Skip to main content

குற்றவுணர்ச்சி இல்லாத 'தலைவர்'




 

கரூர் சம்பவத்தை எடுத்துக் கொள்வோம். கூட்ட நெரிசடியில் மக்கள் மிதிபட்டு இறக்கிறார்கள். ஒரு நிதானமான, கனிவான மனிதர் தன்னைத் தலைவராகவும் கருதக் கூடியரென்றால் அந்த இடத்தில் இருந்து ஓட மாட்டார். நிலைமையைப் பரிசீலிப்பார். அம்மக்களைக் காப்பாற்றுவதற்கும் மருத்துவ உதவி செய்வதற்கும் தன்னால் ஆனவற்றைச் செய்வார். அடுத்து நடந்த 'விபத்திலோ' 'குற்றத்திலோ' தன் பங்கு என்னவென யோசிப்பார். கூட்டம் நடந்த இடத்தைத் தேர்ந்ததிலோ அளித்ததிலோ தவறுகள் இருக்கலாம். ஆனால் கூட்டம் அதிகமாவதை அறிந்ததும் அதை சரிவர ஒழுங்குபடுத்துவதும் கூட்டம் அதிகமானால் அவர்களைப் படிப்படியாக வெளியேற்றி விபத்தைத் தவிர்ப்பதும் ஒரு ஒருங்கிணைப்பாளரின் பொறுப்பு. ஆக எப்படிப் பார்த்தாலும் விஜய்க்கு அதில் பங்குண்டு. அவர் தன்னால் நேரடியாக அது நிகழவில்லை என நினைத்தாலும் கூட அவருக்கு அதில் பங்குண்டு எனும்போது மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். இதயத்தில் இருந்து சிந்திப்போர் அப்படியே இருப்பர். ஆனால் விஜய் ஒரு வித்தியாசமான மனிதர் - சிலருக்கு இயல்பிலேயே பிறரிடத்தில் தன்னை வைத்துப் பார்த்து இரங்குகிற, வருத்தப்படுகிற திறன் இருக்காது. இது ஒன்று மூளைக் குறைபாடாகவோ (வலப்பக்க மூளையில் உள்ள சில பகுதிகள்) அல்லது மனப்பிரச்சினையாகவோ இருக்கும். பொதுவாக மன பிரச்சினை அதிகமானோரால் அடுத்தவர் பிரச்சினையைப் பார்க்க இயலாது என்பார்கள் (narcissism, antisocial disorder), bipolar disorder). விஜய்யின் பிரச்சினை என்னவென்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் மக்களுடன் பரவலாகப் போய் பழக் இயலாதவராக, அடுத்தவர்களின் துன்பங்களில் கலந்துகொண்டு இரக்கம் கொள்ள இயலாதவராக அவர் உள்ளதைப் பார்க்கையில் அவர் ஒரு நார்சிசிஸ்டாக, சமூக எதிர்ப்பண்புகள் கொண்டவராக இருக்கவே வாய்ப்பதிகம்.

