முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராகுலின் புது அவதாரம்


இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ராஜ்கோட்டில் ராகுல் அடித்த 80 ரன்கள் அவரது ஆட்டவாழ்வில் அவர் ஆடிய சிறந்த இன்னிங்ஸ் என நான் நினைத்தேன் அதையே கோலியும் பின்னர் சொன்னார்; அஜய் ஜடேஜாவும் தன் விமர்சனத்தில் சொன்னார். அவர் இதற்கு முன் சதங்கள் அடித்திருக்கிறார் - ஆனால் இந்த இன்னிங்ஸுக்கு ஒரு சிறப்பு இது அவர் ஒருநாள் போட்டியில் எண் 5இல் முதன்முறையாக இறங்கி அடித்தது என்பது, அதுவும் மிகச் சிக்கலான ஒரு சந்தர்பத்தில் வந்து அடித்தார் என்பது. ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் சொன்னது போல ஒரே ஒரு விக்கெட்டை அந்த வேளையில் கூடுதலாக ஆஸ்திரேலியா எடுத்திருந்தால் இந்தியா 300 ரன்களைத் தாண்டியிருக்காது. அதனால் தான் தவன் கூடுதலாக ரன் எடுத்திருந்தாலும் ராகுல் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
 ஒரு துவக்க வீரர் இப்படி மத்திய வரிசையில் ஆடுவது, அதுவும் எண் 5ஆன முடித்து வைக்கும் பாத்திரத்தில் வந்து ஆடுவது எளிதல்ல. நீங்கள் ஒவ்வொரு ஐந்து ஓவருக்கும் ஒவ்வொரு மாதிரி ஆட வேண்டும் - சில நேரங்களில் ஒற்றை இரட்டை ஓட்டங்கள், சில போது சிக்ஸர், பவுண்டரிகள், சில போது நீங்கள் தடுத்தாடவும் வேண்டும். ராகுலின் இறுதி பத்து ஓவர் ஆட்டத்தின் ஒரு சிறப்பு அவர் ஒரே பந்தை இரண்டு மூன்று விதங்களில் ஆடும் நெகிழ்வு கொண்டவர் என்பது. .தா., ஸ்டார்க் அவருக்கு ஒரு பவுன்சர் வீசினார். அதை ராகுல் சரியாக ஆடவில்லை. அவர் மிட் விக்கெட்டுக்கு அடிக்க முயன்று சொதப்பினார். அடுத்த பந்தும் பவுன்சர் தான். ராகுல் இப்போது பாதுகாப்பாக ஒற்றை ஓட்டத்துக்கு அதை தட்டி விட்டிருக்கலாம். ஆனால் அவர் வேறு விதமாக யோசித்தார். முதல் பந்தை அடித்த ஷாட் தான் பிரச்சனை. அதனால் ஷாட்டை மாற்றலாம் என இப்போது upper cut எனப்படும் ஸ்லிப்புக்கு மேலாக வெட்டி ஆடப்படும் பவுண்டரி ஷாட்டை அடித்தார். அற்புதமான ஷாட் அது. இதற்கு முந்தைய ஓவர் ஒன்றில் அவர் எக்ஸ்டிரா கவருக்கு மேலாக இதே ஸ்டார்க்கை சிக்ஸர் அடித்தார். இப்போதைக்கு அந்த ஷாட்டை இவர் அளவுக்கு ஆடக்கூடியவர் என்றால் ரோஹித்தும் கோலியும் மட்டுமே. அந்தளவுக்கு தரமான மட்டையாளர் ராகுல்.
 இந்த எண் ராகுலுக்கு ஏன் பொருத்தமாக உள்ளது என்பதற்கு அஜய் ஜடேஜா மற்றொரு காரணம் சொன்னார் - ராகுல் டி-20யில் சிறப்பாக ஆடக் கூடியவர்; அதற்குக் காரணம் டி-20யில் அவர் அதிகம் சிந்திக்கத் தேவையில்லாமல் இத்தனை ஓவர்களில் இத்தனை ரன்கள் தேவை என இலக்கு அவர் கண் முன்பு தெளிவாக இருக்கும். நீங்கள் துவக்கம் முதற்கொண்டே அடித்தாட வேண்டி இருக்கும். ஆட்டநாயகன் விருதை இன்று பெற்ற போதும் ராகுல் இதையே சொன்னார்: “முதல் சில பந்துகளை தடுத்தாடினேன். அதன் பிறகு பந்தைப் பார்த்து அடிப்பதை மட்டும் தான் யோசித்தேன்”.

