முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஞ்சலிக் கட்டுரையில் வாழும் நண்பன்


நட்பை நேசிக்க நீங்கள் உங்கள் நண்பரை இழந்த பின் இரங்கலின் போது அவரை நினைவில் கொள்ள கற்றுக் கொண்டால் மட்டும் போதாது; எதிர்காலத்தை நேசிக்கவும் செய்ய வேண்டும். ” - தெரிதா

இரங்குதல் என்பது மரணத்தை வெல்வது, அது ஒருபோதும் மரணத்துக்காக காத்திருப்பது அல்ல என தனதுநட்பின் அரசியல்நூலில் தெரிதா எழுதுகிறார். அதாவது மரணம் நிகழ்ந்த பின்னர் தான் இரங்கத் தொடங்குகிறோம்; அழுகிறோம், நினைவுகளை மீட்டுகிறோம், மறைந்தவரைப் பற்றி பேசிப் பேசி மாய்கிறோம். ஆனால் அப்படி இரங்குவது கூட ஒருமரணம்தான் என்கிறார் தெரிதா. நட்பின் சாரமாக அவர் இந்தமரணத்தைக்காண்கிறார். இங்கு மரணம் என்பது உடல் மரிப்பது அல்ல; மொழியின் பலிபீடத்தில் ஒரு மனிதன்தன்னைஅழித்துக் கொண்டே இருப்பது. நட்புறவாடல் என்பது மொழியில் மற்றமையை அறிவது, தன்னை மற்றமையாக ஒரு மாற்றிக் கொள்வது; அப்படி மாற்றிக் கொள்கையில்தான்மரிப்பது. இந்தமரணம்ஒருவரது மரணத்துக்குப் பிறகு ஒரு விதத்தில் சுலபம் ஆகிறது. தன்னுடைய இரங்கல் கூட்டத்துக்கு யாரும் வர வேண்டாம் என நகுலன் ஒரு சிறிய கவிதையில் கூறுவது இதனாலே - இரங்கல் கூட்டத்தில் நகுலன் எனும் மற்றமை காணாமல் போய் விடுகிறார்; அவர் நமதுநகுலன்ஆகிறார்; நகுலன் நகுலனாக இருந்த போது அவர் மரணிக்காத மற்றமையாக நம்முடன் இருந்தார்; அவருடைய கதை, கவிதைகளில் மட்டுமே அவர்மரணித்தார்” - அவரை நாமாக்கிக் கொள்ள, நாம் அவராகிட அனுமதித்தார். ஆனால் அவரது தூல உடல் நீங்கிய பின்னர் அவர் உருவாக்கிய வெற்றிடத்தில் அவர்இல்லைஎன்பது ஒரு நேர்மறையான, கவித்துவமான அழகான விசயமாகிறது. “என் அஞ்சலிக் கூட்டத்துக்கு யாரும் வர வேண்டாம்எனும் பகடியை ஒரு நட்பழைப்பாக நாம் காண முடியும்.


 நட்பில் இரங்கல் குறித்த ஒரு பதற்றமான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே, நண்பன் மரிக்கும் முன்னரே வந்து விடுகிறது என்கிறார் தெரிதா. “அது நண்பனை விடாமல் பின் தொடர்கிறது, அது அவனை இரங்கலுக்கு முன்பே இரங்கலுக்குள் தள்ளுகிறது. இந்த பீதி ஒப்பாரி நிகழும் முன்னரே வெம்பி அழுகிறது, அது மரணத்துக்காக மரணத்துக்கு முன்னரே அழுகிறது; இது தான் நட்பின் சுவாசம்...” என அவர் கவித்துவமாக எழுதுகையில் ஒரு முக்கியமான அவதானிப்பு வருகிறது - நட்பு என்பது எப்போதுமே நண்பனை தின்று செரிப்பதாகவே இருக்கிறது; நண்பனுடன் நாம் இருக்கும் போது நாம் உரையாடும் மொழியில் அவன் இல்லாமல் ஆவதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது; ஆனால் அதை நம்மால் துல்லியமாக அப்போது உணர முடிவதில்லை. அவன் உச்சரிக்கும் ஒரு சிறு சொல்லுக்குள் நாம் போய் புகுந்து கொள்கிறோம்; அவன் சொல்லி முடிக்குமுன்னரே நாம் அதனை வசப்படுத்துகிறோம்; அதை வசப்படுத்தி முடிக்கும் முன்னரே நாம் அடுத்த ஒன்றுக்குள் நழுவிச் செல்கிறோம். இது நிகழும் போதே நண்பனும் நம்முடைய மொழி வழியாக நாமாக மாறிக் கொண்டிருக்கிறான். இருவருக்கும் சம்பாஷணை நிகழும் போதே அதனூடாக நாம் தன்னிலை அழிவது குறித்து ஒரு பதற்றம், பயம் இருந்து கொண்டு இருக்கிறது. இது தான் அழிவது மட்டும் அல்ல, காலத்தில் நாம் நிகழ்காலத்திலோ எதிர்காலத்திலோ கால் பாவி நிற்க முடியாத ஒரு கால அழிவும் தான். அந்த பயமானது ஒரு துப்பாக்கி முனை போல நம்மை நோக்கி சதா சுட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த பயமே நட்பின் மிகப்பெரிய கிளர்ச்சியாக இருக்கிறது. இதையே தெரிதா இரங்கலின் கிளர்ச்சி என்கிறார்.

