தேசம் முழுக்க மக்கள் பெருந்திரளாக இந்த கொடுங்கோன்மை சட்டத்துக்கு எதிராக போராடி வருவதைப் பற்றி சில நண்பர்களுடன் உரையாடும் போது ஒரு நண்பர் எல்லாரையும் நோக்கி இக்கேள்வியைக் கேட்டார்: “இதனால் பாஜக கதிகலங்குமா?” அதற்கு மற்றொரு நண்பர் “இல்லை” என்றார். ‘இடதுசாரித் தோழர்கள் சிலர் இந்த பெரும் எழுச்சியை கண்டு மனம் கனிந்தாலும், உத்வேகம் அடைந்தாலும் அது ஒரு வெற்று நம்பிக்கை என்றே தோன்றுகிறது. ஏனென சொல்கிறேன்...’ என அவர் விளக்கினார். முதலில் இந்த எதிர்ப்பை பாஜக எதிர்பார்த்திருக்கும், அவர்களின் கையை மீறி இது சென்று விட்டாலும் கூட. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த போது இஸ்லாமியர் பெரும் திரளாக அதை எதிர்ப்பார்கள் என்றும் அதை வைத்து தேசத்தை இரண்டாக பிளக்கலாம் என்றும் பாஜக நம்பியிருக்கும்; ஆனால் அது பொய்த்தது; இப்போது குடியுரிமை திருத்த சட்டத்தை பொறுத்த மட்டில் அது நிகழ்ந்திருக்கிறது. அதே நேரம் இத்தகைய போராட்டங்களுக்கு அரசியல் விளைவுகள் இருக்குமா என்றால் இருக்காது என்றே “இல்லை” என்றே சொல்ல வேண்டும்.
பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு இந்த சட்டம் ஒரு அநீதியாகப் படுகிறது; ஆனால் தெளிவாக கருத்தியல் ரீதியாக இதன் பிரச்சனை அவர்களுக்குப் புரியவில்லை. இந்தியர்களின் குடியுணர்வு என்பது ஒற்றை தேசம் எனும் பிளாஸ்டிக்கான நம்பிக்கையின் அடிப்படையிலானது அல்ல. அது நம்பிக்கையின், நீதியின், நேசத்தின், கருணையின் அடிப்படையிலானது. இந்த சட்டம் அந்த உணர்வின் இதயத்தில் குண்டை பாய்ச்சுகிறது. மேலும் பெண்கள் உள்ளிட்ட இளைய சமூகத்தினர் மீது காவல்துறையின் வன்முறை அவிழ்த்து விடப்பட்டது, நகரங்களில் இணையத்தொடர்பு ரத்து செய்யப்பட்டது, போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது மக்களை மேலும் எழுச்சி கொள்ள வைத்தது. அதனால் மக்கள் பெருவாரியாக இதற்கு எதிராக திரண்டனர். ஆனால் இதே மக்கள் இந்துக்களாக தம்மை காண்பவர்களும் தாம்; இஸ்லாமியருடன் வாழலாம், ஆனால் அவர்கள் நாம் அல்ல என நம்புகிறவர்களும் தாம்.
