ஆ) கலைஞரும் எம்.ஜி.ஆரும் ஒரே கட்சிக்குள் செயல்பட்டிருந்தால் அந்த ஒருங்கிணைப்பு நீண்ட காலம் இருந்திருக்காது. இயல்பாகவே கட்சிக்குள் முரண்கள் தோன்றின. கலைஞர் விதித்த கட்டுப்பாடுகள், கலைஞர் மீது எம்.ஜி.ஆர் வைத்த விமர்சனங்கள், இருவருக்குமான முரண் என்பவை அடிப்படையில் அதிகாரப் போட்டி தான். ஒரு கட்சிக்குள் அதிகாரப் போட்டி வலுத்தால் அது கட்சியின் நிலைப்புக்கு பாதகமாகும் என்பது ராஜன்குறையின் பார்வை. ஆனால் அதிகார மோதலே இல்லாத கட்சியில் மாற்றமோ வளர்ச்சியோ சாத்தியப்படாது. அத்தகைய கட்சிகளில் சர்வாதிகாரம் தழைக்கும். குழு அதிகாரமும் அதிகார துஷ்பிரயோகமும் வலுக்கும். எந்த கட்சியும் நியாயமாக இயங்க அதற்குள் ஒரு தலைவருக்கு செக் வைக்க ஒரு எதிர்முனை இருப்பது நல்லது.
ஆரோக்கியமானது. ஒரு வலுவான தலைவர் தேவை தான். ஆனால் அவரது அதிகார வலு என்பது தற்காலிகமாகவே இருக்க வேண்டும். ஒரு நூற்றாண்டாக ஒரு தலைவர், அவரது மகன் என இருவர் மட்டுமே ஒரே அதிகார முனையாக இருப்பது கட்சியை ஒரு தனிச்சொத்தாக, வர்த்தக அமைப்பு போல, புதியவர்கள் புக முடியாத இரும்புக்கோட்டையாக மாற்றும். மற்றொரு பக்கம், இந்த அதிகார ஒருங்கிணைப்பு வாதம் பாஜக இன்று முன்னெடுக்கும் இந்தியா முழுமைக்கும் ஒரே வலுவான தலைவர் எனும் கதையாடலுக்கு வலுசேர்ப்பதாக மாறும். இது ஆபத்தானது.
சுருக்கமாக, வாரிசு அரசியலுக்கு தேர்தலின் போது மக்கள் செக் வைக்க முடியும். ஏற்கத்தகாத வாரிசுகளை அவர்களால் முடக்கி போட முடியும். ஆனால் கட்சிக்குள் “தேர்தல்” இல்லையே! எப்போதும் ஒரு தேசத்தில் ஆட்சி அமைப்பவை ஒன்றோ இரண்டோ பெரும் தேசிய கட்சிகளாக இருக்கும் நிலையில், அவற்றுக்குள் ஜனநாயக பூர்வமாக தலைவரை ஒரு போட்டியின் அடிப்படையில் தேர்வு செய்யும் வாய்ப்பு இல்லையெனில், வெளியே மக்கள் திரளுக்கு கிடைக்கும் விருப்பதேர்வுகள் மிகவும் சுருங்கி விடுகின்றன. உதாரணமாய், நான் காங்கிரசை ஆதரிக்கிறேன், ஆனால் காங்கிரஸ் முன்வைக்கும் தலைவரிடத்து எனக்கு உடன்பாடில்லை என்றால் நான் யாரிடம் முறையிட முடியும்? தலைவரைப் பிடிக்கவில்லை என்றால் நான் காங்கிரசை ஏன் முறியடிக்க வேண்டும்? ஒரு நியாயமான மக்களாட்சி தேர்தல் முறை ஒரு கட்சிக்குள் இருந்தால் இவரே சாத்தியமுள்ள ஒரே சிறந்த தலைவர் என நான் ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஓட்டுப் போட முடியும். ஆனால் தலைவரை தேர்ந்தெடுப்பது அவரது அம்மாவும் அம்மாவுக்கு இணக்கமான அதிகார மையங்களுமே என்றால் அது துவக்கத்திலேயே அநீதியில் முளைத்த பொய்த்தேர்வாகிறது.
அடுத்து, ராஜன்குறை வாரிசு அரசியலுக்கு நம் சமூகத்தின் பல அடுக்குகளில் உள்ள பிரசித்தியை குறிப்பிட சினிமா, கலைத்துறை, வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றை உதாரணம் காட்டுகிறார். இவை பொருத்தமற்ற ஒப்பீடுகள் ஆக உள்ளன. கலை என்பது மக்களை பிரதிநுத்துவப்படுத்தும் தளம் அல்ல. அது சில போக்குகளை பிரநுத்துவப்படுத்தும் தளம் எனலாம்; அங்கு அப்போக்குகளுக்கு குறியீடுகளாக சில மேதைகளும் அவர்களுக்கு மறைமுகமாய் வாரிசுகளும் அமையலாம். இதை கட்சியுடன் ஒப்பிட இயலாது. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வாரிசுமுறையில் அதிகாரம் கைமாறப்படலாம். இதை நாம் ஏன் கேள்வி கேட்பதில்லை என்றால் அது தனிச்சொத்து என்பதாலே. காங்கிரஸோ அதிமுகவோ திமுகவோ தனிச்சொத்து அல்ல.
