ஆக, தமிழ் சினிமாவுக்கு
மட்டுமென்ன தனித்துவம்? மூன்று விசயங்களை
சொல்லலாம்:
1)
இங்கு இயக்குநர்-நடிகர்களின் எண்ணிக்கையும்
தாக்கமும் அவர்களுக்குக் கிடைக்கும் புகழும் வேறெந்த மொழியையும் விட அதிகம். கீழ்வரும் பட்டியலைப் பாருங்கள்:
·
டி. ராஜேந்தர்: தன் படத்தின் நாயகன், கதை, திரைக்கதை, வசனகர்த்தா, தயாரிப்பாளர், இசை, பாடலாசிரியர், பாடகர், கலை இயக்குநர், தயாரிப்பு மேலாளர் என எல்லாமே அவர் தான். இந்த துறைகளில் எதிலுமே அவர் நிபுணரோ சாதனையாளரோ அல்ல. ஆனால் தன் பாணியிலான படத்தை சிக்கனமாக எடுக்க இந்த பல்துறை-மூக்கு-நுழைத்தல் அவருக்கு
உதவியது. அடுக்கு வசனம், பாசாங்கின்மை, ஒரு கருத்தை வலுவாக முகத்தில் அடித்தோ முதுகில் அறைந்தோ சொல்வது, நாடகீயம், நொஸ்டால்ஜியா, எளிய திரைக்கதை அமைப்பு அவரது படங்கள் எண்பதுகளில் பெரும்
வெற்றி பெற உதவின. “ஒரு தலை ராகம்”, “ரயில் பயணங்களில்”, “உயிருள்ளவரை உஷா” ஆகிய படங்களை இங்கு குறிப்பிடலாம்.
·
விசு: விசு அடிப்படையில் சினிமா கதை எழுத்தாளர் மற்றும்
வசன கர்த்தா. தனது நாடகத் துறை அனுபவங்களைக் கொண்டு அதே பாணியில்
படமெடுத்து சாதித்தவர். உ.தா., விசுவின் எந்த
படத்தை எடுத்துக் கொண்டாலும் கதை நடக்கும் இடம் ஒரு வீடாக இருக்கும்; அங்கு வரும் பிரச்சனைகள் எல்லா வீடுகளிலும் வருபவையாக இருக்கும். அங்கு வழிதவறி செல்லும் ஆடுகளுக்கு புத்தி போதிப்பவராய் விசு
தோன்றுவார். மத்திய வர்க்க பிரச்சனைகளை சித்தரித்து அவற்றுக்கு
எளிய தீர்வுகளும் சொல்லும் விசுவின் படங்கள் அவை வெளியான எண்பதுகளில் வெற்றி பெற்றன. ஆனால் இயக்குநர் என்பதை விட நடிகராகவும் ஊடக பிரபலமாகவுமே
விசு முத்திரை பதித்தார்.
·
கெ. பாக்யராஜ்: தமிழ் சினிமாவின் தலைசிறந்த திரைக்கதையாளர்களில் ஒருவர். இவரது படங்களில் கதையின் போக்கை, காட்சிகளின் அடுக்கை கவனித்தாலே திரைக்கதை எழுத்தின் அடிப்படை
விதிகள் புரிந்து போகும். இவரது நகைச்சுவை
சூழல் சார்ந்தது – தனது பம்மி பதுங்கும்
உடல்மொழிக்கு தகுந்த கதைச்சூழலை உருவாக்கி நம்மை சிரிக்கவும் நெகிழவும் வைத்தவர். ஒரு நாயகனுக்கு எந்த டிப்பிக்கல் ஹீரோ குணாம்சங்களும் தேவையில்லை, தமிழ் பார்வையாளர்கள் ஒரு கதைசொல்லியையும் நாயகனையும் ஒருவராகவே
பார்க்கிறார்கள், கதை சரியாக சொல்லப்பட்டால், கதைக்கு பொருந்தி வந்தால் யாரும் நாயகனாகலாம் என நிரூபித்தவர். தன் படங்களில் மட்டுமல்லாமல், பாரதிராஜாவின் “புதிய வார்ப்புகள்”, பி. வாசுவின் “அம்மா வந்தாச்சு”, பாலகுமாரனின் “இது நம்ம ஆளு” போன்ற வெளிப்
படங்களிலும் நாயகனானவர். “இன்று போய் நாளை
வா”, “அந்த ஏழு நாட்கள்”, “முந்தானை முடிச்சு” ஆகியவை இவர் இயக்கி நடித்தவற்றில் கிளாசிக்குகள். ”ராசுக்குட்டியும்” பார்க்கத் தக்க படம். மலையாளத்தில் ஸ்ரீனிவாசனோடு பாக்ய்ராஜை ஒப்பிடலாம். இயக்குநர்-நடிகர்களில் ஒரு தனி சாதனையாளர் பாக்யராஜ்.
