முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விராத் கோலி – எங்கிட்ட மோதாதே



2011 உலகக் கோப்பைக்கு பிறகு புற்றுநோயால் தளர்ந்து பிறகு மீண்டு வரும் வேளையில் யுவ்ராஜ் சிங் ஒரு பேட்டி அளித்தார். அதில்காலத்தில் திரும்ப சென்று நான் வேறு விதமாய் ஆட விரும்பினால் அது விராத் கோலியை போலத் தான் இருக்கும். அவரது கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகிய பண்புகள் எனக்கும் இருந்திருக்க கூடாதா என ஆசைப்படுகிறேன்என்றார். ஒருநாள் கிரிக்கெட்டின் அசுரர்களில் ஒருவரான யுவ்ராஜ் ஒரு இளம் வீரரை பற்றி இதை சொல்கிறார் என நினைவில் கொள்ள வேண்டும். திறமையும் கடும் உழைப்பும் ஒன்றாய் சேர்ந்தால் நம்பர் 1 ஆகலாம் என்பதற்கு கோலி ஒரு உதாரணம்.

171 ஒருநாள் ஆட்டங்களில் 11,000க்கு மேல் ரன்கள் மேல் ரன்கள். 43 சதங்கள். பொதுவாக மட்டையாளர்களுக்கு சதத்தை விட அரைசதங்கள் மும்மடங்கு இருக்கும். ஆனால் கோலி 58 அரைசதங்களே அடித்துள்ளார். 80% மேல் தன் அரைசதங்களை அவர் சதமாய் மாற்றுகிறார். இது ஒரு அபாரமான திறன். கோலிக்கு 31 வயதாகிறது. இன்னும் 7 வருடங்கள் ஆடினால் கூடுதலாக 40 சதங்கள் அடித்து விடுவார் என்பதில் ஐயமில்லை. ஓய்வு பெறும் போது ரன்களை பொறுத்த மட்டிலுமே அவர் சச்சினுக்கு வெகு அருகில் சென்று விடுவார்.  

ஆவேசத்தின் கனல்

விறகடுப்பு அணைந்த பின்னும் சாம்பலுக்குள் கனல் தகதகத்துக் கொண்டே இருக்கும். கோலிக்குள்ளும் அந்த நெருப்பு ஒரு போதும் அணைவதில்லை. மட்டையாடும் போது மட்டுமல்ல களத்தடுப்பில், வெற்றியை கொண்டாடுவதில், களத்தில் ஒரு புலியை போல் உலாத்துகையில் அவரது கண்களில், நடையில், உடல்மொழியில் ஆக்ரோசம் மிளிர்ந்து கொண்டிருக்கும். ஆனால் பேட்டிங்கின் போது இந்த வெறியுணர்ச்சியை அமைதியான ரன்களாக உருமாற்ற தெரிந்தவர் கோலி. இத்திறன் அவரை போன்று ஆவேசம் மிக்க காம்பிளி, கங்குலி, யுவ்ராஜிடம் கூட இருக்கவில்லை. அதனால் தான் கோலி இவ்வயதிலேயே இவர்களையும் கடந்து சென்று விட்டார்.

