முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அட! அப்படியா?



“இந்துத்துவ, இஸ்லாமிய வாசகர் தரப்பு என ஒன்று இங்கே இல்லை.”
- ஜெயமோகன்

அமேசான் கிண்டில் போட்டி சர்ச்சையைப் பற்றி எழுதும் போது ஜெயமோகன் இவ்வாறு சொல்கிறார்.
காலையில் இருந்து நான் இந்த கூற்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். நிஜமாகவா? இஸ்லாமிய வாசகர்கள் நிச்சயம் இருக்கிறார்கள், ஏனென்றால் இஸ்லாமிய வாழ்க்கையை எழுதுகிறவர்களும் இங்கு உண்டு (மற்ற மதத்தவர்களும் அவர்களைப் படிப்பார்கள் என்றாலும்). இந்துத்துவ வாசகத் தரப்பு என ஒன்றேஇல்லைஎன்பது தான் என்னை கூடுதலாக வியப்பில் ஆழ்த்துகிறது


இந்துத்துவ அபுனைவாளர்கள், கட்டுரையாளர்கள் பலர் இங்கு உண்டே. அவர்களே உண்டெனில் வாசகர்கள் இல்லாமலா? விமர்சகர்களை எடுத்துக் கொண்டால் கோவை ஞானி ஒரு நல்ல உதாரணம். இந்துத்துவத்தையும் மார்க்ஸியத்தையும் அவர் இணைக்க முயன்றார். அவரைக் கொண்டாடுகிற பலர் உண்டு. வெங்கட் சாமிநாதனின் திமுக வெறுப்பு பிரசித்தம். அவரது இலக்கியத்தில் பிராமணியம் எப்படியானது? வெ.சா சாதி பார்ப்பவர் என நான் நம்பவில்லை. ஆனால் அவரது மூர்க்கத்தில், தூய்மைவாதத்தில், ஒரு தனித்துப் பார்க்கும் மேட்டிமைவாதத்தில் ஒரு பிராமணியம் இருந்திருக்கலாம். நீண்ட காலமாக நவீன இலக்கியத்தில் அது தொடர்ந்தது என்றும் சொல்லலாம். இன்று கூட நீங்கள் ஒரு பிரபல எழுத்தாளரை இலக்கிய எழுத்தாளருடன் ஒப்பிட முடியாது. ஒரு விளம்பரப்பிரதியை இலக்கியப் பிரதியின் அருகில் வைத்து அலச முடியாது. இலக்கியத்தில் உள்ள மேல்-கீழ் தட்டுகளை நீங்கள் மீற முடியாது. வெகுகீழே உள்ளவரை மேலே உள்ளவருடன் ஒப்பிட முடியாது. கடுமையான கண்டனங்கள் வரும். இலக்கியப் பார்வையில் உள்ள இந்த பிராமணியத்தை நீங்கள் பெரும்போக்கு இல்லை எனக் கூறலாமா? இது ஒரு பரவலான போக்கு என்றால் இத்தகைய வாசகர்கள் மென் இந்துத்துவ போக்காளர்கள் அல்லவா?

நேரடியான சமூக அரசியல் எழுத்தை எடுத்துக் கொண்டால் ஜெயமோகனே இந்துத்துவ ஆதரவு அலையின் பிரதான உதாரணம் என பலர் கூறுவர்; “விஷ்ணுபுரத்தைஒரு இந்துத்துவ பிரதி என்றே ராஜன்குறை சொல்கிறார் (ஆனால் நான் இதனுடன் உடன்பட மாட்டேன்). “வெண்முரசுநாவல்கள் மென் இந்துத்துவ வாசகப்பரப்பை இலக்காக்கி எழுதப்படுகின்றன என சொல்பவர்கள் உண்டு (இதையும் நான் முழுக்க ஏற்க மாட்டேன்.) அசோகமித்திரனின் புனைவு அரசியலற்றது என்றாலும் அவரது கட்டுரைகளில் நேரடியாகவே இந்துத்துவ ஆதரவு உண்டு. நான் மோடியை விமர்சித்து எழுதிய போது அவர் என்னிடம்அப்படியெல்லாம் விமர்சித்து அறுதியாக எழுதாதீர்கள்என மென்மையாக கண்டித்தது உண்டு. அவர் தன் சார்புநிலையை அபுனைவில் மறைத்ததில்லை. லஷ்மி மணிவண்ணன் தன் இலக்கிய / சமூக கட்டுரைகளில் இந்துத்துவ சார்பு நிலையை வெளிப்படையாகவே எடுக்கிறார். இணையத்தில் இன்று இந்துத்துவத்தை ஆதரித்து எழுதுவோரும் அதை வாசித்து ஆதரிப்போரும் உண்டு. இந்துத்துவ தாராளவாத சார்பெடுத்து சிறு பத்திரிகைகள் தமிழில் வந்ததுண்டு. இதை செய்பவர்கள் இலக்கியத்தோடு தொடர்புள்ளவர்களே. இவர்களை ஜெயமோகன் கருத்தில் கொள்ளாதது ஏன்

