தமிழில் தாமதமாய் பூப்படைந்த நாவல்
வடிவம்
நாவல் என்பதை விரிவான வாழ்க்கைப்
பார்வை எனலாம். விரிவு கொள்ளும் எதுவும் நாவலாக முடியும். உ.தா., விரிவான தகவல் அறிக்கைகள்.
இந்தியாவில் கட்டப்படும் மேம்பாலங்கள் பற்றி நீங்கள் ஒரு விரிவான ஆய்வு செய்கிறீர்கள்
என்று கொள்வோம். நூற்றுக்கணக்கான பக்கங்கள் வருகிற தகவல்கள் செறிந்த ஆய்வு அது. அந்த
ஆய்வு அறிக்கையை நீங்கள் சுலபத்தில் நாவல் ஆக்கலாம். அது ஏன்! ஒரு நூலகத்தின் நூல்
பட்டியலைக் கூட நாவலாக்கலாம் (போர்ஹெஸ் பாணியில்).
இரண்டு விசயங்கள் கதையை விரிவாக்க
– அதாவது நாவலாக்க - உதவுகின்றன. காலம் மற்றும் இடம்.
தனது Poetics நூலில் ஒரு படைப்பின் ஆதார சுருதியாக அரிஸ்டாட்டில் காலம், இடம்
மற்றும் செயலின் சமச்சீர்தன்மையை குறிப்பிடுகிறார். அதாவது இம்மூன்றும் ஒரு அளவுக்குள்
இருக்க வேண்டும் என்கிறார். ஒரு கதை ஒரு நாளுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் நடந்து
முடிய வேண்டும். அக்கதையில் வரும் சம்பவங்கள் இந்த இடம் மற்றும் காலத்துக்குள் அடங்குபவையாக
இருக்க வேண்டும். நாடகங்கள் எழுதுபவர்களுக்கு இந்த விதி முக்கியம் எனத் தெரியும். நாடகத்தை
வருடக் கணக்காய் நடப்பதாய் காட்டினால் அது பார்வையாளர்களின் கவனத்தை கலைக்கும். ஓரிடத்தில்
ஒரு சமயத்தில் நடக்கும் குறிப்பிட்ட கதையில் தான் நாடகீயமான தருணங்கள் சிறப்பாய் அரங்கேற
முடியும். அதே போல ஒரு சம்பவத்தின் கூர்மையான, தீவிரமான, உச்சமான தருணம் நோக்கி நகரும்
சிறுகதைக்கும் இந்த விதிமுறை பொருந்தும். ஆனால் நாவலைப் பொறுத்த வரையில் இந்த பார்முலாவை
நாம் தலைகீழாக போட வேண்டும். அப்போது தான் நாவல் தோன்ற முடியும்.
பல நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்களாய் நடக்கும்
கதைக்கு என ஒரு பிரம்மாண்டம் உண்டு. ரஷ்யாவில் பிரஞ்சு படையெடுப்பை பின்புலமாக்கி சில
பிரபுக் குடும்பங்களின் கதையை கூறும் தல்ஸ்தாயின் போரும் வாழ்வும் ஒரு உதாரணம். அந்நாவல் நீண்ட நாட்கள் நடக்கின்றன. அதன்
வரலாற்று பின்புலத்துடன், இந்த காலகட்ட நீட்சியும் அதற்கு ஒரு பிரம்மாண்டம் அளிக்கிறது.
நாடக வடிவில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்துக்கும் நாவல் வடிவம் கொண்ட காப்பியமான கம்பராமாயணத்துக்குமான
வித்தியாசம் இது தான். சிலப்பதிகாரம் ஒரு நவீன சிறுகதை போல் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள்,
இடங்களுக்குள், ஒரு மையப்புள்ளி நோக்கி நகர்கிறது. முதல் பத்தியில் இருந்தே கதை ஆரம்பிக்கிறது.
ஆனால் கம்பராமாயணம் பல ஆண்டுகளாய் பல்வேறு உதிரிக் கதைகளுடன், நீண்ட நுண்ணிய விவரணைகளுடன்
மெதுவாக விரிவாக நகர்கிறது.
இன்னொரு பக்கம், ஒரு கதைக்கு அதன்
வரலாற்று பின்புலம் அந்த பிரம்மாண்டத்தை அளிக்கலாம். உ.தா., பொன்னியின் செல்வன், ரொமாபுரிப்
பாண்டியன் போன்ற நாவல்கள். இவை ஒரு குறிப்பிட்ட கால கட்டத்துக்குள் நடக்கின்றன.