 ராகுல் துவக்க வீரராகவும் சோபித்திருகிறார் என்றாலும் முதல் 15 ஓவர்களுக்குப் பிறகு இன்னிங்ஸின் வேகத்தை தீர்மானிப்பதில் அவருக்கு பல குழப்பங்கள். எக்குத்தப்பாக ஆடுவார். சிலநேரம் தேவையின்றி முதல் கியருக்குப் போவார், சிலவேளைகளில் அவசியமில்லாமல் மூன்றாவது கியருக்குச் சென்று அடித்தாடி அவுட் ஆவார். ஆனால் அவருக்கு இந்த கடைசி 15 ஓவர்களில் ஆடுவது இயல்பாக வருகிறது எனத் தோன்றுகிறது


மேலும் இன்று அவரது கீப்பிங் அவ்வளவு அழகாக இருந்தது - நல்ல லகுவான காலாட்டம், பந்துகளை அவசரமின்றி பிடிக்கிறார், ஆரன் பிஞ்சை அவர் ஸ்டம்பிங் செய்த வேகம் சற்றே தோனியை நினைவுபடுத்தியது. ராகுலின் நிதானம் அவரது கீப்பிங்குக்கு நிச்சயம் உதவுகிறது. அதுவும் குல்தீப்பின் பந்து வீச்சில் அவர் இரண்டாவது முறையாக 10 ஓவர்கள் கீப்பிங் பண்ணுகிறார்; எந்த பந்தையும் அவர் தவறாக வாசித்து குழப்பிக் கொள்ளவில்லை. கால் சுழல்பந்துக்கு கீப்பிங் பண்ணுவதில் ரிஷப் பண்டுக்கு உள்ள பிரச்சனைகளை நாம் அறிவோம். அவரது கீப்பிங்கில் பல தொழில்நுட்ப சிக்கல்கள் வேறு. இன்றைய ஆட்டப்படி பார்த்தால் பண்டை விட ராகுல் ஒரு கீப்பராக பல மடங்கு மேலானவர். ராகுல் இருக்கும் வரை பண்டை கீப்பராக்கவே கூடாது என்பேன். ஷிக்கர் தவன் இன்னும் இரு ஆண்டுகள் துவக்க வீரராக ஆடப் போகிறார் என்றால் அந்த காலகட்டத்துக்கு ராகுலே நமது கீப்பர்-பேட்ஸ்மேனாக இருக்க வேண்டும். கீப்பராக எண் 5 அவருக்கு பொருத்தமான இடம். பண்ட் வெறும் பேட்ஸ்மேனாக ஆட வேண்டும். அதுவே அவருக்கும் நல்லது.  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

அரசியல் தேய்வழக்குகள்

  நம்மூரில் இளைஞர்கள் மீதிருக்கக் கூடிய பிரேமை என்னை ஆச்சரியப்படுக்கக் கூடியது. இளைஞர்கள் ஆட்சிக்கு வர வேண்டும், அதிகாரத்துக்கு வர வேண்டும் எனக் கோரும்போது அவர்கள் இயல்பிலேயே களங்கமற்றவர்கள், குழந்தை மனம் படைத்தவர்கள், பேராசையோ கெட்ட குணங்களோ அற்றவர்கள் எனும் நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறோம். சொல்லப்போனால் நம் குடும்பத்தில் உள்ள பதின்வயதினரையும் இருபதில் இருப்பவர்களையும் கூட நாம் 'வளர்ந்த குழந்தைகளாகவே' பார்க்கிறோம். இது ஒரு கற்பனாவாத சிந்தனை. ஐரோப்பாவில் இருந்து நம்மூருக்கு வந்த ஒரு நம்பிக்கை. வளர வளர மக்கள் தன்னலமும் வஞ்சகமும் மிக்கவர்களாக ஆகிறார்கள் என நினைப்பதால் நாம் 40-60க்குள் இருக்கும் அரசியல்வாதிகளைச் சந்தேகத்துடன் நோக்குகிறோம். ஆனால் சற்றே உற்று கவனித்தால் இருபதுகளில் அரசியலுக்குள் போனவர்கள் பெரும் ஊழல்களைச் செய்திருக்கிறார்கள் அல்லது ஊழலுக்குத் துணை போயிருக்கிறார்கள் எனத் தெரியும். அறிவியல் நாம் குழந்தையாக இருக்கும்போதே மோசமான குணங்கள் வெளிப்படுகின்றன என்கிறது. எத்தனையோ கொடூரமான குற்றங்கள் இழைப்போர் இளைஞர்களே. குற்றம் இழைக்கும் பதின்வயதினருக்கான சிறைகளே உள்ளன (அ...