இப்போது நான் “அசுரனுக்கு” வருகிறேன்.
அசுரனின் படமாக்கலில் நிறைய பேர் கவனிக்காத விசயம் பின்னணி இசை மற்றும் மேல் மற்றும் அகன்ற கோண காட்சிகள் மூலம் ஒரு ஸ்பேகட்டி வெஸ்டெர்ன் ஸ்டைல் ஆக்ஷன் படத்தை வெற்றிமாறன் முயன்றிருக்கிறார் என்பது. இந்த வகைமையை தமிழில் சீரியஸாக காட்சிமொழியில் கொண்டு வந்தவர் வெற்றிமாறன் தான் (வேறுபலர் எடுத்த கௌபாய் படங்களை நான் பொருட்படுத்தவில்லை). The Good, the Bad and the Ugly உள்ளிட்ட வெஸ்டெர்ன் படங்களைப் போன்றே இதிலும் எப்போது என்ன நடக்குமோ எனும் தோரணையை ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக பயன்படுத்துகிறார். நிறைய wide angle slow motion காட்சிகள், அச்சுறுத்தலான இசை, செம்மண் புழுதி பறக்கும் காடுமேடான இடங்களுக்கு நடுவிலான பள்ளத்தாக்கு போன்ற நிலப்பரப்புகள் வருகின்றன - ஒரே வித்தியாசம் வெஸ்டெர்னில் கொல்லும் நோக்கில் நாயகன் புறப்படுவான்; அவனது பயணம், சாகச நிகழ்வுகளின் நோக்கம் பழிவாங்குவதாக இருக்கும். இப்படத்திலோ பழிவாங்கலுக்குப் பிறகே கதை ஆரம்பிக்கிறது.
இதில் வெற்றிமாறனின் மேதைமை என்பேன். அவர் “வெக்கை” நாவலின் கதையாக்கம் வெஸ்டெர்ன் படங்களில் இருந்து எடுக்கப்பட்டதே என உணர்ந்து கொண்டு, அதை அப்படியே தன் திரைமொழியில் கொண்டு வந்திருக்கிறார் - இதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். வெற்றிமாறன் நிஜமாகவே மிகக்கூர்மையான வாசகர் தான். ஒரு சாதாரண வாசகர் இந்த நுட்பத்தை கவனிக்க தவறி இருப்பார்.
ஒரு திரைக்கதையாசிரியர் “வெக்கை” நாவலை வைத்து இரண்டு விசயங்களைப் பண்ணலாம்.
1) பூமணி பேச விழையும் வெக்கை எனும் வேட்கையை பூடகமாக கவித்துவமாக சித்தரிக்கலாம். அதற்கு ஏற்ப கதையை அமைக்கலாம். அதாவது (நாவலில் வருவதைப் போல) முதல் காட்சியில் மட்டும் ஒரே கொலையை அரசல்புரசலாக காட்டி விட்டு ஆக்ஷன் இல்லாமலே வன்முறையைப் பற்றி பேசலாம். பத்மராஜன் தனது “தாழ்வாரம்” எனும் ஸ்பேகெட்டி வெஸ்டர்ன் பாணி மலையாளப் படத்தில் இதை பண்ணியிருப்பார். “வெக்கையைப்” போன்றே வன்முறையின் வெப்பத்தை, பதற்றத்தை, அதன் ருசியை, இரு ஆண் நண்பர்கள் இடையிலான கசந்து போன நட்பை வைத்து பேசியிருப்பார் பத்மராஜன்.
2) இந்த வெக்கை புறவெக்கையாக, ஆக்ஷன் கதையாக மாற்றலாம்.