இந்நாவல்களில் பயணங்கள் வருகின்றன. ஆனால் முக்கியமாய், நமது பேரரசுகளின் ஒரு பிரம்மாண்டமான
சித்திரம் வருகிறது. இது குறித்து நம் ஆழ்மனதில் உள்ள வியப்பு, அந்தப்புர சூழ்ச்சிகள்,
சூழ்ச்சி வலையில் எளிய மனிதர்கள் சிக்கிக் கொள்ளும் போது வரும் அச்சம், தவிப்பு, மர்மம்
ஆகியவை ஒரு அபாரமான விரிவை இந்நாவல்களுக்கு அளிக்கின்றன. சாண்டில்யன், கல்கியின் பாணியில்
நீங்கள் ராஜீவ் படுகொலையை வைத்து கூட சுலபத்தில் ஒரு நாவல் எழுத முடியும். ஒரே அறையில்
நடப்பதாகக் கூட அந்நாவலை காட்டலாம். அப்போதும் அது பிரம்மாண்டம் பெறும்.
மூன்றாவதாய், பயணம். பயணங்கள்
தாம் நாவலின் ஜீவநாடி. கிராமத்து மனிதர்களின் குடும்ப, சம்சாரி வாழ்வை பேசும் நாவல்களில்
கூட பாத்திரங்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பார்கள்.
பொதுவாக தலித் நாவல்களில் கிராமத்தில் இருந்து நகரம் நோக்கின சித்திரம் ஒரு விடுதலைக்கான
நகர்வாக காட்டப்படும். அது ஒரு குறியீடாக இருக்கும். இமையம் மற்றும் அழகிய பெரியவனின்
நாவல்களை உதாரணம் காட்டலாம் (ஆறுமுகம்).
இவர்களின் நாவலில் இன்னொரு பக்கம், நேர்மாறாய், நகரம் நோக்கிய பயணம் மனித மதிப்பீடுகளின்
சீரழிவின் சித்திரமாகவும் இருக்கும்.
ஒரு தனிமனிதனின் ஆளுமை சிதைவு அல்லது மலர்ச்சியை
பேசும் (coming-of-age) நாவல்களிலும் பயணம் ஒரு முக்கிய குறியீடாக இருக்கும். இடங்கள்
இடையிலான நகர்வு அவனது மனதின் பயணமாக காட்டப்படும். சு.ராவின் ஜெ.ஜெ சில குறிப்புகள் ஒரு உதாரணம். சமீபத்தில்
வெளிவந்த அரவிந்தனின் பயணம், இமையத்தின்
எங்கதெ நாவல்களையும் சுட்டலாம்.
மேற்சொன்ன இயல்புகளைக் கொண்டு
தமிழ் நாவல்களை இரண்டாக பகுக்கலாம்.
1)
காலம் – வரலாறு பற்றின நாவல்
2)
தனிமனிதனின் பயணம் பற்றின picaresque நாவல்
முதல் வகைமை எப்படி நவீனத்துவ
நாவலில் செயல்படுகிறது என்பதற்கு சு.ராவின் ஒரு
புளிய மரத்தின் கதை சிறந்த உதாரணம். பொதுவாக நவீனத்துவ நாவல் ஒரு சிறுகதையை போன்றது.
அதில் காலம், இடம், சம்பவங்கள் ஒரு குறிப்பிட்ட புள்ளியை சுற்றியே இருக்கும். நனவோடை
உத்தி (stream of consciousness) போன்றவை இதற்காக பயன்பட்டன. அதாவது, காலத்தின் விரிவை
ஒரு பாத்திரத்தின் மன சஞ்சாரத்தை சித்தரிப்பதன் வழி காட்டுவார்கள். ஆங்கிலத்தில் வெர்ஜினியா
வூல்ப் எழுதிய Mrs Dalloway சிறந்த உதாரணம். தமிழில் நகுலனின் நாய்கள், நினைவுப்பாதை ஆகிய நாவல்கள் இதற்கு உதாரணங்கள். சு.ரா தன் ஒரு புளிய மரத்தின் கதை நாவலில் காலத்தின்
அகண்ட தன்மையை அவர் ஒரு குறியீடு மூலம் சித்தரிக்கிறார். காலம் இந்நாவலில் ஒரு மரம்.
காலம் என்பது நகர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் சு.ராவின் நாவலில் காலம் நகராமல் ஓரிடத்தில்
இருக்கிறது. அதைச் சுற்றி மனிதர்களும் அவர்களின் ஆசாபாசங்கள், திட்டங்கள், கனவுகளை
சுற்றி பின்னப்பட்ட செயல்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன. இந்த அநிச்சயமான மனித செயல்பாடுகளை
சு.ரா வரலாறு எனப் பார்க்கிறார். வரலாறு ஒரு குருட்டுப் பறவை போல் முட்டி மோதி பறக்கிறது.
காலம் அதை அமைதியாக வேடிக்கை பார்க்கிறது. சு.ரா இது குறித்த ஒரு நுணுக்கமான சித்திரத்தை
அளிக்கிறார். இவ்வாறு தத்துவார்த்தமான உள்ளார்ந்த ஒரு காலம் பற்றின நாவலை அவர் எழுதுகிறார்.
இதன் மூலம் ஒரு சிறிய ஊரின் எளிய வரலாற்றை பேசும் கதைக்கு ஒரு பிரம்மாண்டம் அளிக்கிறார்.
