முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்பாஸில் வரும் வாயரிச (voyeuristic) காதலும் சமூக மனமும்


குழப்பத்துக்கும் நவீன அதிகாரத்துக்கும் ஒரு மறைமுக தொடர்பு இருக்கிறது. “எல்லாம் மக்கள் முடிவுஎன சொல்லியபடியே அதற்கு எதிராக முடிவுகளை அறிவிப்பது பிக்பாஸுக்கு வாடிக்கை - இம்முறையும் (91வது நாள் அன்று) சேரனுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் பிரசித்தத்தை, மதிப்பை காட்டி விட்டு, இன்னொரு பக்கம் கவினை யாருக்குமே (வீட்டுக்குள்ளோ பார்வையாளர் தரப்பிலோ) பிடிக்கவில்லை எனக் காட்டி விட்டு, ஒரு திருப்புமுனையாக பிக்பாஸ் கவினை காப்பாற்றி (அதனாலேயே லாஸ்லியாவையும் காப்பாற்றி), சேரனை வெளியேற்றினார். இதன் லாஜிக் என்ன என யாருக்குமே தெளிவாக புரியாது. மேடை ஏறினதும் சேரன் கமலிடம் பேசும் போது தனக்குப் பதில் காப்பாற்றப்பட்ட கவினின் சிறப்பு என்னவாக இருக்க முடியும் என முட்டுக்கொடுத்தாலும், கவின் எனும் மர்மம் விலகவில்லை. அதிகாரமிக்க எல்லா நவீன நிர்வாகங்களும் இப்படித் தான் செயல்படுகின்றன. அவை மர்மங்களை ஆயுதமாக்கி மக்களை ஆளுகின்றன.

ஆனால் இது இவ்வளவு தெளிவாகவும் இல்லை எனலாம் - பிக்பாஸ் கவினை ஆதரிக்கிறார் என்றால் ஏன் இவ்வளவு நாட்களாய் அவரைப் பற்றி ஒரு எதிர்மறை பிம்பத்தை உருவாக்க வேண்டும்? ஏன் அவரது நண்பரை உள்ளே கொணர்ந்து அவர் கையால் அடிவாங்க வைக்க வேண்டும்? ஏன் காதலிப்பதை குறைத்துகேமில்கவனம் செலுத்த வைக்க வேண்டும் என திரும்பத் திரும்ப கவின்-லாஸ்லியா ஜோடியிடம் வலியுறுத்த வேண்டும்? விளையாட்டு என்றால் டாஸ்கா? ஆனால் இதுவரை டாஸ்கில் ஜெயித்து யாரும் பிக்பாஸில் நீடித்தது இல்லையே! அப்படியே இருந்தாலும் ஏன் இப்போது காதல் விளையாட்டை மட்டும் ஆடின கவினை பிக்பாஸ் காப்பாற்ற வேண்டும்? இது முரணில்லையா?


நான் மேலே குறிப்பிட்ட மர்மம் என்பது இந்த முரணால் தோன்றுவதே - கவின் மீதான தாக்குதல், கவின் பற்றின எதிர்மறை பிம்பம் எல்லாம் மக்களுக்கு இந்த விளையாட்டில் ஒரு பங்குள்ளதாய் தோற்றம் ஏற்படுத்த செய்தது. இவர்களின் உறவு மக்களுக்கு பிடிக்கவில்லை, இவர்களிடம் ஒரு போலித்தனம் உள்ளது என மக்கள் நினைக்கிறார்கள் என பிக்பாஸ் நிர்வாகம் கருதியிருக்கலாம். (கவின் நேர்மையானவர் இல்லை, அவர் பெண்களை பயன்படுத்துபவர் என ஒரு பிம்பம் ஏற்கனவே இருப்பதால் இப்படி இருக்கலாம்.) பிக்பாஸ் மக்களின் தரப்பையும் தான் பிரதிபலிப்பதாக காட்டி, ஒரு குழப்பத்தை உண்டு பண்ணினார். இப்போது கவினை காப்பாற்றி (அதற்கு போலி நியாயம் ஒன்றையும் வழங்கி) மக்களை விட பெரியகுருநாதர்தான் என காட்டியிருக்கிறார். ஆனால் வரும் நாட்களில் பிக்பாஸ் மீண்டும் மக்களுக்குப் பின்னால் போய் மீண்டும் ஒளிந்து கொள்வார். ஒரு அமைச்சர் பந்தோபஸ்து, கார்களின் ஊர்வலம், செல்வாக்கு, பளபளப்பு என பொதுவெளியில் தோன்றிய பின் கையெடுத்து மக்களை நோக்கி கும்பிட்டுஉங்களால் தான் நான் இங்கே இருக்கிறேன்என பணிவு காட்டுவதைப் போன்றது பிக்பாஸின் இந்த பாவனை.

