ஈழத்தில் நடந்த தமிழர் போராட்டம் இயக்க வடிவம் பெற்று பின்னர் ஒரு பகுதியில் ஆட்சி அமைத்து அதன் பின்னர் வல்லரசுகளின் ஆசியுடன் புலிகளுக்கு எதிரான ஒரு அநீதியான போராக மாறி, லட்சக்கணக்கானோர் இன அழித்தொழிப்புக்கு ஆளானதை அறிவோம். இந்த விசயத்தில் ஒரு வினோதம் பின்னர் நடந்தது - இந்த இன அழிப்புக்கான மொத்த பழியையும் புலிகளின் மீதே சுமத்துவது. இதை victim blaming என்பார்கள். தலித்துகள் கூலிங்கிளாசும் ஜீன்ஸும் அணிந்து வன்னியப் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என பாமக பேசுவதைப் போல. ஒரு பலாத்காரம் நடந்தால் ஒரு தரப்பினர் அந்த பெண் ஒழுக்கங்கெட்டவள் எனப் பேசுவதைப் போல. திட்டமிட்ட தாக்குதல் மூலம் ஒரு தரப்பு மக்களைக் கொன்று விட்டு அவர்களும் தான் கலவரத்தில் ஈடுபட்டார் என்பதைப் போல. யூதர்களை ஜெர்மனியில் நாஜிக்கள் அழித்தொழித்த போது ஒரு சாரார் - நாஜி அல்லாதோர் கூட - “இந்த யூதர்களும் சளைத்தவர்கள் அல்ல, அவர்களின் தன்னலமே இந்நிலைக்குக் காரணம்” என பழியை மாற்றிப் போட்டார்கள்.
இந்த பாதிக்கப்பட்டவர்களை பழிப்பதில் தமிழர்களும் ஒரு பகுதி ஈழத்தமிழர்களும் ஈடுபடுவதை அறிவோம். ஏன் இப்படி செய்கிறார்கள்?
இரண்டு காரணங்கள்:
1) “நாங்கள் அமைதியை விரும்புகிறோம்” - மணிரத்னம் போன்றோரின் படைப்புகளில் இப்படியான ஒரு தொனி வரும். இது ஒரு கார்ப்பரேட்வாத கதையாடல் - நவதாராளவாத பொருளாதாரம் கொழிப்பதற்கு ‘அமைதி’ அவசியம். ஆனால் இந்த அமைதிக்குள் இருக்கும் போது தான் மக்கள் உங்கள் கண்முன்னால் பெருங்கூட்டமாய் அழிக்கப்பட்டதைப் பார்க்கிறீர்கள். அப்போது ஒரு நிம்மதியின்மை ஏற்படுகிறது - உற்பத்தி, நுகர்வு, துய்ப்பு என இருப்பதே ‘அமைதி’. இதில் உள்ளார்ந்து உங்கள் நினைவுகள் சார்ந்த ஒரு நிம்மதியிழப்பு வரும் போது அப்பழியை பேசிப்பேசி பாதிக்கப்பட்டவர்கள் பால் போட்டு விடுவது. அநீதி இழைத்தவர்கள் மீது போடலாமே? முடியாது. அவர்களே உங்கள் முதலாளிகள். அவர்களே ஆளும் வர்க்கம். அவர்கள் நிம்மதியிழந்தால் உங்கள் ‘நிம்மதியும்’ கெட்டு விடும் என அஞ்சுகிறீர்கள்.
அமைதியை விரும்புவோர் ஏன் அமைதிக்கு மிக அதிகமாய் குந்தகம் விளைவித்தோரை குற்றம் சாட்டுவதில்லை என்பதில் தான் உள்ளது இந்த பாசாங்கின் மையம்.
