முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரகாட்டக்காரன் செந்திலில் இருந்து “காணாமல்” போன அதிமுக எம்.எல்.ஏ வரை – பத்து நிமிட தெரிதா (1)


Image result for derrida
தமிழில் ஒரு காலத்தில் தடபுடலாய் புழங்கப்பட்ட சொற்களில் ஒன்றுகட்டுடைத்தல்”. தொண்ணூறுகளில் இலக்கிய விமர்சனம், திரை விமர்சனம் என எதிலும் ஒரு படைப்பாளியையோ படைப்பையோமுகத்திரை கிழித்து விட்டு” “கட்டுடைத்தல்என முத்திரை குத்தி தலைப்பிடுவது கிட்டத்தட்ட ஒரு வைபோகமாய் இருந்தது. குறிப்பாய், ஒரு படைப்பாளியின் சாதி அவரது எழுத்தில் அம்பலப்படுகிறது என எடுத்துக் காட்டுவது ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திட, அதை தெரிதாவின் ஒளிவட்டத்துடன், கலைச்சொற்களுடன் நமது விமர்சகர்கள் பல முக்கியமான எழுத்தாளர்களை கதற விட்டார்கள். கட்டுடைத்தல் எனும் சொல் தொண்ணூறுகளின்மீ-டூவாக நிலவியது.


 நான் அப்போது பதின்வயதினன். ஆங்கில இலக்கியம் இளங்கலை வகுப்பில் சேர்ந்த புதிதில் தமிழ் சிறுபத்திரிகைகளின் தீப்பொறி வாசகனாய் இருந்த எனக்கு கட்டுடைத்த ஒரு அலாதியான சொல்லாய் தென்பட்டது. இந்த சொல்லின் வழியாகவே, நான் வாசித்த தமிழ் கட்டுடைத்தல் விமர்சனங்கள் வழியாக தெரிதாவை கரைத்துக் குடித்த இறுமாப்பு எனக்கு ஏற்பட்டது. அப்போது தான் ஜெயமோகன் தனதுதேவதேவனை முன்வைத்துநூலை படித்தேன். அதில் ஜெ.மோ மிகச்சுருக்கமாய் விமர்சனக் கலைச்சொற்களை விளக்கும் போது தெரிதாவைப் பற்றியும் குறிப்பிடுகிறார். கட்டுடைப்பது ஒருவரை அம்பலப்படுத்துவது அல்ல, சொற்களுக்கு நடுவில் உள்ள அனர்த்தத்தை அறிவது எனச் சொல்லுகிறார். எனக்கு தெரிதா மீதான ருசியை இந்த புதிய பார்வை அதிகப்படுத்தியது. ஆனால் தொடர்ந்த எனது கோட்பாட்டு வாசிப்பில் இன்று வரை மிக சவாலளிக்கும் சிந்தனையாளர்களில் ஒருவராய் தெரிதாவே இருக்கிறார்; அதே போல மிக சுலபமாய் நாம் புரிந்து கொண்டுள்ளதாய் நம்புகிறவராகவும் தெரிதாவே இருக்கிறார். ஏந்தளவுக்கு என்றால், நான் சந்திக்கும் பல அறிவார்ந்த திறமையான இலக்கிய மாணவர்களுக்கு கூட தெரிதாவின் கட்டுடைத்தலை ஏற்றுக் கொள்ளவும் புரியவும் மிகவும் சிரமமாக உள்ளது. ஏனென்றால் நமது கல்வி அமைப்பே அறிவை ஒரு உற்பத்திப் பண்டமாக பார்க்கிறது. விரிவாக அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றை விரிவாக விவாதித்து உணர வேண்டிய ஒன்றை எளிதாய் சுருக்கமாய் கேள்வியின்றி மெல்லாமல் ஜீரணிக்கும் படி அது நம் குழந்தைகளுக்கு கற்பிக்கிறது.