அப்பாவின் கனவு

விராத் கோலி தில்லியில் ஒரு பஞ்சாபிய குடும்பத்தில் 1988இல் பிறந்தார். அவருடைய அப்பா பிரேம் கோலி ஒரு வழக்கறிஞர். கோலி தான் குடும்பத்தில் கடைக்குட்டி. அவருக்கு ஒரு அண்ணனும் அக்காவும் உண்டு. மூன்று வயதிருக்கும் போதே அவர் ஒரு சின்ன கிரிக்கெட் மட்டையை எடுத்து விளாசி விளையாடத் துவங்கி விட்டார் என்கிறார் அவரது அம்மா. தெருவில் அவர் விளையாடும் அழகை பார்த்து விட்டோ அல்லது தங்கள் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை இனியும் இப்பையன் உடைக்க வேண்டாம் என கருதியோ அவரது பக்கத்து வீட்டார் பிரேம் கோலியிடம் விராத்தை ஏதாவது ஒரு கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்து விட பரிந்துரைத்தார்கள். அப்பா விராத்தை ராஜ்குமார் ஷர்மா எனும் பயிற்சியாளரிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து விராத்தின் கிரிக்கெட் பயணம் நேர்த்தியாக முன்னகர்ந்தது.
தன் அப்பா தினமும் தன்னை தவறாது பயிற்சிக்கு அழைத்து போய் விடுவதை சர்வதேச நட்சத்திரம் ஆன பின்னர் நினைவு கூரும் கோலி தன் அப்பாவின் அருகாமையை மிகவும் மிஸ் பண்ணுவதாய் குறிப்பிடுகிறார். ஏனென்றால் 2006இல் கோலி தன் 18வது வயதில் தன் இரண்டாவது ரஞ்சி கோப்பை ஆட்டத்தை தில்லிக்காக ஆடும் போது அவரது அப்பா மாரடைப்பில் காலமானார். மனமுடைந்து போன கோலி அப்பாவின் சிதைக்கு நெருப்பூட்டிய உடனே ஆட்டத்தை தொடர்வதாய் திரும்ப சென்றார். இது மொத்த தில்லி அணியையும் திகைப்பில் ஆழ்த்தியது. இழப்பின் தவிப்பை மறைத்து விட்டு மன உறுதியுடன் அவர் அன்று கர்நாடகாவுக்கு எதிராய் அடித்த 90 ரன்கள் தில்லி அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியது. அப்பா காலமுற்ற அன்றிரவில் இருந்து கோலி மிகவும் மன உறுதி கொண்டவராக மாறினதாய் அவர் அம்மா ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார். தேசிய அணியில் மகன் ஆட வேண்டும் எனும் தன் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதே ஒரே இலக்காய் கொண்டு கோலி அதன் பிறகு உழைத்தார். அது மட்டுமல்ல அப்பாவின் மறைவுடன் குடும்பம் பொருளாதார ரீதியாய் சரிந்தது. வாடகை வீட்டுக்கு இடம்பெயர்ந்தது. குடும்ப வியாபாரம் தளர்ந்தது. தன் குடும்பத்தை சரிவில் இருந்து மீட்கும் பொறுப்பு தன்னுடையது என கோலி ஏற்றுக் கொண்டார். அன்றிருந்து அவர் முதிர்ச்சியான உருக்கு இதயம் படைத்த இளைஞராய் உருமாறினார். இந்த பொறுப்புணர்வையும் உறுதியையும் பின்னர் அவர் பலமுறை இந்திய அணிக்காய் பேட்டிங் செய்த போது வெளிப்படுத்தினார்

முதல் உலகக்கோப்பை

பள்ளி மற்றும் சிறுவர்களுக்கான பிற ஆட்டங்களில் தொடர்ந்து ரன்களை குவித்த கோலி 2008இல் மலேசியாவில் நடந்த 19 வயதுக்கு கீழாருக்கான உலகக்கோப்பை அணிக்கு தலைவராய் நியமிக்கப்பட்டார். அவரது கிரிக்கெட் வாழ்வில் அது ஒரு திருப்பு முனை. உலகக்கோப்பையை கோலி வென்றளித்தார். குறிப்பாய் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் இந்தியா சொற்ப ரன்களில் வெளியேற கோலி அதிரடியாய் தலைமை தாங்கி வெற்றிக்கு வித்திட்டார். அத்துடன் கோலியின் பெயர் இந்தியா முழுக்க பிரபலமாகியது. விரைவில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோலி துவக்க ஆட்டக்காரராய் களமிறங்கி சிறப்பாய் ஆடினார். கால் பக்கம் மட்டுமே பிரதானமாய் ஆடினாலும் அவரது துணிச்சலும் கவனமும் அற்புதமாய் தனித்து தெரிந்தன. ஆனாலும் அணியில் நிறைய சீனியர் நட்சத்திர வீரர்கள் இருந்ததாலும் கோலி திமிர் பிடித்தவர் எனும் அவப்பெயர் நிலவியதாலும் ஒரு வருடம் அணியில் இருந்து விலக்கப்பட்டார்.