இதை அடுத்து ஒரு வாரிசு தனது பெற்றோரின் வழிகாட்டுதல் மற்றும் குடும்ப பின்புலம் மூலம் பெறும் திறன் பயிற்சி, ஆதரவு, அனுபவம், தொடர்புகள் ஆகியவற்றை ஒரு முதலீடாக காட்டுகிறார். இத்தகைய முதலீடுகளைக் கொண்டுள்ள ஒரு வாரிசு வென்று ஆட்சியமைப்பது சகஜம் தான் என்கிறார். இந்த புரிதலின் சிக்கல் இது பல முதல் தலைமுறை தலைவர்களை மறுக்கிறது என்பது. ஓரளவுக்கு ஜனநாயகபூரவமான கட்சிகளில், குறிப்பாய் தலைவர் திருமணம் புரியாமல், வாரிசு இல்லாமல் இருக்கும் கட்சிகளில், பல முதல்தலைமுறை தலைவர்கள் உருவாகி வெற்றி புரிகிறார்கள். அவர்கள் தலைவர்களாக முடியாவிட்டாலும் இரண்டாம் நிலையிலாவது இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இது மிக மிக அரிது. இதை ராகுல் காந்தியே ஒப்புக் கொள்கிறார். இதன் பொருள் என்ன? வாரிசு அரசியல் தழைக்கும் ஒரு கட்சியில் முதல் தலைமுறை தலைவர்கள் அமைய சாத்தியம் மிக மிக குறைவு. வாரிசு அரசியல் வாரிசு அல்லாதவர்கள் முளைக்காத தரிசாக கட்சியை மாற்றி விடும். புற்றுநோய்க்குப் பின் ஆரோக்கியமான செல்கள் பிழைக்க முடியாமல் போவது போல. இதை வைத்துக் கொண்டு வாரிசுகள் மட்டுமே கட்சிக்குள் ஒருமித்த ஆதரவு பெற முடியும் என கோர முடியாது.
அடுத்து, திறன், அனுபவம், தொடர்புகள் ஆகியவற்றை அரசியலுக்கு முதலீடாக பார்க்கும் போது நாம் அதை ஒருவித தொழிலாக மாற்றுகிறோம். ராஜன் குறை எதார்த்த்தத்தை மட்டுமே காண விரும்புகிறார் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அவர் என்னைவிட பெரிய லட்சியவாதி என்றும் அறிவேன். எதார்த்தத்தை விடுங்கள், அவரால் நிஜமாகவே இப்படியான நிலைப்பாட்டை ஏற்க முடியுமா என அறிய விரும்புகிறேன். அரசியல் என்பது எம்.பி.ஏ பட்டதாரிகள் போன்றவர்கள் பண்ண வேண்டிய தொழிலா?
ராகுலை மக்கள் ஒரு தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளர் எனச் சொல்லும் ராஜன் குறை அவரது அமேதி தோல்வியை எப்படி புரிந்து கொள்கிறார் என தெரிந்து கொள்ள விரும்புகிறேன். காலங்காலமாய் காங்கிரசின் தனிச்சொத்தாக உள்ள தொகுதி அது. அங்கே தோற்கும் பயத்தில் தான் ராகுல் கேரளாவில் ஒரு தொகுதியில் போட்டியிட்டதாய் சொல்கிறார்கள். ராகுலுக்கு மக்கள் மத்தியில் உள்ள அமோக ஆதரவின் சான்று தான் என்ன? இத்தோல்விக்கு கட்சி நிர்வாகிகளே காரணம் எனச் சொல்கிறார்கள் சிலர். அப்படி எனில் வெற்றி என்றால் மட்டும் நாம் வாரிசை பாராட்ட வேண்டும், தோல்வி என்றால் நிர்வாகிகளை பழிக்க வேண்டுமா?
இறுதியாக ஒரு கேள்வி பாஜகவின் வெற்றியை முன்வைத்து.
பாஜகவில் வாரிசு அரசியலுக்கு இடம் உண்டு என அறிவோம். ஆனால் வாரிசு அரசியலுக்கு மாற்றாக ஒரு அரசியலையும் அக்கட்சி முன்னிறுத்தி பெரும் வெற்றிகளை ஈட்டியுள்ளது. மோடிக்கும் ராகுலுக்கும் இடையிலான மோதலே கடந்த தேர்தலில் வாரிசு அரசியலை வைத்து தான் நடந்தது. தான் ஒரு எளிய பின்னணியில் இருந்து /வந்தவன் எனும் தரப்பை வெற்றிகரமாக முன்வைத்து மோடியால் ராகுலை பின்னுக்கு தள்ள முடிந்தது என பல அரசியல் விமர்சகர்கள் பேசுகிறார்கள். இந்தியாவுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு வாரிசு அல்லாத தலைவர் பிரதமர் ஆக முடியும் என்பது மக்கள் வாரிசுகளை மட்டுமே ஆதரிக்கிறார்கள் எனும் வாதத்திற்கு பலத்த அடி அல்லவா? நான் பாஜகவை எதிர்க்கும் ஒரு எழுத்தாளன் என்ற முறையிலும், இதை வலியுறுத்த விரும்புகிறேன். நாம் பாஜகவை ஏற்காவிட்டாலும், அது வாரிசு அரசியலுக்கு ஒரு மாற்றை கடந்த சில ஆண்டுகளில் தன் தலைமையில் ஏற்படுத்தி வெற்றிபெற்று காட்டியுள்ளது.
பாஜக ஒரு இந்துத்துவ, பாசிச முறையிலான தேசியவாத கட்சி என்பதால் அங்கு வாரிசுகளுக்கு இடம் இருப்பதில்லை என சிலர் வாதிடுகிறார்கள். ஆம் உண்மையே. ஆனால் பாசிசமோ இல்லையோ, இக்கட்சி தேர்தலில் நின்று மக்கள் ஆதரவுடன் தானே வெல்கிறது. நம் தேசிய அரசியல் களத்தில் இதுவும் சாத்தியம் தானே?
கருத்துகள்