முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சினிமா பிரபலங்களுக்கு ஒரு cooling off காலம் வேண்டும்



சினிமா பிரபலங்கள் சினிமாவில் இருந்து விலகி 20 வருடங்களாவது நின்ற பிறகே அரசியலுக்கு வர வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். அரசியல் பேசுவதில் இருந்து கட்சிக்குள் நுழைவது வரை ஒரு cooling off (தணியும்) காலம் அவசியம். இது அவர்கள் மக்களை உணர்ச்சி சார்ந்து சுரண்டாமல் இருக்க, திசைதிருப்பாமல் இருக்க உதவும். ராணுவ தளபதிகள், போலீஸ் அதிகாரிகள் போன்ற சமூகத்தாக்கம் செலுத்தும் இடத்தில் உள்ளவர்களுக்கும் இத்தகையை ஒரு ஓய்வுக்காலம் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும்.

சினிமா சார்ந்த பிம்ப அரசியலில் தார்மீக ரீதியாக ஒரு பிழை உள்ளது. ஒருவர் அவருக்கானதை மட்டுமே, அவர் தானாக உருவாக்கிய ஒரு பெயரை மட்டுமே பயன்படுத்துவது நியாயம். ஒரு கூட்டுப்படைப்பாக்கத்தின் விளைவாக உருவாகிற பிம்பத்தை அல்ல. எம்.ஜி.ஆரோ ரஜினியோ விஜய்யோ உருவாக்கிய நாயக பிம்பத்துக்கான மொத்த உரிமையும் தார்மீகரீதியாக அவர்களுக்கானது அல்ல - இயக்குநர், திரைக்கதையாளர், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகை, வில்லன், துணைப் பாத்திரங்கள் எனப் பலர் சேர்ந்தே ஒரு நாயக பிம்பம் தோன்றுகிறது. இது ஒரு சமூகக் காவலன், போராளி, மீட்பன் எனும் பிம்பமாக தோன்றியதென்றால் அது சொந்தமாக உருவாக்கப்படுவதல்ல, அது பொய்யானதுமே. ஒரு அரசியல் தலைவர் களத்தில் செயல்பட்டு உருவாக்கும் பிம்பம் ஒப்பிடுகையில் உண்மையானது, அது புனைவு அல்ல. சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வரும் போது அது செப்படி வித்தை போல ஆகி விடுகிறது. இல்லாத ஒன்றை, தமக்கு சொந்தமில்லாத ஒன்றை மக்களிடம் தமதாகக் காட்டி மொட்டையடித்து விடுகிறார்கள். இது ஒருவகை சூழ்ச்சி, இதை சட்டரீதியாக தடுக்க வேண்டும். 
உ.தா., “முதல்வன்” படத்தை எடுத்து கொள்ளுங்கள் - ஒரு தொழில்ரீதியாக அரசியல்வாதியின் இடத்தில் நெறியாளரை மக்கள் முதல்வராக தேர்ந்தெடுப்பதில் ஒரு அநீதி உள்ளது. முன்னவர் தன் ஊடக வெளிச்சத்தைக் கொண்டு தன்னைப் பற்றின ஊதிப்பெருக்கப்பட்ட சித்திரத்தை உருவாக்கி அதை வைத்து வாக்குகளை வாங்குகிறார், அவரது ஒருநாள் முதல்வர் பிம்பமும் அப்படி ஊடகங்களில் நிகழ்த்தப்படுவது தானே ஒழிய, அசலானது அல்ல; பின்னவரோ அதை தன் அன்றாட நடவடிக்கைகள் மூலம் ஏற்படுத்தியாக வேண்டும். சினிமாக் கலைஞர்கள் போன்று, அரசு அதிகாரிகளில் அரசியலில் கோலோச்சும் போதும் இத்தகைய அநீதியே நடக்கிறது.
 ஒரு டிஜிபி தனக்கு அளிக்கப்பட்ட அசைன்மெண்டின் படி ஒரு ரௌடியை, தாதாவைப் பிடிக்கிறார் என்பதும் ஒரு குமாஸ்தா ஒரு திட்டப்பணியின் ஆவணங்களை சரிபார்த்து அடுத்த டேபிளுக்கு நகர்த்துவதற்கும் பெரிய வித்தியாசமில்லை. ஆனால் டிஜிபியை ஊடகத் துணியுடன் ஒரு நாயகனாக ‘உயர்த்த’ முடியும். (குமாஸ்தாவை முடியாது) அப்படியே இவரை ஏன் அமைச்சர், முதல்வர் ஆக்கக் கூடாது என பிரச்சாரம் செய்யவும் முடியும். அவர் சமூகத்திற்காக தன் சொந்த முயற்சியின் கீழ் மட்டும் இதை செய்யவில்லை, ஒரு பெரிய அணியுடன், அமைப்பு தரும் அதிகாரத்துடன் அனைத்துவித பாதுகாப்புகளுடன் இதைச் செய்கிறார் என நாம் பார்ப்பதில்லை. இதுவும் நடைமுறை அரசியலும் முற்றிலும் நேரெதிரானவை என்றும் புரிந்து கொள்வதில்லை. உ.தா., ஒரு அதிகாரி ஒரு வேலையை சரியாக செய்யவில்லை என்றால் மக்கள் மத்தியில் அவர் வில்லன் ஆவதில்லை. ஆனால் ஒரு அமைச்சர் எடுக்கிற தவறான முடிவு கடும் கண்டனங்களுக்கு ஆளாகும். பின்னவருக்கு உள்ள பொறுப்பு முன்னவருக்கு தன் செயல்களில் இல்லை. ஒரு அதிகாரி பழியை பிறர் மீது போட்டு ‘நான் என் கடமையை ஒழுங்காய் செய்தேன் என சல்ஜாப்பு காட்டி தப்பிக்க முடியும். மோடி நாளை பணமதிப்பிழப்பை நான் செய்ய வில்லை எனக் கூற முடியுமா?