2009இல் மீண்டும் ஆட வந்த கோலி முற்றிலும் மாறுபட்ட முதிர்ச்சியான வீரராக இருந்தார். அப்போதைய அணியில் சச்சின், சேவாக், யுவ்ராஜ், தோனி, ரெய்னா போன்று நிறைய அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தனர். அவர்கள் இடையே கோலி ரிஸ்கே எடுக்காமல் ஒற்றை இரட்டை ஓட்டங்களில் கவனம் செலுத்தும் நிதானமான பேட்ஸ்மேன் ஆனார். Off sideஇல் அவரது ஆட்டமும் மெருகேறியது. 2011 உலகக்கோப்பை வந்த போது கோலி உலகின் கவனிக்கத்தக்க மத்திய வரிசை பேட்ஸ்மேனாக இருந்தார். உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் சச்சின் மற்றும் சேவாக் ஆட்டமிழந்த நிலையில் கோலி பதறாமல் ஒற்றை இரட்டை ரன்கள் எடுத்து காம்பிருடன் அணியை நிலைப்படுத்தினார். அவரது 35 ரன்கள் அணிக்கு நிதானத்தையும் வேகத்தையும் அளித்து இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பிரதான காரணமாகியது.

கோலி 2.0

2012இல் இருந்து கோலி புது உயரங்களை எட்ட துவங்கினார். சச்சின், சேவாக், காம்பிர், யுவ்ராஜ் ஆகிய நட்சத்திரங்கள் மங்கத் துவங்க கோலி சூப்பர் ஹீரோவாக உயர்ந்தார். இந்தியா இரண்டாவதாய் பேட்டிங் செய்யும் போது அவரது ஆட்டம் அசாத்தியமாய் இருந்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்தியா இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற இந்தியா 40 ஓவர்களில் 321 அடிக்க வேண்டியிருந்தது. கோலி 133 அடித்து 37 ஓவர்களிலேயே இலக்கை எட்ட வைத்தார். ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு 148 பந்துகளில் அவர் அடித்த 183 1998இல் ஷார்ஜாவில் சச்சின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராய் அடித்த சதத்துக்கு இணையானது.
ஆஸ்திரேலிய தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் கோலி அடித்த கன்னி சதம் அவர் டெஸ்ட் அரங்கில் நிலைபெற உதவியது. 2014இல் இந்தியா மீண்டும் ஆஸ்திரேலியா சென்ற போது கோலி டெஸ்ட் தொடரில் 692 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு இந்திய பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்கள் எனும் சாதனையை படைத்தார்.

குறைபட்ட டெக்னீக்

கோலியின் முக்கிய பலவீனம் அவர் எப்போதும் பேட்டை கால்பக்கம் அடிக்கும் வண்ணம் சற்றே திருப்பி பிடித்திருக்கிறார் என்பது. இதனால் off sideஇல் வைடாக போகும் பந்தை அவரால் சுலபத்தில் விரட்ட முடிவதில்லை. ஸ்கொயர் பகுதியில் பந்தை வெட்ட முடிவதில்லை. ஆனாலும் தற்போது இந்த குறைகளை கடந்து அவர் ஒரு முழுமையான பேட்ஸ்மேனாக வளர்ந்து வருகிறார்.