தெரிதா எழுதிய அஞ்சலிக் கட்டுரைகள் பிரசித்தம் - 1981 முதல் 1999 வரை அவர் ரொலாண்ட் பார்த், பூக்கோ, அல்தூசர், டெலூஸ், லையடார்ட் போன்ற தனது பல முக்கிய சமகால சிந்தனையாளர்களுக்கு அஞ்சலிக்கட்டுரைகள் எழுதினார். இவை தொகுக்கப்பட்டு The Work of Mourning என ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியானது. இந்த அஞ்சலிகளில் தெரிதா காலமான தன் நண்பர்களை மதிப்பிட்டு சிலுவையில் ஏற்றாமல் அவர்களின் தரப்பில் இருந்து அவர்களின் பார்வையில் இருந்து உலகைக் காண முயல்கிறார். நெகிழ்ச்சி, மிகையான புகழ்ச்சி, உணர்ச்சித் தளும்பல், நினைவு மீட்டல் என பல தொனிகளை இக்கட்டுரைகள் கொண்டிருந்தாலும் முடிந்தளவுக்கு அவர் முயல்வது அந்த அஞ்சலிகளில் மறைந்தவரை மீட்டுக் கொணர்வதும், அவருடன் அவர் இருந்த போது சாத்தியமான உரையாடல்களை இப்போது நிகழ்த்துவதுமே. தெரிதா இப்படி இரங்கலைக் காணும் விதமே நூதனமாக, ஆழமாக இருக்கிறது. நமது தமிழ்ச் சூழலில் நாம் நண்பர்களுக்காக இரங்குவதை ஒரு ஈகோ கம்புசுற்றலாக, போலி சடங்காக அன்றி ஒரு உயிரோட்டமான சம்பாஷணையாக, இறந்தவரை மீட்டுக்கொண்டு வந்து மீண்டும்மரணிக்கசெய்யும் ஒரு நட்பு பாராட்டலாக பார்க்க நம்மை அவர் தூண்டுகிறார்.

தமிழ் இலக்கிய சூழலில் ஒருவர் உயிரிழந்ததும் நூற்றுக்கணக்கான அஞ்சலிக்குறிப்புகள் எழுதப்படுவதை, உணர்ச்சிமேலிடும் சொற்கள் நூறு நூறு பூக்களாய் பூத்து அவரது நினைவில் தூவப்படுவதை, அவரைக் குறித்த நினைவுகள் மீள மீள மீட்டப்படுவதைக் காண்கிறோம். சில நேரம் இதை பகடி செய்கிறோம். விமர்சித்துக் கடந்து போகிறோம். ‘அவர் உயிருடன் இருக்கையில் இந்த அன்பு ஏன் காட்டப்படுவதில்லை?’ எனக் கேட்கிறோம். நாம் ஒன்றை அப்போது புரிந்து கொள்வதில்லை - ஒரு மனிதனுடன் அன்பு பாராட்டுவதற்கு பிரதான தடை அவன்உயிருடன்இருப்பதேஒரு நண்பன்உயிருடன்இருக்கையில் அவனிடத்து நட்பைப் பேணுவது மிக மிகக் கடினம். நட்புறவாடலில் ஒருவன்இறந்துபோக மறுக்கும் போதே அந்த உறவு கசந்து அது விரோதமாகிறது. “சாகாதநண்பனிடத்து நாம் பேச வேண்டிய சொற்கள் நூற்றுக்கணக்கான சொற்களாக நமக்குள் குவிந்து மூச்சைத் திண செய்கின்றன.
 எதிரி நண்பனாகி மீண்டும் எதிரியாகி மடிந்ததும் நண்பனாக உயிர்த்தெழுகிறான். அப்போது நாம் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறோம். இப்போது அந்தகாலமற்ற காலம்நட்பில் தோன்றுகிறது
இறந்த நண்பன் நிகழ் காலத்தில் இல்லை. அவனது நினைவுகளை நாம் கடந்த காலத்தில் இருந்து தட்டி எழுப்பி நல்ல சட்டை, பேண்ட் அணிவித்து தலைசீவி ஒப்பனை செய்து நிகழ் காலத்துக்குக் கொண்டு வருகிறோம். ஆனால் அவனுக்கு உயிரளிக்க அவனை நாம்எதிர்காலத்துக்குக்கொண்டு சென்றாக வேண்டும். ஒரு பிரச்சனை இப்போது ஏற்படுகிறது - செத்துப் போய் விட்ட அவன் எதிர்காலத்தில் இல்லையே. அதனாலே வேறுவழியின்றி அவனை நாம் மொழிக்குள் ஒரு காலமற்ற காலத்தை சிருஷ்டித்து உயிர்ப்பிக்கிறோம் - அது தான் இரங்கல்; அது தான் அஞ்சலிக் கட்டுரை.

