முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

#metoo எனும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தும் போராட்டம்


Image result for கழுதை மேல் ஏற்றி ஊர்வலம்
Metoo இயக்கம் தன் ஆயுதமாய் கையில் எடுத்திருப்பது சமூக அவமதிப்பு அச்சம். ஆளைக் காட்டி அசிங்கப்படுத்து (name & shame) என்பதே இதிலுள்ள போராளிகளின் கோஷம். நியாயமான விசாரணை, மன்னிப்பு / தண்டனை கோரல், நீதி வேண்டல் இவர்களுக்கு முக்கியமல்ல.

இன்று இத்தகைய வழக்குகளில் பெண்களுக்கு மிகவும் சாதகமாய் சட்டம் மாறியுள்ளது, ஒரு பாலியல் தொந்தரவை குற்றமாக நிறுவ நேரடி சாட்சிகள் கூட இன்று அவசியம் இல்லை – ஒரு பாதிக்கப்பட்ட பெண் தான் வேலையில் இருந்து நீக்கப்பட்டதை காட்டியே தன் மீது பாலியல் நெருக்கடி தரப்பட்டதை நிறுவி விடலாம்; சட்டமும் ஏற்றுக் கொண்டு உடனே சம்மந்தப்பட்ட ஆணை தண்டிக்கும். ஆனால் இதையும் கடந்து பெண்களுக்கு சமூகத்தில் பாலியல் அத்துமீறல் வழக்கை நடத்துவதில் உள்ள சங்கடங்கள், சிக்கல்களை, நடைமுறை பிரச்சனைகளை அறிவேன். இருந்தும், ஒரு பெண் முனைப்பு கொண்டால் இன்று இவ்வழக்குகளில் ஜெயிப்பது சுலபம். பெரும்பாலான வழக்குகளில் பாதிக்கப்பட்டதாய் சொல்லும் பெண்களே பின்வாங்குகிறார்கள் அல்லது ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள்; இதனாலே இவ்வழக்குகளில் தண்டனை அதிகமாய் வழங்கப்படுவதில்லை என்கிறார்கள் கர்நாடக காவல்துறையினர்.
இவ்வாறு பெண்கள் சட்ட வழியை நாடுவதில் நம்பிக்கையற்றவர்களாகவோ அக்கறையற்றவர்களாகவோ இருக்கிறார்கள்.
இந்த metoo இயக்கம் அவர்களுக்கு வேறொரு சுலபமான எளிமையான அதே சமயம் மூர்க்கமான ஆயுதத்தை கையில் கொடுக்கிறது. அதுவே ஒரு ஆணின் பெயரைக் குறிப்பிட்டு, ஆனால் தேதி, இடம் போன்ற விபரங்கள் தெளிவாய் குறிப்பிடாமல், ஒரு பாலியல் குற்றச்சாட்டை அவனுக்கு எதிராய் முன்வைப்பது. ஒரு பக்கம் பொது சமூகத்துக்கு இது ஒரு கிளுகிளுப்பான பிரதியாகிறது; இன்னொரு பக்கம், சமூகத்தில் இதுவரை தாம் ஆண்களால் முடக்கப்படுவதாய்கொந்தளித்து வந்த பெண்களுக்கு இது ஒரு பழிவாங்கும் வாய்ப்பாகிறது.
 இந்த இயக்கத்துக்கு நீதி முக்கியமல்ல – அடிக்க வேண்டும், அவமானப்படுத்த வேண்டும், அச்சுறுத்த வேண்டும். தொடர்ந்து ஒடுக்கும் நமது சமூக அமைப்புகளின் மீதான கோபம் முழுக்க இன்று ஆண்கள் மீது பாய்ந்துள்ளது. இதை பெண்களின் தனிப்பட்ட கோபம் என நான் காணவில்லை. இத்தகைய கோபம் இல்லாத ஆளில்லை இன்று.
பிராமணர்கள் கூட தாம் (சட்டம் மற்றும் அரசியல் ரீதியாய்) ஒடுக்கப்படுவதாய் கோருகிறார்கள்.; தம்மை யூதர்களுடன் ஒப்பிடுகிறார்கள். சமீபத்தில் என்னுடைய மாணவர் ஒருவர் பார்ஸி சமூகத்தில் இந்தியாவில் மிகவும் ஒடுக்கப்படுகிற சிறுபான்மையினர் என தான் ஆய்வு செய்வதாய் குறிப்பிட்டார். மனேகா காந்தி, சோனியா காந்தி கூட சமூகம் தமக்கு பல்வேறு தடைகள் போடுவதாயே நம்புவார்கள். எல்லார் தரப்பிலும் அவரவருக்கான நியாயம் உள்ளது. பெண்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை நேரடியாய் ஆண்கள் ஏற்படுத்தும் ஒன்று மட்டுமல்ல. உ.தா., ஒரு பெண் பிற ஆண்களைப் போல இரவு பன்னிரெண்டுக்கு சாலைகளில் சுற்றுவதை விரும்பலாம். பெங்களூரில் இது சாதாரணமாய் நடக்கிறது. ஆனால் சென்னையில் இது சாத்தியமல்ல. உடனே ஆண் வந்து கையை பிடிப்பான் என்பதால் அல்ல. ஏனென்றால் பெங்களூரில் நான் பெண்கள் எந்த தொந்தரவுமின்றி இரவில் போதையில் உலவுவதைப் பார்க்கிறேன் (ஆண்கள் குடித்து விட்டு சுற்றும் போது பெண்கள் ஏன் செய்யக் கூடாது!). இரவு பதினொரு மணிக்கு நான் தேநீர் அருந்த செல்லும் போது இளம்பெண்களும் அங்கு வருகிறார்கள். இதற்குக் காரணம் காவல்துறை