·
பாரதிராஜா: தன் இயக்கத்துக்காகவே
பெரும்பாலும் அறியப்பட்டாலும், ஆரம்பத்தில் இருந்தே “உங்கள் பாரதிராஜா” என குரல் மூலம் மக்களுக்கு நெருக்கமானவர். நுணுக்கமான உடல்மொழியோ முகபாவனைகளோ அற்றவர் என்றாலும் சரளமாய்
லாவகமாய் ஒரு பாத்திரத்தை ஏற்று செய்யக் கூடிவர், சில நிமிடங்களே தோன்றி சென்றாலும் பார்வையாளர் நெஞ்சில் தங்கி
விடுபவர். “கல்லுக்குள் ஈரம்”, “தாவணிக் கனவுகள்” போன்ற படங்களில் துண்டு பாத்திரங்கள் அடிக்கடி முகம் காட்டினார்
என்றாலும் ஒரு நடிகராக அவர் தனி கவனம் பெற்றது ரெண்டாயிரத்துப் பிறகே. குறிப்பாய் “ஆயுத எழுத்து”, “பாண்டிய நாடு” ஆகிய படங்களில் இவரது நடிப்பு ரசிக்கத்தக்கதாய் இருந்தது – சில காட்சிகளில் நாயகனையே ஆதிக்கம் செய்யும்படி அபாரமாய்
நடித்திருப்பார்.
·
ரா. பார்த்திபன்: பார்த்திபன் கெ. பாக்யராஜின் ஒரு தொடர்ச்சி எனலாம். ஆரம்பத்தில் இருந்தே தனது நடிப்புக்காக தனி கவனம் பெற்றவர். “புதிய பாதை”,”கதை திரைக்கதை வசனம் இயக்கம்” போன்ற வெற்றிப் படங்களைத் தந்தாலும் இவரது பெரும்பாலான படங்கள் வணிகத் தோல்விடைந்தன. ஆக, தொண்ணூறுகளில்
இருந்தே பார்த்திபன் நாயகனாக நடிக்கத் துவங்கினார். “பாரதி கண்ணம்மா”, “அழகி” போன்ற படங்கள்
ஒரு நாயகனாக இவருக்கு பெயர் பெற்றுத் தந்தன. ஆனாலும் குணச்சித்திர வேடங்களை ஏற்கத் துவங்கிய பின்னரே பார்த்திபன்
உண்மையான நடிகர் ஆனார். குறிப்பாய், “ஆயிரத்தில் ஒருவனில்” அழிந்து கெட்ட சோழ மன்னாக நடித்ததை பாத்திரம் தமிழ் சினிமா
உள்ளவரை எல்லார் நினைவிலும் இருக்கும். பாதி பித்தான, பாதி கனவு நிலையில்
வாழும், தனது தன்னிரக்கத்தை மிகுந்த அக்ந்தையால் மறைக்கும்
மன்னர் அவர். இந்த பாத்திரச் சிக்கலை நன்குணர்ந்து வெளிப்படுத்தி
இருப்பார் பார்த்திபன். “நானும் ரௌடிதானில்” கிள்ளி வளவன் பாத்திரமும் இவ்வாறு கொஞ்சம் கிறுக்கான மிதப்பான
வில்லன். இதையும் பாத்திரத்தின் மைய பண்பு உணர்ந்து சிறப்புற
சித்தரித்திருப்பார். இப்படி இயக்குநர்கள்
இடையே மிகச்சிறந்த நடிகர் என பாராட்டத்தக்கவர் பார்த்திபன்.