ஒரு ராணுவ அதிகாரி பாகிஸ்தான் அல்லது சீனாவுடன் போர் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் போதும் தம் கடமையையே ஆற்றுகிறார். அப்போது போரில் தோல்வி அடைந்தால் ஒரு அரசுக்குக் கிடைக்கும் பழி அவருக்குக் கிடைக்காது. வென்றாலோ அவர் தேசத்தின் நாயகனாக ஊடகங்களால் கொண்டாடப்படுவார். நாளை அவர் இதை வைத்து அரசியலில் நுழைந்து தேசபக்தியை தூண்டும்படிப் பேசி சுலபத்தில் எம்.எல்.ஏ ஆகி விட முடியும். இது ஒரு பச்சையான ஏமாற்றுவித்தை. இது போலி பிம்பத்தை வைத்து வியாபாரம் செய்யும் மொள்ளமாரித்தனம். ஆனால் நம் அரசியல் சட்ட அமைப்பு ஏனோ இதை அனுமதிக்கிறது. அதனாலே மக்கள் காலங்காலமாய் ஏமாற்றப்படுகிறார்கள்.

இருபது வருடங்கள் cooling off period எனக் குறிப்பாய் சொல்லக் காரணம் உண்மையான அரசியல் நாட்டம் கொண்டோர் அப்படி தம் சினிமா வாழ்வில் இருந்து விலகி இருந்து நேரடி அரசியலில் இல்லாமல் சமூக சேவை மட்டும் செய்ய வேண்டும். ரஜினியை, எம்.ஜி.ஆரைப் போன்ற உச்ச நட்சத்திரங்கள் தம் வயோதிகத்தின் போது அரசியலுக்கு வருவதை இது தடுக்கும். ஒன்று அவர்கள் தம் பணத்தை, புகழை தியாகம் செய்ய வேண்டும் அல்லது சினிமாவுக்காக அரசியலை தியாகம் பண்ண வேண்டும். 70 வயதில் சினிமா ஓய்வு பெறுகிறவர்கள் 90 வயதில் தான் அரசியல் பிரவேசம் பண்ண முடியும் என்பதால் நடைமுறையில் இது சாத்தியமாகாது. இது அரசியலுக்கும், மக்களுக்கும் ஒரே சமயம் நல்லது. புல்லுருவிகளை, ஏமாற்றுப்பேர்வழிகளை, கட்சியில் வேடந்தாங்கல் பறவைகளாய் இளைப்பாற வரும் நடிகர்களை இவ்வாறு தடுக்கலாம்.

 ஒரு நடிகர் தன் படங்களின் வழியாக, தான் நெறியாள்கை செய்யும் பிக்பாஸ் போன்ற ஷோக்கள் வழியாக தன் எதிர்கால அரசியலுக்காக சுயநலப் பிரச்சாரம் செய்வது தனக்கு பாத்தியதை இல்லாத ஒன்றை தந்திரமாய் எடுத்தாள்வதாகும். எம்.ஜி.ஆரில் இருந்து ரஜினி வரை இத்தகையை திருடர்கள் அரசியலில் அதிகம்.

