மேற்கத்திய, குறிப்பாக ஆங்கில அமெரிக்க இலக்கிய வரலாற்றின், தலைமை “ஜீயரான” ஹெரால்ட் புளூம் (ஜுலை 11, 1930--அக்டோபர் 14, 2019) மரணமடைந்தார் - 89 வது வயதில். யேல் பல்கலைக்கழக பேராசிரியராக நீண்ட காலம் செயலாற்றிய, The Western Cannon, Shakespeare: The Invention of the Human, Poetry and Repression, How to Read and Why ஆகிய பிரசித்தமான நூல்களை எழுதிய புளூம் இலக்கிய விமர்சனத்தில் ஆற்றிய முக்கிய பங்களிப்புகள் என்பன இரண்டு:
1) வாசிக்க எளிமையான இலக்கிய அறிமுகங்களை அவர் நிறைய எழுதி இருக்கிறார். இலக்கிய சாதனைகள், இலக்கிய மேதைகள் போன்ற வரிசையில் நாற்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்கள். அதை விட அதிகமாக பல்வேறு விமர்சன தொகை நூல்கள். இலக்கியத்தை சுலபத்தில் ஜீரணிக்க விரும்பும் பிஞ்சுவயிறு கொண்ட வாசகர்களுக்கு ஏற்றவர் புளூம்.
ஒவ்வொரு நல்ல பிரதியும் சுலபத்தில் விளக்க முடியாத படி பல்வேறு சிக்கல்களும் உள்முடிச்சுகளும் கொண்டது. புளூம் இப்பிரதிகளை எழுத்தாளனின் சொந்த வாழ்க்கையின் அடிப்படையில் விளக்குவார். இதற்காக அவர் எழுத்தாளனின் வாழ்வை எளிமைப்படுத்தப்பட்ட கருத்துக்களாக்கி, அவற்றை பிராயிடிய உளவியலின் அடிப்படையில் சுருக்கி புரிந்து கொண்டு, அவற்றைக் கொண்டு அவரது படைப்பை ரத்தபரிசோதனை முடிவைப் போல (“அட, உங்களுக்கு ஹெச்.ஐ.வி பாஸிட்டிங் சார். சாவுங்க!”) எளிமைப்படுத்துவார். இதன் மீது அவர் தனது முரட்டு ரசனையை திணித்து “ஒழுங்க மரியாதையாக நான் சொல்றதை ஒதுக்கோ, இல்லாட்டி நீ ஒரு மடையன், முட்டாள், ரசனை கெட்டவன்” என வாசகனை மிரட்டுவார். மனதளவில் பலவீனமான வாசகர்கள் உடனடியாக புளூமின் காலில் விழுந்து சரணடைவார்கள். அடுத்து அவர்கள், பயத்திலும் சுயவெறுப்பிலும் உள்சுருண்டு, புளூமின் பார்வையை சிரமேல் ஏற்று, ஆங்கில இலக்கியத்தை கொண்டாடி புளகாங்கிதம் கொள்வார்கள்.
2) தொடர்ந்து ஆங்கில இலக்கியத்தை விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட தனி சாதனைகள் என நிறுவி அதன் வழி ஆங்கில நுண்ணுணர்வே, ஆங்கில படைப்புலகமே, கலாச்சாரமே மேம்பட்டது எனும் ஒரு நவகாலனிய ஆக்கிரமிப்பை உலகின் மீது நிகழ்த்தினார். ஷேக்ஸ்பியரை விட்டால் இந்த உலகில் வேறு பெரும் படைப்பாளியே கிடையாது என திரும்பத் திரும்பக் கூறி வெள்ளையனை விட்டால் இந்த உலகில் மேம்பட்ட மனிதனே இல்லை எனும் சித்திரத்தை அவர் உருவாக்கினார். இலக்கியத்தில் அரசியலுக்கு இடமில்லை எனும் கருத்தின் வழி அவர் மேற்சொன்ன விமர்சனத்தை உதாசீனித்து வேறு விடுவார். யார் தன்னை விமர்சித்தாலும் அவரது பதில் “போடா அபிஷ்டு” என்பதாக இருக்கும் (உருவகமாக சொல்கிறேன், அவருக்கு பிராமணத் தமிழெல்லாம் தெரியாது.)
