மோடியை பிடிக்குமோ இல்லையோ, அவரை முழுமூச்சாக வெறுப்பவர்கள் இந்தியாவில் மிகவும் குறைவு. அவர் இந்துத்துவ போஸ்டர்பாய் தான், சர்வாதிகாரிதான், ஆனால் ஒரு கனிவான வயோதிக பிம்பம் அதற்கெல்லாம் மேலெழுந்து மறைத்து விடுகிறது. கடந்த ஆறாண்டுகளாக அவர் தன்னை களங்கமற்ற, சூழ்ச்சியற்ற, குழந்தைத்தனமான, தேசபக்தி மிக்க மனிதனாக காட்டி பளபளப்பான பிம்பத்தை கட்டமைத்து வந்துள்ளார். மற்ற பாஜக தலைவர்களைப் போல அவர் முரட்டுத்தனமாய் பேசுவதோ, வன்மத்தை உடல்மொழியில் காட்டுவதோ இல்லை. சர்ச்சைக்குரிய கருத்துக்களை சரியாக தேர்தல் பிரச்சாரங்களின் போதுதான் சந்திரமுகியாகி சொல்லுவார். ஆனால் தேர்தல் முடிந்ததும் கங்கா ஆகி விடுவார். இவரா அப்படி சொன்னாரு என நாம் யோசித்து மறந்து விடுவோம்.
மோடிஜி ஒரு பக்கம் வலுவான, ஆதிக்கவுணர்வு கொண்ட தலைவர், ஆனால் மற்றொரு பக்கம் அவரது பேச்சிலும், முகத்தோற்றத்திலும், சிரிப்பிலும், தழுதழுக்கும் குரலிலும் ஒரு வெகுளித்தனம், ஒரு பலவீனம் வெளிப்படுகிறது. இந்த காம்பினேஷன் தான் அவரது பலம். இது பிற பாஜக தலைவர்களிடம் இல்லை.
மோடிக்கு நேரெதிர் நிலையில் பிற பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் தம்மை காட்டிக் கொள்கிறார்கள் - “துலுக்கனை அடிடா வெட்டுறா கொல்றா” என கதறுவது, முசுடுபோல முகத்தை வைத்துக் கொள்வது, போராட்டக்காரர்களை தாக்கி அழுக்கு படி நேரடியாகவே தொண்டர்களுக்கு ஊடகங்கள் வழி ஆணை வழங்குவது, பெண்களைப் பற்றி கேவலமாக பேசுவது (அல்லது நடிகையின் இடுப்பை அணைப்பது), கோமூத்திரம் குடித்தால் கொரோனா குணமாகும் என ‘அறிவுரைப்பது’ என மோடி ஆட்சியின் அத்தனை எதிர்மறையான போக்குகளுக்கும் அவர்கள் முகமாகிறார்கள்; அவர்களை சமூகவலைதளங்களிலும் ஊடகங்களிலும் மக்கள் விமர்சிக்க விமர்சிக்க மோடிஜியின் புனித பிம்பம் வளர்ந்து கொண்டே போகிறது; தன்னைச் சுற்றி சகதி அதிகமாக அதில் மிதக்கும் அவர் ஒரு தூய வெள்ளைத்தாமரையைப் போல அவர் ஜொலித்துக் கொண்டே போகிறார்.
