கோர்சராவில் கீர்க்கெகாட் பற்றி ஒரு ஆன்லைன் வகுப்பில் இணைந்திருக்கிறேன். அதன் பகுதியாக ஒரு வாரப் படிப்பு முடிந்ததும் விவாத அரங்கில் ஒரு கேள்வியை எழுப்பி விவாதங்களில் ஈடுபட வேண்டும். நான் எழுப்பிய கேள்வியை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
தலைப்பு aporia. இதை தத்துவத்தில் ஒரு பதிலற்ற வியப்பு நிலை என்கிறார்கள். அதாவது, குழப்பமோ அறியாமையினால் விளையும் திகைப்பு அல்ல. மாறாக நாம் அறிகின்ற பதில்களை ஆழமாய் அலசும்போது அவை தர்க்கபூர்மாய் உறுதியற்று இருப்பதை உணர்வது, மாற்றுக்கோணங்களும் அப்படியே பலவீனமாய் இருப்பதை உணரும் போது நாம் பதில் தேடுவதன் நோக்கம் பதிலின்மையை அறிவதே என உணர்கிறோம்.
சுருக்கமாய் சொல்வதானால் தெளிவான கருதுகோள்கள், நம்பிக்கைகளின் பின்னுள்ள முரண்களை, அபத்தத்தை அறிவது. இதை ஆதிகாலத்தில் பிரசித்தமாக்கியவர் கிரேக்க தத்துவ மேதை சாக்ரெடஸ். அவர் தனது நகைமுரண் எனும் உத்தி மூலம் இதை செய்தார்.
நான் இங்கு தெரிதாவின் கட்டுட்டைத்தலை அபோரியாவுடன் ஒப்பிட முடியுமா என கேள்வி எழுப்பி இருக்கிறேன். ஏனெனில் தெரிதாவும் ஒவ்வொரு கூற்றின் பின்னுள்ள உள்முரண்களை, ஒத்திசைவற்ற இருமைகளை அம்பலப்படுத்தி ஒரு திகைப்பு நிலைக்கு வாசகனை ஆட்படுத்தினார். உ.தா., ஐ லவ் யூ என்பதை எடுத்துக் கொள்வோம். இதில் உள்ள இருமை எது?
நான் + உன்னை
ஐ + யூ
ஒருவர் தன்னை, தான் யார் என உணர்த்தாமல் மற்றமையான ஒரு காதலன் / காதலியை நேசிப்பதை வெளிப்படுத்த முடியாது. ஆனால் நாம் இதை சொல்லும் போது நம் இதயம் முழுக்க நம் காதலரே நிறைந்திருப்பதாக, இந்த வாக்கியம் அவரைப் பற்றியது என நம்புகிறோம். உண்மையில் இது அவரை விட அதிகமாய் நம்மைப் பற்றி பேசுகிற ஒரு கூற்று. தனக்கு மனநலம் சரியில்லை என நினைக்கும் ஒருவர் ஐ லவ் யூ என சொல்ல முடியுமா? டெக்னிக்கலாக அவர் சொன்னால் அது எடுபடாது.
நான்-மற்றமை எனும் இருமை ஐ லவ் யூ சொல்லி முடிக்கும் போது அழிந்து அங்கு நேசம் மட்டுமே தங்குகிறது என்பதொரு வினோதம். ஆனால் இந்த தானற்ற பரவச நிலையை நாம் அடைய 'நான்' எனும் உணர்வை முன்னிறுத்த வேண்டும். காதல் ஒரே நேரம் சுயநலத்தின் உச்சம் என்பதையும் அது சுயநலமற்ற நேசம் என்பதையும் ஐ லவ் யூவை கட்டுடைத்தால் நாம் காண்கிறோம்.
காதல் இப்படி ஒரு முரணுக்குள் சிக்கியிருப்பதால் அது என்னவென்றே யாரும் விளக்க முடியாதாகிறது. விளக்கத்துக்கு அப்பாலானது என்பதாலே அது பெரும் திகைப்பை, பரவசத்தை அளிக்கிறது.
கருத்துகள்