முரளிதரன் பேசும் போது, “முன்பு புலிகள் இருந்த போது பிரதான சாலை வழி போக முடியாது, சிங்கள அரசியல் தலைவர்கள் மீது புலிகள் குண்டு போடுவார்கள், தாக்குவார்கள், அதனால் நாங்கள் சுற்றி வளைத்து பயணிக்க வேண்டி வந்தது, ஒருநாளும் நிம்மதி இருந்ததில்லை” என்கிறார். ஆனால் எங்குமே அவர் சிங்கள ராணுவத்தினர்களும், சிங்கள பேரினவாதிகளும் செய்த கொடுங்குற்றங்களைப் பற்றிப் பேசுவதில்லை. எளியோருக்கும் வலியோருக்கும் இடையே சண்டை நடக்கும் போது எளியோரை ஆதரிக்க வேண்டும் என்பது உலக நியதி. இதில் தமிழர்-சிங்களவர் வித்தியாசம் கூட இரண்டாம் பட்சமே. முரளிதரனால் ஏன் அப்படி செய்ய முடியவில்லை என்றால் அவருக்கு சிங்கள அரசியல்வாதிகளின் ஆதரவு வேண்டும் என்பதால் அல்ல. அதற்கு அவர் அமைதியாக இருந்து விட்டுப் போகலாமே. அவர் அடிமனத்தில் இந்த எண்ணமே இருக்கிறது - அவருக்கு நிம்மதி வேண்டும் - உள்ளார்ந்த நிம்மதி - அதற்கு நினைவுகள் ஏற்படுத்தும் நிம்மதிழப்பு அவருக்கு பெரும் தொந்தரவாகிறது. அதற்காகவே இப்படிப் பேசுகிறார்.
அடுத்து இலங்கையை பிரதிநுத்துவம் செய்த தமிழராக முரளிதரனுக்கு தன் தேசியம் சார்ந்த ஒரு பிரச்சனை ஏற்படுகிறது - அவருக்கு இலங்கை அரசு ஆரம்பத்திலிருந்தே எல்லா வித ஆதரவுகளையும், மரியாதையையும் கொடுக்கிறது. அவரது பந்து வீச்சு சட்டவிரோதமானது என சர்ச்சை வெடித்த போது இலங்கை கிரிக்கெட் வாரியம் கடைசி வரை அவருக்காக போராடியது. சிங்கள் ரசிகர்களும் அவருக்காக கைதட்டுகிறார்கள். அவர் இலங்கை தேசியவாதத்தை ஏற்கிறார். ஆனால் ஈழப்போராட்டம் அவருக்கு ஒரு முரணை, அதனாலான அகத்தொந்தரவை அளிக்கிறது. பிற தமிழர்களுக்கு வரலாற்றுரீதியாகவே இத்தகையை மரியாதையும் ஆதரவும் இலங்கை அரசால் ஏன் வழங்கப்படவில்லை என யோசிக்க அவர் தயாரில்லை. ஏனென்றால் அவரது தேசிய உணர்வை அது நொறுக்கி விடும். இலங்கை இறையாண்மை ஒருவித சிங்கள இறையாண்மை எனப் பார்க்க அவர் விரும்பவில்லை. “இவன்கள் ஏன் இப்படி தொந்தரவு கொடுக்கிறார்கள்?” என்றே அவரது மனம் சிந்திக்கும். அது ஏன் மாறாக சிந்திக்கவில்லை என்பதற்கு அடுத்து வருகிறேன்.
2) அரசியல் நீக்கம்:
அரசியல் நீக்கமானது நவதாராளாவாதத்தின் அடிப்படையான ஒரு கொள்கை, அது மக்களிடையே ஒரு பொது சுபாவமாகப் படிகிறது. நீங்கள் நமது பள்ளிக்கல்வியில் இருந்தே அரசியல்ரீதியான கருத்துக்களை எங்கும் பொது உரையாடல்களில் காண முடியாது. நமது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளிலும் அரசியல் சித்தாந்த கருத்துக்கள் இராது. நான் கல்லூரியில் சமூகவியல் வகுப்புகளில் போய் அமர்வேன். அங்கு சமூகப் பிரச்சனைகள் சார்ந்து தீவிர விவாதங்கள் எழும் போது மாணவர்கள் இவற்றை அதிகமும் தமது தனிப்பட்ட கண்ணோட்டத்தில் இருந்தே நோக்குவதை, மிக மிக அரிதாகவே அரசியல் சார்ந்து, சித்தாந்தம் சார்ந்து யோசிப்பதைக் காண்கிறேன். ஏனென்றால் இந்த மாணவர்கள் தனியார் பள்ளிகளால் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். அங்கு மாணவர்கள் செய்தியைக் கூட வெறும் செய்தியாக, அரசியலற்றதாகவே பார்ப்பார்கள். அரசுப்பள்ளிகளும் ஒன்றும் மேலில்லை.
