முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சிகரெட் புகைக்கும் பெண் (4)


Image result for எஸ். ராமகிருஷ்ணன்

தமிழ் நவீன இலக்கியத்தில் கலகப் பண்பாட்டைப் பற்றி பேசுகையில் குடிக் கலாச்சாரம் உடனே நினைவுக்கு வரும். மது போதை முதல் கஞ்சா வரை நம் புனைவு மற்றும் கவிதைகளில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. பாரதியார் துவங்கி ஜி.நாகராஜன், விக்கிரமாதித்யனில் நீண்டு இன்றைய பின்நவீன படைப்பாளிகள் பலர் வரை குடியின்றி இலக்கிய விவாதம் இல்லையென்பதே நிலை. நவீன இலக்கியம் அரசியல் சமூக விவாதங்களில் நம்பிக்கை இழந்து குடியின் எதிர்க்கலாச்சார சாத்தியத்தில் தன்னை ஒப்புக் கொடுத்தது எனலாம். ஆனால் ஆச்சரியமாக, தமிழ்ப் பரப்பில் மது போதையின் குறியீட்டு முக்கியத்துவம் புகைக்கு இருந்ததில்லை. சிகரெட் இங்கு குடியின் ஒரு பொருட்படுத்த தேவையிராத பகுதியாக உள்ளது. இலக்கிய கூட்டங்கள் துவங்கியதும்ஸ்மோக் போடஒரு கூட்டம் எழுத்தாளர்கள் கிளம்பிச் செல்வார்கள். ஆனால் குடி அளவுக்கு சிகரெட் இலக்கிய அரட்டைக்கான மையமாக இருப்பதில்லை

