காதலை நாம் விலங்குகளைப்போலச் செய்ய வேண்டும்! அன்று நான் ஒரு வேனில் ஏற்றிச் செல்லப்பட்ட ஆடுகளின் கூட்டத்தில் இரு ஆடுகள் காதலிப்பதைப் பார்த்தேன். உண்மையான கூலான காதல் என்றால் அதுதான். யாரும் யாருக்காக எதையும் அர்ப்பணிக்கத் தேவையில்லை.
அல்லது புக்காவஸ்கி சொல்வதைப் போல இருக்க வேண்டும். மனிதன் அடிப்படையில் தனியனே, எந்த பெண்ணாலும் அவன் தனிமையைத் தீர்க்க முடியாது. அவளால் எதைத் தீர்க்க முடியுமோ அதை மட்டுமே முடியும். அதையும் மீறி அவளிடம் தொடர்ச்சியான மகிழ்ச்சியை, நிறைவை நாடினால் அவள் அவனை பெண்ணாக மாற்ற முயல்வாள். இது பெண்களுக்கும் பொருந்தும்: காதலனை தோழியாகப் பாவிக்க விரும்புவாள் - ஒரு எல்லையைக் கடந்தால் ஆணும் பெண்ணும் இப்படி இருவேறு இனங்கள். சேர்ந்து வாழவே முயலக்கூடாது.
அதனாலே புக்காவஸ்கி தன் கவிதைகளிலும் கதைகளிலும் காதலை வலியுறுத்துவதில்லை. காதலற்ற ஈர்ப்பே மகத்தானது, மனிதனின் மாண்பை, உயர்வைக் காப்பாற்றுவது, அதுவே அவனை அடிமைப்படுத்தாது என்கிறார்.
இதில் விதிவிலக்கு தனியாக வாழ அச்சமுள்ளோர், பேய் பயமுள்ளோர் மட்டுமே.
இன்னொரு லட்சிய தாம்பத்ய நிலை உள்ளது - அது சமூக நிபந்தனைகளால், நம்பிக்கைகளால் கட்டிக் காப்பாற்றப்படுவது. அங்கு காதல் அல்ல, தன்னை மீறிச் செல்லும் விழைவே உறவின் தாத்பரியம். அந்த மனநிலை இனி மக்களுக்கு சாத்தியப்படுமா எனத் தெரியவில்லை. இப்போது மக்களுக்கு சாத்தியமுள்ளது காதலை பாசாங்கில்லாமல் எதிர்கொள்வது மட்டுமே.
கருத்துகள்