எனக்கு கரூர் அசம்பாவிதத்திற்கு அவர் பொறுப்பா என்பதைவிட அவர் அப்போது வெளிப்படுத்திய நடத்தையே அதிக கொடூரமானதாகத் தெரிகிறது. ஏனென்றால் உள்ளுக்குள் ஒரு மரணத்திற்கும் தனக்குமுள்ள பொறுப்பை உணர முடியாதவர்களே ஹிட்லர், முசோலினி ஆகிறார்கள். ஹிட்லரைப் பற்றி ஒன்று சொல்வார்கள் - அவர் தன் உறவுக்காரரான ஒரு இளம் பெண்ணை நேசித்தார். கிட்டத்தட்ட கட்டாயப்படுத்தி தன்னுடன் வைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் அப்பெண் வேறொருவரை நேசிப்பது அறிந்ததும் கொன்று விட்டார். அதைக் குறித்து அவர் துளியும் குற்றவுணர்வு அடையவில்லை. அதுவே அவருக்கு நியாயமாகப் பட்டது - தன்னை மறுத்துவிட்டு ஒருவருக்கு வாழ அருகதையே இல்லையென நினைத்தார். இதுவேதான் தன் சிந்தாத்தத்தின்படி யூதர்களுக்கும் வாழ அருகதையே இல்லையென நினைக்க வைத்தது. இப்படி நினைப்போர் புறமே கொலை நிகழுமுன்னே அதை அகத்தே நிகழ்த்திவிடுவர். கொலை என்பது இன்னொருவரின் இடத்தை மறுப்பது, இன்னொருவரின் இருப்புக்கான நியாயம் இல்லையென நம்புவது. புறக்கொலையை விட அகக்கொலை இன்னும் மோசமானது. விஜய் ஒரு கூட்டத்திற்கு வரும்போது அங்கே தன்னைக் காணத் திரண்டுள்ள ஆயிரக்கணக்கானோரைக் காண்கையில் இவர்கள் எல்லாம் தன்னை நோக்கிப் பரவசம் கொள்ளும் ஒரே காரணத்திற்காகவே உயிருடன் இருக்கிறார்கள் எனத் தோன்றும். அவர்கள் இறந்துபோனாலும் தனக்காக இறக்கவே அவர்கள் பிறந்திருக்கிறார்கள் என அந்த தர்க்கத்தை நீட்டிப்பார்கள். மனித நேயமெல்லாம் இதற்கு குறுக்கே வராது. நடத்தையைத் தாண்டி இது ஒரு மனநிலை.
நான் மற்றொரு உதாரணம் சொல்கிறேன்: மனு ஷர்மா.
மனு ஷர்மா 1999இல் தில்லியில் ஒரு பாருக்கு நள்ளிரவில் போய் விஸ்கி கேட்கிறார். பாரில் சர்வீஸ் செய்யும் பெண்ணான ஜெஸிக்கா லால் அவரிடம் நேரமாகிவிட்டது, கிளம்புங்கள் என்கிறார். மனு ஷர்மா பெரும்பணக்கார, அரசியல்வாதி தகப்பனாரின் மகன். அவருக்கு வாழ்க்கையில் யாருமே எதையுமே மறுத்ததில்லை. அவரால் பிறரது துன்பங்களைப் புரிந்துகொள்ள இயலாது. அப்பண்பே அவருக்கு இல்லை. அவர் ஆயிரம் ரூபாய் டிப்ஸ் கொடுப்பதாகச் சொல்கிறார். ஜெஸிக்கா அப்போதும் மறுத்துவிட அவர் ஒரு துப்பாக்கியை எடுத்துச் சுட்டு விடுகிறார். ஜெஸிக்கா கொல்லப்பட அக்குற்றத்துக்கு மனு ஷர்மா சிறைசெல்வதற்கு 7 ஆண்டுகள் ஆகிவிடுகிறது - தலைமறைவாவது, சான்றுகளை மறைப்பது என தப்பிக்க பல மார்க்கங்களை நாடுகிறார். ஆனால் இக்குற்றம் வெகுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்த வேறுவழியின்றி சிறைக்குச் செல்கிறார். அவர் வெளிவந்தபின் செய்வதுதான் இங்கு கவனிக்கத்தக்க சம்பவம்: அவர் தன் பெயரை சித்தார்த் ஷர்மா என்று மாற்றிக்கொண்டு தன் அப்பாவின் மது உற்பத்தி தொழிலை