நாம் இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

கருத்துகள்

Mohamed Shahabudeen இவ்வாறு கூறியுள்ளார்…
[26:227]நம்பிக்கை கொண்டு, நன்னெறியான வாழ்வு நடத்தி, கடவுள்-ஐ அடிக்கடித் துதித்து, மேலும் தங் களுடைய உரிமைகளுக்காக எழுந்து நிற்பவர்கள் விலக்களிக்கப்படுகின்றனர். நிச்சயமாக, வரம்பு மீறு பவர்கள் தங்களுடைய இறுதி விதி என்ன என்பதை கண்டு கொள்வார்கள்.

காண்க.

இறுதி வேதம்

https://m.facebook.com/story.php?story_fbid=2985155634896968&id=100002076822321

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மிச்சமுள்ள வேலை (குறுங்கதை) - ஆர். அபிலாஷ்

  வார இறுதி. காலை முதலே வேலைக்காரியை பத்து தடவைகளுக்கு மேல் அழைத்தாகி விட்டது. தவறான எண்ணென்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதுடன் தெலுங்கில் திட்டவும் செய்கிறார்கள். அவள் எண்ணை மாற்றியதுடன் எங்கே போனாள்? பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. உணவை ஆர்டர் செய்து வாங்கி நானும் மனைவியுமாக அமைதியாக உண்டோம். பிள்ளைகள் இருவரும் என் சகோதரியின் வீட்டுக்கு விடுமுறையைக் கொண்டாடப் போயிருக்கிறார்கள். வீட்டு மணியடித்தது. நான் போய்த் திறந்தால் வேலைக்காரியின் தாயான எழுபது வயதுக் கிழவி நின்று கொண்டிருந்தார். நான் அவரைக் கண்டதும் திகைத்து ஒரு பக்கம் சாய்ந்து நின்று கொண்டேன். அவர் அலட்சியமாக என்னை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தார். என் மனைவி தன் கையில் இருந்து தட்டைக் கீழே போட்டு விட்டுக் கத்துகிற சத்தம் கேட்டது. நான் தடுமாறியபடி உள்ளே வந்தேன். யாரை அழைப்பது, என்ன சொல்வது எனத் தெரியவில்லை.   அவர் உள்ளே சென்று வேலையை ஆரம்பித்ததுடன் சமையலறையில் யார் பொருட்களை மாற்றி வைத்தது என உரிமையுணர்வுடன் என் மனைவியை விசாரித்துக் கொண்டிருந்தார். என் மனைவி இன்னும் பேசும் இயல்பு நிலைக்கு வரவில்லை என்பதில் திகை...

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

பிரபலங்களின் நோக்கம்

  நீங்கள் ஒரு பிரபலத்தின் நேர்முகத்தைப் பார்க்கிறீர்கள். அவர் தன் வாழ்வில் வெற்றி பெற சரியான உணவின்றி அலைந்து திரிந்ததைச் சொல்கிறார். நீங்கள் கண் கலங்குகிறீர்கள். அவர் தன் குடும்பத்தைப் பிரிந்து மாநகரத்தில் தனிமையில் அனாதையாக வாழ்ந்தைச் சொல்கிறார். நீங்கள் மனமுடைகிறீர்கள். இன்னொருவர் தான் தன் காதலனால் ஏமாற்றப்பட்டதைச் சொல்லி அதனால் ஏற்பட்ட மனச்சிக்கல்களை, பதற்றத்தை, காயங்களை வர்ணிக்கிறார். உங்களுக்கு இரக்கமும் ஆத்திரமும் வருகிறது. இந்த அனுபவங்களும் உணர்வுகளும் பொய்யல்ல. அவரும் நீங்களும் அடிப்படையில் மனிதர்களே. அதேநேரம், இங்கு எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வியுண்டு - ஏன் இம்மாதிரியான கதையாடல்களை ஊடகங்கள் உங்கள் முன்வைக்கின்ற்ன? அவர்களின் நோக்கம் என்ன? ஒரு விசயம் உண்மையாக இருந்தாலும் அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வெகுஜன ஊடகம் நினைப்பதில் ஒரு உத்தேசம் இருக்குமே? பிரபலமும் நீங்களும் வர்க்கரீதியில் வெவ்வேறு இடங்களில் இருக்கிறீர்கள். இது ஒரு விலகலை ஏற்படுத்துகிறது. பிரபலங்கள் இந்த நாட்டின் பெரும்பணக்காரர்களை, அதிகார வர்க்கத்தின் பகுதியாக உள்ளார்கள். இந்த இடைவெளியை நிரப்புவது அவ...