·
பாண்டியராஜன்:
தன் திருட்டுமுழி, அதற்கு ஏற்ற குரல் மற்றும் டைமிங்காக எண்பது மற்றும் தொண்ணூறுகளில்
ஒரு நட்சத்திரமாக திகழ்ந்தவர். பாக்யராஜின் உதவி
இயக்குநராகி பின்னர் அதே பாணியை தன் இயக்கத்திலும் நடிப்பிலும் பின்பற்றி ஜெயித்தவர். இன்றும் அவரது முத்திரை பாணிக்கு இணையோ மாற்றோ தமிழில் தோன்றவில்லை. நான் லிப்டில் போகும் போதெல்லாம் இவரது “கோபாலா கோபாலா” படக்காட்சியை நினைத்துப் பார்ப்பேன் (லிப்டில் குஷ்புவுடன் மாட்டிக் கொள்கையில் இவர் புரியும்
சேட்டைகள்).
·
எஸ்.ஜெ சூர்யா: இயக்குநர், நடிகர், திரைக்கதையாளர், இசை இயக்குநர், பாடகர், தயாரிப்பாளர் என இவரைப் பற்றி நான் சொல்கையில்
உங்களுக்கு டி. ராஜேந்தர் நினைவுக்கு வரலாம். படபடவெனும் பேச்சு, நொடியும் தயங்காத உடல்மொழி மற்றும் சைகைகள் என ஆனால் இவர்
மேம்பட்ட ஒரு கலைஞன். துணிச்சலும் கூர்மையும்
இவரது சிறப்புகள். ஒரு தனியான பேச்சு
பாணியைக் கொண்டு அதன்படியே தன் நாயகர்களையும் நடிக்க வைப்பவர். ஆண் பெண் உறவுச் சிக்கல் தான் இவரது கதைகளின் இழை – ஆனால் வழக்கமான போக்குகளைத் தவிர்த்து முற்றிலும் புதிதான
கதைக்களங்களை உருவாக்கினார் (ரெட்டைப் பிறவிகள்
ஒரே பெண்ணை காதலிப்பது, பரஸ்பரம் ஒத்துப்
போக முடியாத இருவர் காதலிப்பது, இரவில் எட்டு
வயதான பையனாகவும் பகலில் 28 வயது இளைஞனாகவும்
இருக்க நேரும் ஒருவன் ஒரு வளர்ந்த பெண்ணை காதலிக்கையில் வரும் குழப்பங்கள்). இதனாலே ”நியு” படத்துடன் இவர் நாயகனான போது பார்வையாளர்களுக்கு அது ரொம்ப
விசித்திரமாகத் தெரியவில்லை. ஒரு நாயகனாக அவர்
வெற்றி பெறவில்லை, ஆனால் குணச்சித்திர
நடிகராக கவனிக்கப்பட்டார். எஸ்.ஜெ சூர்யா என்றதுமே என் நினைவில் வருவது “என் இடுப்பைப் பார்த்தியா?” எனக் கேட்டு ஜோதிகா விஜய்யை படுத்தி எடுக்கும் “குஷி” படக்காட்சி. இன்றைய காதலர்களின் விளையாட்டுத்தனத்தை, துடுக்கை, வெளிப்படைத்தன்மையை
முதலில் சினிமாவுக்கு கொண்டு வந்து ரசிக்க வைத்தவர் எஸ்.ஜெ சூர்யா தான்.
·
சுந்தர் சி: நல்ல நகைச்சுவைப்
படங்களை இயக்குநராக தந்த சுந்தர். சி இன்னொரு பக்கம்
நடிப்பில் காலூன்றிய போது அக்கறையற்ற ஒரு செட் பிராபர்ட்டி போன்றே தோன்றினார். இது இவரது நடிப்புத் திறமை குறைவினால் இருக்கலாம். ஆனாலும் “நகரம்” போன்ற வெற்றிகளை அளித்தார்.
·
கெ.எஸ் ரவிக்குமார்:
நாற்பது படங்களுக்கு மேல் இயக்கிய, ரஜினி, கமல், அஜித், விஜய்யுடன் இணைந்து
பெரும் வெற்றிப் படங்களைத் தந்த கெ.எஸ் ரவிக்குமார்
தன் பெரும்பாலான படங்களில் எல்லாம் ஒருமுறையாவது முகம் காட்டுவது வழக்கம். ஒரு கட்டத்தில், படங்கள் இயக்குவதைக் குறைத்து ஆர்ப்பாட்டமான குணச்சித்திர
பாத்திரங்களை ஏற்று நடித்தார்.
