முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிளைமேக்ஸை எப்படி அமைக்க வேண்டும் - மணிரத்னத்திலிருந்து மிஷ்கின் வரை (1)


ஒவ்வொரு படத்துக்கும் அதற்கான ஒரு நன்னெறி, விழுமியம், உள்ளது. சில படங்கள் இந்த விழுமியத்தை நேரடியாக தலைப்பிலே கொண்டிருக்கும். எம்.ஜி.ஆரின்திருடாதேவின்விழுமியம் எந்த சந்தர்பத்திலும் திருடக்கூடாது என்பது, காசை மட்டுமல்ல, தான் எடுத்து வளர்த்த குழந்தையை கூட, பாசம் காரணமாய், சொந்த பெற்றோரிடம் இருந்து பறித்து விடக்கூடாது என்பது. மிஷ்கினின்அஞ்சாதேவும்இப்படியான தலைப்பு அமைந்த படமே. இப்படி எந்த படத்திலும் ஒரு பாத்திரமோ / பார்வையாளனோ இறுதியில் கற்றுணர்வதற்கான ஒரு பாடம் இருக்கும். ஆனால் இது தலைப்பு, கதையமைப்பு, இறுதியில் கிளைமேக்ஸ் என சீராக வெளிப்படும் போதே அப்படம் ரசிக்கப்படும். யாரும்திருடாதே” / “அஞ்சாதேவை திருடக்கூடாது, துணிச்சலாக இருத்தல் வேண்டும் என போதிக்கிற படமாகப் பார்க்கவில்லை. ஏனெனில் இந்தக் கருத்தை ஒரு சிக்கலான கதைக்களத்தில் வைத்து உணர்ச்சிகரமாய் இப்படங்கள் சித்தரித்த போது நாம் ஒரு மாபெரும் விசயத்தை எதிர்கொண்ட திகைப்பை, உணர்ச்சி மேலிடலை அடைந்தோம். இப்படி ஒரு கருத்தை கதையாக்கி அதை ரசிக்க வைக்க திரைக்கதை அமைப்பில் கிளைமேக்ஸும் மிகவும் முக்கியம். அது கதையின் மையப் பிரச்சனைக்கு ஒரு அர்த்தபூர்வமான பதிலை, நிறைவான தீர்வை அளிக்க வேண்டும். மிஷ்கினின்அஞ்சாதேவைவைத்து இதை பரிசீலிப்போம்.


அஞ்சாதேவின் மையக் கருத்தோட்டம் (controlling idea) என்ன? இரு உற்ற நண்பர்களில் போலீசாக வேண்டியவன் குற்றவாளியாகவும் குற்றவாளியாக வேண்டியவன் போலீசாகவும் சந்தர்ப்பவசத்தால் ஆகி விட்டால் என்னவாகும்? இக்கேள்வி தான் மொத்தப் படத்தையும் செலுத்துகிறது (“தங்கப்பதக்கம்நினைவுக்கு வருகிறதா?)
 ஆனால் படத்தின் தலைப்புக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லையே. சரி இப்போது மையக் கருத்தோட்டத்தை (controlling idea) பகுத்து நோக்குவோம்:
  “போலீசாக வேண்டியவன் குற்றவாளியாகிறான், குற்றவாளி ஆக வேண்டியவன் போலீசாகிறான். ஏன் மற்றும் எப்படி? எப்படி என்பதற்கு விடைசந்தர்ப்பவசத்தால்’. ஏன் என்பதற்கு விடை ஒருவன் (சத்யா) வாழ்க்கையை அஞ்சாமல் அதன் போக்கில் எதிர்கொள்கிறான்; மற்றவன் (கிருபா) தன் மூளையால் வாழ்க்கையை எதிர்கொள்கிறான். சமூகம் இட்ட பாதையில் பயணிப்பதே சரியானது என கிருபா நினைக்கிறான்; ஆனால் தன் இதயம் சொல்லுகிறதைக் கேட்பதே சரியானது என சத்யா நம்புகிறான். முதலாவது வாழ்க்கைக்கு அஞ்சி நடக்கும் மனப்பான்மை என இப்படம் வகுக்கிறது; இரண்டாவது அச்சமற்ற மனநிலை என்கிறது (பாரதியார் ஆத்திச்சூடியில் குறிப்பிடுவதைப் போல). இந்தஏன்எனும் கேள்வியின் பதில் தான் இப்படத்தின் விழுமியம். இது தான் இப்படத்தின்போதனை”. இது தான் இப்படத்தை மேலான சினிமாவாக்குகிறது. நம் நெஞ்சை விம்ம வைக்கிறது. கண்களில் கண்ணீரைத் துளிர்க்க செய்கிறது. வெளியாகி பன்னிரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் மறக்க முடியாததாக்குகிறது.