ஏன் ஒரு சமூகம் அரசியலை யோசிக்க வேண்டும், ஏன் அரசியல் சார்ந்து ஒரு விசயத்தைப் பார்க்க வேண்டும்?
ஒரு சமூகம் குடிமை சமூகமாக மாற அது ‘அதிகார’ அரசியலில் பங்கேற்க வேண்டும். அதிகார அரசியலுக்குள் வர அது சித்தாந்த அரசியலை ஏற்க வேண்டும். இல்லாவிடில் அது தொடர்ந்து சுரண்டப்படும், இனவாத அழிப்புக்கு ஆளாகும், இதை உணராமலே சதா கையேந்தும் நிலையில் இருக்கும், இதை உணராதிருக்கும்படி நவதாராளாவாதம் நுகர்வு வாழ்க்கையில் மக்களை அதிகமாய் தள்ளும்: நமது வேலைகள் நம்மை நமது இருப்பில் இருந்து அந்நியப்படுத்துகின்றன, வெறுமை தோன்றும். வெறுமை அதிகமாக நாம் குடி, கேளிக்கை, சினிமா என சீரழிவோம். அரசியல் பேச்சு எழும் போது இவர்கள் நம்மிடம் “அரசியல் பேசினால் நிம்மதி போய் விடும், நிலையின்மை வரும், வறுமை ஏற்படும்” என அச்சுறுத்துவார்கள். இவை பொய்ப்புரட்டு என யோசிக்கும் நிலையில் நாம் இருக்க மாட்டார்கள். நாம் ஒரு குடிமை சமூகமாக அல்ல நுகர்வு சமூகமாகவே எஞ்சுவோம்.
தேர்தலின் போது பணம் வாங்கி வாக்களிக்கிறார்கள் என இம்மக்களை கேலி வேறு பண்ணுவோம். எல்லாவற்றையும் நுகர்வாக்கும் இந்த பொருளாதார அமைப்பே தேர்தலிலும் ஊழலைக் கொண்டு வருகிறது என நமக்குப் புரியாது. நான் அரசியலற்றவன், நடுநிலை என்று பேசிகிறவர்கள் இப்படியாக நுகர்வைத் தவிர எதுவும் முக்கியமில்லை என சிந்திக்கும் ‘அப்பாவிகளே’. இவர்களே புலிகள் உள்ளிட்ட ஆயுதமேந்திய குழுக்களின் போராட்டத்தை ஆதரிக்காதவர்கள். ஏனென்றால் இவர்கள் என்றுமே அரசியல்மயப்பட்டதில்லை. வெள்ளைக்காரர்கள் இந்திய துணைக்கண்டத்தை ஆண்ட காலத்தில் இருந்தே இவர்கள் அப்படித்தான். வெள்ளையர்கள் நல்லவர்கள் என நம்புவதே நிம்மதியாக ஒரு காலத்தில் இங்கு இருந்தது. (வெள்ளையர்கள் இந்தியாவை சிறப்பாக ஆண்டார்கள் என்பதான வசனங்களை அடிக்கடி பெருமூச்செறிந்து சொல்வார்கள்.) வெள்ளையர் காலனியவாதத்தின் பிள்ளைகளான நம்மைப் போன்றே ஒரு பகுதி இலங்கைத் தமிழர்களும் இருந்தார்கள். அவர்கள் அரசியல் நீக்கத்தை விரும்பினார்கள். “சிங்களவாதத்துக்கு எதிரான போராட்டம் எங்கள் அன்றாட வாழ்க்கையை பாதித்தது, ‘நிம்மதியை’ ஒழித்தது, புலிகளால் நாங்கள் நிம்மதியிழந்தோம்.” எனக் கோரும் இவர்கள் வேறெந்த விதத்தில் (அஹிம்சையாகப்) போராடினார்கள்? தமிழர் சார்பான அரசியல் கட்சிகள் தோன்றின காலத்தில் இருந்தே அங்கு பிரச்சனைகள் இருந்தன. ஆனால் பேரினவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் திரண்டு தெருவுக்கு வந்தார்கள் என எந்த வரலாறும் அங்கு இல்லை.
