முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரு மாற்றுத் தேர்தல் முறை

 



நான் முந்தைய பதிவில் குறிப்பிட்டதைப் போன்ற (சாதி/மத அடிப்படையிலான) தேர்தல் முறையை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் எனும் கேள்வி உங்களுக்கு எழலாம். ஒருவிதத்தில் இது சுலபமானது: நாடு முழுக்க எல்லா மாநிலங்களுக்கும் ஒரே எண்ணிக்கையில் எம்.பிக்கள் தாம் இருக்க வேண்டும். (காஷ்மீர், தமிழகம் போன்ற மாநிலங்கள் ஒடுக்கப்படுவதை தவிர்க்க, இந்தி-சார்பு அரசியலை முடிவுக்குக் கொண்டு வர இப்படி ஒரு ஏற்பாடு).


 அடுத்து, ஒரு மாநிலத்தில் இத்தனை சாதிகள் என கணக்கெடுக்கிறோம். ஏற்கனவே தீர்மானித்துள்ள எண்ணிக்கைப்படி ஒவ்வொரு சாதிக்கும் ஒரு சமமான எண்ணிக்கையிலான பிரதிநிதிகளை அனுமதிக்கிறோம். (குறைந்தபட்ச எண்ணிக்கையில் தொகை கொண்ட சாதிகளுக்கு மட்டுமே பிரதிநுத்துவம். பத்திருபது பேர் மட்டும் இருந்தால் கிடையாது. குறைந்தபட்ச எண்ணிக்கையில் சாதியினர் இல்லாத ஒரு மாநிலத்தில் ஒருவர் எம்.எல்.ஏவோ எம்.பியோ ஆக முடியாது. ரஜினி போன்றோர், உதாரணமாய்.) சிறு சிறு சாதிக்குழுமங்கள் ஒரு மாநிலத்தில் அதிகமாய் இருக்கும்பட்சத்தில் அதற்கு ஏற்ப இலக்கு எண்ணை கூட்டலாம், அல்லது ஒவ்வொரு சாதிக்குமான பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம். அப்படி எம்.பிக்களின் எண்ணிக்கை கூடினாலும் நடுவண் அரசு அமையும் போது ஒவ்வொரு மாநிலமும் தீர்மானிக்கப்பட்ட இலக்குக்குள் வரும்படி எம்.பிக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். உதாரணமாய், ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் சாதிப்பிரிவுகள் அதிகம் என்பதால் அங்கு எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கலாம், மற்றொரு மாநிலத்தில் குறையலாம். ஆட்சி அமைப்பதற்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கௌக்கு குறைவாகவோ கூடுதலாகவோ எம்பிக்கள் ஒரு மாநிலத்தில் இருந்து ஆட்சி அமைக்க போக முடியாது. உபரி எம்பிக்கள் பாராளுமன்றம் செல்லலாம், ஆனால் ஆட்சியில் பங்கு பெற முடியாது. உத்தர பிரதேசத்துக்கும் காஷ்மீருக்கும் ஒரே எண்ணிக்கை தாம்.


மாநிலத் தேர்தலில் தொகுதிவாரியான பிரதிநுத்துவத்தில் பொருளாதார, ஆள் பலம் கொண்ட சாதியினருக்கே மதிப்புண்டு. ஆனால் இந்த சாதி / மத ரீதியிலான பிரதிநுத்துவத்துவத்திலோ எல்லாருக்கும் மதிப்புண்டு. ஒரு மாநிலத்தின் வாக்காளர் எந்த மாவட்டத்தில், கிராமத்தில், சிறுநகரில் இருந்தும் ஓட்டளிக்கலாம்


சரி, எப்படி பிரிப்பது - சாதி அடிப்படையிலா மத அடிப்படையிலா? இதை மக்களிடம் கருத்துக்கணிப்பு எடுத்து முடிவு செய்யலாம். இந்தியாவின் கணிசமான வாக்காளர்களுக்கு சாதிவாரியான பிரதிநுத்துவமே சரியாக இருக்கும். ஆனால் தம்மை எங்கு ஒற்றைத் திரளாய் உணர்கிற இஸ்லாமியர்களுக்கோ, ஆங்கிலோ இந்தியர்கள் போன்றவர்களுக்கோ மதரீதியான தேர்வு பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில், மதம் / சாதி எனும் வகைப்பாட்டை அவர்கள் ஒருமித்து முடிவு செய்தாக வேண்டும். ஆளுக்கொரு திசையில் செல்ல முடியாது.

இதனால் என்ன பயன்?