கவின்-லாஸ்லியா காப்பாற்றப்பட்டதற்கு ஒரு எளிமையான voyeuristicஆன (பார்வைக் காமம்) காரணமும் உண்டு. ஒரு தெருமுனையில் ஒரு ஆணும் பெண்ணும் இரு பக்கமாய், விலகி நின்றாய் யாரும் கவனிக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் ஜோடியாக, நெருக்கமாய் நின்றால் தெருமுனையை கடக்கும் ஒவ்வொருவரின் கவனமும் அவர்கள் மேல் செல்லும். நீங்கள் அனறாடம் பற்பல காதலர்களைக் கண்டாலும் கூட ஒவ்வொரு முறையும் காதலர்கள் ஒரு புது ஆர்வத்தை கிளப்புவார்கள். ஏனென்றால் அவர்களின் அருகாமை ஒரு மீறல்.
அது பாலியல் மீறல் மட்டுமல்ல - நான் மெரீனா கடற்கரையில் இதை கவனித்திருக்கிறேன். அங்கே ஒரு விலைமாது மணலில் தனியாக நின்று கொண்டிருப்பாள். அவளை அங்கு அதற்காக வரும் ஆண்கள் மட்டும் நோட்டம் விடுவார்கள். பெரும்பாலானவர்கள் விலகிப் போவார்கள். ஆனால் ஜோடியாக அமர்ந்திருக்கும் காதலரை கிட்டத்தட்ட எல்லாருமே கவனிப்பார்கள். கடந்து செல்லும் ஒவ்வொருவரின் கண்களும் அவர்களின் உடல்களில் மேயும்.

மற்றொரு உதாரணம் தருகிறேன். தெருமுனையில் ஒரு பைத்தியம் ஆடையற்று இருக்கிறாள் என்றால் நிறைய பேர் அதிர்ச்சியுடன் விலகி போவார்கள். நின்று கவனிப்பார்கள் சிலராகவே இருப்பார்கள். ஒருவர் தெருவில் மலம் கழித்தால் கூட இதுவே நடக்கும். ஆனால் ஒரு பெண் குட்டைபாவாடையுடன் நடந்து போனால் நிறைய பேர் கவனிப்பார்கள், அவளைப் பற்றி யோசிப்பார்கள், மனதுக்குள் பரிசீலிப்பார்கள். ஏன்?

காதல் ஜோடியோ, கவர்ச்சியாக தோற்றமளிக்கும் பெண்ணோ சமூகத்துள் இருந்தபடியே நம்மை, நமது நம்பிக்கைகள், பழைய விழுமியங்களை சீண்டுகிறார்கள். அவர்கள் முழுமையாக நமது சமூக கலாச்சார வட்டத்தில் இருந்து விலகிப் போகவில்லை. போனால் (விலைமாது, பைத்தியம், பொதுவெளியில் மலம் கழிப்பவர்) நாம் முகம் சுளித்து திரும்பி விடுவோம். அவர்கள் ஒருவித மற்றமை. மற்றமை நம்மை தொந்தரவு பண்ணாது.
இரண்டு தரப்புகளுக்கும் நடுவில் இருப்பவர்களே நம்மை எரிச்சலூட்டுவார்கள், குழப்புவார்கள், மதிப்பிட தூண்டுவார்கள். அவர்களே தெருமுனையில் நிற்கும் அந்தஜோடி”. அவர்கள் கட்டித் தழுவ, முத்தமிட எவ்வளவு நேரமாகும்? அவர்கள் அப்படி செய்தால் நாம் பதற மாட்டோம். அது நமக்கு அவர்களை மதிப்பிட, மற்றமையாக்கி விலக்கி வைக்க, வசதியளிக்கும். ஆனால் அவர்கள் அப்படி இன்னமும் செய்யவில்லை என்பதே நம்மை கூடுதலாக பதற்றமாக்கிறது. அவர்கள் வெளிச்சத்துக்கும் இருட்டுக்கும் நடுவே ஒரு நிழல்வெளியில் இருக்கிறார்கள். சமூகத்தின் ஒட்டுமொத்த கவனமும் அவர்கள் மீது இப்போது பாய்கிறது. கவினும் லாஸ்லியாவும் மைக்கை கழற்றி விட்டுஏதோபேசினார்கள் எனும் தகவல் நம்மை அசைப்பதைப் போல அந்த உரையாடலை தேடலாக நாம் கேட்க நேர்ந்திருந்தால், அது விரசமான, காதல் ரசம் சொட்டும் சொற்கோர்வையாக இருந்தால் கூட, தொந்தரவு பண்ணி இருக்காது. நாம் சுலபத்தில் அதை கடந்து போயிருப்போம்.  