இரண்டாவது picaresque வகை நாவல்
என்பது சமூகத்தில் இருந்து உதிரியாக இருக்கும் (சில நேரம் போக்கிரித்தனமான) தனிநபரின்
வேடிக்கை, சாகஸ கதை. மேற்கில் ஐநூறு ஆண்டுகளாக இந்நாவல் வகைமை உள்ளது. டான் குவிக்ஸோட் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம்
முதல் சாரு நிவேதிதாவின் ஜீரோ டிகிரி, ஓவியர் ஸ்ரீனிவாசன் நடராஜனின் விடம்பனம், சரவணன் சந்திரனின் அஜ்வா, லஷ்மி சரவணகுமாரின் உப்பு நாய்கள், பிரபு காளிதாஸின் நீருக்குள்ளிருந்து சில குரல்கள் வரை இந்த
வகைமையில் சேரும்.
அசோகமித்திரனின்
உதிரி நாவல் வகைமை
அசோகமித்திரன் எண்பதுகளில் நடைமுறை
வாழ்வில் அல்லல்களை சித்தரிப்பது போல் தோற்றமளிக்கும் சுருக்கமான எதார்த்த நாவல்களை
எழுதினார்: தண்ணீர், பதினெட்டாவது அட்சக்கோடு,
கரைந்த நிழல்கள். ஆனால் இந்நாவல்களுக்குள் காலம் ஒரு மௌன சாட்சியாக இருந்து கொண்டே
இருக்கும். காலத்துடன் தொடர்ந்து கண்மூடித்தனமாய் மோதி அழியும் பாத்திரங்கள் அவரது
நாவலில் தோன்றினர். அசோகமித்திரனின் இந்த கதாபாத்திரங்களை நாம் காம்யுவின் இருத்தலியல்
நாவல்களின் துன்பியல் நாயகர்களுடன் ஒப்பிடலாம். ஒரே வித்தியாசம் அசோகமித்திரன் இந்தியாவுக்கே
உரித்தான இருத்தலியலை சித்தரித்தார் என்பது. மேற்கத்திய இருத்தலியலில் தனிமனிதன் ஒரு
கண்மூடித்தனமான காலத்துடன் எல்ல முடியாத யுத்தத்தில் ஈடுபடுவான். கடவுளற்ற வாழ்க்கையில்
அவன் எல்லா சிக்கல்களுக்கும் தானே பொறுப்பாக வேண்டிய நெருக்கடியில் தவிப்பான். நொறுங்கிப்
போவான். ஆனால் அசோகமித்திரனின் நாவல்களில் இதே நெருக்கடி ஏற்படும் போது அவரது இந்திய
பாத்திரங்களுக்கு வாழ்க்கை குறித்த தத்துவார்த்த சிக்கல்களை எதிர்கொள்ள அவகாசம் இருப்பதில்லை.
அனறாட வாழ்வின் துரத்தல்கள் அவர்களை ஓடிக் கொண்டே இருக்க செய்கின்றன. இந்த அவசரத்தில்
அவர்கள் இருத்தலிய நெருக்கடிகளில் இருந்து தப்பிக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில்
அபத்தமான போராட்டங்கள் இருக்கின்றன. அவர்களின் வாழ்க்கை என்பது கார் டயரின் அடியில்
சிக்கி அழியும் ஒரு மாநகர எலியின் மரணம் போன்று துர்பலமாய், அவலமாய் இருக்கிறது (”எலிப்பொறி”
சிறுகதை). காலத்தை அசோகமித்திரன் சாலையில் கண்மூடித்தனமாய் விரையும் ஒரு காராகவும்
மனிதனை அதன் சக்கரத்தின் கீழ் மாட்டி அழியும் எலியாகவும் காண்கிறார். ஆனால் இந்த மனிதனுக்கு
தன் வாழ்க்கை பற்றி சிந்திக்கும் அவகாசம் இருப்பதில்லை என்பது தான் காம்யுவுக்கும்
அசோகமித்திரனுக்குமான வித்தியாசம். அன்றாட வாழ்வின் சிறு சிறு நிர்பந்தங்கள், இழுபறிகளில்
தன்னை இழப்பதன் மூலம் அவன் முக்கியமான தத்துவ நெருக்கடி ஒன்றில் இருந்து தப்பிக்கிறான்.
