முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லூயி கிளைக் - 2020 நோபல் பரிசை வென்ற கவிஞர்



லூயி கிளைக் ஒரு அமெரிக்க பெண் கவிஞர். 77 வயதாகும் இவர் இவ்வருடத்திற்கான இலக்கிய நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார். பழைய படங்களில் வாணிஶ்ரீயின் சாயல் இருக்கிறது. நான் இவரை அதிகம் படித்திருக்கவில்லை. செய்தி கேள்விப்பட்டதும் இவரது மொத்தத் தொகுப்பை (Louis Gluck: Poem 1962 - 2012 ) தரவிறக்கி சுவாரஸ்யமாய் பட்ட தலைப்பிலான கவிதைகளை முதலில் படித்தேன். கணிசமான கவிதைகள் சிறியவை. பின்நவீன தாக்கம் ஆச்சரியமாக இல்லவே இல்லை. கச்சிதமான நவீனத்துவ கவிதைகள். கராறான வடிவ ஒழுங்கை கொண்டவை. அனேகமாய் எல்லா கவிதைகளிலும் மரணம் வந்து போகிறது. குழந்தைகளைப் பற்றி அதிர்ச்சிகரமான சித்திரங்களை அடிக்கடி உருவாக்குகிறார் - குறிப்பாய் இறந்து போகும் குழந்தைகள். இதற்காக இவர் விமர்சனத்துக்கு உள்ளாகினாலும், குழந்தைகளை அதிர்ச்சிகரமாய் சித்தரிப்பதை விட மரணத்தை தழுவும் குழந்தைகளிடத்தும், பிறக்கும் மதலைகளித்தும்தன்னை வைத்துப் பார்ப்பதையேஇவர் விரும்புகிறார் என்றே நான் புரிந்து கொள்கிறேன். மரணமுறும் அல்லது மரணத்தின் விளிம்பில் இருந்து வாழ்வுக்கு நகர்ந்து வரும் குழந்தைகளிடம் ஒரு சன்னமான பலவீனமான இருப்பு உள்ளது, தொட்டால் உடைந்து போகும் குமிழ்களைப் போல அவர்கள் இருக்கிறார்கள். குழந்தைமை என்பதே காலத்தின் இன்மையை, காலமற்ற நிலையை நோக்கிய இறைஞ்சலாக அவர் பார்க்கிறார் என நினைக்கிறேன். இது வழக்கமான ரொமாண்டிஸ பார்வைக்கு நேரெதினாது (ரொமாண்டிஸ கவிஞர்கள் குழந்தைமையை களங்கமின்மையின், தூய்மையின், பாவங்கள் தீண்டாத நிலையின் உருவகமாகக் கண்டார்கள்). 


கிளைக்கை முதலில் படிக்கும் போது இவரெல்லாம் ஒரு பெரிய கவிஞரா எனும் எண்ணம் ஏற்படும் - ஏனென்றால் ஒரு வசீகரமான மொழியோ ஸ்டைலோ, வித்தியாசமான ஆளுமையோ இவரிடம் இல்லை. மிக மிக சன்னமாய், துண்டுத்துண்டாய் எழுதுகிறார். உணர்ச்சிகரமான நாடகீயமான எழுத்துநடை இல்லை. ஆனால் கவனித்து படித்தால், பல கவிதைகளை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்திப் பார்த்தால் ஒரு உக்கிரமான தீவிரமான கவிஞர் இவர் எனத் தோன்றுகிறது - குறிப்பாக இருப்பு, மரணம் குறித்த இவரது கவிதைகள் முக்கியமானவை.


இவர் நோபல் பரிசுக்குத் தகுதியானவரா என்றெல்லாம் எனக்குத் தெரியவில்லை - நோபல் கிடைத்தவர்கள் எல்லாரும் நமக்குப் பிடித்தவர்கள் அல்லரே. நோபல் கிடைக்காதவர்களை நாம் நிராகரிக்கிறோமா என்ன? எத்தனையோ பரிசுகளைப் போல இதுவும் என்றே நான் பார்க்கிறேன்; எல்லா கவிஞர்களுக்கும் இப்படி உலகமே (அல்லது ஒரு மாநிலமோ ஊரோ தெருவோ) திரும்பிப் பார்க்கும் சந்தர்ப்பம் அமையும் - அப்போது அவர்களைப் படிக்கவும் பேசவும் செய்ய வேண்டும். இது லூயி கிளைக்குக்கான வேளை. அவரையும் பொருட்படுத்தி வாசிக்கையில் ஒரு புதிய உலகம் நமக்கு வசமாகிறது.


லூயி கிளைக்கின் கவிதைகள் அறுபதுகளின் பின்னமைப்பியல் பெண்ணியக் கவிதைகளில் இருந்து எவ்வளவு விலகி இருக்கின்றன என்பதே என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் சில்வியா பிளாத்தின் கவிதைகளுக்கு சற்று நெருக்கமாய் உள்ளன (பிளாத் அளவுக்கு உரக்கப் பேசும் இயல்பு இவருக்கு இல்லையெனிலும்). அதனாலே தமிழ் பெண்ணிய கவிஞர்களிடம் இருந்து இவரது கவிதைகள் நெடுந்தொலைவு விலகித் தெரிகின்றன.