ஆகையால் தான் நம் மாணவர்கள் தமக்கு சொல்லித் தரப்படும் எதையும் கேள்வி கேட்பதில்லை. நுணுக்கமாய் கேள்விகளை எழுப்புவதும் அர்த்தங்களை அலசி ஆராய்வதும் நம்மை குழப்பத்தை, நிலையின்மையை நோக்கி இட்டுச் செல்லும். இது மாணவர்களை பதற்றமாக்கும் என்பதை நேரில் கண்டிருக்கிறேன். ஆகையால், “இந்த கவிதை சொல்லும் கருத்தென்ன?” எனும் வினாவை எழுப்பத் தான் நமது மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறோம். ஆனால் தெரிதாவைப் போன்ற பின் அமைப்பியல் சிந்தனையாளர்கள்இந்த கவிதை எந்த கட்டமைப்புகளின் மீது எழும்பி நிற்கிறது? அந்த கட்டமைப்புகளை அம்பலப்படுத்தினால் அங்கு தோன்றுவது என்ன?” எனக் கேட்க தூண்டுகிறார்கள். இதைப் புரிந்து அவர்கள் தேர்வில் பதில் எழுதும் போதோ அங்கு ஒருகட்டமைப்பைமீண்டும் உருவாக்குவார்கள். கட்டுடைத்தல் பற்றிய விளக்கங்களே புதியகட்டுகளைதோற்றுவிக்கும். வினாத்தாளையும் அவர்கள் அடுத்து கட்டுடைக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கான மதிப்பெண்களே அந்த கட்டுகளுக்காய் வழங்கப்படுவன தானே? கட்டமைப்புகளை கேள்வி கேட்டால் அவர்களின் மதிப்பெண்களே மதிப்பிழந்து போகும்! இதுவே நம் கல்வி அமைப்புக்குள் தெரிதா படும் அவஸ்தை! தெரிதாவால் நம் மாணவர்கள் படும் அவஸ்தை!

இதனாலே தெரிதா தன் வாழ்நாள் பூரா விளக்கங்கள், கோட்பாடுகள், சூத்திரங்கள், மதிப்பூட்டு முறைகளுக்கு எதிராய் முழங்கிக் கொண்டிருந்தார். தான் பயன்படுத்தும் ஒரு கலைச்சொல்லையே அடுத்தடுத்து எழுதும் கட்டுரைகளில் முழுக்க மாறுட்டு பயன்படுத்தும் வழக்கம் இதனாலே அவருக்கு ஏற்பட்டது. ஒரு கவிஞன் தன் சொற்களை மணலில் புதைத்து விளையாடுவது போன்றே அவர் விளையாடினார். அர்த்தங்களுக்குள் சிறைப்படுவதை அவர் வெறுத்தார். ஏன்? அர்த்தங்களின் மீதே சமூக கலாச்சார அதிகாரம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் நமது விமர்சகர்களும் ஆசிரியர்களும் சிந்தனையாளர்களும் அர்த்தங்களை சொற்கள் மீதாக இறுக்கி மனித மனத்தை அடிமைப்படுத்துவதை, அதன் மூலம் அதிகாரத்தை பெறுவதை விரும்புகிறார்கள்.

தெரிதாவும் அவரை ஒத்தவர்களும்கூறுவதுஎன்ன?

தெரிதாவைப் போன்றே பல பின் அமைப்பியல் சிந்தனையாளர்களும் சொற்களை இவ்வாறு பயன்படுத்தினவர்களே. ஹைடெக்கர், ஹெலன் சிக்ஸூ போன்றோரை உதாரணம் காட்டலாம். இவர்களை வாசிப்பதும் இதனாலே இன்று சிக்கலாகிறது. ”உடலை எழுதுவதுஎனும் சிக்ஸுவின் சொல்லாடல் பாலுறவை வெளிப்படையாய் எழுதுவது என தமிழில் ஒரு காலத்தில் தவறாய் புரிந்து கொள்ளப்பட்டது. சிக்ஸு படைப்பூக்கத்தை, படைப்பு மனநிலையின் திளைப்பை ஒரு பெண் தன் அல்குலை வருடி சுயமைதுனம் செய்வதுடன் ஒப்பிட்டார் (“The Laugh of the Medusa” எனும் கட்டுரையில்). ஒரு ஆண் எழுச்சியடையும் போது விந்து வெளிப்படும்; விந்து ஒரு பெண்ணை கருவுறச் செய்யும். குழந்தைகள் பிறக்கும். இவ்வாறு குழந்தைகளால் குடும்பம் தோன்றி வம்சம் விருத்தியாக வேண்டும் எனும் நோக்கில் ஆண் மற்றும் பெண்ணுடல்கள் சமூகத்தால் அடிமைப்படுத்தப்படும். இப்போது இதை நேரடியாக அன்றி மொழியின் செயல்பாட்டு முறையாக புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