விரிவுபடுத்துகிறார். அவர் அண்மையில் ஒரு புது ஸ்காட்ச் விஸ்கியை அறிமுகப்படுத்தினார். அதன் பெயர் "இந்திரி". இந்த விஸ்கி பாட்டிலின் லோகோதான் சிறப்பு - அதில் ஒரு பொட்டு இருக்கும். அதைப் பார்க்கவும் இந்திரியில் உள்ள எழுத்துருவையும் பார்க்க ஒரு பெண் பொட்டு வைத்துக் கொண்டிருப்பதைப் போலிருக்கும். அது எதையோ மக்களுக்கு நினைவுபடுத்தியது. எங்கோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தவர்களுக்கு அது ஜெஸிக்காவின் தோற்றம் என்று தெரிந்தது. ஜெஸிக்கா அவரது படங்களில் அவ்வாறு பொட்டு வைத்திருப்பது பிரபலம். மனு எனும் சித்தார்த் ஏன் தன் குற்றத்தை, தன் வாழ்வின் கறுப்புப் பக்கத்தை, கடந்து வராமல் அதில் திளைத்திடவும் தான் உருவாக்கிய விஸ்கிக்கு அப்பெண்ணின் அடையாளத்தைக் கொடுக்கவும் முற்பட்டார். அதில் ஒரு சீண்டல் உண்டு - நான் இப்பெண்ணின் பெயரில் 'வேட்டையாடப்பட்டேன்', இப்பெண்ணின் நினைவிலே உங்களைச் சீண்டுவேன். என் விஸ்கியைக் குடிப்போர் அவளது ரத்தத்தையும் தானே குடிக்கிறீர்கள் எனும் விளையாட்டுத்தனம் அது. ஆனால் இப்படி ஒருவரது நினைவை வைத்து விளையாட ஒருவித குரூரம் வேண்டும். கரூர் சம்பவத்திற்குப் பின் சிறிதும் குற்றவுணர்வின்றி விஜய் மீண்டும் மேடைகளில் தோன்றி களமாடுவதைப் பார்க்க எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது - 41 பேரின் உயிருக்கும் தனக்கும் எச்சம்மந்தமும் இல்லை, அது 'ஆளும் அரசு ஆடிய அரசியல் விளையாட்டு', தான் வருத்தப்படவே அவசியமில்லை, குற்றவுணர்வு கொள்ள தேவையில்லை என்பதே அவரது தோரணையாகவும் அவரது ரசிகர்களின் நியாயப்படுத்தலாகவும் இருந்தது. நாடி நரம்பெல்லாம் குரூரம் நிறைந்தவர்களால்தாம், மனதில் ஈரமே இல்லாதவர்களால்தாம் இப்படியெல்லாம் செய்ய இயலும்.
இதனால்தான் விஜய்யால் தேர்தலில் வெற்றிபெற்றதும் மக்களிடம் உடனடியாக நன்றி சொல்ல இயலவில்லை என நினைக்கிறேன். அவர் ஆபத்தை / விபரீதத்ததைக் கண்டு மட்டும் தப்பி ஓடுவதில்லை. மகிழ்ச்சியைக் கண்டும்தான். எது தீவிரமாக நடக்கும்போதும் தனக்குள், தன் மனதுக்குள் இருக்கும் ஒரு இருளான ரகசிய அறைக்குள் அவர் அடைக்கலம் தேடுகிறார். மேலும், தனக்கு அளிக்கப்பட்ட வெற்றி தனக்கான ஒரு உரிமைத்தகுதி (entitlement) என அவர் நினைக்கிறார். நீண்டகாலமாகவே தன்னை அவ்வாறு உயர்த்திடுவதற்கான தகுதி தனக்குண்டு, மக்கள் இப்போதுதான் உணர்ந்திருக்கிறார்கள் என ஒரு நம்பிக்கை உள்ளோர் இத்தனைக் காலம் அது நடக்காதது குறித்த கோபமும் வஞ்சமும் கொண்டிருப்பர். வெற்றி வரும்போது (அது பிறரால் வந்தாலும்) அவர்கள் அதை தனக்குள்ளேயே கொண்டாடிக் கொள்வது அதனால்தான். தன்னை வளர்த்து நட்சத்திரமாக்கின அப்பாவையும் அவர் அப்படியே நடத்தினார். அப்பா தன்னை