முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எதிரிக்கு நண்பனை நண்பனாக்கி எதிரியாக்குவது


செய்தி: //ஆளுநர் மாளிகையின் கெடுபிடிகள் மற்றும் அதிமுக-திமுக இடையேயான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடந்தாலும், தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சியை வழங்க வேண்டும் என்பதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அதன் ஒரு பகுதியாக தனது கூட்டணியில் இருந்த விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-விற்கு ஆதரவளிக்க அவர் முழு சுதந்திரம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை விசிக தனது ஆதரவை தவெக-விற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. இதன் மூலம் விஜய்யின் தலைமையிலான அரசு அமைவது உறுதியாகியுள்ளது.//


ஸ்டாலின் ஆசியுடன் திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தவெகவுக்கு என்பதே ஒரு சுவாரஸ்யமான கதையாடல்தான். ராகுல் காந்தி செய்த சீண்டலின் அடுத்த கட்டம் இது. 'வஞ்சிக்கப்பட்ட வாலிபனைத்' தம் நாடகத்தின் 'நடிகனாக்கி' விட்டார்கள். விஜய் இந்த 'நாடகத்தில்' வேடத்தை ஏற்றுக்கொண்டு இதை ஆரம்பித்தால் அவரால் தனக்கான வசனங்களை ஒப்பித்து காட்சிகளில் நடிக்கவும் முடியாது, எதிராக எதையும் பேசி திரைக்கதையை மாற்றவும் இயலாது. இந்த 'நாடகம்' அரங்கேறினால் அதற்குள் பல முரணான வசனங்களும் காட்சிகளும் நிகழ்த்தப்பட்டே ஆகும்.
திமுக தலைமையின் கணக்கு இப்படி இருக்கும்: விஜய்யால் இப்போதுள்ள நிலையில் சுலபமாக ஆட்சி அமைக்க இயலாது. கட்சியை உடைக்க எடப்பாடி உடன்பட மாட்டார். தன் எம்.எல்.ஏக்களை அவர் எப்படியோ கட்டுப்படுத்தி விடுவார். கலக எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையும் போதுமானதாக ஒருவேளை அமைந்தாலும் அது எப்போதும் பிய்த்துக் கொண்டு போகும் எனத் தெரியாது. மேலும் அவர்கள் பாஜகவின் கைப்பாவைகள். அந்த ஆட்சியில் தொடர்ந்து தவெகவின் பாஜக ஆதரவு அரசியல் மீது திமுக அணிக் கட்சிகள் தாக்குதல் தொடுத்துக் கொண்டே இருக்கும். கட்சியை உடைத்ததால் எடப்பாடி அதிமுகவும் அத்தாக்குதலில் இணைந்து கொள்ளும். இதுவே திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரிப்பதானால் அது பாஜகவுக்கு செக் வைத்தது போலாகும். கூடவே அது தவெகவுக்கும் ஒரு செக் தான் - அவர்களை மறைமுகமாகக் கட்டுப்படுத்தி பாஜக சார்பு முடிவுகளை எடுக்கவிடாமல் பண்ண முடியும்.
பாஜக விஜய் மீது வழக்குகளைப் போட்டு நெருக்கடி கொடுத்தால் விஜய் வேறுவழியின்றி பாஜக பக்கம் சாய்ந்தால் திமுக கூட்டணியினர் கட்சியை முற்றுகையிட்டு அழுத்தம் கொடுக்க முடியும். ஆட்சியைக் கவிழ்க்க முடியும். அப்போது தேர்தல் வந்தாலும் அதை திமுக கூட்டணியால் நியாயப்படுத்த முடியும் (தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பாற்ற தவெகவினரின் துரோகத்தைத் தடுக்க செய்ய வேண்டியதாகிற்று).
இப்போது ஆட்சி அமைக்க முடியாமல் மறுதேர்தல் வந்தால் அது திமுகவுக்குப் பாதகமே. அதிமுக-பாஜக ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்தால் அதனால் தமக்கு (விசாரணை, கைது என) சில சிக்கல்கள் கூட அடுத்த தேர்தல் நெருங்கும்போது வரலாம் என திமுக தலைமை யோசித்திருக்கலாம். அல்லது இது பாஜகவைக் கடுப்பேற்றவும் ஆட்சியை ஒரே சமயத்தில் வெளியே இருந்து ஆதரித்தும் எதிர்த்தும் அரசியல் செய்யவுமாக அவர்கள் உத்தேசிப்பதனால் எடுத்த முடிவாக இருக்கலாம்.
எனக்கென்னவோ காங்கிரஸும் திமுகவும் சேர்ந்தே இந்த நாடகத்தை மறைமுகமாக நடத்துவதாகத் தோன்றுகிறது. அல்லது தற்செயலாகவும் இருக்கலாம். பாஜகவின் திராவிட ஆட்சி ஒழிப்புத் திட்டத்தை ஹைஜேக் செய்யும் அரசியலாக இருக்கலாம். திராவிட கட்சிகளின் அஸ்தமனம் இத்தேர்தலுடன் ஆரம்பித்து விட்டது என எழுதியவர்களுக்கு இதையெல்லாம் பார்த்தால் கடுப்படிக்கும். எதையோ தூக்கி மூஞ்சியில் அடித்ததைப் போலிருக்கும்.
அதேநேரம் விஜய் இதையெல்லாம் மனதளவில் ஏற்றுக் கொண்டு ஆட்சியமைக்க அனுமதி கோருவாரா? பாஜக எதாவது புதிய முட்டுக்கட்டை இடுமா?
எதிரியின் எதிரி நண்பன் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் முதல் எதிரியின் நண்பனான தன் இரண்டாவது எதிரியை நண்பனாக்கி முதல் எதிரியை சுற்ற விடுவதை இப்போதே பார்க்கிறேன். தேர்தலுக்கு முந்தைய அரசியலைவிட தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் சுவாரஸ்யமாக இருக்கிறது.
பி.கு: திருமா முதல்வராக்கப்படுவார் என்பதை நம்பவில்லை. துணை முதல்வராக்கலாம். ஆனால் அது ஜல்லிகட்டுக் காளை உரிமையாளர்களை இன்னும் வெறியேற்றுமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நலத்திட்டங்களின் அடிப்படையான பிழை