இன்று இந்த சட்டத்துக்கு எதிராக போராடுகிறவர்கள் இந்துத்துவாவுக்கு எதிராக போராடுகிறவர்கள் அல்ல என்பதே கவலைக்குரிய விசயம் - ஏனென்றால் இதற்கு முன்பு இந்த அரசு நிகழ்த்திய பல இந்துத்துவ ஆதரவு அவலங்களை இதே மக்கள் எதிர்க்கவில்லை; காஷ்மீர பண்டிட்டுகளை மீள்-குடியமர்த்தாமல், அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் காஷ்மீரின் சிறப்புரிமையை மட்டும் ரத்து செய்யும் ஆபாச அரசியலை யாரும் எதிர்க்கவில்லை; புல்வாமாவில் தீவிரவாதிகள் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்தி நாற்பது பேருக்கு மேல் கொன்ற போது இந்த அரசு ஏன் படைவீரர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கவில்லை, ஏன் அரசு இந்த தாக்குதலை தடுக்க முயலவில்லை என மக்கள் கேட்கவில்லை; மாறாக கோபம் முழுக்க பாகிஸ்தானுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு ஆதரவாகவும் திரும்பியது. டிமானிடைசேனின் போதும் ஜனங்கள் பெருவாரியாக பாதிக்கப்பட்டார்கள்; ஆனால் அரசின் தவறான பொருளாதார நோக்கங்களை, அபத்தங்களை ஜனங்கள் புரிந்து கொள்ளவில்லை; ஜி.எஸ்.டி போன்ற குழப்படியான, அபத்தமான வரிவிதிப்புகள் மேலும் மேலும் நமது எளிய வணிகர்களின் அடிமடியில் கைவைத்தன; இந்திய பொருளாதாரத்தை நிலைகுலைய வைத்து விட்டு மோடி அரசு தொடர்ந்து என்ன பண்ணியது? அது பெருமுதலாளிகளுக்கு வரிவிலக்கை பல்லாயிரம் கோடிகளுக்கு அள்ளி வழங்கியது; இந்த முடிவுகளால் தொடர்ந்து பாதிக்கப்படும் அப்பாவி மத்திய வர்க்கமோ இந்த பாஜக அரசுக்கு பக்திரசம் சொட்ட சொட்ட ஆதரவளித்தது. அவர்களுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வழங்கியது. இதற்கு ஒரு பிரதான காரணம் மக்கள் அரசியல்வயப்படாமல், அன்றாட பிரச்சனைகளுக்குள் சிக்கிக்கிடக்கிறாரக்ள் என்பது. இத்தகைய மக்களை உணர்வுரீதியாக திரட்டலாம் - அவர்கள் ஒரே சமயம் ஒரு கட்சியை எதிர்ப்பார்கள், ஆனால் மறுவாரமே அந்த கட்சியின் மடியில் படுத்தபடி கைகால்களை உதைத்து புட்டிப்பாலை வாங்கி உறிஞ்சுவார்கள்; இந்த அரசு இதை நன்கு உணர்ந்திருப்பதனாலே அது இப்போராட்டங்கள் ஓரளவுக்கு வரை எல்லை மீறாத வரை அஞ்சாது, கலங்காது, கள்ளச்சிரிப்புடன் மக்களின் உணர்ச்சிகள் வடிவதற்காக காத்திருக்கும். நாளை இதே உணர்ச்சிகளை ‘பாகிஸ்தானுக்கும்’, ‘இஸ்லாமியருக்கும்’ எதிராக கற்பனையாக திரட்ட முடியும் என மோடியும் ஷாவும் நன்கு அறிவார்கள்.
சொல்லப் போனால், இந்த போராட்டங்களினால் இன்று மக்கள் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியின் கோபாவேசத்தை, கசப்பை, அவநம்பிக்கையை திசை திருப்பி விட முடியும். ஜல்லிக்கட்டு போராட்டங்கள் இதற்கு தகுந்த உதாரணம் எனலாம் - அந்த போராட்டத்தினால் அதிமுக அரசு கவிழவோ பாஜகவை மக்கள் நேரடியாக தாக்கும் நிலை ஏற்படவோ இல்லை (எப்போதும் போல பாஜக தொடர்ந்து தேர்தலில் உதை வாங்கியது என்றாலும்).
