நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கையில் நம் எண்ணங்களையும் கருத்துக்களையும் உணர்வுகளையும் தொகுத்துக் கொள்ள அவகாசமொன்றை அது அளிக்கிறது. அதனாலே வாசிக்க வாசிக்க தெளிவாகவும் கூர்மையாகவும் சிந்திக்கிற, நினைத்ததைத் தொகுத்துச் சொல்கிற, பளிச்சென்று முடிவெடுக்க இயல்கிறது. வாசிப்பவர்கள் நினைத்ததை எல்லாம் உணர்வுவயப்பட்டுச் செய்பவர்கள் அல்லர். அதுவே பக்குவம். ஆனால் சினிமா இதை அனுமதிப்பதில்லை. சினிமா நமக்குள் பிம்பங்களையும் ஒலிகளையும் அனுப்பியவாறே இருக்கிறது. இவையே எண்ணங்களாகவும் கருத்துக்களாகவும் உணர்வுகளாகவும் இருப்பதால் நம்மால் இவற்றைப் பரிசீலிக்க இயல்வதில்லை. அங்கு கற்பனைக்கும் சிந்தனைக்குமான இடம் மிகமிகக் குறைவு. வாசித்து ஒரு சொல் நமக்குள் சென்று அது ஒலியாக, பிம்பமாக மாறி உணர்வாகவோ சிந்தனையாகவோ உருக்கொள்ள சில நுண் வினாடிகள் எடுக்கும். சினிமா அதை அனுமதிக்காமல் ரெடி மேடாக எல்லாவற்றையும் அளிக்கிறது. அதாவது சினிமா பார்க்க நீங்கள் பாமரராக இருந்தாலே போதும். சொல்லப்போனால் 99% வெகுஜனப் படங்கள் உங்களை ஒரு பாமரராகக் கருதியே கதை சொல்கின்றன. நீங்கள் உங்களை அவ்வாறு மாற்றியே ரசிக்க முடியும். தமிழில் வெற்றி பெற்ற எந்த படத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு அங்குலமும் பாமரத்தனம் மட்டுமே இருக்கும். இதனாலே இலக்கியத்தில் இருந்து சினிமாவுக்கு வரும்போது அதை ஆழமாக உள்வாங்க முடிகிறது (அதாவது அது ஒரு குப்பையெனப் புரிந்துகொள்ள முடிகிறது). ஆனால் சினிமாவில் இருந்து இலக்கியத்துக்கு வந்தால் அதைப் படிக்கக் கூட இயலாது: ஒன்றுமே புரியாது.
நான் மேலே சினிமாவைக் குறித்துச் சொல்வதை இன்று திறன்பேசிப் பயன்பாடு, ரீல்ஸ் மீதான ஈடுபாடு குறித்த ஆய்வுகள் சொல்கின்றன. இவை நம் மூளையின் அமைப்பையே மாற்றுவதாகக் கூறுகின்றன. இவற்றால் மக்கள் கவனம் அற்றவர்களாக, யோசிக்கவும் பேசவும் எழுதவும் முடியாதவர்களாக மாறுவதாக இன்றைய ஆய்வுகள் சொல்கின்றன.
தமிழில் ஒரு பெரிய பிரச்சினை நாம் சினிமாவை இவ்விதமாகப் பார்ப்பதில்லை என்பது. நமது சிந்தனையாளர்கள், புரட்சியாளர்கள் இவ்வாறு சினிமாவை விமர்சிக்கவில்லை. ஆகையால் நாம் சினிமாவைக் கொண்டாடத் தொடங்கி அதை மதமாக்கி விட்டோம். விளைவாக ஒரு பாமரச் சமூகம் ஆகிவிட்டோம்.
குடியை விட சினிமா மோகமே கேடுகெட்டது. மது ஒழிப்பைவிட சினிமா ஒழிப்பே அவசியம். நம் மாநிலத்தி இத்தனை குடிகாரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களால் நமது ஊரில் மக்கள் நசுங்கிச் செத்ததோ சட்டம் ஒழுங்கு கெட்டதோ இல்லை. சினிமா மோகத்தால் நடந்திருக்கிறது. குடிகாரர்கள் ஒன்று சேர்ந்து ஒரு மலினமான நடிகரை முதல்வராக்கவில்லை. சினிமா ரசிகர்கள் செய்திருக்கிறார்கள்.
கருத்துகள்