Hi அண்ணா
தத்துவ வாசிப்பு பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்தேன், ஒரு நல்ல அறிமுகம் கிடைத்தது.
மனோதத்துவம் பற்றியும் ஒரு அறிமுகம் வழங்க முடியுமா?
நன்றி.
- Sivarakesh Jayachandran
அன்புள்ள சிவராகேஷ்
என்னுடைய உளவியல் வாசிப்பு எல்லை குறுகியது. ஒரு கட்டத்திற்குப் பிறகு உளவியலில் ஆர்வம் இழந்து விட்டேன். அதன் பிறகு தத்துவ நோக்கிலேயே உளவியலைப் படித்தேன். பௌதீகமாக உளவியலை அணுவது குறைபட்ட பார்வை என நினைக்கத் தொடங்கினேன். அதனால் என் வாசிப்பில் இருந்து இதை சுருக்கமாக சொல்கிறேன்.
உளவியல் வாசிப்பை 1) மருத்துவ சிகிச்சை சார்ந்தது, 2) இலக்கிய சார்ந்தது, 3) தத்துவம், சமூகவியல் சார்ந்தது, 4) நரம்பியல் சார்ந்தது என நான்காக பிரிக்கலாம்.
1) மருத்துவ உளவியல் (clinical pysychology)
முதலாவது வகைமையில் தமிழில் ருத்ரன் மிகவும் ரசனையாக, எளிமையாக எழுதியிருக்கிறார். நான் பதினான்கு வயதில் அவரை வாசிக்கத் தொடங்கித் தான் உளவியலில் ஆர்வம் கொண்டேன். அவர் எடுத்துக் கொண்ட கேஸ்கள் பற்றின குறிப்புகள் இன்னும் நினைவில் உள்ளன. குறிப்பாக ஒரு மனச்சிதைவு (schizophrenia) ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பல வருடங்கள் மனநல விடுதியில் கழித்த, பணக்கார குடும்பத்தை சேர்ந்த, ஒரு இளம் பெண். அவரை சரி செய்யவே முடியாது எனும் நிலை. சில வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் ருத்ரன் ஒரு திருமண நிகழ்வுக்கு செல்லும் போது அப்பெண் அழகாக அலங்கரித்துக் கொண்டு கையில் விளக்குடன் விருந்தினர்களை வரவேற்றபடி நிற்கிறார். விசாரித்த போது அப்பெண்ணின் உறவினப் பெண்ணுக்குத் திருமணம் எனத் தெரியவருகிறது. அப்பெண்ணின் பெற்றோரிடம் பேசுகிறார். குணமாகாத நிலையில் அவரை மனநல விடுதியில் இருந்து அழைத்து வந்து விட்ட பின் ஒருநாள் திடீரென அவரது மனச்சிதைவு மறைந்து விட்டது. அதன் பிறகு பல வருடங்கள் அவர் முழுமையான நலத்துடன் இருக்கிறார் என்கிறார். இதைப் பற்றி சொல்லும் ருத்ரன் இது போன்ற புதிர்கள் உளவியலில் உண்டு, மனித மனத்தின் ஊடுபாதைகளை யாராலும் கணிக்க முடியாது, வரையறுக்க முடியாது என்கிறார். சிறுவயதில் உறவுகளை, சமூகத்தை, சின்னச்சின்ன வருத்தங்களை, அவநம்பிக்கைகள், தாழ்வுமனப்பான்மையை புரிந்து கொள்ள நான் அவரது எழுத்துக்களையே திரும்பத் திரும்ப படித்தேன். குறிப்பாக டெஸி டெரட்டா எனும் நீதிக்கவிதையை அவர் விளக்கி உள்ள ஒரு நூல். நான் அந்த காலத்தில் வாங்கின நூல்களில் இன்றும் தொலைக்காமல் வைத்திருப்பவை ருத்ரனின் நூல்களே.
இவரது நூல்களில் எனக்குப் பிடித்தமானவை:
“தேவைகள் ஆசைகள்” (என் பதின்வயதில் இதை ஒரு ஐம்பது தடவையாவது படித்திருப்பேன்.)
“உன்னை அறிந்தால்”
“மனநோய்கள் - சிகிச்சை முறைகள்”
“டெஸிடெரட்டா”
ஒரு உளவியலாளர் (psychologist) என்பவர் தெரப்பி அளித்து மனச்சிக்கலை விடுவிப்பவர். உளவியலில் முதுகலை படித்தவர். ஆனால் மனநோய் மருத்துவர் (psychiatrist) என்பவர் மருந்து கொடுத்து குணப்படுத்துபவர். மருத்துவம் படித்தவர். ருத்ரன் ரெண்டாம் வகை. இப்போது பிரசித்தமாக ஊடகங்களில் பேசி வரும் ஷாலினி, உயிர்மையில் கட்டுரைகள் எழுதும் ஆனந்தன் ஆகியோர் இப்படியானவர்களே.

கருத்துகள்