இதை கட்டுப்படுத்துவதில்லை என்பது. காவல்துறையின் அனுமதி சமூகமும் அரசியல் நிறுவனங்களும் வழங்கும் அனுமதி. இது கிடைத்ததும் பெண்கள் கூட்டமாய் வெளியே இரவில் வந்ததும் ஆண்கள் அவர்களைத் தடுப்பதோ பலாத்காரம் செய்வதோ அவமதிப்பதோ இல்லை. இது நான் கண்கூடாய் காணும் எதார்த்தம். சில குற்றங்கள் அங்கங்கே நிகழலாம். ஆனால் பெரும்பாலான ஆண்கள் இவ்விசயத்தில் முற்போக்காகவே செயல்படுகிறார்கள். சென்னையில் அரசு இதை அனுமதிப்பதில்லை என்பதாலே இரவு உலவுவதில் பெண்களுக்கு தடை உள்ளது. இது நேரடியாய் ஆண்கள் விதிக்கும் தடை அல்ல. நம் அரசியல் சமூக அமைப்புகளில் உள்ளோடும் அதிகாரம் விதிக்கும் தடை இது. இந்த அதிகாரத்தை பெண்களால் பார்க்க முடிவதில்லை. ஆக அவர்கள் ஆண்களே தம்மை நேரடியாய் தடுப்பதாய் ஒடுக்குவதாய் நினைக்கிறார்கள்.
இப்படி சமூகத்தில் நிகழும் ஒவ்வொரு ஒடுக்குமுறைக்கும் நேரடியாய் ஆண்களையே குற்றம் சாட்டுகிறார்கள். பெண்கள். எல்லா நிறுவனங்களிலும் அதிகாரம் செய்யும் இடங்களில் நேரடியாய் ஆண்களே இருப்பது ஆண்களே அனைத்துக்கும் காரணம் எனும் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
இப்படி பெண்களுக்கு தம் வாழ்வின் மீது, சமூகத்தின் மீது, அன்றாட நிலவரங்களின் மீதுள்ள ஆத்திரம் முழுக்க திரண்டு இந்த metoo இயக்கத்தில் வெடித்துள்ளது. ஆத்திர வெளிப்பாடே பிரதானம் என்பதால் இது மூர்க்கமான, ஒருதலை பட்சமான ஒரு இயக்கமாய் மாறி உள்ளது. ஒரு ஆண் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு சரியோ தப்போ என்பது முக்கியமல்ல, உக்கிரமாய் தாக்க வேண்டும், அப்போதே எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நடைபெறாமல் இருக்கும், தமக்கு ஆறுதல் கிடைக்கும் என கணிசமான பெண்கள் நம்புகிறார்கள்.
இந்த நிலைப்பாடு இரண்டு விசயங்களை எனக்கு நினைவுபடுத்துகிறது:
1)   தீவிரவாதி எனும் பெயரில் அரசு யாரை தூக்கிலிட்டாலும் மக்கள் பெருவாரியாய் அதற்கு ஆதரவளிப்பார்கள். தூக்கிலிடப்பட்டவன் நிரபராதி என்றாலும் பரவாயில்லை, தீவிரவாதிகளுக்கு அச்சம் ஏற்படுத்த, அவர்களை பின்வாங்கச் செய்ய இது அவசியம் என பெருவாரியான மக்கள் நம்புகிறார்கள். இன்று metoo போராளிகள் இதே பாணியில் தான் யோசிக்கிறார்கள். இது வருந்தத்தக்க நிலை.
2)   பழங்காலத்தில் ஒழுக்கமீறலில் ஈடுபட்டவர்களை, சமுதாய விதிகளை உடைத்தவர்களை மொட்டையடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதையில் ஏற்றி ஊர்வலமாய் அழைத்துச் செல்லும் மரபு இருந்தது. அது நீண்ட காலம் நம் கிராமங்களில் நிலைத்த வழக்கம். கள்ள உறவில் ஈடுபட்டவர்களை பொதுவிடத்தில் கட்டி வைப்பது, கொன்று பொதுவிடத்தில் வீசுவது, பலர் காண பலாத்காரம் செய்வது, கூட்டமாய் அடித்து துவைப்பது, கல்லெறிவது ஆகிய தண்டனைகள் இன்று தமிழகத்தில் மட்டுமல்ல அரேபிய தேசங்களிலும் உண்டு. இது நீதி வழங்கும் முறையல்ல, சமூக அவமதிப்பைக் காட்டி அச்சுறுத்தும் முறை; மக்களே சேர்ந்து அடித்து கொல்லும் முறை. Metooவில் இன்று போராளிகள் இந்த name & shame ஆயுதத்தை கையிலெடுத்திருப்பது எவ்வளவு பிற்போக்கானது, அதில் ஒரு ஒழுக்க மனப்பான்மை ஒளிந்திருப்பதை நாம் காணலாம்.

ஒடுக்கப்பட்டவர்களாய் தம்மை உணரும் பெண்களே ஒடுக்கும் சக்திகளின் ஆயுதத்தை ஆண்களுக்கு எதிராய் கையிலெடுத்திருப்பது, ஆண்களை கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலம் அழைத்து செல்வது ஒரு நகைமுரண்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த பிரச்சனை வெளிநாடுகளில் இருந்து வந்த நுகர்வு கலாச்சாரத்தை மையமாக கொண்டுள்ளதா என்கிற கேள்வி எழுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...