 தமிழில் கலாப்ரியாவின் கவிதைகளை ஆச்சரியமாய் இவை ஒத்துள்ளன - கலாப்ரியாவின் கவிதை ஒன்றை எடுத்து மரணத்தை ஒரு டோஸ் கலந்தால் கிளைக்கின் கவிதை வந்து விடும். அத்தோடு கொஞ்சம் நாடகீயமான தருணங்களை கலந்தால் போகன் சங்கரின் கவிதை வந்துவிடும் (அவருக்கு இக்கவிதைகள் பிடிக்கும் என கணிக்கிறேன்.) சுருக்கமாய், கிளைக் ஒருஅமெரிக்க கலாப்ரியா


உங்கள் வாசிப்புக்காக எனக்குப் பிடித்த கிளைக்கின் கவிதைகளில் சிலவற்றை மொழியாக்கியிருக்கிறேன். இங்கு இரண்டைத் தருகிறேன் - இக்கவிதைகளில் என்னைக் கவர்ந்தது அவர் எப்படி மரணத்தை ஒரு பின்னோக்கிய பயணமாக உருவகிக்கிறார் என்பது.



“COTTONMOUTH COUNTRY


Fish bones walked the waves off Hatteras.

And there were other signs

That Death wooed us, by water, wooed us

By land: among the pines

An uncurled cottonmouth that rolled on moss

Reared in the polluted air.

Birth, not death, is the hard loss.

I know. I also left a skin there.”


விரியன் பாம்புகளின் தேசம்


ஹத்தெரெஸில் இருந்து அலைகளில் நடந்தேறி வந்தன மீன் எலும்புகள்.

மரணம் காதல்மொழி பேசி நீரில் கவர்ந்திழுக்கிறது,

 மண்ணிலும் வசீகரிக்கிறது என்பதற்கு

 அறிகுறிகள் தோன்றின: பைன் மரங்களுக்கு இடையே

பாசியில் உருளுகிற, அசுத்தமான காற்றை உறிஞ்சி வளர்ந்த,

நீண்ட ஒரு விரியன் பாம்பு.

துயரமான இழப்பென்பது பிறப்பே, இறப்பு அல்ல.

எனக்குத் தெரியும். நானும் அங்கு ஒரு சட்டையை விட்டு வந்தேன்.


“LATE SNOW


Seven years I watched the next-door

Lady stroll her empty mate. One May he turned his head to see

A chrysalis give forth its kleenex creature:


He’d forgotten what they were. But pleasant days she

Walked him up and down. And crooned to him.

He gurgled from his wheelchair, finally


Dying last Fall. I think the birds came

Back too soon this year. The slugs

Have been extinguished by a snow. Still, all the same,


She wasn’t young herself. It must have hurt her legs

To push his weight that way. A late snow hugs

The robins’ tree. I saw it come. The mama withers on her eggs.”


பின்பனி


பக்கத்து வீட்டுப் பெண் தன் காலியான துணையுடன் நடைபழகுவதை

ஏழு வருடங்களாய் பார்த்திருந்தேன். ஒரு மே மாதத்தில் அவன் தனது தலையை உயர்த்தி நோக்கினான்

ஒரு பொற்புழு தனது டிஷ்யூபேப்பர் சிசுவை பிரசவிப்பதைக் காண.


அவை என்னவென அவன் மறந்திருந்தான். ஆனால் மகிழ்ச்சியான தினங்களில்

அவள் அவனை மேலும் கீழுமாய் தள்ளிச் சென்றாள். இதமான குரலில் பாடினாள்.

அவன் தன் சக்கரநாற்காலியில் இருந்து கிளுக்கிளுக் என சப்தமிட்டான், இறுதியாக


கடந்த இலையுதிர் பருவத்தில் இறந்துபோனான் அவன். அந்த ஆண்டில் பறவைகள்

சீக்கிரமே திரும்ப வந்துவிட்டன என நினைக்கிறேன்இலையட்டைகள் ஒரு பனியில் முழுக்க அழிந்து போயிருந்தன. இருந்தாலும், இவ்வளவு ஆகியும்,


அவள் இளமையை இழந்திருந்தாள். அப்படி அவனது எடையை

உந்தித் தள்ளி அவளுக்கு கால்கள் வலித்திருக்கும். ராபின் பறவைகளின்

மரத்தை ஒரு பின்பனி தழுவுகிறது. நான் அது வருவதைக் கண்டேன். தாய்ப்பறவை அடைகாத்தபடி வாடுகிறது.


(அடுத்து வரும் பதிவுகளில் கிளைக்கின் வேறு சில கவிதைகளோடு வருகிறேன்)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...

பக்தியைக் காட்சிப்படுத்தி அழிப்பது

  விஜய் தேவாலயத்தில் மண்டியிட்டுப் போய் வழிபடும் காணொளியைக் கண்டேன். திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆயர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் இவ்வாறு விஜய் செய்தார், இதனால் திருச்சியில் உள்ள 35% கிறிஸ்துவ வாக்காளர்களை அவர் கவர முடியும் என்று ஒன் இந்தியா இணையதளத்தில் தெரிவித்திருக்கிறார்கள். எனக்கு இது ஏதோ ஒரு நேர்ச்சையாகவும் இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. கிறித்துவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் பண்ணுவதாகத் தோன்றவில்லை. முன்பு ஆடு அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு சூளுரைத்தார். அது பதவி உயர்வுக்காக ஒரு சோசியர் சொல்லி அவர் செய்ததே என்று ஒரு பாஜக தலைவர் நேர்முகமொன்றில் சொல்லியிருந்தார். விஜய்யின் இம்முயற்சியும் ஒருவிதத்தில் அப்படியாகவே இருக்க வேண்டும் - அப்படியே இருந்தாலும் பெரிய பலனிருக்காது. தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் எப்படியும் கடவுள் நம்பிக்கையின் பொருட்டு வாக்களிப்பதில்லை. மதம் ஒரு சமூக மதிப்பு மட்டுமே இங்கு. ஆனால் இது அது மட்டுமல்லவும்தான். இம்மாதிரி அந்தரங்கமான செயல்களை அதைச் செய்பவர்களே தம் அரசியலுக்காகப் பயன்படுத்த...