வளர்க்கவில்லை. தாம் அவ்வாறு வளர்வதற்கான உரிமைத் தகுதி தனக்கு இருந்தது, ஆனால் தம் அப்பாவோ ஒரு இடைஞ்சலாகவும் எரிச்சலூட்டும் வழிகாட்டியாகவுமே இருந்தார் என இத்தகையோர் நினைப்பர். தன்னை எதிர்ப்போரை விஜய்யால் ஒருபோதும் மன்னிக்க இயலாது. தன்னை நிபந்தனையற்று நேசிப்போரை மட்டுமே ஏற்றுக்கொள்ள இயலும் என்று அவரை அறிந்தோர் கூறுகிறார்கள். இதெல்லாமே entitled நடத்தைத்தான். இவர்களுடைய உலகில் பிறர் ஒருபோதும் இருக்கவியலாது. தாமும் தன்னை வழிபடுவோரும் மட்டுமே இருக்க இயலும். அப்படி வழிபடுவோருக்கும் வேறு வழியில்லை, அதுவே அவர்களின் தலைவிதி, அதுவே ஒரே நியதி என நினைப்பர்.
இத்தகைய ஒருவர் சினிமாவிலும் மேடையிலும் தன்னை கூலான, விளையாட்டுத்தனமான, தன்னம்பிக்கையான, கனிவான, இளைஞர்களையும் எளியவர்களையும் அரவணைத்துப் போகிற, திறன் மிக்க ஒருவராகக் காட்டிக் கொண்டு அந்த முகமூடியின் பின்னால் ஒளிந்து கொள்கிறார். அதனாலே இந்த முகத்திரை கிழியும்போது அவர் ஓடி ஒளிகிறார். அவர் மக்களிடம் இருந்து மட்டுமல்ல தன்னிடம் இருந்து ஒளிகிறார். இத்தகையோர் தம் தனிப்பட்ட எண்ணங்களை, உணர்வுகளை, நடத்தையோ ரகசியமாக வைத்திருப்பதும், ஊடகங்களிடம் அதிகம் பேசத் தவிர்ப்பதும் இதனாலே. இவர்களால் சிறந்த நண்பர்களாக, சிறந்த காதலர்களாக, மகன்களாக, சமூக மனிதராக, தலைவராக இருக்க இயலாது.
இந்த மாதிரி ஒரு மனிதரைப் பிடித்து முதல்வர் ஆக்குகிறார்கள். கொஞ்சமாவது அறிவும் சுயசிந்தனையும் கொண்ட சமூகத்தில் இத்தகையோருக்கு பத்து வாக்குகள் கூட கிடைக்காது. இதுவும் ஒரு கல்லை முதல்வராக்குவதும் ஒன்றுதான். இன்னொரு கேள்வி: விஜய்க்கும் மோடிக்கும் ஆளுமை அளவிலோ இரக்கமற்ற நடத்தையிலோ நார்சிசத்திலோ எந்த வேறுபாடும் இல்லை. விஜய்க்கு வாக்களித்தவர்கள் ஏன் மோடியை மட்டும் எதிர்க்கிறார்கள்? அது நியாயமே இல்லை. இவர் நடிகராக இருந்து அரசியல் நடிப்பவர். அவர் பிறவி நடிகர். இருவருமே எத்தனை நூறு பேர்களின் ரத்தத்தில் இருந்தும் துளியும் கூச்சமின்றி எழுந்து வந்து அதிகாரத்தை அணைப்பவர்கள். ஆகையால் இதே மக்கள் அடுத்த தேர்தலில் பாஜகவுக்கு அமோக ஆதரவைக் கொடுக்க வேண்டும். அதுவே நியாயம்.
இதில் ஆகப்பெரிய கொடுமை இவருக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து இவருடன் கூட்டணி வைக்க முன்வருவது, பேரம் பேசுவது. அவர் இவரைப் போன்றே சமூகப் பொறுப்போ கருணையோ அற்ற மனிதராகவே இருக்க வேண்டும். மாநில நலன், மதவாத எதிர்ப்பு, வலதுசாரி அரசியலை எதிர்க்கிற ஒரு அரசியலை எப்படி இவரை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வரைச் செய்ய இயலும்? இந்த ராகுல் காந்தியைத்தான் நாம் மோடிக்கு மாற்றாக எண்ணி கனவு காண்கிறோமா? பொறுப்பில்லாத தொலைநோக்கில்லாத மனிதர்!

