முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தனியார் பள்ளிகள் எனும் மால்கள் (4)

5) இது மிக முக்கியமானது: கல்வி வாழ்க்கைக்கு வெளியே வைத்துப் பார்ப்பதே நவீன பள்ளிகளின் பிரச்சனையாக இருக்கிறது. நீங்கள் கல்வியை அதன் நேரடியாக இலக்கு மற்றும் பலன்களின் அடிப்படையில் காணும் போது கல்வி என்பது வாழ்க்கையில் இருந்து விலகி ஒரு பண்டமாக (மொபைல் போன், பிரியாணி, ஆணுறை போல) ஆகி விடுகிறது. நீங்கள் போகும் வழியில் ஒரு பூவை எடுத்து நுகரும் போதும் ஒரு கெட்ட வாடையை நுகர்ந்து முகம் சுளிக்கும் போது அதன் பலாபலன்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அது ஒரு ontological அனுபவம் ஆகிறது. ஆனால் இதையே ஒரு வகுப்பில் செய்யும் போது இந்த அனுபவம் நமக்கு தருவதென்ன, இதை எப்படி பகுத்துக் கொள்வது என யோசிக்கிறோம். அடுத்த கட்டமாக நாம் கண்டுணர்ந்து பலனளிப்பது என கருதும் ஒன்றை மட்டுமே பிரதானப்படுத்துகிறோம்; அதை ஒரு பொருளாக மாற்றி நம் சட்டை ஜேப்பில் வைத்து நமக்கானதாக மாற்றலாம் என நம்புகிறோம்

நாம் ஆசிரியர்கள் பாசி படர்ந்த ஒரு குட்டைக்கு பிள்ளைகளை கூட்டிச் சென்று, அந்த அரைமணிக்குள் ஒரு கரண்டி நீரை மொண்டு வந்து, ஒரு குறிப்பிட்ட நோக்கத்தின் அடிப்படையில் மட்டுமே அதை ஆராய வேண்டும் அல்லது ஒரு கருத்தை வலுப்படுத்த அதை உதாரணமாக்க வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் ஒரு குட்டையில் உள்ள நீரை ஒரு குழந்தை தொட்டுப் பார்க்க, அதை நுகர, அதன் நிறத்தைக் குறித்து சிந்திக்க, தன் கோணத்தில் அதை அணுக, தனக்கு ஏற்படுகிற கேள்விகளை அதைக் குறித்து எழுப்ப விரும்பலாம். ஒரு குழந்தை அதன் வரலாற்றை அணுகலாம், மற்றொன்று ஒளி அதில் பட்டு எப்படி உருமாறுகிறது என யோசிக்கலாம், மற்றொன்று அதை அனுபவித்து விட்டு யோசனையை எட்ட வைக்க விரும்பலாம், மற்றொரு குழந்தை அதைப் பற்றி ஒரு கதையை அறிய, சொல்ல விரும்பலாம். சில குழந்தைகள் அந்த நீரில் விளையாட எத்தனிக்கலாம். நல்ல கல்வி முறை இவை அத்தனையையும் (பகுத்தறிவுடன்) அணுக ஊக்குவிக்கும். இதை ஒரு தகவலாக சுருக்கி வசதியாக ஒரு காகிதத்தில் கடத்தி தப்பிச் செல்ல தூண்டாது. அப்படி தப்பிச் செல்வது ஒரு எதிர்-வாழ்க்கை கார்ப்பரேட் மனப்பான்மை

நாம் கற்கிற ஒவ்வொன்றும் நம்மை ஆழமாக பாதிக்கவும், வாழ்க்கையின் பல சிக்கல்களை, குழப்பங்களை நமக்கு எடுத்தியம்பவும் வேண்டும். உதாரணமாக புவியீர்ப்பு பற்றின பாடத்தில் அறிவியல் கோட்பாட்டை தாண்டி அதைக் குறித்து சிந்திக்கவும் பிள்ளைகளை ஊக்குவிக்க வேண்டும்.
ஒரு நல்ல கல்வி முறையில் ஒரு கருத்தை கேட்டோ படித்தோ அல்லது அனுபவத்தில் பரிசீலித்தோ அறிய சுதந்திரம் இருக்கும் (மூன்றாவதே அதிகம் முன்னிறுத்தப்படும்). கற்றதை தேர்வின் போது எழுதி நிரூபிக்க வற்புறுத்தப்பட மாட்டார்கள். ஒரு குறிப்பிட்ட விதத்தில் எழுதும் திறன் இயல்பிலேயே இல்லாத  மாற்றுத்திறனாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை நாம் நமது எந்திரமயமான ஒற்றைப் பண்பு கல்வி அமைப்பில் வைத்து வதைக்கிறோம். அவர்களை சிதைத்து வெளியே அனுப்புகிறோம். கல்வியை படைப்பூக்கத்துடன் வாழ்க்கையின் பகுதியாக பார்க்கும் முறையில் இத்தகைய வன்முறை இராது.