பதினெட்டாவது அட்சக்கோடு நாவலில் மையப்பாத்திரமான
ஒரு இளைஞன் ஹைதராபாதில் நடக்கும் (இந்திய சுதந்திரம், ஆட்சி மாற்றம், அதனாலான மதக்கலரவரம்
ஆகியவை உருவாக்கும்) ஒரு வரலாற்று நெருக்கடியை, அதன் அறச் சிக்கல்களை ஒரு இளைஞன் அப்படித்
தான் அன்றாட வாழ்வில் தன்னை கரைத்துக் கொள்வதன் வழி கடந்து செல்கிறான். ஆனால் கால மாற்றம்
எளிய மனிதர்களின் வாழ்வை ஒரு வாசல் கோலத்தை போல் சுலபத்தில் அழித்து விடுவதை அந்த இளைஞன்
அப்போது காண்கிறான். இந்த சந்திப்பு (ஒரு எலி தன்னை நசுக்க வரும் கார் சக்கரத்தை பார்க்கும்
இறுதியான தருணம்) அசோகமித்திரன் நாவல்களுக்கு ஆபாரமான ஒரு விரிவை அளிக்கிறது. கரைந்த நிழல்கள் நாவலில் அவர் ஒரு குறிப்பிட்ட
கால மாற்றத்தை (ஜெமினி ஸ்டுடிவோவில் நின்று போகும் ஒரு படப்பிடிப்பு, அதன் காரணமாய்
அழியும், திசை மாறும் மனித வாழ்க்கைகள்) இதே போல் சித்தரிக்கிறார். ஆனால் இந்நாவலில்
அவர் மாறுபட்ட மனிதர்களின் வாழ்க்கை தரப்புகளை, கதையாடல்களை காலத்தின் மீது ஊடுபாவ
வைக்கிறார். இந்த தரப்புகளின் பின்னல் இந்நாவலை விகாசிக்க வைக்கிறது. இதே பல்குரல்
தன்மையுடன் ஒரே நெருக்கடியை பேசி விரிவு கொள்ள வைக்கும் பாணியை சமீபத்தில் இமையம் எங் கதெ நாவலில் எடுத்தாண்டிருப்பார்.
அசோகமித்திரனின் நாவல் பாணியை
நாம் வரலாற்றுவாத கதையாகவும் பார்க்க முடியாது; picaresque பாணி என்றும் கூற முடியாது.
இரண்டிலும் சேராத உதிரி வகைமை அசோகமித்திரனுடையது. முதல் வகையில் வரலாறே நாயகன். இரண்டாவதில்
வரலாற்றின் ஊடாக (இருளில் ஒற்றைக் ஒளிக்கதிர் போல்) பயணித்து சலனங்களை ஏற்படுத்தும்
உதிரி தனிமனிதன் நாயகன். அசோகமித்திரன் வரலாற்றில் அபத்தமாய் மோதும் அல்லது வரலாற்றின்
பிரம்மாண்ட காலடிகளில் எதேச்சையாய் சிக்கி நசுங்கும் உதிரி மனிதர்களே நாயகர்கள். அப்படி
நசுங்குபவனின் சிறிய கண்களின் வழி ஒரு பெரிய கதையை பேசுகிறார்.
தொண்ணூறுகளுக்கு
முன்பும் பின்பும் தமிழ் நாவல்
தொண்ணூறுகளில் ஜெயமோகன் நாவல் என்றொரு நூல் எழுதினார். அவர் அதில்
ஒரு குற்றச்சாட்டு வைத்தார்: தமிழ் தீவிர இலக்கியத்தில் அதுவரை எழுதப்பட்டவை எதுவுமே
நாவல் அல்ல, மேலான சரியான நாவல் இனிமேலே எழுதப்பட வேண்டும் என்றார். அப்போது இந்த கருத்து
பரபரப்பை உண்டு பண்ணியது. கடும் எதிர்ப்புகள் இயல்பாகவே எழுந்தன. ஜெயமோகனின் தரப்பு
இது: நாவல் என்பது அதற்குரிய விரிவை கொண்டிருக்க வேண்டும். நாவல் விரிவு பெற வரலாற்று
பார்வையும் பல்வேறு கதையாடல்களின் பின்னலும் அவசியம். அவை தொண்ணூறுகள் வரையிலான நவீன
நாவல்களில் இல்லை. ஜெயமோகன் வாதிட்டது போல் நவீன நாவல்களில் வரலாற்றுக்கு இடம் இல்லை
என்பது உண்மையே. நவீன நாவல் தனிமனிதனின் கதையாகவே இருந்தது. ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டது
போல் (புளியமரத்தின் கதை) இந்நாவல்களில்
காலமும் வெளியும் (அகவயமாய்) மையபாத்திரத்தின் மன சஞ்சாரத்துக்குள் வைத்து பேசப்பட்டன.