வெற்றிமாறன் இரண்டாவதை தேர்வு பண்ணியிருக்கிறார். அவர் ஒரு அடித்தட்டு நாயகனின் ஹீரோயிச கதை என முடிவு செய்ததுடன் கதையில் பல மாற்றங்களை பண்ணுகிறார். சுமார் 70% நாவலில் இருந்து திரைக்கதையை மாற்றியிருக்கிறார். இதில் தவறில்லை, இதுவே புத்திசாலித்தனம் என்பேன். ஒரு நாவலை கதையாக்கும் போது அதை துல்லியமாக திரையில் பகர்த்துவது அல்ல சினிமா - அதன் ஒரு சின்ன சரடை எடுத்து தன் நோக்கில் திரைக்கதையாக்குவதே திறன். விபூதிபூஷனின் “பதேர் பாஞ்சாலியை” சத்யஜித் ரேயின் படத்துடன் ஒப்பிட்டால் இது விளங்கும். பாலு மகேந்திரா தன்னை பாதித்த ஹாலிவுட் படங்களை தமிழில் வெற்றிப்படங்களாக்கும் போதும், இலக்கிய கதைகளை குறும்படங்களாக்கும் போதும் இதையே பண்ணினார். வெற்றிமாறனின் படம் ரேயின் படமளவுக்கு காட்சிபூர்வமாக இல்லை என்றாலும் அவர் புத்திசாலித்தனமாக இதை கையாண்டிருக்கிறார் என்கிற வகையில் பாராட்டலாம். அதாவது கொல்ல வேண்டும் என்கிற வேட்கை - அது மகனுக்குள், தாய் தந்தைக்குள் கனலாக எரிகிறது. வெற்றிமாறன் கூடுதலாக அது வில்லன், மற்றும் வில்லனின் ஆட்களுக்குள்ளும் எரிவதை காட்டுகிறார். இந்த வேட்கையை தூலமாக புறவயமான ஆக்ஷன் கதையாக்குவது என முடிவெடுக்கிறார். அதற்காக பல சமசரங்களை பண்ணுகிறார். இதுவே “அசுரனின்” நிறையும் குறையும்.
நாவலில் சிதம்பரத்தின் வன்மமே பிரதானம். அவன் கண்வழியே உலகம் சித்தரிக்கப்படுகிறது - அண்ணனின் மீதான அவனது அபிமானம், அப்பா மீதான அதிருப்தியும் அவரை அறிய அறிய அவனுக்குள் தோன்றும் வியப்பும், வடக்கூரான் மீதான ஆட்கொள்ளலும் அருவருப்புணர்வும் என. ஆனால் தனுஷ் அப்பா பாத்திரத்தை ஏற்கிறார் என முடிவானபின் வெற்றிமாறன் சிவசாமியின் கதையாக இதை மாற்றுகிறார். நாவலில் சிவசாமியின் பலவீனமும் மகனிடம் அவர் கொள்ளும் பொறாமையும் சுவாரஸ்யமான இடங்கள். மகன் எப்படி வில்லனை அழித்து மேலே வருகிறானோ அதே இடத்தில் தான் அவன் தன் அப்பாவின் உச்சியில் காலை வைத்து மேலே ஏறுகிறான் (அந்த சிற்பியின் மகனைப் போல). மகன் தன்னை மீறிப் போகிறான் என்பதை ஒரு பக்கம் சிவசாமி கசப்புடன் ஜீரணிக்கிறார், இன்னொரு பக்கம் அபிமானத்துடன் ஏற்கிறார். படத்தில் சிவசாமி தன் மனைவி முன்பு அடையும் தாழ்வுணர்வு, குடித்து விட்டு வாந்தியெடுக்கும் அவரது இழுக்கு, மேல்சாதி ஊரார் காலில் விழுந்து பணியும் அவரது சுரணைகெட்டத்தனம் என இந்த தாழ்வுணர்வு சித்தரிக்கப்பட்டாலும் அவ்வப்போது தன் மகனை அறைந்தும் மட்டம் தட்டியும் அவர் தன் ஹீரோயிசத்தை நிறுத்துகிறார். படம் தொடங்கி அரைமணிக்குப் பிறகு முழுக்க முழுக்க தனுஷ் தான் ஆதிக்கம் செலுத்துகிறார். அவர் வில்லன்களை அடித்து துவம்சம் பண்ணி மகனை காப்பாற்றுகிறார். முதலில் ஆவேசமாக வெட்டி குண்டு வீசிச் செல்லும் மகன் சிதம்பரம் மிச்ச படமெல்லாம் அப்பா போடும் சண்டைகளை ஏதோ தவழும் குழந்தையைப் போன்றே மிரள மிரள பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுவே நாவலில் இருந்து “அசுரன்” முழுக்க வேறுபட்டு எடுக்கும் பாதை.