ஆணின் காமத்தை மொழிக்குள் அர்த்தத்தை உற்பத்தி பண்ணுவதற்கான ஒரு உருவகமாய் சிக்ஸு பார்க்கிறார். பெண்ணின் காமம் ஒரு கருந்துளையாக, எவ்வளவு அர்த்தம் உற்பத்தியானாலும் அதை முழுங்கி விட்டு பசியில் தவிக்கும் காமமாய் மற்றொரு எதிர் உருவகமாக செய்கிறார். ஆண் அர்த்தங்களை தோற்றுவிக்க அதிகாரத்தை உற்பத்தி பண்ண விழைகிறான்; பெண் அர்த்தங்களை முறியடித்து அதிகாரமற்ற சுதந்திர வெளியை நாடுகிறாள். மொழிக்குள்ளும் ஆண் எழுத்து இவ்வாறு ஒருவிதமாகவும் பெண்ணெழுத்து இன்னொரு விதமாகவும் உள்ளது. சிக்ஸு பெண்ணெழுத்தை, பெண் எழுத்தாளர்களை கொண்டாடினார். இதன் வழி, அர்த்தங்களுக்குள் முரண்களை உருவாக்கி, சொற்களை அவற்றின் பொருளில் இருந்து விடுவிப்பதையே பெண் விடுதலை என சிக்ஸூ கண்டார். தெரிதா இதையே ஒரு வாசகர் தன் வாசிப்பின் வழி (அர்த்தங்கள் முரண்பட்டு தமக்குள் மோதி அழியும் வெளியை வாசிப்பில் அடையாளம் காணும்படி)செய்ய வேண்டும் எனக்கோரினார்.

கட்டுடைத்தலும் ஒத்திப் போடுதலும்

கட்டுடைத்தல்என்பது ஒரு அழகான மொழிபெயர்ப்பு. ஆங்கிலத்தில் deconstruction என்பதை reconstruction என மறுகட்டமைப்பாய் தவறாய் புரிந்து கொள்ள வாய்ப்பதிகம். ஆங்கிலம் வழி தெரிதாவை கற்பவர்களை விட தமிழ் வழி அறிபவர்களே இன்னும் துல்லியமாய் தெரிதாவை புரிந்து கொள்ள வாய்ப்பதிகம். கட்டை உடைப்பது அரிதாரத்தை களைவது அல்ல; தொடர்ந்து நம் முகங்கள் அணியும் அரிதாரங்களை அழித்தபடியே இருப்பது; அப்போது அரிதாரமே நமது முகம் எனப் புரிவது; அரிதாரமே முகம் என்றால் நாம் முகமே அற்றவர்கள் அல்லவா எனபுரிந்துகொள்வதே கட்டுடைத்தல்.

அழிப்பதோ அமைப்பதோ கூட அல்ல கட்டுடைத்தல். ஏனென்றால் அழித்தல் என்றவுடன் உருவாக்குதல் எனும் எதிர்மையை நாம் கற்பித்துக் கொள்கிறோம். அழித்தலுக்கும் ஆக்கத்துக்கும் இடைப்பட்ட ஒன்றே கட்டுடைத்தல் - கட்டுகளே முழுக்க இல்லாமல் போகும் அளவுக்கு அனைத்தையும் உடைத்து வெட்டவெளியை காண்பது. பாஷோவின் ஒரு பிரபல ஹைக்கூ உண்டு.

தானியக் களஞ்சியம்

எரிந்து போனது

இனி என்னால் நிலவைப் பார்க்க முடியும்

களஞ்சியத்துக்குள் அவர் இரவு துயில் கொள்ளும் வழக்கம். ஒருநாள் அது முழுக்க எரிய கூரை இல்லாமல் ஆக அவருக்கு வானத்து நிலவு சட்டென புலனாகிறது. இந்த கூரையை எரித்து நிலவைக் காண - வெட்டவெளியை அதன் அழகை தரிசிக்க - தெரிதா கோருகிறார். அதுவே கட்டுடைப்பு.

 இருமைகளற்ற வெளியை கண்டடைவதே, அந்த வெளியை ஒரு களிநடனமாய் காண்பதே கட்டுடைத்தல்.
                                                                                                                     
                                                                                                                    (தொடரும்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...