முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏன் விஜய் ஆதரவாளர்களை அரசியல்படுத்த இயலாது?




//விஜய்க்கு வாக்களித்தவர்கள், இந்தி எதிர்ப்பு, இடஒதுக்கீடு, தமிழ் உணர்வு, சிறுபான்மை நலன், தொகுதி வரையறை எதிர்ப்பு, மாநில சுயாட்சி இவை மட்டுமல்ல, பாஜக எதிர்ப்பைக்கூட அறியாதவர்கள்(அப்படி ஒரு கட்சி இருப்பதும் பலருக்குத் தெரியாது) இதுதான் அரசியலற்றத் தன்மை. - வே. மதிமாறன்//

இப்பார்வை தவறென்கிறேன். பாசிஸம் ஆன்மீக தோரணை கொண்டது. சினிமா ரசிக மனநிலையும் அப்படியானதே. அது இல்லாத ஒன்றை நோக்கி கற்பனையாலும் உணர்வுகளாலும் பாய முயல்வது. அது இலக்கில்லாத ஒரு பாய்ச்சல். விஜய் ரசிகர்கள் அதனால் ஒரு புது ஆட்சிக்கு வாக்களிக்கவில்லை. அவர்கள் ஒன்றுமில்லாத ஒன்றுக்காக வாக்களிக்கிறார்கள். இத்தகையோர் தனிமனிதப் பண்புகளான கௌரவம், சுயசிந்தனை, பகுத்தறிவு, தொலைநோக்கு இல்லாதவர்கள். கவனியுங்கள்: இவர்கள் படிப்பு, வேலை எனத் தம் வாழ்க்கைத் தேவையின் பொருட்டு பகுத்தறிவைப் பயன்படுத்துவார்கள். ஆனால் தம்மைக் குறித்துப் பரிசீலிக்க, வாழ்க்கையை ஆழமாகப் பார்க்க இவர்களால் பகுத்தறிவின் வழியில் செல்ல இயலாது. இவர்கள் உடைந்து போனவர்கள். முன்பு மதம் மக்களுக்கு இருந்தது. இவர்களுக்கு மதத்திலும் தீவிர பிடிப்பு இருக்காது. பொழுதுபோக்கு, போதை மருந்து, சினிமா, அரசியல் எல்லாமே அதனால் ஒருவித மதமாகி விடுகிறது இவர்களுக்கு. தம்மையே அறியாமல் அப்படிச் செயல்படுகிறார்கள். இவர்களைச் சமூகவலைதளப் பிரச்சாரம் இப்படி மாற்றவில்லை. இவர்கள் இத்தகைய கூட்டு மனநிலைகளை, இன்பத்தையும் குதூகலத்தையும் அளிக்கும் மனநிலைகளைத் தேடுகிறார்கள். விஜய் அதை அளிக்கிறார். கொள்கையும் அரசியல் சிந்தனையும் இவர்களைத் தம்மைக் குறித்தும் வாழ்க்கையைக் குறித்தும் பரிசீலிக்க வைக்கும் என்பதால் அதைச் செய்ய மாட்டார்கள். தம்மைக் கடந்து செல்ல வேண்டிய விழைவுக்கு மதமும் தீனியளிக்காததால் இவர்கள் மேற்சொன்ன வழியில் பயணிக்கிறார்கள்.
இவர்கள் இத்தகைய மனநிலைக்கு வரும்போது தமது எல்லா அடையாளங்களையும் இழந்து ஒரு தலைவரைக் கடவுளாகக் கருதி புளகாங்கிதம் அடைவார்கள். இவர்களுக்கு அதுவே வேண்டும். இதுவே இவர்களை முடிவுகளை எடுப்பதில் இருந்து, பொறுப்புகளை வரிப்பதில் இருந்து காப்பாற்றுகிறது. இதுவே இவர்களுக்கு மர்மமானதொரு அதிகாரத்தை அளிக்கிறது. இத்தகையோரை நீங்கள் அரசியல்படுத்த இயலாது. இவர்கள் மக்களாட்சி முறை, மானுடவாதம், அதன் விழுமியங்களுக்கு அப்பால் உள்ளவர்கள். அரசியல்படுத்துவது தனிமனிதர்களுக்கான செயல்பாடு. இவர்கள் தனிமனிதர்கள் அல்லர்.
இத்தகையோரை நாம் போதை மருந்துப் பயனர்களுடன் ஒப்பிடலாம். ஏனென்றால் இவர்களுடைய மூளையமைப்பிலேயே மாறுதல்கள் தோன்றும். இதைப் படித்துப் பாருங்கள் (https://www.labroots.com/.../15729/cults-change-brain...).
இன்ஸ்டாவில் சென்று பரப்புரை செய்தாலும் இவர்களைக் 'கைப்பற்ற' முடியாது.
இரண்டு விசயங்கள் மட்டுமே சாத்தியம்:
1) இயல்பு வாழ்க்கைக்கு இவர்களைத் திருப்புவது. இயல்பு வாழ்க்கையைத் தன்னளவில் மகிழ்ச்சியாக்குவது. வேலை வாய்ப்புகளைப் பெருக்குவது. குடும்ப அமைப்பை வலுப்படுத்துவது. கல்வி அமைப்பில் ஆசிரியர்களின் இடத்தை வலுவாக்குவது. சமூகத்தில் எல்லா நிலைகளிலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பது. யாரையும் கைவிடாதிருப்பது. சமூகத் தனிமையை ஒழிப்பது. அதன்பிறகு நம் சமூகத்தில் போதை வஸ்துக்களையும் சினிமா பயன்பாட்டையும் குறைப்பது.
2) இந்த கும்பல் மட்டுமே தமிழ் நாடு அல்லர். 65% மக்கள் இன்றும் பாதிக்கப்படாமலே உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது அவசியம்.
இது அரசியல் பிரச்சினை என்பதை விட ஒரு சமூக உளவியல் பிரச்சினை. இது திமுகவின் பிரச்சினை என்பதைவிட ஒரு சமூகப் பிரச்சினை. ஒருவர் தன் வாழ்வின் கடைநிலையில் இருக்கும்போது மட்டுமே விஜய்யை ஆதரிக்க முடியும். மக்கள் ஏன் அந்நிலைக்குப் போகிறார்கள் எனச் சிந்திக்கலாம். என்றாவது இதெல்லாம் சரியாகலாம். ஆனால் தமிழ்ச் சமூகம் கல்ட் வழிபாட்டாளர்களைக் கடந்தே சிந்திக்க வேண்டும்.
அதேநேரம் இவர்கள் நம் பிள்ளைகளாகவும், சகோதர சகோதரிகளாகவும் தாய்மாராகவும் சக குடிமக்களாகவும் இருப்பதால் நம்மால் இவர்களைக் கடந்தும் செல்ல முடியாது. தனிப்பட்ட நிலையில், நமக்கும் இவர்களுக்குமான இடைவெளியானது ஒரு தலைமுறை இடைவெளி அல்ல. அவ்வாறு சொல்லப்படுவது அபத்தமானது. நாம் இவர்களிடம் எப்படி உரையாடுவது என்பதல்ல, இவர்களை என்ன செய்வது என்பதே பிரச்சினை. நம் குடும்பத்தில், நட்பு வட்டத்தில் இருந்து சிந்தித்துப் பார்க்கலாம். அங்கிருந்து ஆரம்பிக்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...