இலக்கிய இடதுசாரிப் பார்வை என ஒரு தரப்பு தமிழில் ஆதிக்க செலுத்துகிறது என ஜெயமோகன் கூறுகிறார். ஆனால் இத்தரப்பு தமிழில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே உள்ளது. அதற்கு ஒரு அடிப்படையான காரணமும் உண்டு.
 மார்க்ஸிய விமர்சனம் என்பதே ஒரு தனி பள்ளி. கல்விப்புலங்களில் இதை இன்றும் விமர்சிக்கிறார்கள். இது தோன்றிய அளவுக்கு வலதுசாரி (இந்துத்துவ) விமர்சனம் என ஒன்று தோன்றவில்லை. அதற்காக தேவையும் இருக்கவில்லை.
 மாறாக, மார்க்ஸியர்கள் தம்மை அறிவுத்தரப்பாக்கி மக்களிடம் சேர்ப்பிக்க நீண்ட காலமாக முயன்று வருகிறார்கள்; அதற்கு என ஒரு தனி மொழியை உருவாக்கினார்கள். இந்துத்துவர்களுக்கு / வலதுசாரிகளுக்கு அது ஏன் தேவைப்படவில்லை?
 வலதுசாரிகளை மையவாதிகள், மரபை மீளுருவாக்கும் பழமைவாதிகள் எனலாம். ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைகளை வலியுறுத்தும் இவர்கள் ஏற்கனவே உள்ள மொழியையும் செண்டிமெண்டுகளையும் குறிப்பான்களையும் (ராமனோ சிவனோ) பயன்படுத்துகிறார்கள். வலதுசாரிகளுக்கு தமது உலகையோ நேரடிப் பிரச்சனைகளையோ புரிந்து கொள்ள இலக்கியமோ அறிவுத்துறைகளோ தேவைப்பட்டதில்லை; தம் நோக்கை அவர்கள் கலை வழியாக பரப்பவும் முயன்றதில்லை. அவர்களுடைய பண்பாட்டு அரசியலானது மதக்குறியீடுகளை நேரடியாக மக்களிடம் கொண்டு போய் நினைவுபடுத்துவது. அயோத்தியில் உள்ள மசூதியில் இந்துத்துவர்கள் ராமர் சிலையை வைத்த போது நீதிமன்றம் அதைச் சுற்றி தடுப்பை உருவாக்கியது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் கம்பிக்கதவுக்குள் விக்கிரகங்கள் வைக்கப்பட, அப்படி கூண்டுக்குள் ராமனை சித்தரித்து பெரிய ஊர்வலங்களை வலதுசாரிகள் உத்தரபிரதேசத்தில் நடத்தி உடனடியாக மக்களின் உணர்ச்சிகளை கிளப்பினார்கள். அவர்களுக்கு இதைச் செய்ய நவீன கதைகளோ நாடகமோ நாவலோ தேவையிராது
வலதுசாரிகள் ஏற்கனவே உருக்கொண்டுள்ள தேசம் எனும் கருத்தமைப்பையும் வலியிறுத்துவார்கள். இதற்கும் அவர்கள் தர்க்கத்தை நாடுவதில்லை. நீங்கள் தேசத்தை விரும்பினால் அதை நம்புங்கள், அதை நம்பினால் அதைப் போற்றுங்கள், அதைப் போற்றத் துணிந்தால் மட்டும் வாழுங்கள் என முழுக்க பகுத்தறிவு சிந்தனைக்கு அப்பாலான தரப்பை அவர்கள் எடுப்பார்கள். இலக்கியமும் பிற அறிவுத்துறைகளும் புதிய நோக்கை, லட்சியத்தை வளர்த்தெடுக்க முயலும் என்பதால் வலதுசாரிகள் / இந்துத்துவர்களுக்கு இலக்கியமும் அதனளவில் முக்கியம் அல்ல
இடதுசாரிகளே இலக்கியப் பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், இந்துத்துவர்கள் பாவம், அவர்கள் சிறுபான்மையினரிலும் அருகினவர்கள் எனும் பச்சாதாபப் பார்வையை நான் ஏற்கவில்லை. கோயிலைக் கட்டவும் நகரங்களை அமைத்து நகரங்களின் ஒற்றை மைய அடையாளத்துக்கு தேசத்தை இழுத்து கொண்டு வரவும் அவர்கள் முயலும் போது இலக்கியமெல்லாம் அவர்களின் கண்ணுக்குப் படாது. பிரச்சாரத்துக்கு இலக்கியத்தை ஒருவேளை பயன்படுத்தினாலும் பழைய நம்பிக்கைகளை திரும்ப சொல்லவே அவர்கள் அதை கையாள்வார்கள். அதற்கு தனியான நுண்ணுணர்வோ கோட்பாடோ அவர்களுக்குத் தேவையிருக்காது.
இந்துத்துவர்களையும் இஸ்லாமியரையும் அருகருகில் வைத்து ஜெயமோகன் பார்ப்பது தான் பெரிய கொடுமை. இலக்கியத்தில் இருவரையும் சேர்த்து அவர்களுக்கு மாற்றாக இடதுசாரிகளையும் திராவிட சிந்தனையாளர்களையும் அவர் வைப்பது எதேச்சையான உள்நோக்கமற்ற ஒன்று என நான் நம்ப விரும்புகிறேன்.