சிகரெட் ஊதும் பிம்பம் சிலாக்கியமாய் பொருந்திக் கொண்டது (சமீபமாய் காலமான) பிரபஞ்சனுக்குத் தான். எழுத்தில் கற்பனாவாதியாகவும் நடப்பில் கலகவாதியுமான பிரபஞ்சன் தன் சிகரெட் விருப்பத்தை மறைக்காதவர்; சமீபத்தில் அவரது அஞ்சலிக் கட்டுரைகளில் அவ்வாறு அவர் சிகரெட்டை உதட்டில் பொருத்திக் கொண்ட சிந்தனாவயப்பட்ட பக்கவாட்டு புகைப்படம் அதிகமாய் பயன்படுத்தப்பட்டது.
எழுத்தாளர் இமையம் பிரபஞ்சனுக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பில் (“நிஜமான எழுத்தாளர்கள் சாவதில்லை”) சிகரெட்டுக்கு முற்றிலும் புதிய அர்த்தம் ஒன்று தரப்படுகிறது. “1991ல் பிரபஞ்சனை பாண்டிச்சேரியிலுள்ள அவருடைய வீட்டில் சென்று பார்த்தேன். அப்போது அவர் எனக்கொரு சிகரெட் கொடுத்தார். அவருடைய வீட்டிலேயே அவருடன் இணைந்து அவர் கொடுத்த சிகரெட்டை குடித்தேன். அன்று பிரபஞ்சன்மீது அளவற்ற மதிப்பு ஏற்பட்டது.ஏன் ஒரு சிகரெட் இமையத்துக்கு பிரபஞ்சன் மீதுஅளவற்ற மதிப்பைஏற்படுத்துகிறது? சிகரெட் புகைத்தல் சமமான சமூக அந்தஸ்தில் உள்ள ஆண்கள் மத்தியில் நிகழ்வது. ஒரு முதலாளி தன் தொழிலாளியுடன் புகைப்பதில்லை. சிகரெட் புகையில் உள்ள சமத்துவம் இந்த வரிகளில் சாதிய சமத்துவமாய் புது வடிவெடுக்கிறது.
சிகரெட்டின் உளவியல் பற்றி ஆழமாய் விவாதிக்கும் உலகின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என எஸ்.ராவின்அப்பா புகைக்கிறார்கதையை சொல்லலாம்.
இக்கதை புதுமைப்பித்தனின்பால்வண்ணம் பிள்ளைகதையின் தாக்கம் பெற்றது. பு.பியின் கதையில் பால்வண்ணம் பிள்ளை எனும் குமாஸ்தா வெளியே பரம சாது; உள்ளே ஆதிக்கவாதி. மனைவி, பிள்ளைகளை ஆதிக்கம் செய்யும் பொருட்டு பசு மாசு வாங்கும் ஆலோசனையை நிராகரிக்கிறார். மனைவி தானாக பசு மாடு வாங்கிட அவர் தன் கோபத்தையும் அதிகாரத்தையும் காட்டும் பொருட்டு அந்த மாட்டை சல்லிசான விலைக்கு விற்று விடுகிறார். எஸ்.ராவின் கதையில் பால்வண்ணம் பிள்ளையை போன்று ஒரு மனிதரே அப்பா. அலுவலகத்திலும் வெளியிலும் அவர் வெளியே ரொம்ப அப்பாவி.  ஆனால் வீட்டுக்குள் தன் ஆதிக்கத்தை காட்டும் பொருட்டு மனைவியை அடிப்பவர்; மகளை சிகரெட் வாங்க கடைக்கு அனுப்புபவர். அடி உதை வழி கூட தன்னை வலியுறுத்த முடியாமல் போவதாய் உணரும் போது அவர் சிகரெட்டை புகைத்து அவர்களின் முகத்தில் ஊதுகிறார். சிகரெட் அன்றி அவரால் தனது தன்னிரக்கத்தை, பதற்றத்தை மீறி வர முடிவதில்லை; இந்த தத்தளிப்பிற்கு பலிடாவே அவரது குடும்பம். அவரது மகளின் பெயர் ருக்மணி. அவள் சிகரெட்டை தன் தந்தை மீதான அன்பின், கோபத்தின், தன் போதாமையின், குற்றவுணர்வின் குறியீடாகசுயமுரணான குறியீடாகபார்க்கிறாள். அப்பா ஒவ்வொரு மாலையும் சிறுமி ருக்மணியை சிகரெட் வாங்கி வர அனுப்புகிறார். அது அப்பா தன் மீது செலுத்தும் மென்மையான வன்முறை என அவள் உணர்கிறாள்.
 ஒருநாள் அப்பா அம்மாவை சிகரெட்டால் சூடு வைக்கிறார். அவர் அண்டை வீட்டில் சரண் அடைகிறார். அம்மாவை தேடிப் போகும் ருக்மணியும் அங்கேயே அம்மாவுடன் உறங்குகிறார். அப்போது அங்கு வரும் அப்பா கடுமையாய் வசை பொழிந்து இருவரையும் வீட்டுக்கு வற்புறுத்தி அழைத்து செல்கிறார். அங்கு சென்றதும் அவர் மீண்டும் மகளை சிகரெட் வாங்க அனுப்புகிறார். அப்போது ருக்மணி ரோட்டில் ஒரு ஆள் வீசிச் சென்ற பாதி புகைந்த சிகரெட்டை எடுத்து முதன்முறையாய் புகைக்கிறாள். இருமியபடி அதை வீசி எறிந்து விட்டு, அப்பாவுக்கு சிகரெட் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு விரைகிறாள். அங்கு அப்பா சாய்வு நாற்காலியில் வெளியே ஓய்வாய் இருக்கிறார். உள்ளே அம்மா தரையில் படுத்துக் கிடக்கிறாள். மகள் அருகே வந்ததும் அவள் வாசனையில் சிகரெட்டை அம்மா உணர்கிறாள்; அவள் தன் மகளை வைகிறாள். அப்பாவின் பக்கம் மகள் இருக்க விரும்புகிறாள் என்பது அவளுக்கு தாங்க முடியாததாக இருக்கிறது. இங்கு இரண்டு விசயங்கள் மிக அமைதியாக நுணுக்கமாக உணர்த்தப்படுகின்றன – 1) ருக்மணி தன் அப்பாவை அவரது வன்மத்துக்காக வெறுத்தாலும் அவரது வன்மத்தின் மீது ஈர்க்கவும் படுகிறாள். அதுவே அவளை சிகரெட்டை சுவைக்க தூண்டுகிறது. ஒரு பெண் தன் மீது ஆண் செலுத்தும் அதிகாரத்தையும் வன்முறையையும் வெறுக்கும் போதே அதே விசயங்களை இச்சிக்கவும் செய்கிறாள். ஏனென்றால் அப்பாவே அவள் அடைய விரும்பும் இலக்கு.
2) ருக்மணியை அப்பா சிகரெட் வாங்க அனுப்பி விட்ட மனைவியுடன் தனிமையில் உறவு கொண்டாரா? இதைப் பற்றி எஸ்.ரா வெளிப்படையாய் பேசாதது இக்கதையின் அழகுகளில் ஒன்று.
சிகரெட் புகைப்பதில் ஒரு விடலைத்தனம் உள்ளது. வெளியே நல்ல பிள்ளையாக இருக்க நேரும் அப்பா தன் மகளின் பள்ளிக்கூடத்தில் தலைமையாசிரியரை காண வரும் போது பிடிவாதமாய் புகைக்கிறார். அதற்காகவே வெளியே அனுப்பப்படுகிறார். அந்த இடத்தில் அவர் ஒரு வளராத, முதிராத கலகக்காரனாக இருக்கிறார். சிகரெட் புகைத்தல் என்பது நம் சமூகத்தில் இப்படி வளர்ந்த குழந்தைகளின் கலகமே எனும் குறிப்புணர்த்தல் இங்கு வருகிறது.
கதையின் முடிவில் அப்பாவின் வன்முறையை பொறுக்க முடியாமல் அம்மா தற்கொலைக்கு முயல்கிறார். அப்பாவின் சுபாவத்தை ஊரே தூற்றிட அவர் அவமானத்தில் குறுகி வீட்டை விட்டு ஓடிப் போகிறார். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் அப்பாவை ரொம்பவே மிஸ் பண்ணும் போது ருக்மணி ஒரு சிகரெட் வாங்கி சேமிக்கிறாள். இப்படி நாற்பது ஐம்பதுக்கு மேல் சிகரெட்டுகள் அவளது மேஜை இழுப்பறையில் சேர்ந்து விட்டன. இரவில் சிகரெட் புகை தன் அறையில் பெருகுவதாய் தோன்றிட அவள் தான் தன் அப்பாவைப் போன்றும் அம்மாவைப் போன்றும் ஒரே சமயம் இருப்பதை உணர்கிறாள்.
இக்கதையில் எஸ்.ரா இப்படி சிகரெட் எனும் குறியீட்டின் பல பரிமாணங்களை சுட்டுகிறார்அது ஒரு நசுக்கப்பட்ட ஆணின் குரலாக இருக்கிறது; அது அவரால் நசுக்கப்பட்ட பெண்களின் எதிர்ப்புணர்வாக இருக்கிறது; ஆணதிகாரத்தை அடைவதற்கான அவர்களின் முனைப்பாக அது இருக்கிறது; தன்னை நசுக்கும் ஆண் அதிகாரத்தின் மீது மனச்சாய்வு அவர்களுக்கு இருப்பதை அது காட்டுகிறது.
சிகரெட்டை உதட்டில் பொருத்திய பெண் இருப்பின் உள்முரண்களை சித்தரித்த விதத்திலேயே இக்கதை மதிப்பு மிக்கதாகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...