Comments

அதிகம் படிக்கப்பட்டவை

புனைவெழுத்து - மூன்று முக்கிய தடைகள் - யுடியூப் நேரலை

  புனைவு எழுதுவதில் உள்ள மூன்று முக்கிய தடைகளைக் குறித்து இன்று மாலை 7 மணிக்கு யுடியூபில் ஒரு நேரலை செய்யலாம் என இருக்கிறேன். புனைவை எழுதுவது சில நேரங்களில் சவாலானது. கதைகள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தாது. எப்படி துவங்குவது, எடுத்துச் செல்வது, முடிப்பது என்பதில் குழப்பங்கள் ஏற்படும். இவை குறித்த வாசகர் கேள்விகளுக்கு இந்த நேரலை விவாதத்தில் பதிலளிக்க இருக்கிறேன். உங்கள் கேள்விகளைப் பின்னூட்டத்தில் எழுப்புங்கள். நேரலைக்கான தொடுவழி கீழ்வருமாறு: https://youtube.com/live/sxtKhp3Q_3o?feature=share

நாய்களும் நகரமும்

  செப்டம்பர் 2025 உயிர்மை இதழுக்காக நான் எழுதியுள்ள "நகரங்களில் வாழும் நாய்களும் மனிதர்களே, மனிதர்களும் நாய்களே" எனும் கட்டுரையில் இருந்து: வளர்ச்சியின் முதல் அறிகுறியே குவிந்து நாறும் குப்பைகள்தாம். முதலீட்டிய ஏற்றத்தாழ்வின் உபவிளைவே தெருநாய்கள். நாம் அவற்றை வெறுப்பதில் நியாயமில்லை. இந்த நாய்கள் நம் வீட்டில் நம்முடன் வாழும் செல்ல நாய்களோ, காலங்காலமாக மனித சமூகத்துக்கு பாதுகாப்பும் நட்புறவும் தந்த நாய்களோ அல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். நகரங்களில் நாம் காணும் நாய்க்குழுமங்கள் மெல்லமெல்ல மனிதச்சார்பின்றி தம்மைத் தனித்துப் பார்க்கும் இனமாக மாறிவருகின்றன. அதனாலே அவைக் குழந்தைகளை இரையாகக் காண்கின்றன. வேட்டையாடித் தின்கின்றன. அல்லது தமது சினத்தாலும் சீற்றத்தாலும் தாக்குகின்றன. மனிதர்களைத் துரத்துகின்றன. நகரத்து மனிதர்கள் vs நாய்கள் எனும் இருமை இன்று வலுவாகி நிலைப்பெறுகிறது. அதாவது நகரத்துக் கட்டமைப்புகள் மனிதரையும் நாய்களையும் சமமாக்குகின்றன, ஒரே விசயத்துக்காக - உணவு, இடம் - போட்டியிட வைக்கின்றன. இந்நாய்களைப் பிடித்து நகரத்துக்கு வெளியே விட்டால் அவை சிலநேரங்களில் வேட்டை விலங்குகளா...

Popular posts from this blog

விஷ்ணுபுரம் அமைப்பு ஏன் கல்ட் அமைப்பாகிறது?