அதாவது வன்முறை விருப்பத்தை நேரடியான ஒன்றாக வெற்றிமாறன் மாற்றி இருக்கிறார் - அதற்காக (பூமணியிடம் இருந்து வேறுபட்டு) இதை முழுக்க நிலத்துக்காக நடக்கும் ஒரு குடும்ப சண்டையாக மாற்றுகிறார்; பஞ்சமி நில மீட்பு போராட்டம், அதில் இடதுசாரிகளின் பங்கு என பல விசயங்களை கொண்டு வருகிறார். சிவசாமியின் மூத்தமகன் முருகன் வடக்கூரானின் மகனை முதலிலும் வடக்கூரானை பின்னரும் அடிப்பது, சிவசாமியின் மனைவி இவர்களை தாக்க பாய்வது, சிவசாமியை ஊரார் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க பஞ்சாயத்து தீர்ப்பு கொடுப்பது என புதிய காட்சிகளை இணைக்கிறார். அது மட்டுமல்ல, முருகனைக் கொல்லும் காட்சியை சிதம்பரம் நாவலில் பார்ப்பதில்லை. (வன்முறையை முகமற்றதாக காட்ட பூமணிக்கு இது அவசியம்). ஆனால் நாவலில் இது வருவதுடன், முருகனின் தலையைத் துண்டித்து ரொம்ப கொடூரமாக சிதைத்து வீசியிருப்பது, அவன் பிணத்தை நாய்கள் தின்ன வருவது, அவற்றை அவனது சிவசாமி கல்லை எறிந்து விரட்டுவது என மிக அதிர்ச்சியான வகையில் காட்சிப்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன் (இந்த இடங்கள் ஜெயமோகன் எழுதியதைப் போல உள்ளது.) இது வில்லனைக் கொல்வதற்கான நியாயங்களை உருவாக்குகிறது - பார்வையாளர்களுக்கு இடத்து வடக்கூரான் மீது ஒரு கோபவெறி கிளம்புகிறது (இந்த இடங்கள் எனக்கு “பிதாமகனில்” சூர்யா கொல்லப்பட்டு அவனது உடல் ஒரு மூட்டையில் வைத்து வீசப்பட அதை திறந்து விக்ரம் பார்ப்பதை நினைவுபடுத்தின.) இதன் பிறகு தலைமறைவில் இருக்கும் சிதம்பரத்தையும் சிவசாமியையும் கொல்வதற்காக வடக்கூரானின் மகன் வாடகைக்கொலையாளிகளை ஏவுகிறார். இவர்களை சிவசாமி முறியடிக்கிறார். தொடர்ந்து வடக்கூரானின் ஆட்கள் இருவரையும் துரத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
ஆனால் பூமணியின் நாவலில் இப்படி வடக்கூரான் கொல்லப்பட வேண்டியவனாக தெளிவாக சித்தரிக்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க அவன் சிதம்பரத்தின் நினைவுகளில் மூட்டமாக தோன்றுகிறான். கொலைக்குப் பிறகு வடக்கூரானின் ஆட்கள் தேடி வரக்கூடும் எனும் அச்சம் நிலவுகிறது; அப்பாவின் மகனும் முன்னெச்சரிக்கையாக இருக்கிறார்கள். ஆனால் வடக்கூரானின் ஆட்கள் அப்படி தேடி வருவதே இல்லை. வன்மமும் பழிவாங்கப்படும் பயமும் முழுக்க சிதம்பரத்தின் மனதுக்குள் அலைகளாக தோன்றித் தோன்றி அழிகின்றனவே ஒழிய நிஜத்தில் வருவதில்லை. இப்படி கறுப்பு வெள்ளையாக வில்லனையும் ஹீரோவையும் மாற்றுவதிலேயே “அசுரன்” ஒரு அசல் வணிகப்படம் ஆகிறது. பூமணி இதை செய்வதில்லை.
வெற்றிமாறன் அடுத்து செய்கிற சில விசயங்கள் சுவாரஸ்யமானவை. அவர் இந்த கதையை அப்படியே காட்பாதர் கதைக்களத்தின் அருகே நகர்த்துகிறார். விட்டோ காரலியானோ போன்றே தனுஷுக்கு ஒரு பின்கதையையும் அமைக்கிறார். இதில் சிவசாமி ஒழுக்குமுறைக்கு எதிராக, தன் குடும்பத்துக்காக கொலை செய்கிறார் (“காட்பாதரில்” காரலியானோ தன் வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒரு உள்ளூர் ரௌடியையும் இளமையில் தன் பெற்றோரை அழித்த இப்போது வயதான ஒரு பெரிய டானையும் மறக்காமல் கொல்கிறார்.) இன்னொரு பக்கம் சுவசாமியும் சிதம்பரமும் ஒரே சமயம் மைக்கேல் காரலியானோ போல மாறுகிறார்கள் - பார்க்க அப்பிராணியாக, அடிவாங்கிகிறவர் போல தோன்றினாலும் திடீரென புயலாக மாறி கற்பனை பண்ண முடியாத வன்முறையை நிகழ்த்துகிறார்கள். காட்பாதரின் தாக்கம் இந்தியாவின் கணிசமான ஆக்ஷன் படங்களில் உண்டு, குறிப்பாக தமிழில். வெற்றிமாறன் தனது முதல் படமான “பொல்லாதவனில்” (ஒரு சாமான்யன் சட்டென ரௌடி ஒருவனை அடித்து சாய்ப்பது) காட்பாதரின் மைக்கேலின் பாத்திரத்தை நாயகனாகவும் வில்லனாகவும் இருவிதமாய் மாற்றி எழுதி ஒரு சுவாரஸ்யமான படமாக்கினார். அதன் பிறகு அவர் எடுத்த பல படங்களில் காட்பாதரின் நிழல் தெரியும் (தேவர் மகன், நாயகன், ரன், பாஷா என பல படங்களில் இதற்கு முன்னரே காட்பாதரின் தாக்கம் இருந்தது).
