் இருப்பு குறித்த விசாரணை இருக்காது. இது இன்று மட்டுமல்ல முன்பும் இருந்தது. அதை இயல்புவாதம் என அழைத்தார்கள். உள்ளுக்குள் ஒன்றுமில்லாத வெற்றுப் படைப்புகள். வாழ்க்கையை இயல்பாகக் காட்டுவதாக சிலாகிப்பார்கள். ஆனால் வாழ்க்கையே இருக்காது. இந்த ‘விபத்து’ தமிழுக்கு ஏன் ஏற்பட்டது என்பது முக்கியமான கேள்வி.
நீலபத்மநாபனின் கதையுலகம் இந்த விபத்துக்கு ஒரு நல்ல உதாரணம்.

இன்னும் சிலரிடம் மனிதனின் இருப்பு குறித்த கேள்விகளுடன் தட்டையான முன்முடிவுகள் இருக்கும். ஜெயகாந்தன் ஒரு உதாரணம். ஆனால் அவர்கள் எழுதியது ஒன்றுமே இல்லாத எழுத்தை விட மேலானது. ஏனென்றால் அது நம்மை பல சிந்தனைகளை, கேள்விகளை நோக்கி செலுத்தக் கூடும். எனக்குத் தமிழின் இயல்புவாத நாவல்களை விட 80, 90களின் சில வணிக நாவல்களே மேல் எனத் தோன்றும். சிவசங்கரி, இந்துமதி போன்றோர் ஒரு பக்கம், பாலகுமாரன் போன்ற சிலர் இன்னொரு பக்கம். அவர்களுடைய பாத்திரங்களுக்கென ஏதோ ஒரு தேடல் இருக்கும். நாம் அப்படைப்புகளை இப்போது நினைத்தாலும் பிரதான பாத்திரங்களின் அத்தேடலே கண்ணுக்கு முன் வரும். பேதங்களின் நடுவே நான் எப்படி இருக்கிறேன், குடும்பத்தின் நடுவே சம்மந்தமில்லாத லட்சியத்துடன் நான் எப்படி, யாராக இருக்கிறேன், குடும்பத்தில், லௌகீகங்களின் மத்தியில் ஆன்மீக நாட்டத்துடன் இருக்கும் நான் யார், எப்படியாக இதில் இருக்கிறேன்? இப்படியான கேள்விகளே அங்கு முக்கியம். பேய்க்கதைகள் இந்த இருப்பு குறித்த கேள்விகளின் போதாமையை கண்ணுக்கு முன்னால் கொண்டு வரும் காட்சியை அமானுஷ்யமாக முன்வைத்தவை. இன்மையே அங்கு பீதியை உண்டாக்குகிறது. அது இருத்தலின் இன்மையின் பீதி. அதனாலே மேற்குலகிலும் பேய்க்கதைகள் எப்போதும் இலக்கிய வாசகர்களை ஈர்க்கிறது. அவை அடிப்படையில் தத்துவார்த்த கதைகளே.

ஆனால் சுஜாதாவின் நாவல்களில், கதைகளில் இயல்புவாத படைப்புகளைப் போன்றே தத்துவார்த்தம் இருக்காது. ஒரு காகிதத்தன்மை மட்டுமே இருக்கும். சுஜாதவுக்கும் வாழ்க்கையை எதிர்கொள்வதில் ஒரு தயக்கம் இருந்தது, அவர் அதை எளிய உயிரிவேதியல் என சுருக்கிக் கொண்டார்.

தமிழில் நடந்த பெரும் நெருக்கடி அறிவியல் யுகத்தின் போது இங்கு வந்த காலனியாதிக்க, இடதுசாரி, முற்போக்கு, சமூகவியல், பகுத்தறிவு மரபை என்ன செய்வது என்பதே. ஏனென்றால் அதை ஏற்றுக்கொண்டால் ஆன்மா என ஒன்று இல்லையென்றாகி விடும். ஆன்மா இல்லாத உலகில் அகத்தை எப்படிப் பேச முடியும்? ஆகையால் நம் ஆட்களில் ஒரு பகுதியினர் அகவாழ்க்கையை புறவயமாகப் பேசத் தலைப்பட்டார்கள். அவர்கள் தீவிர மதவாதிகளாக இருந்தாலும் அதை எழுத்தில் கொண்டு வரவும் முடியவில்லை. எப்படி புறவயமாக இருப்பை அணுகுவது என்றும் தெரியவில்லை. ஆகையால் அவர்கள் இருப்பு குறித்த கேள்வியை கடாசி விட்டு மேலோட்டமான உளவியலைக் கொண்டும், புறவுலக விவரணைகளைக் கொண்டும் வாழ்க்கையைப் பேசத் தலைப்பட்டார்கள். தமிழில் நல்லவேளையாக எதார்த்தவாத நாவல்களுக்கு இப்பிரச்சினை இருக்கவில்லை. அதனாலே அவ்வடிவம் பின்நவீனத்துவத்துக்குப் பின்பும் இங்கு தழைக்கிறது.

இப்போதும் நாம் ஒரு நாவலை எழுதும் முன்பு இதில் வரும் பிரதான பாத்திரத்திற்கு இந்த வாழ்க்கையில், இருத்தலில் உள்ள போதாமை என்ன எனும் கேள்வியை எழுப்பி, அதன் திசையிலே மொத்த கதையையும் வடிவமைக்க வேண்டும். அதை விடுத்து வாழ்க்கையை, வரலாற்றை, சமூகத்தை, உலகைப் பேச முயல்வது சட்டையை எடுத்து காற்றுக்கு மாட்டிவிடுவதைப் போன்றது. அந்த சட்டை பறந்துகொண்டே இருக்க வேண்டியதுதான்.

நான் குறிப்பிடுவது தத்துவ நாவலை அல்ல. காதல், வேலை, சமூகப் பிரச்சினைகள், தனிப்பட்ட பிரச்சினைகள், சாகசம், துயரம் ஆகியவற்றைப் பேசும் நாவல்களைப் பற்றியே சொல்கிறேன். எல்லா படைப்புகளிலும் இந்த தத்துவார்த்தம் இருக்க வேண்டும். தத்துவம் வேறு, தத்துவார்த்தம் வேறு. ஆஸ்பத்திரிகளில் குழந்தைகள் எவ்வாறு கவனிக்கப்படுகிறார்கள், கவனிக்கப்படவில்லை என்பது தகவல். ஆஸ்பத்திரியில் ஏன் ஒரு குழந்தை போயிருக்கிறது என்பது தத்துவார்த்தம். கீதை (கொஞ்சம் பிழையுள்ள) தத்துவம், மகாபாரதம் தத்துவார்த்தம். மூலமத்தியமகாகாரிகை தத்துவம், திருக்குறள் தத்துவார்த்தம். விக்கிரமாதித்தன்-வேதாளம் கதைகளில் உள்ளது தத்துவார்த்தம். தத்துவ நாவலில் தத்துவார்த்தத்துடன் தத்துவப் பிரச்சினையே மையமான சிக்கலாக இருக்கும். “அந்நியன்”, “பிளேக்” இதற்கு உதாரணம். நான் தத்துவார்த்தத்தையே குறிப்பிடுகிறேன். அது தமிழ்ப் பண்பாட்டின் முக்கியமான சாரம். அந்த அம்சம் இல்லாவிடில் ஒரு கதை வாசகர்களின் உரையாட முடியாது. அது ஊமையாகி விடும். ஏனோ நவீன யுகத்தில் சில கட்டங்களில் அது காணாமல் போய்விடுகிறது.”

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...