முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விராத் கோலி: சமகாலத்து நாயகன்



 Image result for virat kohli
ரெண்டாயிரத்தில் சச்சின் தான் ஆடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்திக் கொண்டிருப்பார். அவர் ஒரு சிங்கிள் அல்லது பவுண்டரி அடித்ததும் பிரம்மாண்ட திரையில்சச்சின் டெஸ்ட் போட்டிகளில் மிக அதிக ரன்களை அடித்து விட்டார், சச்சின் 30,000 ரன்களைத் தொட்டு விட்டார்என வந்து கொண்டே இருக்கும். சச்சின் இதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல் தன் பேட்டிங் பார்ட்னரிடம் வெட்கப் புன்னகையுடன், குழந்தை உடல்மொழியுடன் வேடிக்கையாக பேசி விட்டு கடந்து விடுவார். சச்சினுக்குப் பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் தோனி.

சச்சினை நினைக்கும் போதெல்லாம் எனக்குரேம்போசில்வெஸ்டர் ஸ்டாலோன் நினைவுக்கு வருவார். அந்த தசைகள் புடைத்த உடல், அந்த வெறி கொண்ட பார்வை, எல்லைக்காவல் செய்யும் சாமியைப் போல அந்த துப்பாக்கி.சச்சின் ஒரு தொடர்ந்து சுட்டபடியே இருக்கும் எந்திரத் துப்பாக்கி, தோனியோ சாதனைகளை ஸ்நைப்பர் துப்பாக்கி வீரனைப் போல அடைபவர். ஒரே அடி, அதற்கு மேல் இல்லை. சச்சின் மீதிருந்த விமர்சனமே அவருக்கு சாதனைகளை படைப்பதில் இருந்த தீரா மோகம் தன் அணியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வதில் இல்லை இல்லை என்பது. எதிரி மீது படுகிறதா என்பதை விட குண்டுகள் தன் துப்பாக்கியில் இருந்து தொடர்ந்து சீறுவதிலேயே அவருக்கு மிகுந்த கிளர்ச்சி இருந்தது.
சச்சினுக்குப் பிறகு வந்த அடுத்த ரேம்போ கோலி தான். ஆனால் சச்சினை விட ஒரு மேம்பட்ட  எந்திரத் துப்பாக்கியே கோலி. அவர் மட்டையில் இருந்து வெடிக்கும் ஒவ்வொரு ரவையும் எதிரணியின் மார்பைப் பிளக்கிறது. அவர் சதம் அடித்து இந்தியா வெல்லாதது மிக மிக அரிதே. இந்தியாவின் வெற்றிகளில் கோலி சதம் / அரைசதம் அடிக்காதிருப்பதும் அரிதே.
சச்சினைப் போன்றே கோலியும் ஒவ்வொரு ஆட்டத்திலும் பிரம்மாண்டத் திரையை விழித்து அலறச் செய்யும் சாதனை நாயகனே. சமீபத்தில் உலகிலேயே மிகக் குறைந்த ஆட்டங்களில் 10,000 ரன்கள் எடுத்து ஒருநாள் கிரிக்கெட்டின் இமயத்தில் ஏறி கொடி நாட்டி இருக்கிறார்கள். சச்சின் 259 ஆட்டங்களில் 10,000 ரன்களை எடுத்து 17 வருடங்கள் கழித்து கோலி அதே சாதனையை 205 ஆட்டங்களில் படைத்து விட்டார். இப்போது அவருக்கு வயது 28. இன்னும் பத்தாண்டுகள் ஆடும் உடல் தகுதி கோலிக்கு உண்டு.  ச்ச்சின் தன் ஆட்டவாழ்வில் அடித்த மொத்த ஒருநாள் ரன்கள் 18426. கோலி இந்த சாதனையையும் தன் 35வது வயதுக்குள் எளிதில் எட்டிப் பிடித்து விடுவார் என்பதில் ஐயமில்லை. கோலியின் சாதனையை அடுத்த வருகிற பேட்மேன்களால் முறியடிக்க முடியுமா? அது மிக மிக சிரமம். ஏனென சொல்கிறேன்.