ஆனால் இந்த விவாதத்தை நடத்தும் போது ஜெயமோகன் இந்தியாவின் காவிய மரபை மீட்டெடுக்க வேண்டும்
என பேசி மேலும் சிக்கலாக்கினார். நாவல் என்பதே நவீனமாய் புதிதாய் இருக்க வேண்டும் என
நம்பப் பட்ட வேளையில், ஜெயமோகன் இந்திய நாவலை கண்டறிய நாம் ஆதாரமான இந்திய அழகியல்,
மெய்யியல் வேர்களுக்கு மீள செல்ல வேண்டும் என்றார். அதாவது முன்னே போக வேண்டும் என
நம்பப் பட்ட வேளையில் அவர் பின்னே போக வேண்டும் என்றார். ஜெயமோகனின் இந்த பார்வை இயல்பாகவே
தவறாய் புரிந்து கொள்ளப்பட்டது. அவர் பிற்போக்குவாதம் பேசுகிறார் என எதிர்தரப்பினர்
அவரை முழுக்க மறுத்தனர். தன்னை நிரூபிக்கும் பொருட்டு ஜெயமோகன் விஷ்ணுபுரம் எனும் metafiction பாணியை சேர்ந்த,
அதே நேரம் தமிழின் வரலாற்று நாவல்களின் வடிவத்திற்கும் பொருந்தக் கூடிய ஒரு விரிவான
படைப்பை எழுதினார். அதுவரையிலான தமிழ் நவீன நாவல்கள் ஒன்று தன்கதையை அல்லது குடும்பக்
கதையை பேசின. ஜெயமோகனின் விஷ்ணுபுரம் மாறாக
புராணங்கள், தொன்மங்கள், இந்திய தத்துவ வரலாறு, கோயில்கள் பற்றின கதையாடல்கள் என பல்வேறு
விவாதக் களங்கள் கொண்ட படைப்பாக வெளிவந்தது. தமிழில் அதுவரையிலான நவீனத்துவ படைப்புகளில்
கதைக்கு நேரடியாய் பயன்படாத மேலதிக தகவல்கள் இராது. ஆனால் ஜெயமோகன் யானை, குதிரை மருத்துவம்,
சிற்பக் கலை விதிகள் முதல் கோயிலில் அப்பம் சுடுவது வரை ஏகப்பட்ட தகவல்களை தன் நாவலுக்குள்
அடுக்கினார். ஒரு பக்கம் வைதிக மதங்கள், பழங்குடி நம்பிக்கைகள், சடங்குகள், பௌத்த விவாதங்கள்
புழங்கும் தொல் உலகம்; மறுபக்கம் மார்க்வெஸின் நூற்றாண்டு தனிமை நாவலை நினைவுபடுத்தும் மெட்டாபிக்ஷன் நான் லீனியர் வடிவம்
என இருமுகம் கொண்டதாய் அந்நாவல் இருந்தது. ஆனால் இந்த இரட்டை முகம் காரணமாகவே பின்நவீனத்துவ
முகாமினரும் விஷ்ணுபுரத்தை கெடா வெட்டி
கொண்டாடவில்லை. தமிழ் வாசிப்புலகமும் அதை அரவணைத்துக் கொண்டதாய் சொல்ல முடியாது. விஷ்ணுபுரம் உடனடி கவனம் பெற்றது. ஆனால் கொண்டாடப்படவில்லை.
தமிழ் வாசக உலகம் அதைக் கண்டு திகைத்து நின்றது. வீட்டுக்குள் அழைத்துப் போய் உணவளிக்கவா
அல்லது கூண்டுக்குள் பூட்டி வைக்கவா என குழம்பியது.
தனிமனிதக் கதைகளை எதார்த்த நாவலாக்கும்
போது அவை இயல்பாகவே சுருங்கி நீண்ட சிறுகதை ஆகி விடுகின்றன. அவற்றை பல கதையாடல்கள்
கொண்ட விரிவான பிரதியாக்குவது மிக மிக சிரமம். நவீனத்துவ நாவல்களில் அசோகமித்திரன்,
சு.ரா, நகுலன் போன்றோரின் எழுத்தில் இச்சாதனை அரிதாக நிகழ்ந்தது. ஆனால் இன்றைய பின்நவீனத்துவ
பாணியிலான நாவல்களில் நீங்கள் ஒரு அறைக்குள் நடக்கும் கதையை கூட மிக விரிவும் பல்குரல்
தன்மையும் கொண்டதாய் எழுத முடியும். ஒரு அழிந்த கிராமத்தில் சில பேய்களின் மனக்குரல்களின்
வழி கதை சொல்லும் பெட்ரோபரோமோ நாவலில் ரூல்போ
இதை சாதித்திருப்பார். ஆனால் எதார்த்த கதைகளில் இது மிக மிக சிரமம். எதார்த்தக் கதைகளில்
விரிவான பிரம்மாண்டமான நாவல் எழுத பழைய வரலாறு அல்லது சமகால சமூக வலராற்றை எடுப்பது
தான் சுலப வழி. இதை நன்கு உணர்ந்த கல்கி பொழுதுபோக்கு எழுத்தில் முக்கியமான சாதனையை
பொன்னியின் செல்வன் மூலம் நிகழ்த்தினார்.