சாதி மற்றும் (ஓரளவுக்கு) சித்தாந்தத்தின் அடிப்படையில் வாக்களிக்கப்படும் தமிழகம் மாதிரியான மாநிலங்களில் வலுவான சாதிகளே அமைச்சரவையில் பிரதிநுத்துவம் அதிகமாய் பெறுகின்றன. எல்லாரும் ஒரே வாக்கை அளிக்கிறோம். எல்லாரும் ஒரே விதியின் படி வரி அளிக்கிறோம். அரசியலமைப்பின் படி எல்லா சாதியினரும் சமம். ஆனால் ஏன் சில சமூகத்தினருக்கு மட்டும் போதுமான அங்கீகாரம் கிடைப்பதில்லை? ஏனென்றால் நமது மக்களாட்சி அமைப்பு அனைவருக்குமானது எனும் போலித்தனத்தை வைத்து பச்சையான சாதிய, மதரீதியான பெரும்பான்மை அரசியலை முன்னெடுக்கிறது. ஒரு உதாரணத்திற்கு பழங்குடிகளை எடுத்துக் கொள்வோம். பழங்குடிகள் குறைந்தபட்சமாய் உள்ள ஒரு மாநிலத்தில் அவர்களுக்கு பெரும்பான்மை சமூகத்தினருக்கு இணையான எண்ணிக்கையில் கட்டாயமாய சட்டமன்ற, பாராளுமன்ற பிரதிநிதிகள் கிடைப்பார்கள் என்றால் அவர்கள் தம் நிலத்தையும், அடிப்படை உரிமைகளையும் இழந்து இந்நாட்டில் நாய்களைப் போல நடத்தப்படுவது நடக்காது. பொருளாதார, கலாச்சார ரீதியாய் ஆதிக்கம் செலுத்தும் சில சிறுபான்மை சமூகங்களுக்கு தாம் மக்களாட்சியில் பிரதிநுத்துவம் பெறுவதில்லை எனும் விசனம் உண்டு. இது அவர்களை பெரும்பான்மை மதவாதத்தை நோக்கித் தள்ளுகிறது - இப்படித்தான் இந்தியாவில் இந்துத்துவ எழுச்சி நிகழ்ந்தது. இங்கு சமத்துவம் நிலவ வேண்டுமெனில் அது வாக்களிப்பில் இருந்தே துவங்க வேண்டும்


உத்தரபிரதேசம் போன்று மத அடிப்படையில் (இந்துக்கள் vs இஸ்லாமியர்) பிரிந்து கிடக்கும் மாநிலங்களில் மதரீதியில் வாக்களிப்பு நடத்தினால் இரு மதங்களுக்கும் ஒரே எண்ணிக்கையிலேயே பிரதிநிதிகள் அமைய முடியும் என்பதால் அதிக எண்ணிக்கையிலான இந்துக்களால் பயனில்லை. விளைவாக, இந்துத்துவா மதவாதத்தை கைவிட நேரிடும். சாதி அடிப்படையில் நடந்தாலும் அது வர்ணாசிரமத்தை பலவீனப்படுத்தும். (இப்போதைய தேர்தல் முறை சாதி ஒடுக்குமுறையை வலுப்படுத்துகிறது.)


சரி, இப்படி செய்தால் மக்கள் பிரிந்து துண்டுபட்டு விட மாட்டார்களா? மாட்டார்கள். பணமிருக்கிறதோ, எண்ணிக்கை பலமிருகிறதோ இல்லையோ, எல்லாருக்கும் சமமான பிரதிநிதிகள் என்பதால் அரசியல் சாதிகள் இடையில் அல்லாமல் சாதிகளுக்கு உள்ளாக நடக்கும். அதாவது தலித்துகள் உங்கள் பெண்களைக் கவர்கிறார்கள் என ராமதாஸ் உசுப்பேற்றுவதால் எந்த பயனும் இருக்காது. (தொகுதி தான் இல்லையே) தன் சாதியினருக்கு அவர் நேரடியாய் என்ன பங்களிப்பு செய்கிறாரோ அதைப் பொறுத்தே வெற்றி கிடைக்கும்.


மாறாக, இது சாதி மோதல்கள் குறைய இது உதவும். இப்போதையமக்களாட்சிஅமைப்பு மோதலை சாதி/மதங்கள் இடையே தூண்டி விட்டு அவர்களில் வலுத்தவர்களை அரியணை ஏற்றுகிறது. அனைவருக்கும் சம அளவில் கட்டாய பிரதிநுத்துவம் எனும் போது சமூகங்கள் இடையே வெறுப்பு, போட்டி, கசப்பு இருக்காது.


தம் சாதியுடன் அடையாளப்படுத்த விரும்பாதவர்கள் யாருக்கு வாக்களிக்க? அவர்கள் பிற சாதியில் தமக்கு கட்சி அரசியல் சார்ந்து பிடித்த ஒருவருக்கு வாக்கை அளிக்கலாம்.