  "விஷ்ணுபுரம்" எத்தனையோ குழுக்களில் ஒரு குழுதானே என சில நண்பர்கள் கேட்கிறார்கள். அது உண்மையல்ல. அது ஒரு இலக்கிய குழு அல்ல, அது ஒரு கல்ட் அமைப்பு. கல்ட் அமைப்பின் பல பண்புகள் அதற்கு உண்டு. ஒற்றைத் தலைமை, அதை அடியொற்றி, அதைப் பிரதியெடுக்கும் துணைத்தலைமைகள். துணைத்தலைமைகளுக்கு சுதந்திரம் இருப்பதாகப் பட்டாலும் அவை தலைமை விதிக்கும் எல்லைகளுக்கு உட்பட்டு தம்மையும் தகவமைப்பது. பலதரப்பட்ட சிந்தனைப் பாதைகள் குழுவுக்குள் இருந்தாலும் அவற்றை மௌனத்தில் அமுக்கிவிட்டு அல்லது குறைந்த ஒலியில் விவாதித்துவிட்டு தலைமையின் நம்பிக்கைகளை ஒட்டி உரக்க ஒரு கருத்தை முன்வைப்பது. மூளைச்சலவைக்கு உள்ளாவது, தான் மூளைச்சலவைக்கு உள்ளாவதையே அறியாதிருப்பது, தலைமையின் மொழியைத் தன்வயமாக்கி அவ்வாறே தன்னையறியாமலே பேசுவது, பிறரையும் மூளைச்சலவை செய்வது, பிறரையும் தன்னைப் போலப் பேச வைப்பது. தலைமையின் வழியில் அடுத்தடுத்த செயல்பாடுகளை முன்னெடுப்பது என. நீங்கள் மேற்சொன்ன பண்புகளை விஷ்ணுபுரம் அமைப்பில் மட்டுமல்ல, ஓஷோவின் அமைப்பிலும் ஜக்கியிடமும் ஶ்ரீ ஶ்ரீ, நித்தியானந்தா, People Temple, Aum Shinrikyo, Heaven’s Gate போன...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...

இப்படியெல்லாம் வாழ முடியாதா?

  \\ ஐ.பி.எல்லிலோ சர்வதேச டி20 போட்டிகளிலோ பல அதிரடி துவக்க மட்டையாளர்கள் உண்டு. அவர்களுக்கும் சூர்யவன்ஷிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு - சூர்யவன்ஷி தன் இன்னிங்ஸை ஆட்டத்தின் நிலைக்கு ஏற்ப வடிவமைப்பதில்லை. அதாவது முதல் 2 ஓவர்களில் 100 ஸ்டிரைக் ரேட், அடுத்த 4 ஓவர்களில் 200 ஸ்டிரைக் ரேட், அதன்பிறகு 140 என்று அவர் கியர் மாற்றுவதில்லை. அவர் மட்டையாட்டத்தை அதன் மிக அடிப்படையான நிலைக்கு கொண்டு போகிறார் - அதாவது பந்தைப் பார்த்து விளாசுவது. ஒரு குழந்தையிடம் மட்டையைக் கொடுத்து அடிக்கச் சொன்னால் அது சிக்ஸர் அடிப்பதற்கான பந்து வருமா என்று மட்டுமே சிந்திக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அடிப்படையான விழைவு, அதிலிருந்தே மட்டையாட்டத்தை ரசிப்பவர்களின் மகிழ்ச்சியும் தோன்றுகிறது. ஆட்டத்தின் வடிவம் சிக்கலாக ஆக அதில் ஆபத்துகளும் எதிர்பார்ப்புகளும் பெருகிட வீரர்களும் பார்வையாளர்களும் ரசிகர்களும் ஆட்டத்தை எளிதில் கணிக்கத்தக்க சூத்திரமாக மாற்ற விரும்புகிறார்கள். ஆட்டம் மேலும் மேலும் வடிவ நேர்த்தி கொண்டதாக ஆகும்போது எப்போதாவது எல்லாவற்றையும் புரட்டிப் போடக் கூடிய ஒருவர் வருவார். எனக்கு சூர்யவன்ஷி ஒரு அதிரடியான ...