இந்த பாணியை நீங்கள் இதுவரையிலான எல்லா பிக்பாஸ் ஆண்-பெண் தீவிர உறவுகளிலும் பார்க்கலாம். அவர்கள் கணவன் மனைவியாகவோ, காதலர்களாகவோ இருக்க மாட்டார்கள். அவர்கள், மாறாக, பிரிந்து பின்னர் இணைய இருக்கும் தம்பதிகளாக இருப்பார்கள். அவர்கள் காதலிப்பதாக தோற்றமளித்து ஆனால் வெளிப்படையாக இணையாதவர்களாக, அதை தெரிவிக்காதவர்களாக இருப்பார்கள். அவர்கள் காதலிக்கும் போதே பிற ஹவுஸ்மேட்ஸ்இவர்கள் நாடகமாடுகிறார்கள், காதலை வைத்து கேம் ஆடுகிறார்கள்என குற்றம் சாட்டுவார்கள். இப்போது இந்த காதல் நிஜமா எனும் கேள்வி பார்வையாளர்களுக்கு எழும். அடுத்து ஹவுஸ்மேட்ஸ் பொறாமைப்பட்டு இந்த காதலர்களை தனித்து விடுவார்கள். அவர்களை தொடர்ந்து நாமினேட் பண்ணுவார்கள். இப்போது இந்த காதல் ஒருவேளை நிஜமோ எனும் கேள்வி பார்வையாளர்களுக்கு எழும். மேலும் தமது காதலுக்கு எதிர்ப்பு எழ எழ இயல்பாகவே காதலர்கள் கூடுதல் மும்முரத்துடன் தீவிரத்துடன் காதலை பறைசாற்றுவார்கள். இது மலையாள, தமிழ் பிக்பாஸின் எல்லா பருவங்களிலும் தொடர்ந்து வரும் ஒரு சரடு - இவர்கள் காதல் ஜோடி அல்ல, ஒருவித முன்-காதல் ஜோடிகள்.


ஏனென்றால் காதல் ஒருவித நிறைவு. அது முடிவுரை. நாம் அன்றாடம் பார்க்கும் காதல் ஜோடி ஒன்று ஒரு வீடென்று சேர்ந்து வாழ்ந்தால், பட்டவர்த்தமாய் தம் உறவை பறைசாட்டினால் நாம் அவர்கள் மீது ஆர்வம் இழந்து விடுவோம். இதுவே voyeurism என்பதன் எல்லை.

நமது ஆணவக் கொலைக் குற்றங்கள் மக்கள் கவனத்தை பெருமளவுக்கு ஏன் கவர்கிறது என யோசித்திருக்கிறீர்களா? காதல் சம்மந்தமாய் எத்தனையோ குற்றங்கள் நடக்கின்றன. தம் தங்கை, அக்கா, மகள் காதலிப்பவர் மீது கோபம் கொண்டு ஒரு ஆண் அவரைத் தாக்குவது நம் சமூகத்தில் ஒரு மாமூலான சமாச்சாரம். அது எப்போதுமே ஒருவித ஏற்றத்தாழ்வு சம்மந்தப்பட்டதாகவே இருக்கும். ஆனால் ஆணவக்கொலைகளிலோ காதல் என்பது சமூக வெளியில் ஒரு நாடகத்தனமான நிகழ்வாக கட்டமைக்கப்படுகிறது. அது ஒரு நவீன பிரம்மாண்டதெருக்கூத்து”. வருவோர், போவோர் எல்லாம் நின்று கவனிக்கலாம். அதன் பின்னே பெரிய கட்சிகள் இருக்கின்றன. ஒட்டுமொத்த ஊடகங்களும் மௌனமாய் வேடிக்கை பார்த்து தண்டிப்பவர்களுக்கு ஒரு மறைமுக அதிகாரத்தை அளிக்கின்றன.