 ஆனால் இந்தபோதனைஎன்பது ஒலிபெருக்கியை எடுத்து பிரசிங்கிக்கிற போதனை அல்ல, நுணுக்கமாக சினிமா மொழியுடன் பின்னிப்பிணைந்தபோதனை”.
 “அஞ்சாதேவின்முதல் காட்சியிலே நமக்கு இது தெரிந்து விடுகிறது - தன்னை அடிக்கிற ரௌடிகளைக் கண்டு கிருபா விலகி செல்கிறான்; அவர்களுடன் வம்பு ஏற்பட்டு அது வழக்கமானால் தன்னுடைய போலீஸ் கனவு நிறைவேறாமல் போய் விடுமே எனும் கவலை அவனை நடத்துகிறது. ஆனால் சத்யா அப்படி அல்ல. அவன் நேரடியாக ரௌடிகளை போட்டுப் புரட்டி எடுத்து விடுகிறான். அவனுக்குப் பின்னர் போலீஸ் ஆகும் ஆசை வந்ததும் அதையும் அவன் அதிகம் மூளையைக் குழப்பிக் கொள்ளாமல் தனக்குத் தெரிந்த வகையில் (மாமாவைப் பிடித்து அவரது செல்வாக்கை பயன்படுத்தி) வேலையை வாங்கிக் கொள்கிறான். கிருபாவின் நேர்த்தியான சமூக வழிமுறைகளுக்கு உகந்த முயற்சிகள் தோல்வி அடைகின்றன. இப்போது அவன் மனம் உடைந்து ஒரு ரௌடியாகவே மாறி விடுகிறான். “ரௌடியானசத்யாவின் முன்பு குற்றங்கள் நடக்கும் போதும் அவன்  தன் இதயம் சொல்கிற படியே நடந்து கொள்கிறான். ஆஸ்பத்திரியில் கிடக்கும் ஒரு ரௌடியைக் கொல்வதற்காக வாடகைக்கொலையாளிகள் வரும் போது காவலுக்கு இருக்கும் போலீஸ்காரர்கள்கவனமாக”, “புத்திசாலித்தனமாகஅச்சத்துடன் நடந்து கொள்கிறார்கள்; ஆனால் சத்யா சுய-அக்கறையற்று, மூளையால் சிந்திக்கும்புத்திசாலித்தனமற்று’, தன் துப்பாக்கியைக் கூட கீழே வீசி எறிந்து விட்டு அச்சமற்று நடந்து கொள்கிறான். வெல்கிறான். கிருபாவோ கொள்ளைக்கும்பலுடன் சேர்ந்த பின்னர் அவர்களின் சட்டதிட்டங்களை ஒட்டிஅச்சத்துடன்நடந்து கொள்கிறான். அவன் திருந்திஅச்சமற்றுப்போவது கிளைமேக்ஸில் சில நிமிடங்களின் போது மட்டுமே - கரும்புக்காட்டில் கடத்தி வைக்கப்பட்ட .ஜியின் குழந்தைகளிடத்து அவன் கருணை காண்பிக்கிற இடத்தில். ஆனால் அவர்களை தப்பிக்க விட்ட பின் அவன் பணப்பையுடன் ஓடிச் செல்லும் போது மீண்டும் கொள்ளைக்காரனின் விதிமுறையையே பின்பற்றுகிறான், தன் இதயம் சொல்வதை அல்ல. இப்படிஅஞ்சாதேபடத்தை முழுக்க இதயத்தின் உணர்ச்சிகளுக்கு அஞ்சுவது / இதயம் சொல்வதற்கு அஞ்சாமல் உடன்பட்டு போராடுவது என எதிரிடைகளாகப் பிரித்து அதன் படி காட்சி அமைப்பை நாம் பகுத்துப் பார்க்க முடியும்.

 இந்த அச்சமற்ற மனப்பான்மையே சத்யாவை கடைசி வரைக் காப்பாற்றுகிறது. ஆனால் இப்படி அச்சமற்று இருப்பதன் எதிர்க் கருத்தோட்டத்தையும் (மெக்கீ இதை counter-idea என்கிறார்) மிஷ்கின் காட்டுகிறார் -   தயா எனும் வில்லனின் பாத்திரமே இந்த எதிர்க் கருத்தோட்டமாகிறது. அவன் முழுக்க முழுக்க தன் இச்சைகள் சொல்வதையே கேட்கிறவன். இதையும் மிஷ்கின் ஒரு அச்சமாகவே பார்க்கிறார். ஏன்? ஒருவன் தன் இச்சைகளின் பாதையில் மட்டுமே நடக்க அவன் தன் இதயத்தின் குரலுக்கு செவி சாய்க்காதவனாக இருக்க வேண்டும். அவன் தன் இதயத்தின் குரலைக் கண்டு அஞ்சுகிறவனாக இருக்க வேண்டும். இச்சைகள் இன்றி தான் சிதறி விடுவோம், தன் வாழ்க்கைக்கு சாரமே இருக்காது என அஞ்சுகிறவனாக இருக்க வேண்டும். தயா பாத்திரத்தின் வீழ்ச்சியுடன் தான் படம் ஆரம்பிக்கிறது - ஒவ்வொரு குற்றத்துடனும் அவன் ஓடி ஒளிந்து கொண்டே இருக்கிறான் (கெத்துடன், தலையை சிலுப்பியபடி).
  ஆனால் இந்த நீதி போதனையை நீங்கள் படத்தில் வெளிப்படையாக காண முடியாது, ஏனென்றால் இதை படத்தின் காட்சி அமைப்பாகவே மிஷ்கின் மாற்றி இருப்பார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...