 

திராவிடம், முற்போக்கு அரசியல் போன்ற சித்தாந்த ரீதியிலான ஒருங்கிணைப்புகளுக்கு இதனால் தேவையில்லாமல் ஆகுமா? சித்தாந்த அரசியல் காலாவதி ஆகுமா?


ஆகாது. மாநிலங்கள் தம் நலன்களை நடுவண் அரசுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள திராவிடம் போன்ற சித்தாந்தங்கள் பயன் தரும். குறிப்பாக இட ஒதுக்கீட்டுக்காக குறிப்பிட்ட சாதிகள் இணைந்து கூட்டமைப்பை உருவாக்கி தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்


உபசாதிகளை என்ன பண்ணுவது?

உபசாதிகளை ஒரு புள்ளியில் தொகுப்பது தான் தீர்வு.


வரக் கூடிய காலங்களில் மக்கள் அதிகமாய் சொந்த சொகுதியை விட்டு நெடுந்தூரம் பயணிப்பது, மிதவை சமூகங்கள் அதிகம் தோன்றுவது ஏற்படும். இப்போதே அப்படியான புலம்பெயர் தொழிலாளர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு தொகுதி வாரியான தேர்வு முறையினால் பயனில்லை. அவர்களைக் கருத்திற் கொள்ளும் போது தொழில்ரீதியான பிரதிநுத்துவத்தையும் நாம் கூடவே கொண்டு வரலாம். மாற்றுப்பாலினத்தை சேர்ந்தவர்களுக்கு பாலின அடிப்படையில் கூட பிரதிநுத்துவம் கொண்டு வரலாம்


தொகுதிகள், மாநில உணர்வு என்னவாகும்?

 தொகுதி, மாவட்டம், மாநிலம் ஆகியவை ஒருவித கற்பிதமான உருவாக்கம் தாம். குமரி மக்கள் காலங்காலமாய் தாம் மாநில அரசியலில் இருந்து வெளித்தள்ளப்படுவதாகவே கருதுகிறார்கள். மேலும் ஒரு தொகுதியில் எம்.எல். கட்சிப்பணியிலே மும்முரமாக இருப்பார். ஒரு தொகுதியில் பிரச்சனை என்றால் அவரை சுலபத்தில் அதற்குப் பொறுப்பாக்கி பதவியிறக்க முடியுமா? ஆகையால் தான் மக்கள் பணம் வாங்கிக் கொண்டும் சாதி பார்த்தும், அல்லது திருச்சபை சொல்வதைக் கேட்டும் ஓட்டளிக்கிறார்கள். இப்படி மறைமுகமாய் செய்கிற சாதி அரசியலை நேரடியாகவே செய்யலாமே


மாநில உணர்வு மறையாது - மாநில-நடுவண் அரசு எனும் எதிரிணை இதைத் தக்க வைக்கும்.


முதல்வர்? சாதிகள் கூட்டமைப்புகளை உருவாக்கி சுழற்சி முறையில் ஒருவரை முதல்வராக்கலாம். தலித் தலைவர் ஒருவர் முதல்வராகும் கனவு இதில் நனவாகும். மதரீதியிலான தேர்வு என்றால் இன்னும் சிறப்பு - வருடத்திற்கு ஒரு மதத்தை சேர்ந்தவரை முதல்வராக்கலாம்.


சாதி / மதம் எனும் குறுகிய எல்லைக்குள் நம் அரசியல் மாட்டிக் கொள்ளாதா? மாநில உரிமைக்கான குரல்கள், தமிழுணர்வு ஆகியவை நம்மைப் பாதுகாக்கும். அதே சமயம் அனைவருக்கும் ஒரு பிரதிநிதி ஆட்சியில் இருப்பார்


பின் குறிப்பு: சாதியை இங்கு ஒரு உதாரணத்திற்கே தருகிறேன். ஏதாவது ஒரு அடிப்படையில் அனைத்து பிரிவினருக்கும் சம அளவில் பிரதிநிதிகள் அதிகாரத்துக்கு வர வேண்டும் என நினைக்கிறேன்.அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தொழில் அடிப்படையில் என்றால் இன்னும் மேலானதாக இருக்கும் என நம்புகிறேன். எந்த பிரிவும் இன்றி மக்களை ஒற்றை அடையாளத்தின் கீழ் தொகுப்பதில் ஒரு ஆபத்தான பாசாங்கு உள்ளது. அது பணமும் எண்ணிக்கையும் படைத்த சமூகத்துக்கோ வர்க்கத்துக்கு மட்டும் உணவளித்து மிச்ச பேரை பட்டினி இடுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...