இப்போது ஒரு ஆண் தன் சாதி எல்லையை மீறிவிட்டான், ஒரு பெண் அதற்கு துணை போகிறாள் என்பது அல்ல வேடிக்கை பார்க்கும் மக்களுக்கு பிரதான ஈர்ப்பு. தேரை யார் இழுப்பது, சுடுகாட்டுக்கு பிணத்தை தெருவழியே எடுத்துச் செல்லலாமா என்கிற மாதிரியான சர்ச்சைகளில் தலித்துகள் துணிந்து போராடும் போது அது இப்படியான ஈர்ப்பை தோற்றுவிப்பதில்லை. ஆனால் காதல் இங்கு வரும் போது இயல்பிலேயே அது நிறைவற்ற ஒன்றாக ஆகிறது. அதுவே நமக்கு (வேடிக்கை பார்ப்பவர்களுக்கு) சுவாரஸ்யம். அவர்கள் (இளவரசன்-திவ்யா போல) ஓடிப் போய் மணம் புரிந்து சேர்ந்து வாழ்ந்தாலும் அது நம்மைப் பொறுத்தவரையில் நிறைவுற்ற காதல் அல்ல; ஏனென்றால் அதில் ஒரு ஓடி ஒளிதல் உள்ளது. (இதுவே பிக்பாஸ் வீட்டுக் காதல் ஜோடிகளிடமும் உள்ளது.) அவர்கள் கணவன் மனைவி என்றாலும் மறைந்தே வாழ்கிறார்கள். அவர்களின் தாம்பத்யத்தில் சமூகம் என்று வேண்டுமெனினும் குறுக்கிடலாம். அவர்களை எப்போது வேண்டுமெனிலும் பிரிக்கலாம். அதை விட முக்கியமாய் அவர்களை தத்தம் குடும்பத்தினர் கொல்லலாம். மரணம் என்பது ஒரு விசயத்தைமலர்ந்து மலராத”, “தீர்ந்தும் முடியாதஒரு அனுபவமாக்குகிறது. கொலையில் முடியக் கூடும் எனும் காதல் உறவு உச்சபட்ச சுவாரஸ்யத்தை ஒரு voyeuristக்கு அளிக்கிறது. 

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு முறை இளவயது, திருமணமாகாத ஆண் பெண்கள் அனுப்பப்படும் போதும் அவர்கள் இப்படிமறைந்து வாழும்”, “ஆணவக்கொலைக்கு ஆளாக தயாராகும்தம்பதியினரைப் போல ஆகிறார்கள். சதா கண்காணிக்கப்படும் அவர்கள் எப்போதுமேஅதிகாரபூர்வமாய் அங்கீகரிக்கப்பட்டகாதல் ஜோடிகள் ஆக முடியாது. அவர்கள் அப்படி அங்கீகரிக்கப்படவில்லை என்பதே, அவர்கள் எப்போது வேண்டுமெனிலும் பிரிக்கப்படலாம் என்பதே நம் கவனத்தை அவர்கள் மீது குவிய செய்கிறது.
பிக்பாஸ் வீட்டில் 91வது நாள் வரை கவின்-லாஸ்லியா ஜோடி காப்பாற்றபடக் காரணம் அவர்கள் முழுமையின்றி காதலிப்பது; அந்த காதல் ஒரு நிறைவான, நிச்சயமான காதலனை அல்லாதிருப்பது. அது எப்போது வேண்டுமெனிலும் உடையக் கூடிய ஒரு நீர்க்குமிழியைப் போல இருப்பது. அதை கண்விலகாமல் பார்த்திருக்கும் போது நமக்கு ஒரு திகிலும், அதிகாரமும் கிடைக்கிறது. “அதை உடை, உடைஎன நாம் பிக்பாஸை நோக்கி கத்துகிறோம். அவர் அதை நோக்கி தன் விரலை நீட்டும் போதுஐயோ வேண்டாமேஎன்கிறோம்.
ஆணவக்கொலை கதையாடல்கள் பொதுமக்களின் மென்மையான வாயரிச வக்கிரமும், அதை உணர்ந்த குற்றவுணர்வும் உட்பொதிந்தவை. பிக்பாஸின் காதல் கதையாடல்கள் இதை மென்மையான, நாகரிகமாய், ரத்தமும் சகதியுமின்றி, நமக்கு மர்மமாய் காட்டுபவை.

நாம் தெருமுனையை கடக்கும் போதெல்லாம்இவர்கள் காதலர்கள் தானா? இவர்கள் காதலிக்கத் தான் செய்கிறார்களா?” என யோசிக்கும் வரை பிக்பாஸிலும் ஆண் பெண்கள் அப்படித் தான் காதலிப்பார்கள். அதுவரை பிக்பாஸும் அவர்களை காப்பாற்றிக் கொண்டு தான் இருப்பார்.

காதலையும் மரணத்தையும் வாழ்வின் முழுமையின்மைக்கான ஒரு உருவகமாக நாம் காண்பதால் தான் காதலர்கள் கொல்லப்படும் போது அது சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோமா? இந்த சமூக வாயரிச சிக்கல்கள் தாம் பிக்பாஸ் வீட்டுக்குள்நிகழ்ந்தும் நிகழாதகாதல்களுக்கு வழிவகுக்கின்றனவா? இந்த வாயரிசம் வெளியே நடக்க இருக்கும் ஆணவக்கொலைகளுக்கும் நம்மை மென்மையாய் தயார் படுத்துகிறதா?

இறுதியாக: ஒவ்வொரு முறை பிக்பாஸ் காதலர்களை காப்பாற்றும் போதும் அவர்களை நிச்சயமற்ற காதலர்களாக மாற்றி, அவர்கள் எப்படியும் பிரிந்து விடுவார்கள் என உணர்த்தி, வேடிக்கை பார்க்கும் நம்மை குஷிப்படுத்துகிறாரா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...