அந்த விதத்தில் ஒவ்வொரு அரசும் அவ்வப்போது சில மக்கள் மக்கள் எழுச்சிகள் தனக்கு எதிராக நடப்பதையே விரும்பும். இந்த அரசை நோக்கி இரண்டு விதமான எதிர்ப்புகள் வந்தால் மட்டுமே அது தடுமாறும்: 1) நிர்வாக ரீதியான குற்றச்சாடுகள் (ஊழல், பாலியல் உள்ளிட்ட குற்றங்கள்); 2) இந்துத்துவ எதிர்ப்பு அலை. ஏனென்றால் இரண்டுமே தெளிவான பொருண்மையான குற்றச்சாட்டுகளாக இருக்கும் - ஒரு அரசு பல்லாயிரம் கோடிகளை திருடுகிறது எனத் தோன்றினால் அந்த எண்ணிக்கை ஒவ்வொரு இந்தியனுக்கும் தீராத கோபத்தை ஏற்படுத்தும்; தான் ஒவ்வொரு காசாய் எண்ணி சிரமப்பட்டு வாழ்வதற்கு காரணம் இந்த திருடர்கள் தாமே எனும் ஒரு நேரடியாக கோபம் தோன்றும் (2ஜி ஊழலை இப்படித் தான் எதிர்க்கட்சிகள் காங்கிரசுக்கு எதிராக பயன்படுத்தியது). இந்த அரசுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் தோன்றிய அடுத்த நாளே அதை பல சினிமாத்தன செயல்பாடுகள் மூலம் தேசியவாத வெறியை தூண்டி விட்டு மறக்கடிக்க மோடி-ஷா கூட்டணிக்குத் தெரியும்.
காந்தியின் படுகொலைக்குப் பின்பு சில பத்தாண்டுகள் இந்துத்துவ கட்சிகளுக்கு எதிராக கடும் கோபம் பொதுமக்களிடம் ஏற்பட்டது; காங்கிரசுக்குள் இருந்த மென் இந்துத்துவர்கள் கூட அடங்கிப் போய் இந்து மகாசபாவுக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் எதிராக பேசும் நிலை ஏற்பட்டது. அப்படி ஒரு கோபாவேசம் ஜனங்களுக்கு திரும்பவும் ஏற்பட்டால் மட்டுமே பாஜக அரசு அஞ்சும். அப்படி ஒரு வரலாற்று திருப்புமுனை நிகழுமா என்பது சந்தேகமே.
இப்போது நிகழ்வது போன்ற பூடகமான சமூகக்கோபத்தின் ஒரு சிறப்பு அதில் பல்வேறு முரணான மக்கள் திரள்கள் பங்கேற்க முடியும் என்பது - இதில் இஸ்லாமியரும் இந்துக்களும் கைகோர்க்க முடிகிறது; இடதுசாரிகளும் மிதவாதிகளும் பரஸ்பரம் கொள்கை ரீதியாக உடன்பட முடியாதவர்களும் கைகோர்க்க முடிகிறது. இந்த குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்கள் வெறுமனே இந்த சட்டத்துக்கு எதிரானவை மட்டும் அல்ல - இவை ஜனங்களை வெளிப்படையாக பிரிப்பதற்கு, அரச வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களாக உருத்திரள்கின்றன். ஏரியில் ஒரு கல்லை எறிந்ததும் அலைகள் ஒன்றையொட்டி மற்றொன்று என வட்டவட்டமாய் தோன்றிப் பரவுவதைப் போன்றது இப்போராட்டங்கள். பொதுவெளியை மக்களுக்கு போராட அனுமதிக்காமல், இணையத்தில் போராட்ட நெருப்பு பரவாமல் பார்த்துக் கொண்டால் இந்த அலைகள் தாமாக அடங்கி நீர்ப்பரப்பு முன்பு போல அமைதியாகி விடும் என பாஜக அரசுக்குத் தெரியும். இந்த போராட்டங்களின் போது என்னை ஆச்சரியப்படுத்திய ஒரு விசயம் - சில விதிவிலக்குகளை தவிர்த்தால் - இளைஞர் படை இதை மோடிக்கு எதிரான போராட்டமாக அன்றி பாஜகவுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே பார்க்கிறது என்பது; CAA = மோடி எனும் இணைப்பை நீங்கள் எந்த பதாகைகளிலும் கோஷங்களிலும் காணவில்லை. இந்த சட்டத்தை எதிர்க்கும் பல இளைஞர்களிடம் நான் உரையாடிய போது அவர்களின் மோடி பாசம் சற்றும் கறைபடாமல் அப்பழுக்கற்று இருப்பதை கவனிந்த்து வியந்தேன்.