  மகளிர் உதவித் (உரிமைத்) தொகைத் திட்டத்தைக் கைவிடுவதைக் குறித்து தவெக அரசு பரிசீலிக்க வேண்டும். அதற்காகச் செலவாகும் 15,000 கோடி ரூபாயை படித்து வேலை கிடைக்காமல் இருப்போரில் வருடாந்திர குடும்ப வருமானம் ஒரு அளவுக்கு மேல் குறைவாக இருப்போருக்கு அளிக்க வேண்டும். அதேபோல முறைசாரா தொழிலாளர்களுக்கு நொடிந்த தொழில்களில் ஈடுபட்டிருப்போருக்கும் கொடுப்பதை அரசு பரிலீக்க வேண்டும். அதாவது உதவி / உரிமைத் தொகையை பாலினம் சார்ந்ததாக அல்லாமல் தொழில் சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். மேற்சொன்ன பெண்களும் அப்போது இத்திட்டத்திற்குள் வந்துவிடுவார்கள். சொந்தமாக வீடும் சொத்தும் கொண்ட பெண்கள் இந்த தொகையைப் பெறுவதைத் தவிர்க்க இயலும். இந்த மாற்றத்திற்கான தேவைகளாக நான் கருதுவன: 1) வர்க்கரீதியாக இது திட்டமிடப்படாததால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. 2) இதை அரசு மக்களுக்கு கொடுக்கும் லஞ்சமாக சிலர் காண்கிறார்கள். அதாவது பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அவர்களைத் தம் வசம் இழுப்பதற்காக அரசுகள் இத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். இதனால் மக்கள் நலத் திட்டத்துக்கே பெயர் கெடுகிறது. 3) தொழில்...

மக்களாட்சியின் தோல்வியும் மதிப்பிடுகளின் வீழ்ச்சியும் எப்படி முதலீட்டியத்தால் விளைந்தன?

ஏலியன்களே நம் நாட்டுக்கு வந்து கட்சி தொடங்கி ஆட்சியமைத்தாலும் ரௌடிகள், நில முகவர்கள், திடீர் பணக்காரர்கள், மோசடிக்காரர்கள் எம்.எல்.ஏ, அமைச்சர்கள் ஆவதையும், பெரும்பணக்காரர்கள் ஆட்சியைக் கையில் வைத்து தம் விருப்பப்படி உருட்டுவதையும் தவிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். நம் அதிகாரக் கட்டமைப்பு அப்படி. ஒரு செய்தி பார்த்தேன். எளியவர்களுக்கு வாய்ப்பளிப்போம் என்று கூறிய தவெகவின் எம்.எல்.ஏக்களில் 80% மேல் கோடீஸ்வரர்கள். குற்றவாளிகள், போலி சான்றிதழ் பேர்வழிகள், புரோக்கர்களும் உண்டு. கட்சியே ஒரு பக்கம் பாஜக கொடுத்த நிதியையும் இன்னொரு பக்கம் லாட்டரி குடும்பத்தின் நிதியையும் வைத்தே இத்தனை நாட்கள் நடந்தது. இனிமேல் டெண்டர் முறைகேடு, பல தளங்களில் ஊழல் என்று கொள்ளையடித்து 'தன்னிறைவு' ஆக முயல்வார்கள். அமைச்சர்கள் பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்து பெரிய நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வார்கள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவார்கள். ஏன் எந்த ஆட்சி வந்தாலும் இந்த டெம்பிளேட் மாறுவதில்லை என்றே நாம் கேட்க வேண்டும்? யார் நல்லவர், யார் கொஞ்சம் குறைவாகக் கெட்டவர் என்பது அல்ல. நமது இப்போத...