இன்றும் புத்தக சந்தைகளில் பரவலாய் விற்கும் நாவலாய் அது உள்ளது. நாம் அனைவருக்கும்
அதன் கதை தெரியும். ஆனால் இன்றும் நாம் திரும்ப வாழ நினைக்கும் ஒரு நெடும் கனவுப் பிரயாணமாய்
அந்நாவல் இருக்கிறது. ஏன் அகிலனின் சித்திரப்பாவையை,
சிவசங்கரி, அனுராதா ரமணன் எழுதிய குடும்பக் கதைகளை, தனிமனித பெண் எழுச்சி கதைகளை இதே
ஆர்வத்துடன் நம் வாசகர்கள் திரும்ப வாசிக்க முனைவதில்லை? சொல்லப் போனால் பாலகுமாரன்
கூட இன்று மீண்டும் படிக்கப்படும் ஒரு வணிக எழுத்தாளராக இருக்கிறார். பாலகுமாரன் காலம்,
இடம் ஆகிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட எதார்த்த குடும்ப கதைகளை தான் எழுதினார். ஆனால்
அவர் இந்த நாவல்களுக்கு இந்த கட்டுகளை உடைக்கிற ஒரு சூத்திரத்தையும் வைத்திருக்கிறார்.
அவர் மெய்யியலையும் செக்ஸையும் கலந்து ஒரு அழகியலை உருவாக்குகிறார். அந்த ரசனை, அந்த
கனவுலகம், எதார்த்த எழுத்தின் காலம், இடம் ஏற்படுத்தும் கட்டுகளை உதறி மேலெழ நமக்கு
உதவுகிறது. இலக்கிய எழுத்தில் தி.ஜா அடக்கி வைக்கப்பட்ட செக்ஸையும் கட்டவிழ்த்து விட்ட
இசையின் சிலாகிப்பையும் கலந்து வாசகனுக்குள் இதே கனவுலக சிறகடிப்பை நிகழ்த்தினார்.
இன்னொரு தளத்தில் இதையே லா.சா.ராவும் செய்தார். ஆனால் கா.நா.சு, சி.சு செல்லப்பா, அவர்களை
ஒட்டிய எழுதிய (அ.மாதவன் போன்ற) கராறான எதார்த்த (இயல்புவாத) எழுத்தாளர்களின் கச்சிதமான
நாவல்களில் இந்த பறந்தெழுதல் நடப்பதில்லை.
தொண்ணூறுகளில் தமிழில் படையெடுப்பு
நடத்தி முடிசூடிய லத்தீன் அமெரிக்க இலக்கியம் இங்கே இலக்கிய நாவல் வடிவம் பூப்பெய்த
உதவியது. பின்நவீனத்துவ சிந்தனைகளின் வரவும் இதற்கான களத்தை தயாரித்தது. தமிழில் எழுதப்பட்ட
மாய எதார்த்த சிறுகதைகள் கூட அவற்றின் இயல்பில் ஒரு நாவலுக்கான விரிவும் பல்குரல் தன்மையும்
கொண்டவையாய் இருந்தன. எஸ்.ராவின் “தாவரங்களின் உரையாடல்” நிச்சயம் ஒரு குறுநாவலாய்
எழுதத் தக்க சிறுகதை. இது ஏன் என்றால் மேற்கத்திய மாய எதார்த்த கதைகள் வரலாறு எப்படி
மனிதர்களை சதுரங்கக் காய்களாய் வைத்து ஆடுகிறது எனப் பேசின. இக்கதைகளில் வரலாற்றின்,
காலத்தின் கையில் அகப்பட்ட மனிதன் சக்கர வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யுவாய் தவிக்கிறான்.
அவனுக்கு தப்பித்து செல்ல பாதையே இல்லை. இந்த அவலத்தை உணரும் இம்மனிதன் அபாரமான தனிமையை
அனுபவிக்கிறான். அதனால் தான் மார்க்வெஸ் தன் மாய எதார்த்த நாவலுக்கு “நூற்றாண்டு கால
தனிமை” என தலைப்பிடுகிறார். அந்த நாவலிலும் முன்கூறப்பட்ட
மரணத்தின் கதையிலும் கதாபாத்திரங்கள் தமது வரலாற்றில் இருந்து தப்பிக்கும் அதிகாரமோ
வழியோ தமக்கு இல்லை என உணர்ந்து தவிக்கிறார்கள். நவீன அபிமன்யூ தோன்றும் பாரத கதைகள்
தாம் அவை. தமிழில் இந்த பாணியில் எழுதப்பட்ட எஸ்.ராவின் நெடுங்குருதி மாய எதார்த்த நாவல் வகையில் ஒரு உச்சபட்ச சாதனை எனலாம். அந்நாவலிலும்
காலத்தின் கண்மூடித்தனமான ஆட்டுவித்தலில் தலைமுறை தலைமுறையாய் தனிமனிதர்கள் உணரும்
தனிமையை, அதன் தத்துவார்த்த தளத்தை எஸ்.ரா அபாரமாய் சித்தரிக்கிறார். நெடுங்குருதி எனும் தலைப்பே மார்க்வெஸின் ஒரு
சிறுகதையை நினைவுபடுத்துகிறது. இக்கதையில் திருமணம் முடிந்து காரில் வீட்டுக்கு செல்லும்
வழியில் ஒரு மணப்பெண்ணுக்கு கையில் சிறுகாயம் ஒன்று ஏற்படுகிறது. செல்லும் வழியெங்கும்
அவள் குருதி சொட்டுச்சொட்டாய் வழிந்தபடியே இருக்கிறது. குருதித் தடம் நீண்டு கொண்டே
போகிறது. வீட்டுக்கு சென்று சேரும் போது ரத்தம் முழுக்க வடிந்து அப்பெண் இறந்து போகிறான்.