இங்கும் பிரித்தாளும் வியூகத்தில் பாஜக வென்றுள்ளது எனலாம். அமித் ஷா இஸ்லாமிய வெறுப்பை வெளிப்படையாகவே கக்க, மோடியோ மற்றொரு பக்கம் “இந்த சட்டம் இஸ்லாமியருக்கு எதிரானது அல்ல” என பேசுகிறார்; போராட்டக்காரர்களை அவர்களின் ஆடையை வைத்து அடையாளம் காணலாம் என வெறுப்பைத் தூண்டும் விதமும் அவர் மறுபக்கம் அறிக்கைகளை விடுகிறார். பாஜகவின் வன்முறையான முகம் என ஒருவரும் மென்மையான கனிவான முகம் என மற்றொருவரும் அடையாளம் காட்டப்படுகிறார்கள் - இருவருமே உறுதியான நிர்வாகிகள் எனும் பாவனையில் இணைந்த கரங்களாகவும் நாளை உருமாறுவார்கள். குடும்பத்தில் பிள்ளைகள் அப்பாவுக்கு எதிராக சண்டையிட்டால் அம்மா இருவருக்கும் இடையில் சமாதானம் பண்ணி குடும்பம் உடையாமல் பார்த்துக் கொள்வார். அம்மா அப்பாவை மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதரித்தாலும் பிள்ளைகளுக்கு அம்மா மீது கோபம் வராது. பிராயிட் தன் உளவியல் பகுப்பாய்வில் இந்த தந்தையை சூப்பர் ஈகோ என்றோ அம்மாவை ஈகோ என்றும் வகுத்தார். சூப்பர் ஈகோ வெளிப்படையான ஒடுக்குமுறையாளர்; அவரை சகித்துக் கொள்ள ஈகோ என சமாதானப் புறா அவசியம். பாஜகவின் ரெட்டைக்குழல் துப்பாக்கி இப்படித் தான் போராட்டக்காரர்களை நோக்கி தோட்டாக்களை அனுப்புகிறது - ஒரு குழலில் இருந்து பாய்ந்த தோட்டாவில் சாயும் ஒருவர் அடுத்த குழலின் இருந்து வரும் ரோஜாவை கையில் ஏந்திக் கொண்டு கண்ணீர் மல்க உயிர்விடுகிறார் - அவர் சாவதற்கு பாஜகவுக்கு எதிராக என்றாலும் அவர் சாவது பாஜக ஆதரவுடன் தான் இருக்கும். பாஜகவின் இந்த உளவியல் தந்திரத்தில் பெரும்பான்மையான இந்து வாக்காளர்கள் விழுந்து விடுகிறார்கள்.
மற்றொரு விடயமும் இங்கு முக்கியமானது - பூடகமான, நீதியுணர்வுடன் திரளும் போராட்டங்களில் போல மக்களுக்கு நாளை தெளிவான இலக்கை நோக்கிய, தூலமான பிரச்சனையை முன்வைத்த போராட்டங்களின் போது இணைய முடியாது என நினைக்கிறேன். அப்போது மக்கள் உடைந்து போவார்கள் - இந்த நம்பிக்கை தான் பாஜகவை மிகுந்த தன்னம்பிக்கையுடன் விரித்த மார்புடன் இப்போராட்டங்களை உதாசீனிக்கத் தூண்டுகிறது. அதனாலே தான் CAAஐ திரும்ப வாங்க மாட்டேன் என அமித் ஷா அறிவிக்கிறார். ஏன் அப்படி?

கருத்துகள்