முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வினோதங்களின் கிடங்கு

 


Essential tremor என்று சொல்வார்கள். கையோ கைவிரல்களோ தன் பாட்டுக்கு நடுங்கிக்கொண்டே இருக்கும். சிலருக்கு இது ரொம்ப பயங்கரமாக தூக்கித்தூக்கி அடித்தபடி இருக்கும். நடுக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலேயே களைத்துவிடுவார்கள். எனக்கு இரு ஆண்டுகளாக இந்த நடுக்கம் இடதுகையில் இருந்து வந்தது. கடந்த ஆண்டு இது மோசமானது. எழுதும்போது தொந்தரவாக இருந்தது. தேநீர் அருந்தும்போது தளும்பியது. புத்தகத்தை இடதுகையில் வைத்துப் படிக்கையில் பக்கங்கள் காற்றில் இலைகளைப் போல நடுங்கின. அப்போதுதான் இதைப் பற்றி ஆய்வு செய்து இதன் பெயர் essential tremor என்று கண்டுகொண்டேன். இதற்கு தீர்வு இல்லையென்றும் மருந்துகளின்வழியாக மோசமாகாமல் தடுக்கலாம் என்றும் ஆய்வுகள் கூறின. எனக்கு 55 வயதுப் பிறகு இது கடுமையானால் என் எழுத்தை பாதிக்குமே என வருத்தமாக பதற்றமாக இருந்தது.
என் அம்மாவிடம் சொன்னால் அவர் இது மரபணு சார்ந்ததாக இருக்கலாம், என் தாத்தாவுக்கும் இருந்தது என்றார். எனக்கு இந்த மரபணு தொடர்ச்சி வியாதிகளில் எல்லாம் நம்பிக்கையில்லை. நாம் நமது உணவாலே ஆகிறோம். நாம் நமது குடலில் வாழும் நுண்கிருமிகளாலும் நமது அணுக்களில் மைட்டோகோண்டிரியாவாக உள்ள பாக்டீரியாவாலும் உருவானவர்கள். நாம் அவர்களின் கூட்டமைப்பு. ஆகையால் பிரச்சினையை அதன் வேரில் கண்டடைந்து சரிசெய்ய முடியும் என நம்பினேன். என்ன மாதிரி டயட் இதற்கு உதவும் என ஆராய்ந்தேன். சிலர் மாவுச்சத்தைக் குறைப்பது உதவும் என்றார்கள். ஆய்வுகளும் சில நுண்சத்துக்களை எடுப்பது நோயின் தாக்கத்தைக் குறைக்கும் என்றார்கள். நான் என் டயட்டை மாற்றினேன். ஆனால் அதனால் நடுக்கம் குறையவில்லை. வைன் அருந்துவது நடுக்கத்தை தற்காலிகமாக நிறுத்தும் என்றார்கள். எடுத்துக் கொண்டேன். ஆனால் மிகமிக தற்காலிகமாகத்தான் உதவியது. என்னால் வைன் அருந்தியபின் படிக்கவோ எழுதவோ முடியாது என்பதால் பெரிய பயனிருக்கவில்லை. ஒருகட்டத்தில் சலித்துப் போனேன். கட்டுப்படுத்த முடியாத நடுக்கம் கொண்டோருக்கு மூளையில் ஒரு கருவியைப் பொருத்தினால் இதைத் தடுக்க முடியும் என ஒரு கட்டுரையில் படித்தேன். ஆனால் அதற்கு ரொம்ப செலவாகும்.
நரம்பியல் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்தேன்.

ஆனால் கடந்த ஆறு மாதங்களும் வேலையென்றால் வேலை ஏதோ தினமும் புயல் மழையில் நாசமாகிய ஊரை சீரமைப்பதைப் போலத்தான் வாழ்க்கை இருந்தது. என்னால் டயட்டை மட்டுமே பின்பற்ற முடிந்தது, உடற்பயிற்சி, குத்துச்சண்டை பயிற்சி நின்றுபோனது. எழுதுவதும் குறைந்தது. என் வாழ்க்கையின் மிகக்கொடூரமான காலம் என நினைத்து கசப்பை முழுங்கிக் கடந்தேன். அந்த வேலைகளுக்கு மத்தியில் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்பதும், நடுக்கம் மோசமாகக் கூடும் என்பதும் மறந்துவிட்டது. அந்த கட்டத்தில் ஒருவேளை மட்டும் மாவுச்சத்து எடுத்துவந்தேன், கூடவே 16 மணிநேர விரதமும். இது உடற்பயிற்சியில்லாத நிலையில் எடையைக் கட்டுப்படுத்த போதாது என நினைத்தே கடந்த இரு மாதங்களாக நான் கீட்டோ டயட்டுக்குச் சென்றேன். பால் சேர்த்த காபி, தேநீர், பச்சையாக உட்கொண்ட பீட் ரூட், கேரட் மட்டுமே முழு கீட்டோவுக்குப் போகாமல் தடுத்தன. அதனால் கடந்த சில நாட்களாக பாலையும் தவிர்த்து முழுகீட்டோவுக்குப் போனேன். காபி, தேநீரை பாலில்லாமல் எடுத்துக்கொண்டால் கபைன் பொதுவாக நடுக்கத்துக்கு நல்லதல்ல. ஆனால் நான் கைநடுக்கத்தை மறந்துவிட்டிருந்ததால் கடுங்காப்பிக்குள் மீனைப் போல நீந்திக் கொண்டிருப்பேன். அது என் உற்சாக பானம்.

கடந்த சில வாரங்களாகவே என் கைநடுக்கம் கிட்டத்தட்ட நின்றுவிட்டதாக ஒரு உணர்வு. ஆனால் நிதானமாகச் சோதிக்க அவகாசம் கிடைக்கவில்லை. இன்றுதான் பார்த்தேன் - 90% மேல் குறைந்துவிட்டது. என்னால் இதை நம்ப முடியவில்லை. என் உணவில் அப்படி எதைத்தான் மாற்றினேன், எதைப் புதிதாக சாப்பிட்டேன் எனத் தெரியவில்லை - மருந்தோ மருத்துவமோ இல்லாமல் சரியாகிவிட்டது. நல்லவேளை மருத்துவரிடம் போகவில்லை - அவர் பாட்டுக்கு ஏகப்பட்ட மருந்துகளைக் கொடுத்து அதனால் பின்விளைவுகள் ஏற்பட்டிருக்கும்.

இப்போது ஒரே கேள்வி - இதை அப்படியே தொடர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது. எதனால் இது சரியாகிற்று எனத் தெரியாமல் அதைச் செய்ய முடியாது. காபி, தேநீர் எடுத்தும் கைநடுக்கம் 90% சரியாகியிருக்கிறது என்பதால் அதைத் தொடரலாம் என இருக்கிறேன். எதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை. செய்ய முடிவதெல்லாம் கீட்டோவைத் தொடர்வதுதான்.

என் உடம்பில் இப்படியான அதிசயங்கள் அடிக்கடி நடக்கின்றன. எனக்கு இன்னொரு நரம்பியல் பிரச்சினையும் இருந்து அதுவும் உணவை மாற்றி விரதம் இருந்ததும் தன் பாட்டுக்குப் போய்விட்டது. இப்படி என் உடல் வினோதங்களின் கிடங்காக உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...