இந்த ரத்தம் சோர்தலில், அதன் நீண்ட குருதித் தடத்தில் ஒரு தனிமை உள்ளது. இதை எஸ்.ரா
வரலாறு நெடுக ஒரு மனிதன் தலைமுறை தலைமுறையாய் சிந்த நேரும் ரத்தமாக, அதன் தனிமையாய்
எஸ்.ரா உருமாற்றுகிறார்.
நெடுங்குருதி
கள்ளர்களின் இனவரைவியல் கதையை (காவல்கோட்டம்
போல்) நேரடியாய் சித்தரிப்பதில்லை. வரலாற்றை ஒரு தொன்மமாக நெடுங்குருதி மாற்றுகிறது. இதேபோல விஷ்ணுபுரமும் ஒரு தொல்வரலாற்றை பேசும் பாவனையில் நவீன இந்தியாவின் மார்க்ஸிய,
வைதிக அறிவார்ந்த, மெய்யியல், தத்துவ தரப்புகளை விவாதிக்கிறது; வரலாற்றை ஒரு நவீன தொன்மமாக,
உருவகக் கதையாக (parable) மாற்றுகிறது. வரலாற்று நாவல்களில் ஒரு சீரியஸான பாவனை, தன்னுணர்வு
உண்டு. அது இந்நாவல்களில் இல்லை. இந்நாவல்கள் வரலாற்றையும் ஒரு தொன்மமாய், ஒரு சுவாரஸ்யமான
சுய-விளையாட்டாய் மாற்றுவதன் வழி மேலும் மேலும் விரிவு கொள்கின்றன. அதாவது நீங்கள்
போரும் வாழ்வும் பொன்னியின் செல்வன் ஆகிய நாவல்களில் வரலாறு குறித்த ஆசிரியர் கூற்றுகளை
அங்கங்கே காண முடியும். இந்நாவல்களில் தாம் ஒரு அசலான வரலாற்றை சொல்கிறோம் எனும் பிரக்ஞையை
நாவலாசிரியர் வலுவாக உருவாக்குகிறார். ஆனால் தொண்ணூறுகளின் இறுதியில் துவங்கி எழுதப்பட்ட
பின்நவீனத்துவ வரலாற்று நாவல்களில் இந்த பிரக்ஞை சார்ந்த இறுக்கங்களும் இல்லை.
இதைத் தொடர்ந்து ரெண்டாயிரத்துக்குப்
பிறகு இனவரைவியல் நாவல்களும் (ஆழிசூழ் உலகு),
புலம்பெயர் தமிழ் தேசிய வரலாற்று நாவல்களும் (பார்த்தீனியம்,
ஆதிரை) தொடர்ந்து தோன்றுகின்றன. கல்கியின் நாவலுக்கும் இவற்றுக்குமான முக்கிய வித்தியாசம்
ஒன்று உண்டு: கல்கி வரலாற்றை தமிழனின் இனப் பெருமிதத்தை, பழங்கனவை திரும்ப நினைவுகளில்
வாழ்ந்து சுகம் காண பயன்படுத்துகிறார், ஆனால் ரெண்டாயிரத்துக்கு பிறகான வரலாற்று நாவல்கள்
இந்த சொறிந்து விடும், போதை மருந்து ஊட்டும் பணியை செய்வதில்லை. அதே நேரம் (பின்நவீனத்துவ
தொன்ம வரலாற்று நாவல்களை) போல் அல்லாமல் உண்மையான வரலாற்று ஆவணத்தை எழுதுகிறோம் எனும்
இறுக்கத்தை (போரும் வாழ்வும் நாவலில் போல)
இந்நாவல்களில் மீண்டும் காண்கிறோம். ஒருவிதத்தில் இன்று நாம் மீண்டும் இருபதாம் நூற்றாண்டின்
எதார்த்த வரலாற்றுவாதத்துக்கு செல்கிறோம் எனலாம்.