கேப்டன் கோலி

இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக கோலியின் தலைமை பாஸிட்டிவாக ஆக்ரோசமாய் உள்ளது. தோல்வி நிச்சயம் எனத் தெரிந்தாலும் அவர் பின்வாங்க மாட்டார். அவரால் பவுலர்களை உத்வேகப்படுத்தி பிரமாதமாய் வீச வைக்க முடிகிறது என்பதும் முக்கிய பலம். பலவீனம் என்பது அணித்தேர்வில் நிதானமாக தீர்மானமாக இல்லாதது; அணியில் கோலியைத் தவிர வேறு யாருமே நிலையாக இல்லை என்பதே எதார்த்தம். இந்த நிலையின்மை அணியை பதற்றம் மிக்கதாக்குகிறது; இந்தியா இன்று ஒரு தென்னாப்பிரிக்காவாக மாறி வருகிறது - லீக் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி அரை இறுதியில் விக்கித்து விதிர்விதிர்த்து தோற்று விடும். இதற்குக் காரணம் கோலி தன் வீரர்களுக்கு அளிக்கும் மிதமிஞ்சிய நெருக்கடியும் தம் இடம் குறித்த பயத்தை அனைவரிடத்தும் அவர் விதைப்பதும். ஒரு தலைவராக சச்சினிடம் இருந்தே அதே பிரச்சனை இப்போது கோலியிடமும் தெரிகிறது. அதை அவர் கடந்தால் மட்டுமே உலகக்கோப்பையை இந்திய அணி மூன்றாவதாக ஜெயிக்க முடியும்.

கூடுதலாக:

ஆட்டம் ஆரம்பிக்கும் முன் விராத் கோலி நல்ல மூடில் இருந்தால் நிச்சயம் சதம் அடிப்பார். எதிரணி, ஆடுதளம், ஆட்ட சூழல் எல்லாம் ஒரு பொருட்டல்ல” – இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன்
விராத் கோலி எனக்கு என்னையே நினைவுபடுத்துகிறார்”, மே. தீவுகளின் கிரிக்கெட் மேதை விவியன் ரிச்சர்ட்ஸ்.

2013ஆம் ஆண்டு கோலி அர்ஜுனா விருது பெற்றார்.

2015இல் கோலி T20யில் மிக வேகமாய் 1000 ரன்களை அடித்த முதல் பேட்ஸ்மென் ஆனார்.

ஒருநாள் போட்டிகளில் மிக வேகமாய் 5000 ரன்களை அடித்து சாதனை படைத்தார்.

ஒருநாள் போட்டிகளில் மிக வேகமாய் 10 சதங்களை அடித்த சாதனை கோலியுடையது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

சினிமாவும் சர்வாதிகாரமும்: யோசா சொல்வதென்ன?

  காட்சி ஊடகம் நமக்குப் பொழுதுபோக்க உதவுகிறது என்றாலும் அது அடிப்படையில் மனிதரைச் சிந்திக்க விடாமல் செய்து செயலூக்கத்தை ஒழிக்கிறது, இது சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது என்று சில மாதங்களுக்கு முன் நான் விஜய்யின் வருகையை ஒட்டி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். இன்று தற்செயலாக மரியோ பார்கஸ் யோசாவின் ஒரு கட்டுரையைப் படித்தால் அதில் அவர் கிட்டத்தட்ட அதே கருத்தைத்தான் சொல்கிறார். காட்சி ஊடகங்களின் ஆதிக்கம் உள்ள சமூகம் சர்வாதிகாரத்துக்கு எதிராகச் செயல்பட முடியாமல் முடங்கும் என்கிறார்: (...) making the present unreal, turning actual history into fiction has the effect of demobilising the citizen, making him or her feel exempt from any civic responsibility, encouraging the conviction that it is beyond anyone's reach to intervene in a history whose screenplay is already written. Along this path we may well slide into a world where there are no citizens, only spectators, a world where, although formal democracy may be preserved, we will be resigned to the kind of lethargy dictatorships asp...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...