இதனால் தான் தான் நீண்ட காலமாய் தன்னுடன் பேசாது இருந்த சு.ரா 2005 அக்டோபர் 15 அன்று இறந்து போன பிறகு ஜெயமோகன் சில நாட்களில் இரவு பகலாய் ஒரு நீண்ட அஞ்சலிக்கட்டுரை எழுதி அதை ஒரு நூலாக விரிவாக்கி பிரசுரித்தார் - அதாவது ஒரு பக்கம் சு.ராவுக்கு அஞ்சலிக்கூட்டம் நடந்த போது இன்னொரு பக்கம் அவரைப் பற்றின ஜெயமோகனின் அஞ்சலி நூலும் உயிர்மை மூலம் வெளியானது. இந்த நூலுக்கு ஜெயமோகன் அளித்த தலைப்பு வெகு பொருத்தமானது - “சு.ரா: நினைவின் நதியில்”. நதி எந்த காலத்தில் இருக்கிறது? அது கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்துக்குப் பாய்கிறது, ஆனால் அதை நீங்கள் துழாவிக் கையில் அள்ளிக் கொள்ளும் போது அது நிகழ்காலத்தில் கூட இல்லை. நீங்கள் அள்ளி எடுத்த நீரானது கடந்த காலத்தில் இருந்து நிகழ்காலத்தின் வழி எதிர்காலத்துக்கு சென்று கொண்டிருந்தது; அது ஒரு மீ-காலத்தில் இருந்தது. “நினைவின் நதியில்இருந்து ஜெயமோகன் அள்ளி எடுத்து கைக்குவளையில் வைத்துப் பார்த்த சு.ராவும், கடந்த காலத்தில் இருந்து எழுந்து வந்தாலும், நிஜத்தில்  எதிர்காலத்தில் தன் காலை நீட்டிப் (அனந்தபத்மநாபனைப் போல) சயனித்துக் கொண்டிருப்பவரே; நாம் பார்த்துக் கொண்டிருக்கையிலே அந்த கால்கள் எதிர்காலத்தையும் தாண்டி ஒரு காலமற்ற காலத்தில் அசைந்து கொண்டிருக்கிறது. அந்த சு.ராவின் அசையும் கால்களுக்கு காலமே இல்லை என்பதால் அவர் மீதான் நட்புக்கும் இனிமேல் முடிவே இல்லை

நன்றி: அங்கே என்ன சத்தம் - 8



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: துரோகம்

என் மாஜி குருநாதர் தனது வலைமனையில் என்னை “ஆன்மாவை கூவி விற்றவன்” என்று வர்ணித்து ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அது நான் உயிரோசையில் எழுதின ”ஜெயமோகன் கிளி எடுத்த சீட்டு: ஊனம்” கட்டுரைக்கான அவரது பாணியிலான எதிர்வினை. நான் அவரை விமர்சிக்க காரணமே எனது தன்னிரக்கம் என்கிறார். ஜெயமோகனின் பதிவை படித்த நண்பர்கள் பலரும் அவருக்காக இரக்கப்பட்டார்கள். உதாரணமாக கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் என்பவர் சொன்னார்: “ஜெயமோகன் இன்றோரு தனிநபராக உயிர்மை போன்றோரு பெரும் அமைப்புக்கு எதிராக இயங்க வேண்டி உள்ளது. அந்த பதற்றத்தை அவர் தனது இணையதளத்திலே தொடர்ந்து பதிவு செய்கிறார். உயிர்மை இன்னும் சில வருடங்களுக்கு தனக்கு எதிராக எழுத்தாளர்களை ஏவி விட்டபடி இருக்கும் என்று ஒரு அச்சத்தை வெளிப்படுத்தியபடி இருக்கிறார். அவர் கடுமையான பாதுகாப்பின்மை மனநிலையில் உள்ளார். உயிர்மை அவரை தாக்க உத்தேசித்தாலும் இல்லை என்றாலும் ஜெயமோகன் அந்த பிரமையால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளார். உங்களை பற்றின இந்த தாக்குதல் கூட இதன் வெளிப்பாடு தான்”. உண்மையே! ராக்கி படத்தில் குத்துச்சண்டை வீரராக வரும் சில்வெஸ்டர் ஓரிடத்தில் சொல்வார்: ...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.