மாநிலம், சாதி, மதம் சார்ந்த பல்வேறு
இனவரைவியல் நாவல்கள் கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்திருக்கின்றன. நான் அவற்றை இங்கு
பட்டியலிட்டு மதிப்பிட போவதில்லை. ஆனால் இப்போது நாம் நாவல் வடிவின் ஒரு அசலான சாத்தியப்பாட்டை
உணர்ந்திருக்கிறோம் என்பதை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இன்று சூழலியல் சார்ந்து
தன் முதல் நாவலை எழுதும் விநாயக முருகன் போன்ற ஒருவருக்கு ஒரு நெடுஞ்சாலையை சார்ந்து
வாழும் தனிமனிதர்களின் சிறிய (குடும்பப் பிரச்சனைகள் சார்ந்த) வாழ்க்கையை சித்தரிப்பது
அல்ல நாவல் என தெரிந்திருக்கிறது - மாறாக கிராமங்கள் அழிந்து நெடுசாலையாய் உருக்கொள்வதன்
வரலாற்றை, அந்த மாற்றத்தின் வரலாற்றுடன் எப்படி எளிய மனிதர்களின் வாழ்வும் உருமாறுகிறது
என எழுதுவதே நாவல் வடிவத்துக்கு உகந்தது என்பதை அவர் உணர்ந்து கொள்கிறார். இந்த வரலாற்று
மாற்றத்தின் ஊடே மனித வாழ்க்கை சிதைவதை காட்டினால் அது பிரம்மாண்டம் பெறும் என்பதை
அவர் இயல்பாகவே அறிந்திருக்கிறார். எழுபதுகளில் எழுதியிருந்தால் அவர் ராஜீவ்காந்தி சாலையை மூன்று குடும்பங்களின்
நான்கு சுவர்களுக்குள் நடக்கிற கதையாக மட்டுமே எழுதியிருப்பார் என்பது உறுதி.
இன்று ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்கு
மற்றொரு முக்கிய காரணம் வணிகம் சார்ந்தது. எண்பது, தொண்ணூறுகள் வரை நீங்கள் தமிழில்
300 பக்க இலக்கிய நாவல்களை சுலபத்தில் பிரசுரிக்க முடியாது. அதற்கென்று ஒரு சந்தை இங்கு
இருக்கவில்லை. (தொடர்கதைகள் வழியாக வணிக நாவல்களுக்கு மட்டுமே அப்படியான ஒரு சந்தை
அப்போது இருந்தது) ஆக இயல்பாகவே நாம் 100 பக்கங்களுக்குள் நாவல் எழுத பழகிக் கொண்டோம்.
இன்று இலக்கிய வாசகர்களின் சந்தை ஒன்று உருவாக்கி வலுப்பெற்றிருக்கிறது. அதனுடன் விரிவாக
நாவல் எழுதி பிரசுரிப்பதும் இன்று நடைமுறையில் சாத்தியமாகிறது. அதற்கான சந்தை இன்று
உருவாகி விட்டது.
ஆனால் இன்று நாவல் வடிவம் மற்றொரு
சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் இன்று 300 பக்கங்களுக்கு மேலான நாவல்களை
வாங்க தயாராக இருக்கிறோம். ஆனால் வாசிக்க தயாராக இல்லை. மிகப்பெரிய இனவரைவியல் நாவல்கள்
அலமாரிகளில் தூங்குகின்றன. ஏனென்றால் இன்று நம் வாசிப்புக் காலம் சுருங்கி விட்டது.
செய்தி அறிக்கைகள், சமூக வலைதள பதிவுகள், தகவல் பரிமாற்ற வடிவங்கள், எண்ணற்ற பொழுதுபோக்குகள்
ஏற்படுத்தும் கவனச்சிதைவுகள் நமக்கு இன்று வாழ்க்கை குறுகியது என்கிற பிரமையை ஏற்படுத்துகின்றன.
காலம் ரொம்ப குறைவாக உள்ளது – ஆகையால் சுருக்கமான அளவில் நிறைய விசயங்களை கிரகித்துக்
கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்று விட்டது. அதனாலே பெரிய விரிவான நாவல்களுக்குள்
பயணிக்க தயங்கி வாசலோடு திரும்பி விடுகிறோம். நாவல் வாசிக்க இன்று நமக்கு உண்மையில்
நேரம் உள்ளது. ஆனால் நீண்ட காலவெளிக்குள் சஞ்சரிக்கும் பொறுமை போய் விட்டது. காலம்
அகண்டது, நாம் அதன் முன் சிறு புள்ளி என்கிற உண்மையை மறந்து விட்டோம். மாறாக காலம்
ஒரு சிறு பூச்சி, நாம் அதை நாவால் சுருட்டி இழுத்து உண்ணும் பல்லி என நினைத்துக் கொள்கிறோம்.
எல்லாவற்றையும் அவசரமாய் சுருட்டி உண்ணும் பதற்றம், பயம், தவிப்பு இன்று பரவலாய் உள்ளது.
இது மீடியாவின் பெருக்கம் உருவாக்கி
உள்ள ஒரு உளவியல் குழப்பம் மட்டும் தான். அடுத்த பத்தாண்டுகளில் நாவலின் வேகம், வடிவம்,
பாணி ஆகியவற்றை இந்த மனக்குழப்பம் தான் தீர்மானிக்கப் போகிறது.
நன்றி: தீராநதி
கருத்துகள்