·
சேரன்: “பாரதி கண்ணம்மா”, “வெற்றிக்கொடி கட்டு”, “தவமாய் தவமிருந்து” ஆகிய நல்ல படங்களை இயக்கியவர். “தவமாய் தவமிருந்து” மட்டுமே போதும் தமிழ் சினிமா வரலாற்றில் இவர் மறக்க முடியாத
இடம் பெற. சேரன் நாயகனாக முக்கிய காரணம் ஒரு இயக்குநராக
தனக்கு போதுமான முக பரிச்சயம் கிடைக்கவில்லை என்பதாக இருக்கலாம். அழுத்தமான குடும்பப் பிரச்சனைகளைக் கொண்ட வலுவான திரைக்கதை
தான் இவரது வலிமை. தான் நாயகனாக
நடிக்க ஆரம்பித்த போதும் இவர் ஒரு நடிகராக தனது குறைகளை அறிந்து அதற்கு ஏற்ப காட்சியை
வலுப்படுத்தி தனக்கான நடிப்புத் தேவையை குறைத்துக் கொள்வார். இது பாஜ்யராஜின் யுக்தி தான். சுய-இரக்க உடல்மொழியும்
உணர்ச்சிகளே தெரியாத முகமும் இருந்தும் இவ்வளவு முக்கிய படங்களில் நடித்து பெயர் வாங்கியுள்ளார்
என்பதே இவரது மற்றொரு சாதனை தான். ஒரு நடிகராக சேரனை நான் ரசித்தது “யுத்தம் செய்யில்”. அப்படம் பார்த்ததும் சேரனைக் கூட நன்றாக நடிக்க வைத்த மிஷ்கினை
கட்டியணைத்து பாராட்டத் தோன்றியது.
·
சசிகுமார்: தமிழ் சினிமாவின்
விநோதங்களில் ஒருவர் சசிகுமார். “சுப்பிரமணியபுரம்” எனும் அபாரமான படத்தைத் தந்து விட்டு பிறகு ஒரு இயக்குநராக
அவர் நல்ல படம் கூடத் தரவில்லை என்பது மட்டுமல்ல, அதற்காக பெரிய அக்கறையோ முயற்சியோ காட்டினதாய் தெரியவில்லை. மாறாக, “நாடோடிகள்”, ”போராளி”, “சுந்தர பாண்டியன்”, “குட்டிப்புலி” போன்ற மதுரைக்கார கோபக்கார இளைஞன் டெம்பிளேட்டில் வெற்றிப் படங்களாக நடித்து
நன்றாக விலைபோகும் நாயகானார். “தலைமுறைகள்” போன்ற நல்ல படங்களையும் தயாரித்தார். “அவர் இன்னொரு டி.ஆருங்க” என நண்பர் ஒருவர்
சசிகுமார் நடிக்க வந்த காலத்தில் சொல்வார். ஆனால் மக்கள் சசிகுமாரின் அந்த உணர்ச்சியற்ற (தாடிக்குள் ஒளிந்து கொண்ட) முகத்தை, முரட்டு உடல்மொழியை, தோள்களை இறுக்கியும் குரலின் கடுமை வழியும் அவர் காட்டிய
கரார்தனத்தை ரசித்தனர்.
·
அமீர்: “பருத்தி வீரன்” போன்ற ஒரு அட்டகாசமான படத்துக்குப் பின் ஒருவர் இப்படி ஒன்றுமில்லாமல்
போக முடியுமா? மேலே சசிகுமாருக்கு நான் சொன்ன அனைத்தும் அமீருக்கும்
பொருந்தும். அமீருக்குக் கீழ் சசிகுமார் முன்பு உதவி இருக்குநராக
பணியாற்றினார் என்பது கூடுதல் சேதி.
·
பொன்வண்ணன்: பொன்வண்ணன் மூன்று
படங்களை இயக்கியிருக்கிறார் என்றாலும் குணச்சித்திர நடிகராகவே கவனிக்கப்பட்டவர். கொஞ்ச நேரமே வந்து போகும் பாத்திரங்களில் நடித்தாலும் அழுத்தமான
பாதிப்பை ஏற்படுத்துபவர். “பருத்தி வீரன்” மற்றும் “அஞ்சாதே” ஆகிய படங்களில் இவரது நடிப்பு என்னை கவர்ந்தது.