கல்வியை வாழ்க்கைக்கு வெளியே வைத்து தனியே உடைத்து வைத்து பார்ப்பதே ஒரு தத்துவப் பிரச்சனை என உணர்ந்தே இதை சொல்கிறேன். நாம் இதை பரிசீலிக்காவிடில் கடும் மனப்பிரச்சனைகளைக் கொண்ட ஒரு எதிர்காலத் தலைமுறையை உருவாக்கி விடுவோம்

6) இறுதியாக நூற்றுக்கணக்கானோரை ஒரே சமயம் கராத்தே / யோகா / தியானம் பழகுவது, ஒரே பாட்டை பாட வைப்பது ஒரு அபத்தமான ராணுவ பாணி பயிற்சி. இதை நவீன கல்வியாளர்கள் கைவிட வேண்டும்.
 இது அடிப்படையில் ஒரு ஷாப்பிங் மால் அமைப்பு - நீங்கள் ஒரு மாலுக்குள் நுழையும் போதே ஒன்று வாடிக்கையாளராகி விடுகிறீர்கள் அல்லது எதிர்கால ஷாப்பிங்காக திட்டமிடும் (விண்டோ ஷாப்பிங்) பார்த்து நுகரும் வாடிக்கையாளர் ஆகிறீர்கள். அங்கே உங்களுக்கு சுதந்திரம் இருப்பது போல ஒரு பாவனை மட்டும் இருக்கும். நமது பள்ளிகளிலும் இதுவே நிகழ்கிறது. நீங்கள் உங்களுக்குஅளிக்கப்பட்டுள்ளபாடத்திட்டத்துக்குள் படித்து அதை உங்கள் திறனடிப்படையில் (மாலில் இது பணமாகிறது) தேர்வின் போது வெளிப்படுத்துகிறீர்கள் (மாலில் இது பொருளை வாங்க பணம் கொடுப்பது); இறுதியில் உங்களுக்கு மதிப்பெண்ணும் சான்றிதழும் அளிக்கிறார்கள் (மாலில் உங்களுக்கு பில்லை அளிக்கிறார்கள்). உங்களுக்கு இதில் எங்குமேவேண்டாம், இல்லை, நான் இதனுள் இருக்க விரும்பவில்லைஎன சொல்ல வாய்ப்பு இல்லை. ஏனென்றால் மாலுக்குள் நுழைந்த அடுத்த நொடியில் இருந்தே நீங்கள் ஒரு ஒப்பந்தத்துக்குள் இருக்கிறீர்கள்.
நான் ஒரு தனியார் பள்ளி மாணவரிடம் அவருக்கு பிடித்த பாடம் என்னவெனக் கேட்டேன். “இயல்பியல்என்றார். அடுத்து இயல்பியல் ஆய்வுகள் செய்ய விருப்பம் என்றார். எதிர்காலத்தில் தன் விருப்பப்படி ஆய்வுகள் செய்யவிருப்பதாக சொன்னார். நான் அவர் ஏன் அதை இப்போதே செய்யக் கூடாது என்றேன். தனக்கு அதற்கான தகுதியோ பயிற்சியோ இல்லை என்றார். ஏன் ஆய்வு மூலமாகவே அத்தகைய தகுதியை ஒருவர் அடையக் கூடாது, அத்தகையோர் எந்த மதிப்பெண் முறையும் இன்றி (அதனால் ஏற்படும் உளவியல் வதைகள் இன்றி) சுய அறிதல், சுய வளர்ச்சியின் அடிப்படையில் அதை செய்யக் கூடாது என நான் எனக்கே பின்னர் கேட்டுக் கொண்டேன்
இது ஏன் முடிவதில்லை என்றால் நாம் அனைத்து மாணவர்களுக்கு பொதுவாக ஒரே கல்வி முறைமை, ஒரே பாடத்திட்டம், ஒரே பாடங்கள், (இந்த கொடுமைகளுக்கு முத்தாய்ப்பாக) ஒரே தேர்வு முறைமையை வைத்திருக்கிறோம். இது மாணவர்களில் சுயசிந்தனை கொண்டோரை காயடிக்கிறது. சிந்தனையாளர்கள் எதிர்காலத்தில் தோன்ற விடாமல் தடுக்கிறது. உடனடி இலக்குகளை தினம் தினம் வழங்கி (அன்றன்றைக்கான வீட்டுப்பாடங்கள், அன்றன்றைக்கான வேலைகள்) தம் அகவிழைவின் படி அறிவைத் தேட விடாமல் பண்ணுகிறது.

