
”இரு”, அவர் சொன்னார், என் மணிக்கட்டை
இறுகப் பற்றியபடி. “உண்மை தான், நான் அவளை விரும்பினேன். ஆனால் அவளைத் தொட ஆசைப்பட்டேன்
என்றில்லை.” அவர் மேலும் சொன்னார், புன்னகைக்காமல்: “நான் அந்த மாதிரி விசயங்களைப்
பற்றி யோசிப்பதில்லை என்று சொல்லவில்லை. இந்த வயசில் கூட, வரும் ஜனவரியில் எனக்கு அறுபத்தேழு
ஆகிறது. இது விசித்திரம் தான் – ஆனால் வயசு ஆக ஆக, இந்த மாதிரி விசயங்கள் பற்றி மனதை
கூடுதலாய் ஆக்கிரமிக்கின்றன. இளைஞனாய் இருக்கும் போது இதைப் பற்றியெல்லாம் யோசித்ததாகவே
நினைவில்லை, ஆனால் இப்போது ஒவ்வொரு நிமிசமும் என் மனதில் இது தான்.
ஒருவேளை முதுமை
அதிகமாக ஆக, எண்ணத்தை செயலாக மாற்றுவது சிரமமாகிறது, ஒருவேளை அதனால் தானோ ஏனோ இதெல்லாம்
என் மண்டையில் போய் சொருகிக் கொள்கிறது; பெரும் பாரமாகிறது. பத்திரிகையில் எப்போதெல்லாம்
ஒரு முதியவர் இவ்விசயத்தில் அசிங்கப்பட்டதாய் படிக்கிறேனோ, இந்த பாரத்தினால் தான் அது
நடந்தது என எனக்குத் தெரிகிறது. ஆனால்” – அவர் தனக்கு ஒரு கட்டிங் விஸ்கி ஊற்றி, அதை
நேர்த்தியாய் முழுங்கினார் – “நான் ஒருநாளும் அப்படி அசிங்கப்பட மாட்டேன். சத்தியமாய்
சொல்கிறேன், ஹோலியை பற்றி அப்படி ஒரு எண்ணமே என் மனதில் எழவில்லை. அப்படி யோசிக்காமலே
ஒருவரை நாம் காதலிக்கலாமே. அவளை ஒரு அந்நியப் பெண்ணாய் நினைத்துக் கொள்கிறேன். என்
தோழியான ஒரு அந்நியப் பெண்.”
இரண்டு பேர் புதிதாய் பாருக்குள்
வந்தார்கள்; நான் போக வேண்டிய நேரம் எனத் தோன்றியது. ஜோ பெல் என்னுடன் வாசல் வரை வந்தார்.
அவர் என் மணிக்கட்டை மீண்டும் பற்றிக் கொண்டார். “நீ இதை நம்புகிறாய் அல்லவா?”
கருத்துகள்