இந்த கேள்விக்கு பதில் காண நாம் கோலியையும் ரோஹித் ஷர்மாவையும் ஒப்பிட வேண்டும். ஒரு அளவுகோலின் படி ரோஹித் ஷர்மா கோலியை விட பல மடங்கி திறமையானவர். அது பந்தை சுலபத்தில் கணித்து அதை விட சுலபத்தில் டைம் செய்யும் திறன். டைமிங்கோடு சேர்த்து அபாரமான வலுவுடன் பந்தை சாத்தும் திறன். ரோஹித் ஒரு பந்துக்கு மூன்று வித ஷாட்கள் அடிக்கும் திறன் கொண்டவர். இறுதி அரை நொடியில் தன் ஆழ்மனத்தின் ஆணைக்கேற்ப ஷாட்டை மாற்றும் இயல்பு கொண்டவர். இந்த தன்னிச்சையான ஆட்ட பாணியினாலே ரோஹித்தால் தொடர்ந்து ரன்களை மலை மலையாய் குவிக்க முடிந்ததில்லை. மாறாக, கோலி இந்தஅடிக்கும்திறன் குறைவானவர். இந்த குறையே கோலிக்கு நிறையாக மாறியது. “அடிக்கும்திறனுக்குப் பதிலாய் புத்திசாலித்தனமும் மனவலிமையும் உடல் தகுதியை கோலிக்கு அதிகம். கிரிக்கெட் ஒரு உளப்பூர்வமான ஆட்டம். சதம் அடிப்பது ஒரு நாவலை தினமும் எழுதுவதற்கு இணையான அனுபவம். ஒருநாள் நன்றாய் எழுத வராமல் போகலாம், ஒருநாள் மிக நல்ல சரளத்தன்மையுடன் எழுத முடியும். ஒரு நல்ல எழுத்தாளன் இந்த மோசமான நாட்களையும் தன் போக்கில் எடுத்துக் கொண்டு கடந்து போகும் அநாயசம் கொண்டவன். கோலி ஒரு நாவலாசிரியனைப் போன்றவர். அவரது அபாரமான கற்பனையும் உணர்ச்சிகள் மீதான கட்டுப்பாடும் அவரை யாருமே எட்ட முடியாத இந்த உயரத்துக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. ஆனால் இனி இந்தியாவில் இருந்து மற்றொரு கோலி வர முடியாது என்றே நினைக்கிறேன். ஏனெனில் ரோஹித் ஷர்மாவே இன்றைய தலைமுறையின் முகம். தன் திறமை மற்றும் துணிச்சலைக் கொண்டு போகிற போக்கில் சாதிப்பதே இன்றைய தலைமுறையின் அடிப்படை ஆளுமைப் பண்பு. அடித்தாம் எம்.ஜி.ஆர், அடிபாங்கினா நம்பியார்! இன்றைய தலைமுறையினர் அவ்வப்போது எம்.ஜி.ஆர் ஆவதற்காக தொடர்ந்து நம்பியார் ஆகத் தயங்காதவர்கள். ஆனால் கோலி தன் முந்தின தலைமுறையின் நீட்சி எனலாம். சச்சின் மற்றும் திராவிடின் அற்புதமான இணைவு கோலி. இனி வரப் போவது ரோகித் ஷர்மாக்களே. டி-20, டி-10 என கிரிக்கெட் உலகம் ஒரு அதிவேக யுகமே நம் முன் நீண்டு கிடக்கிறது. அந்த யுகத்தில் இனி கோலி போன்ற ஒரு மரபார்ந்த வீரர், ஆக்ரோசமும் திறனும் நிதானமும் ஒருங்கிணைந்த ஒரு அட்டகாசமான வீரர் தோன்றும் வாய்ப்புகள் மிக மிக குறைவே. ஆகையால் தான் கோலி படைக்கப் போகும் சாதனைகளை இனி வரும் தலைமுறையின் வீரர்கள் தாண்டிப் போவது சிரமமே.
இந்த கட்டுரையை முடிக்கும் முன் மற்றொரு கேள்வியையும் நாம் கேட்க வேண்டும்.
சச்சினா கோலியா, யார் மேல்?
திறமையை எடுத்துக் கொண்டால் இல்லை. சச்சின் ஆயிரம் மடங்கு அதிக திறமையானவர். ஒரு பேட்ஸ்மேனாக சச்சினால் முடியாதது என்று எதுவுமே இல்லை. அவருக்கு தொழில்நுட்ப ரீதியாய் குறையே இல்லை. அவருக்கு ஆட சிரமமான பந்தோ, அவரை திணறடிக்கக் கூடிய வீச்சாளரோ இல்லை. உலகின் எல்லா பந்து வீச்சுத் தடையையும் எளிதில் தாண்டி குதித்து இலக்கைத் தொட்டவர் சச்சின். ஒரு ரோட் ரோலர் சரணைக் கல்லை நொறுக்குவது போல அவர் ஒவ்வொரு வீச்சாளரையும் நொறுக்கி விட்டு முன்னேறினார். ஆனால் இந்த முழுமை கோலியிடம் இல்லை.
அதே நேரம் சச்சினை விட மனவலிமை கோலிக்கு அதிகம். கடும் நெருக்கடியில் சச்சின் தளர்வார். ஆனால் கோலியோ எழுச்சி அடைவார்.
சச்சினும் கோலியும் இருவேறு துருவங்கள். ஒப்பிடவே முடியாத சாதனை சிகரங்கள்.
கோலிக்கு வாழ்த்துக்கள்!

நன்றி: உயிர்மை, நவம்பர், 2018

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...