·
ராம்: ராமின் எல்லா படங்களிலும் (”பேரன்பு” தவிர) நாயகனுக்கு தாடி இருக்கும். அவர் ராமின் பிரதியாகவே தோன்றுவார். லட்சியவாத பிடிப்பும் லட்சியவாதம் தோற்ற சமூகத்தில் அவன்
உணரும் தனிமையும் நெருக்கடியும் ராமின் பிரதான உணர்வுகளே. தன் தாக்கமின்றி தன் கதைகளோ பாத்திரங்களோ இல்லை எனும் அளவுக்கு
நியோ நோயர் பாணியில் படமெடுப்பவர் அவர். ஆகையால் ராம் “தங்க மீன்களில்” நாயகனான போது அது ஆச்சரியம் தரவில்லை. இதை அடுத்து ”சவரக்கத்தியிலும்” நாயகனானார். “பேரன்பு” பற்றி என்னிடம் உரையாடும் போது“மம்முட்டியிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன், ஒரு நடிகனாக” என்றார். தன் நடிப்பை அவர் சீரியஸாகத் தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்
என அப்போது புரிந்து கொண்டேன்.
·
மிஷ்கின்: பார்த்திபனுக்கு
அடுத்த படியாய் தமிழின் மிகச்சிறந்த இயக்குநர்-நடிகர் மிஷ்கின் தான். குறிப்பாய், “நந்தலாலாவில்” ஒரு அறிமுக நடிகனின்
தயக்கமோ தடுமாற்றமோ அவரிடம் இராது. தங்கு தடையற, மிக மிக நெகிழ்ச்சியான நடிப்பும், பரபரப்பான கண்களும் அலைபாயும் உடல்மொழியும் அவரது சிறப்புகள். “ஓநாயும் ஆட்டுக்குட்டியில்” அவர் கதை சொல்லும் காட்சி என்னை ஒவ்வொரு முறையும் கண்கலங்க
செய்வது. மிஷ்கின் இயல்பாகவே நல்ல நடிகர் என்பது என் அனுமானம். அந்த மிகையான தோரணை, பாவனைகள் அவரது இயல்பு வாழ்விலே உள்ளது தான். ஆகையால் அத்தகைய பாத்திரங்கள் அவருக்கு மிகவும் நன்றாய் பொருந்தி
விடுகின்றன. தன் இயக்கத்தில் உள்ளதைப் போன்றே நடிப்பு மற்றும்
உடல்மொழியிலும் குரொசாவாவின் படங்களில் அடிக்கடி வரும் ஜப்பானிய நாயகர்கள் மற்றும்
குணச்சித்திர நடிகர்களின் தாக்கத்தை வெகுவாய் கொண்டவர் மிஷ்கின். மிஷ்கின் தற்போது எளிய பட்ஜட்டிலான மாற்றுப் படங்களில் நடித்து
வருகிறார். தன் இயக்குநர் பணியிலும் அவர் கவனம் இழக்கவில்லை.
·
சமுத்திரக்கனி:. நாடோடிகள், போராளி போன்ற வெற்றிப் படங்களை தந்திருந்தாலும் சமுத்திரக்கனி
ஒரு நடிகராகவே இடம் கண்டவர். சினிமாவுக்கு
ஏற்ற தோற்ற ஆகிருதி (film presence) இயல்பாகவே பொருந்தி வந்தவர் இவர். ஆனாலும் எளிய ஒற்றைபட்டையான பாத்திர அமைப்பின்றி, சிக்கலான பாத்திரங்கள் தரப்படும் போது அவர் திணறுவதைக் காண
முடியும். மலையாளத்தில் மோகன்லாலுடன் இவர் நடித்த ”ஒப்பம்” ஒரு உதாரணம்.
நகைசுவை நடிகர்களாய் கூடுதல் புகழ் பெற்றவர் இயக்குநர்களும்
உண்டு:
·
மணிவண்ணன்
·
சுந்தர்ராஜன்
·
மனோபாலா
கருத்துகள்