இந்த கொரோனா கால தகிடுதித்தங்கள், கொடூரமான முடிவுகள் கூட மோடியின் மீது ஒரு சமூகக் கோபத்தை உண்டுபண்ண வில்லை. மாறாக அக்கோபம் திரண்டு நிம்மி மேடம் மீதும் அமித் பாய் மீதும் திரும்புகிறது. நிம்மி மேடம் என்ன சொன்னாலும் செய்தாலும் வறுத்தெடுக்கப்படுகிறார். நம் இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிக அதிகமாய் வெறுக்கப்பட்ட நிதியமைச்சர் அவராகவே இருக்க முடியும். அண்மையில் அமித் பாய் கொரோனா வந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன போது கடுமையான வெறுப்பலை ஒன்று சமூகவலைதளங்களில் அவருக்கு எதிராக கிளம்பியது. “சாவுடா” என சிலரும், “நாங்க அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லாமல் தெருவில் கிடக்க உனக்கு மட்டும் தனியார் ஐந்து நட்சத்திர ஆஸ்பத்திரியா?” என பலரும் கேட்டனர். இப்படி வெகுண்டெழுபவர்கள், கசப்பை வெளிப்படுத்துபவர்கள் பாஜக எதிர்ப்பாளர்கள் அல்ல; பொதுமக்கள் தாம்; இதற்குக் காரணம் அமித் பாய் மீதான கோபம் அல்ல, இந்த அரசின் செயல்பாடு மீதான கோபம். மோடி மீது காட்ட முடியாததை இவர்கள் மீது காட்டுகிறார்கள். நிம்மி மேடத்தைப் போன்றே இன்று இந்தியாவில் மிகவும் வெறுக்கப்படுகிற தலைவர்களில் ஒருவராக அமித் பாய் மாறி வருகிறார்.
இந்த நல்ல போலீஸ்-கெட்ட போலீஸ் கூட்டணி பாஜகவுக்கு இப்போதைக்கு சாதகமாக அமைந்தாலும், போகப் போக அடுத்தகட்ட நகர்வுக்கு பாதமாகிறது. அடுத்த தேர்தலுக்குப் பின் பாஜகவின் பிரதமர் தேர்வாக அமித் பாயே இருப்பார் என்பது பலரின் கணிப்பாக இருந்தது, பின்னர் யோகி ஆதித்யநாத்தாக இருக்கலாம் என்றார்கள். ஆனால் ஷாவின் பிம்பம் முரட்டு பீஸ் என ஆகி விட்டது, அதை வைத்து ஓட்டு வாங்க முடியாது. மோடியே பிரதமர் வேட்பாளராக முன்னின்று தேர்தலில் அடுத்து வென்று ஓய்வு பெற்று தன் நண்பர் அமித் பாய்க்கு பதவியை கொடுத்தாலும் மக்கள் செல்வாக்கு இல்லாமல் பாயால் தாக்குப்பிடிக்க முடியாது. யோகிக்கு உள்ள ரௌடி போலீஸ் பிம்பம் உ.பிக்கு வெளியே அவரது அரசியல் நலன்களை சேதப்படுத்தும். ஆர்.எஸ்.எஸ்ஸின் நாக்பூர்-வாழ் சகுனிகள் யாரைத் தேர்கிறார்கள் என்பதற்கான சமிக்ஞைகளை 2023இல் நமக்கு தருவார்கள் என நினைக்கிறேன். ஆனால் இப்போதைக்கு “கட்டம்” சரியில்லை.
மோடிதான் இப்போதைக்கு அவர்களிடம் உள்ள பொன்முட்டையிடும் வாத்து. அடுத்த கட்ட தலைமையில் யாரையும் மோடிஜி வளரவும் விடவில்லை, இருக்கிறவர்களும் தெலுங்குப்பட வில்லன்களாகத் தோன்றுகிறார்கள். மோடியை நம்பியே மொத்த வடக்கத்திய அந்தண-பனியா கூட்டணியே பிழைக்கிறது. வாத்தும் ஒருநாள் முட்டையிடுவதை நிறுத்தும். காங்கிரஸ் இப்போது சந்திக்கும் தலைமை நெருக்கடி பாஜகவை சூழும் நாள் ரொம்ப தொலைவில் இல்லை. அதற்கான முதல் சமிக்ஞை தான் ஒரு உள்துறை அமைச்சர் நலம் பெற்று மீளக் கூடாது என எளிய மக்களே கூட்டம் கூட்டமாய் சாபம் விடுவது!

கருத்துகள்