என்னுடன் ஹைடெக்கர் குறித்த நூலை எழுதிய ஆயுஷ் ஒரு இயல்பியல் மாணவர். அவருக்கு தத்துவத்தை அணுகுவதில் ஒரு அறிவியல் பயிற்சி தரும் முறைமையும் கூர்மையும் உண்டு. ஆனால் அவர் அறிவியல் எழுப்ப வேண்டிய கேள்விகளை தத்துவத்தில் தேடுகிறவர். நான் ஒரு ஆங்கில வகுப்பில் தத்துவம் குறித்து பேச அவர் எனக்கு அணுக்கமானார். என்னிடம் வந்து நிறைய கேள்விகளை எழுப்புகிறவர் ஆனார். அதன் பிறகு நாங்கள் இணைந்து தத்துவம் வாசிக்கவும் விவாதிக்கவும் தொடங்கினோம். சமீபத்தில் நாங்கள் நாஜார்ஜுனரின் மூலமத்யாமிகா காரிகை நூலை வாசிக்கையில் காலம் என்பது எப்படி சூன்யமாக இருக்கிறது எனப் பேசினோம். நான் ஆயுஷிடம் கேட்டேன்: “இதைப் பற்றி இயல்பியல் என்ன சொல்கிறது? காலம் சாரம் கொண்டதா என இயல்பியல் கேட்கிறதா?” ஆயுஷ் சொன்ன பதில் சுவாரஸ்யமானது - காலம் ஒரு கட்டமைப்பு என இயல்பியல் பேசுவதற்கான முகாந்திரத்தை ஏற்படுத்துகிறது; ஆனால் அந்த திசையில் அது தன்னை செலுத்துவதில்லை. காலம் எப்படி தோன்றுகிறது எனப் பேசும் இயல்பியல் அந்த காலத்துக்குள் நம் இருப்பு எப்படி இருக்கிறது என யோசிப்பதில்லை. அதன் சாரமின்மை பற்றி அறிவியல் பேசுவது விவாதத்தை பல மடங்கு அகலமாக்கி சிக்கலாக்கும்; புது சிந்தனைகளை கிளர்த்தும். ஆனால் இது இயல்பியலின் தத்துவம் குறித்தது என்பதால் ஒரு இயல்பியல் பாடத்திட்டத்தில் இதற்கு இடமிருக்காது. எந்த மாணவரும் இக்கேள்விகளை ஒரு வகுப்பறையில் எழுப்ப முடியாது. இதைப் பற்றி கூடுதமாக சிந்தித்து ஒரு ஆய்வுக்கட்டுரையை எழுதவோ புது கேள்விகளை எழுப்பவோ முடியாது. தன் ஆர்வத்துக்கு எதிர்திசையில் செல்லும் விசயங்களை மனனம் செய்து தேர்வில் பிரதியெடுத்தால் அவருக்கு பட்டம் அளிப்பார்கள். இல்லாவிடில் அவர்தோற்றுவிடுவார்.

இப்படி நம் கல்வி அமைப்பு அடிப்படையிலே பிழையானது. கல்வியை ஒரு வணிக செயல்பாடாக பார்ப்பது அதன் முதல் கோளாறு; கல்வி மூலம் உடனடியாக தொட்டு உணர முடிகிற பலனை பெற முடிய வேண்டும் (கராத்தே பயின்று உடல் திறனை, தற்காப்புத் திறனை மேம்படுத்துவதாக நம்புவது, வயலின் பயில்வதனால் மூளைக்கும் உடம்புக்குமான ஒருங்கிணைப்பு அதிகமாகும் என எதிர்பார்த்து அதை செய்வது) என எதிர்பார்ப்பது எனும் அபத்தம் இதனால் விளைகிறது. இதன் அடுத்த கட்டமாக அனைத்து பிள்ளைகளையும் ஒரே தேவை, நோக்கம் கொண்ட உயிர்களாக பாவித்து அவர்களை ஒற்றைத்தன்மை கொண்டவர்களாக மாற்றி அவர்களின் இயல்பான அறிவையும் திறமைகளையும் நாசம் பண்ணுகிறது
  

முதலில் நாம் இந்த கார்ப்பரேட் மாயையில் இருந்து விடுபட வேண்டும். அடுத்து கல்வியையும் விடுவிக்க வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...