திரையரங்கில் பார்வையாளர்களின் எதிர்வினையை கவனித்தீர்கள் என்றால் அவர்கள் அதிகமாக கைதட்டி ஆர்ப்பரிப்பது தனுஷ் தொடர்ந்து அடிவாங்கி திடீரென ஆக்ரோஷமாக திரும்ப அடிக்கும் இடங்களே - இது “பாட்ஷாவில்” ரஜினி கட்டி வைக்கப்பட்டு அடிக்கப்பட்ட பின் அவர் திருப்பி ஆனந்த் ராஜை அடிக்கும் அதே காட்சி தானே; அப்பா சிவசாமியின் உண்மையான வீரம் செறிந்த கதையை அறிந்து மகன் சிதம்பரம் திகைத்துப் போகும் இடமும் “பாட்ஷாவில்” இன்ஸ்பெக்டர் தம்பி தன் அண்ணனைப் பற்றி அறிந்து விக்கித்துப் போகும் அதே இடம் தானே. இப்படியே இப்படத்தை அடிக்கு அடி நீங்கள் “பாட்ஷாவுடன்” ஒப்பிட்டு ஒற்றுமையை கவனிக்கலாம் (கடைசியில் எவ்வளவோ அடிவாங்கி நக்மாவையும் குடும்பத்தினரையும் ரஜினி காப்பாற்றுகிறார், தனுஷ் தன் மகனை மட்டும் காப்பாற்றுகிறார்).
ஒரு இலக்கிய நாவலை வணிக படமாக உருமாற்றுவது எப்படி என்பதற்கான ஒரு நல்ல பாடம் “அசுரன்” என்பேன். திரைக்கதை எழுத கற்றுக்கொள்கிறவர் பூமணியின் நாவலையும் “அசுரனையும்” ஒப்பிட்டுப் பார்த்து திரைமொழியைப் பற்றி நிறைய கற்றுக் கொள்ளலாம். (மற்றபடி, ஒரு வணிகப்படத்தை கலைப்படமாக கருதி விமர்சித்து நீதிபரிபாலனம் செய்வதில் அர்த்தமில்லை; அதில் இலக்கிய நாவலின் தோரணையை, தீவிரத்தை, சிக்கல்களை கோருவது அபத்தம் என்பேன்.)
வெற்றிமாறன் தன் இலக்கை எட்டி இருக்கிறார். அது எப்படி என அறிவதே முக்கியம்! இதே பாணியில் சென்றால் நீங்கள் அசோகமித்திரனின் “மறைந்த நிழல்கள்”, ஜெயமோகனின் “ரப்பர்”, லட்சுமி சரவணகுமாரின் “உப்புநாய்கள்”, சுஜாதாவின் “காந்தளூர் வசந்தகுமாரன் கதை” போன்றவற்றைக் கூட ஒரு சுவாரஸ்யான சினிமாவாக்கலாம். அந்நாவல்களில் தமிழ் சினிமாவுக்கான அம்சம் எது, காட்சிபூர்வமாக பட்டையை கிளப்புகிற காட்சிகள் எவை என கணித்து அதைக் கொண்டு திரைக்கதையை அமைக்க வேண்டும். இதை செய்வதற்கு இப்படம் ஒரு இலக்கணம் அமைத்துள்ளதாக சொல்வேன். அவ்விதத்தில் தமிழின் வணிக வெற்றிப் பட வரிசையில் “அசுரன்” ஒரு முத்திரைப் படைப்பு.

கருத்துகள்