முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நூலகங்களை ஏன் இலவசமாய் திறந்து வைத்திருக்கிறார்கள் தெரியுமா?


Image result for the strange library
முராகாமியின் குழந்தைகள் நாவலான The Strange Library யில் (விநோத நூலகம்) ஒரு நூலகத்தில் எதேச்சையாய் வந்து ஒரு மந்திரவாதியிடம் மாட்டிக் கொள்ளும் ஒரு சிறுவன் ஆட்டு வடிவில் இருக்கும்  ஒரு மனிதனிடம் ஒப்படைக்கப்படுகிறான். அங்கு அவனை நூலகத்தின் கீழ்த்தளத்தில் ஒரு சிறை அறையில் அடைக்கிறார்கள்.

 அச்சிறுவனின் கால்கள் ஒரு இரும்புக் குண்டுடன் ஒரு சங்கிலியால் பிணைக்கப்படுகின்றன. அவன் நாளும் பொழுதும் படிக்க வேண்டும். மூன்று வேளையும் சுவையான உணவு தருவார்கள். அவனுக்கு கொடுக்கப்பட்டுள்ள மூன்று நூல்களையும் (ஒட்டோமோன் சாம்ராஜ்யத்தில் வரிவசூல் எனும் தலைப்பிலானவை) அவன் படித்து முடித்ததும் அவனை விடுவிப்போம் என மந்திரவாதி சொல்கிறார். ஆனால் ஆட்டுமனிதனோ அது பொய் என்கிறான். யாரும் அங்கிருந்து விடுவிக்கப்படுவதோ தப்பிச் செல்வதோ இல்லை. இறுதியில் அங்கு மாட்டும் பிள்ளைகளின் மூளையை வறுத்து தின்பதே மந்திரவாதியின் வாடிக்கை. நிறைய புத்தகங்களை வாசித்து அறிவூட்டம் பெற்ற மூளை சாப்பிட சுவையாக இருக்குமாம்.
Image result for the strange library
 “இது என்ன கொடுமை?” என வினவுகிறான் அச்சிறுவன். சும்மா போகிறவர்களை பிடித்து மூளையை வறுத்து தின்பதென்றால் இது என்ன வெள்ளரிக்காய் பட்டணமா? அப்போது தான் ஆட்டுமனிதன் அவனிடம் சொல்கிறான். “இது எல்லா ஊர்களிலும் நடப்பது தான். எல்லா ஊர் நூலகங்களிலும் இது போல ஒரு பாதாள இருட்டறை உண்டு. தெரியாமல் அவ்வப்போது பல நூறு பேர் மாட்டிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களின் மூளை வறுத்து தின்னப்பட்டு தான் வருகிறது.”
“இதென்ன நியாயம்?” என சிறுவன் கோருகிறான். ஆட்டுமனிதன் சொல்கிறார், “நூலகத்தில் மக்களுக்கு இலவசமாய் அறிவை விநியோகிக்கிறார்கள். ஆனால் இவ்வுலகில் எதுவுமே இலவசம் இல்லையே. மக்கள் தாம் பெறும் அறிவுக்கு விலை கொடுத்தே ஆக வேண்டும். நூலகங்களை வேறு எதற்கு இலவசமாய் திறந்து வைத்திருக்கிறார்கள் என நினைக்கிறாய்?”