ஹெரால்ட் புளூமை நீங்கள் தமிழில் இருவருடன் ஒப்பிடுவதானால் ஒருவர் க.நா.சு மற்றவர் ஜெயமோகன். இந்த இருவரில் ஜெயமோகன் புளூமை விட மேலான விமர்சகர் தான் என்றாலும் இலக்கிய பிரதியை எழுத்தாளனின் வாழ்க்கையைக் கொண்டு விளக்கும் பாணியை வலுவாக நம்பினார். உ.தா., ஜெ.மோ மனுஷ்யபுத்திரனின் கவிதை / சமூக நோக்கை அவரது “ஊனமான” உடல் நிலையைக் கொண்டு நிறுவுவதை பல வாசகர்கள் ஒருவித அதிர்ச்சியுடன் எதிர்கொண்டதைப் போன்றே மேற்கில் பலரும் புளூமின் “வாழ்க்கைக்கதை” விமர்சனங்களையும் பீதியுடன் கண்டார்கள்.
க.நா.சுவோ தனது வாசிப்பு நுண்ணுணர்வு மேலானது, அதனாலே தான் சிறந்தது என நம்பும் ஒன்று சந்தேகமின்றியே ஒரு சாதனைப் படைப்பு என நம்பினார். ஆகையால் அவர் தன் அபிப்ராயங்களை நிறுவ முயலவில்லை. மாறாக அப்படியே படைப்பில் இருந்து நீண்ட பத்திகளை மேற்கோள் காட்டி விட்டு நிறுத்திக் கொள்வார் (இன்று பேஸ்புக்கில் நாம் பதிவுகளைப் பகிர்வது போல). இந்த மேதாவி அணுகுமுறையும் புளூமுடையதே. புளூம் கூடுதலாக தன் கருத்தை சொல்லி அதையே கதாபாத்திரமும் உண்மையில் உத்தேசிப்பதாக சொல்வார் என்பது மற்றொரு கொடுமை.
கடந்த 30-40 ஆண்டுகளில் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் புளூமை ஒரு ஆளுமையாகவே இதனாலே பொருட்படுத்தாமல் இருந்தனர். புளூமும் தன் பாட்டுக்கு “நானும் இந்த கோட்பாட்டுவாதிகளை பொருட்படுத்தவில்லை. சமூக கோபம் என்பது ஒருநாளும் விமர்சனம் ஆகாது” என தீர்ப்பெழுதினார். (பின்னமைப்பியல், கட்டுடைப்பு, பெண்ணியம், பின்னமைப்பியல் பெண்ணியம், மார்க்ஸியம் ஆகியவற்றை அவர் எப்படி வெறும் அரசியல் கோபம் என வகுத்துக் கொண்டார் என்பது ஒருவித விசித்திரமே.)
இதன் பொருள் புளூம் ஒரு நுண்ணுணர்வோ வாசிப்பு ஞானமோ அற்றவர் என்பதல்ல. அவர் மிக நுணுக்கமான புத்திசாலியான வாசகர் என்பதை அவரது விமர்சனங்களைப் படிக்கும் எவரும் உணர முடியும். ஆனால் இலக்கியத்தை ஒரு தனி விழுமியமாக கண்டு விமர்சனத்தை ஒழுக்கவியலாக அவர் முன்னெடுத்தார் என்பதே அவரது பிரதான பிரச்சனை. புத்தகங்களை அவர் கையில் சாட்டையுடன் தான் எடுப்பார். “ம்ஹும் இது சரியில்லை” என்று தூக்கி எறிந்து விட்டு அந்த எழுத்தாளனை முதுகில் ஒருமுறை சாட்டையால் விளாசுவார். அல்லது பூமாலை இட்டு பாராட்டுவார்.

கருத்துகள்