ஆயுதம் ஏந்திய, ஏந்தாத இந்த போராட்டங்களும், எதிர்ப்புகளும் தோன்றிய போதே தமிழர் சமூகம் இலங்கையில் தீவிரமாய் அரசியல்வயப்படுகிறது. எதற்குப் போராடணும், அமைதியாகப் போலாமே எனக் கேட்டவர்கள், இன்றும் கேட்பவர்கள் அரசியல்வயப்படுவதை, ஒரு குடிமை சமூகமாய் உருமாறுவதை விரும்பாதவர்கள். அவர்கள் பேரினவாதத்தால் தாம் ஒடுக்கப்படுவதை கண்மூடி ஏற்றுக்கொண்டே, எல்லா வன்முறைகளின் பழியையும் ஆயுதம் தரித்த போராளிகள் மீது போடுவதை வசதியாக கருதினார்கள். அவர்களே இன்றும் புலம்பெயர் தமிழர் மத்தியில் ‘புல்லுருவிகளாய்’ இருக்கிறார்கள்.
நான் வலியுறுத்தி சொல்கிறேன் - நான் ஆயுதமேந்திய போராட்டத்தை ஆதரிக்கவில்லை. (வலியவனே அதில் ஜெயிக்க முடியும்.) ஈழத்தில் அது ஏற்பட்டு விட்டது. அதில் வெல்வதற்கான சக்தி புலிகளுக்கு இல்லை என்றதால் தோற்றார்கள், ஆனால் தோல்வியின் பக்கத்தில் நிற்பதே நீதி. இப்போது போய் அதன் மொத்த பழியையும் புலிகள் மிது போடுவது கயவாளித்தனம்.
புலிகள் ஆயுதமேந்திய போராட்டத்தை பெரும் இயக்கமாய் தோற்றுவித்திருக்காவிட்டால் அங்கு மக்கள் அமைதியாக, புன்னகை பூத்த படி வாழ்ந்திருப்பார்கள் என ஒரு தரப்பினர் நம்புகிறார்கள். இல்லை. சிறுபான்மைத் தமிழர்களை எதிரியாக்கிய ஒரு இனவாத அரசியல் அங்கு நீண்ட காலமாய் வாக்கரசியலாகி இருக்கிறது. அதைத் தக்க வைக்க அவர்கள் பல வித ஒடுக்குமுறைகளை அவிழ்த்து விட்டபடி இருந்திருப்பார்கள். எந்த அடிப்படை உரிமையும் இல்லாத அடிமைகளாக்கி நாயாய் நடத்தியிருப்பார்கள். புலிகளின் இயக்கம் இதில் ஒரு இடைநிறுத்தத்தை கொண்டு வந்தது, ஆனால் யுத்தம் வெடித்த போது சிங்களவர்கள் தம் நீண்ட காலத் திட்டத்தை நிறைவேற்றினார்கள். ரத்தத்தைக் காட்டி சிங்கள மக்களை இப்போதைக்கு அமைதிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இனவாதத்தின் ரத்தவெறி சுலபத்தில் அடங்காது. அடுத்த அரை நூற்றாண்டில் அவர்களின் பெரும்பான்மைவாத அரசியலைப் பொறுத்து இந்தியாவில் உள்ள CAA போன்ற பல ஒடுக்குமுறைகள் அங்கும் சட்டரீதியாகவே நிகழும். எல்லா பேரினவாத அரசியலும் இறுதியில் ஜெர்மனியிலே போய் முடியும். தவிர்க்கவே முடியாது. அடுத்த அரை நூற்றாண்டுக்குள் இங்கு இஸ்லாமியரும் அங்கு தமிழர்களும் மீண்டும் குடியுரிமை இழப்பு, அடிப்படை உரிமைகள் இழப்பு போன்ற கொடுமைகளை பரவலாக - சட்டரீதியாக - சந்திப்பார்கள். இரண்டு நாடுகளிலும் தடுப்பு முகாம்கள் அன்றாட எதார்த்தமாகும். அப்போது இலங்கையில் பழிபோட (போராட) புலிகள் இருக்க மாட்டார்கள்.