திராவிட எழுத்தாளர்கள் இலக்கியத்தில் சேர்வாளர்களா? அண்ணாதுரையும் மு.கருணாநிதியும் பொதுவாசகர்களுக்காக எழுதியவர்கள். இமையமும் மனுஷ்யபுத்திரனும் (திமுகவினர் எனினும்) தம் படைப்புகளில் எப்போதும் தம் கட்சிக் கொள்கையை, அதன் தாக்கத்தை கொண்டு வருவதில்லை. இவர்களைப் படிப்பது திமுகவினர் என்றும் சொல்ல முடியாது. திமுகவினர் அதிகமும் புத்தகம் படிப்பதில்லை என்றும் அவர்கள் படிப்பதெல்லாம் முகநூல் பதிவுகளும் மீம்களும் தன எனச் சொல்லும் ஜெயமோகன் முரணாக அவர்களே தமிழில் ஒரு பெரும்பான்மை வாசகத் தரப்பு என்றும் சொல்கிறார். எனக்கு இங்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை. படிப்பார்களா மாட்டார்களா
குமுதம், விகடன் போன்ற வெகுஜன இதழ்களில் இன்று திராவிடக் கொள்கைகளை பிரதிபலிக்கும் கதைகள் அதிகமாக வருகின்றனவா? இல்லை. புத்தகக் கண்காட்சியில் நாம் எத்தனைதிராவிடநாவல்களைப் பார்க்கிறோம்? இதற்கு ஏதாவது புள்ளிவிபரம் உண்டா? அதிக எண்ணிக்கையில் இன்றும் விற்கும் கல்கியும் சுஜாதாவும் திராவிட எழுத்தாளர்களா? திராவிட வாசகர்கள் அதிகமாக சுஜாதாவையே படிக்கிறார்கள் என ஜெயமோகனே கூறுகிறார். அப்படி எனில் சுஜாதா திராவிட கொள்கைகளை பரப்புரை செய்பவரா? இல்லையே. சுஜாதாவைப் படிக்கிறவர்கள் எப்படி திராவிட இலக்கிய வாசகர்கள் ஆக முடியும்?

வாசகர்களையும் லாபியையும் ஜெயமோகன் ஒன்றாக்கி குழப்பிக் கொள்கிறாரோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...