Image result for the strange library
இறுதியில் அச்சிறுவன் ஆட்டுமனிதன் மற்றும் அவனுக்கு உணவு தர வரும் அழகிய சிறுமியுடன் எப்படி அங்கிருந்து தப்பிக்கிறான், வெளியே போன பின் அவனுக்கு என்ன ஆகிறது என்பதே மீதி கதை.
சல்மான் ரஷ்டியின் குழந்தைகள் நாவலான Haroun and the Sea of Storiesயை (1990) இந்நாவல் ஒத்திருக்கிறது. இரண்டுமே வெகு சுவாரஸ்யமான படைப்புகள். இரண்டுமே மாய எதார்த்த கதைகள். இரண்டுமே சற்றே முதிர்ந்த குழந்தைகள் வாசிக்கத் தக்கவை. இலக்கிய வாசகர்களுக்கும் தீனி போடுபவை.
முராகாமி இந்நாவலை 1982இல் “தொஷோகான் கிட்டான்” எனும் தலைப்பில் சிறுகதையாய் எழுதியிருக்கிறார். 2004இல் இதையே விரிவுபடுத்தி சித்திரங்களும் நுணுக்கமான வடிவுடன் ஒரு எளிய நாவலாக வெளியிட்டார். இதை ஒரே சமயம் நீங்கள் அதிகற்பனை திகில் கதையாகவும், தனிமையில் விடப்பட்ட ஒரு அனாதைப் பையன் நிராதரவான நிலையில் நூலக சூழலில் தன்னை மறந்து கற்பனையில் மிதக்கத் துவங்குகிறான்; அவன் பின்னர் எப்படி தனது கடந்த காலத்தை நூலகத்தில் தன் கையில் மாட்டும் பிரதிகளைக் கொண்டு போகிற மீள்கட்டமைக்கிறான் என பேசும் கதையாகவும் காணலாம். இந்த இரண்டாம் வகை வாசிப்புக்கு உகந்த வகையில் நாவலுக்குள் பழைய புத்தக ஓவியங்களின் நகல் போன்ற சித்திரங்கள் வழங்கப்படுகின்றன. உ.தா., அவன் தன் ஷூவைப் பற்றிப் பேசும் போது பக்கவாட்டில் ஒரு ஷூவின் படம் வழங்கப்படுகிறது – அதை அவன் ஒரு நூலில் கண்ட பின் தன் கற்பனையை வளர்க்கிறான் என நாம் ஊகிக்கலாம். ஒட்டோமோன் சாம்ராஜ்யத்தின் வரி வசூலிப்பாளரான ஒரு மனிதர் எழுதிய நாட்குறிப்பு நூலைப் படிக்கும் அவன் அங்கு வரும் வரி வசூலிப்பாளரின் இளம் மனைவி பற்றின தகவல்களைக் கொண்டு தனக்கு உணவு வழங்கத் தோன்றும் ஊமைச்சிறுமியின் சித்திரத்தை உருவாக்குகிறான்.

சிறுவன் நூலகத்தில் இருந்து தப்பித்து வந்த பின் அவன் வளர்த்த ஸ்டார்லிங் பறவை இறந்து போகிறது. சில நாட்களில் அவன் தாயும் ஏதோ விசித்திர நோய் தாக்கி மரணமடைகிறாள். தாயின் மரணத்துக்குப் பின் அவன் பாதாள அறையில் மாட்டிக் கொள்கிறானா அல்லது அவன் தப்பி வந்த பின் அவள் மரிக்கிறாளா? இது புதிராகவே இருக்கிறது. அச்சிறுவனின் தாய்க்கு உண்மையில் என்னவாகிறது, எதார்த்தத்தில் அவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதையெல்லாம் முராகாமி குறிப்பிடுவதில்லை; இதை நாமே கற்பனை செய்து கொள்ள வேண்டும் என்பது நாவல் வாசிப்பின் இன்பத்தை அதிகமாக்குகிறது.

தமிழில் இந்த வடிவத்தை யாராவது முயன்று பார்க்க வேண்டும்!

கருத்துகள்

சிகரம் பாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
வித்தியாசமான தலைப்பு. புதுமையான படைப்புகள் தமிழில் ஆக்கப்பட வேண்டும். வாசிப்பு அடுத்த பரிமாணத்துக்கு இட்டுச் செல்லப்பட வேண்டியது அவசியமாகும்.

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

https://newsigaram.blogspot.com/

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...