தமிழர்களுக்கு ஈழப்போரில் நடந்த உண்மை தெரியாது, அவர்கள் கற்பனை செய்து கண்ணீர் வடிக்கிறார்கள், போரின் போது எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை, இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள் என்பதெல்லாம் அநியாயம். தமிழர்களில் ஒரு சிறிய தரப்பினர் மட்டுமே ஈழ ஆதரவு அரசியலை முன்னெடுக்கிறார்கள். ஆனால் கணிசமான தமிழர்கள் கடந்த அரை நூற்றாண்டாக அரசியல்வயப்படாமலே வெறும் நுகர்வு, சாதிய சமூகமாக இருந்து வருகிறார்கள். அவர்களே இப்போது பேஸ்புக்கிலும் முரளிதரனின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி ஏன் நடிக்கலாகாது, அது படைப்பு சுதந்திரம், சினிமாவை அரசியல்மயப்படுத்தக் கூடாது, தடை கோரும் அரசியல் பாசிசமாகும் என்றெல்லாம் அபத்தமாய் எழுதுகிறார்கள்.
இதற்கு என்னுடைய பதில் இது?
அப்படத்தின் படப்பிடிப்பை வன்முறை கொண்டு தடை செய்தாலோ, படவெளியீட்டை தடுத்தாலோ தான் தப்பு. ஆனால் அப்படம் எடுக்க வேண்டாம் எனக் கோருவதில் எந்த தப்பும் இல்லை.
அரசியல் இல்லாத கலைப்படைப்பே இல்லை; எந்த படத்திலும் ஒரு மறைமுக பிரச்சாரம் உண்டு; இப்படம் நிச்சயமாய் சிங்களவர்-ஈழத்தமிழர் உறவை அரசியல்நீக்கம் செய்து ஒரு “லா லா லா” விக்கிரமன் பட பாணி உறவாக சித்தரிக்கவே வாய்ப்பதிகம். இல்லாவிடில் “இரண்டு இனங்களுமே சம அளவில் பாதிக்கப்பட்ட ஒரு போர்” என பொய்யை கட்டியெழுப்பி எனும் வரலாற்றில் வெள்ளையடித்து விடுவார்கள்.
ஒரு “சுத்தமான” விளையாட்டுப் படமாக இதை எடுக்கக் கூடாதா?
முரளிதரன் பாத்திரத்தில் தமிழ் பேசி விஜய் சேதுபதி நடித்தாலே அது அரசியல் படமாகி விடும். தவிர்க்கவே முடியாது. பாஜக கட்சியில் இருக்கிற ஒரு இஸ்லாமிய தலைவரைப் பற்றி படமெடுக்கிறார்கள் என வைப்போம். (அதில் மம்முட்டி நடிக்கிறார் என நினைப்போம்.) என்னவாகும்? அவர் இஸ்லாமியர் பற்றி பேசாமல் நடித்தாலே கூட அங்கு ஒரு இந்துத்துவ பிரச்சார அரசியல் ஏற்பட்டு விடும். தவிர்க்க முடியாது. ஒரே வழி இப்படத்தை நேரடியாய் சிங்களத்தில் எடுத்து வெளியிடுவது. படம் முழுக்க முரளிதரன் பாத்திரம் தமிழ் அடையாளமே அற்றவராக சிங்கள் மொழி மட்டுமே தெரிந்தவராகக் காட்டட்டும். முரளிதரன் பிறப்பால் சிங்களவர், மதத்தால் பௌத்தர் எனக் காட்டி விடுங்கள். பிரச்சனையே வராது. முடியாதில்லையா? அப்போது பிரச்சனை வரத்தான் செய்யும்.
பிரச்சனையை யாருமே கிளப்பவில்லை. ஒரு திறந்த புண்ணைப் போல அது ஏற்கனவே அங்கு இருக்கிறது. அதைப் பாருங்கள் எனக் கோருகிறோம். அதைப் பற்றி பேசுங்கள், இனவாதிகளை தொடர்ந்து எதிர்க்க இதை பயன்படுத்துங்கள் என்கிறோம்.
800 படத்துக்கு எதிரான தீ பரவட்டும்!

கருத்துகள்