ஒரு வாசகர் (நிஜ) கடிதம்

// எழுத்தாளர் ஆர் அபிலாஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மாதம் தோறும் வெளிவரும் உயிர்மை மாத இதழில் பல்வேறு கட்டுரைகள் மிகவும் சிறப்பானதாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் தற்கால சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலும் இருப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தொடர்க இருப்பினும் கூடுதலாக ஆர்.அபிலாஸஷ் அவர்கள் எழுதி வரும் கட்டுரைகள் என்னை பெரிதும் ஈர்க்கின்றன காரணம் எண்ணி ஏற்பட்டுள்ள குழப்பங்களை சந்தேகங்களையும் தெளிவடைவதற்கும் விரக்த்தியிலிருந்து தெளிவான சிந்தனைகளை வளர்ப்பதற்கும் கட்டுரையில் அவர் வழங்கும் ஆய்வு அடிப்படையிலான தகவல்களும் வார்த்தை பிரயோகங்களும் பெரும் உதவியாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ஐயா தொடரட்டும் தங்கள் பணி தொடர்ந்து பயணிப்போம் நன்றி! கோபாலசமுத்திரம் இ.கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி// மின்னஞ்சலில் வந்தது. வாசகர்கள் இம்மாதிரி அடிக்கடி கடிதங்கள் எழுதி என்னை உற்சாகப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இல்லாவிட்டால் ஏதோ சிறையில் இருப்பதைப் போல உள்ளது.