முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வலதுசாரிகள் - வீழ்ச்சியின் மீது வளரும் காளான்கள் (1)




 

1943 ஜூன் 22இல் பிரிட்டன் தனது RAF போர் விமானங்களை அனுப்பி ஜெர்மனிய நகரமான கிரேபெல்ட்டின் மீது குண்டுகளைப் பொழிந்தது; இதில் 136 ஜெர்மானியர் கொல்லப்பட்டனர். பிரிட்டனின் இந்த விமானத் தாக்குதலின் நோக்கம் ஜெர்மானிய குடிமக்களிடம் அச்சத்தை தோற்றுவித்து ஹிட்லரை பலவீனப்படுத்தி, அவருடைய மக்கள் ஆதரவை நிலைகுலையச் செய்வது; அதுவரையில் வலுவான உருக்கு மனிதராகத் தோன்றியவரை கையாலாகாதவராகக் காட்டினால் ஜெர்மானிய குடிமக்கள் அவரை வெறுக்கத் தொடங்குவார்கள் என பிரிட்டன் கணக்குப் போட்டது. ஆனால் நடந்ததோ வேறு. இந்த குண்டு பொழிவு மக்களிடம் பீதியை, பதற்றத்தை உருவாக்கி அது தேசபக்தியின் எழுச்சியாக தடம் மாறி விரைவில் இதே மக்கள் பெரும் திரளாக ஹிட்லர் பின்பு அணிவகுத்தனர். மக்கள் ஆதரவு ஹிட்லருக்கு இன்னும் அதிகமானது. அதாவது இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜிப்படையினர் முழுமையாக அழியும் வரையில் ஜெர்மனியர் முழுமையாக ஹிட்லரை இப்படி நம்பியபடித் தான் இருந்தனர். இப்போது அப்படியேசந்திரமுகிபடத்துக்கு வருவோம்:

 செந்தில் மற்றும் கங்கா வேட்டையபுரம் அரண்மனையில் வந்து தங்குகிறார்கள். அங்கு பேய் இருப்பதாக ஊர்மக்கள் நம்புகிறார்கள். குறிப்பாக சந்திர்முகியின் நகைகள் வைக்கப்பட்டுள்ள அறையை எல்லாரும் அஞ்சுகிறார்கள். ஆனால் சந்திரமுகியின் கதையைக் கேட்கும் கங்காவின் எதிர்வினை மட்டும் வித்தியாசமாக இருக்கிறது - அவள் பரவசமாகிறாள், அறையைத் திறந்து அந்த நகைகளை எடுத்தணிகிறாள். தன்னை சந்திர்முகியாக உணர்கிறாள். (மிச்ச கதைக்கு பின்னர் வருகிறேன்.) ஏன் ஒரு பேயைக் கண்டு ஊரே நடுங்க கங்கா மட்டும் பயப்படவில்லை? இதற்கான பதில் கதையின் பிற்பகுதியில் வருகிறது - கங்கா இளம் வயதில் இருந்தே மனப்பிரச்சனைகளால் உடைந்து போனவள். அவளது மனநோயே அவளை தன்னை வெறுக்க, உலகைக் கண்டு அஞ்சிட வைக்கிறது. அந்த அச்சத்தை உள்ளே அடக்கி வெளியே இயல்பாக தன்னைக் காட்டிக் கொள்கிறாள். இதுவே பின்னர் அவள்சந்திரமுகியாககாரணமாகிறது. ஒடுக்கப்பட்டவளாய் தன்னை கருதும் அவள் ஆண்களைப் பழிவாங்கும் பேய்வடிவாய் தன்னை பின்னர் உருவகிக்கிறாள். அச்சமும் வன்மமும் கைகோர்க்கிறது. வலதுசாரி மனநிலை என்பது இப்படியான ஒரு சந்திரமுகி பேய். அது பெரும்பான்மை மக்கள் தொகையிடம் பொருளாதார ஸ்திரமின்மை குறித்த பாதுகாப்பின்மை, அச்சம், எதிர்காலம் குறித்த அச்சம் பூதாகரமாகும் போது பூட்டப்பட்ட அறையில் இருந்து வெளியே வரும்.

 ஜெர்மனியில் முப்பதுகள், நாற்பதுகளில் பெரும் பொருளாதார சரிவு ஏற்படுகிறது. அங்கு ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மறைமுகமாய் உலவி வந்த யூதவெறுப்பு இனவாத பேய் இப்போது நகைகளை எடுத்தணிந்து சந்திரமுகியாக முச்சந்திக்கு வருகிறது. ஹிட்லரின் நாஜிக் கட்சியினரின் வெறுப்பு பிரச்சாரம் இந்த சமூக அச்சம், பதற்றத்துக்கு வடிகாலாகிறது. பொருளாதாரத்தைப் பற்றின பயம் ஒரு பெரும்பான்மை சமூகத்தின் தன்னிருப்பு குறித்த அச்சமாக, வெறுப்பாக உருக்கொள்கிறது. இந்த காலகட்டத்தில் ஹிட்லர் தொடர்ந்து உலக அரங்கில் ஜெர்மானிய மக்களை அழிப்பதற்காக யூதர்கள் அயல்நாட்டு சக்திகளுடன் கைகோர்த்து சதித்திட்டம் தீட்டுவதாய் பேசுகிறார்; அவரது ஆதரவாளர்கள் இது குறித்து மிகப்பெரிய பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள். யூதர்களுக்குத் தெரியும் தாம் அந்தளவுக்கு எல்லாம் வொர்த்தில்லை என. ஆனால் பெரும்பான்மையான, வலுவான ஆரிய சமூகமோ இந்த பொய்ப்பிரச்சாரத்தை நம்பத் தலைபடுகிறார்கள். யூதர்கள் ஒன்று திரண்டு உலக நாடுகளின் துணையுடன் தம்மை அழிக்கத் தலைப்படுவதாய் சுலபத்தில் நம்புகிறார்கள். இது ஒரு பெரும் தேசியவாத அலை உருவாகக் காரணமாகிறது. அதில் நீந்தி வெற்றிக்கொடியை ஏந்தி அசைத்தவாறு மேலெழுந்து வந்தது ஹிட்லரின் நாஜிக் கட்சி. ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட இங்கிலாந்தின் விமானப்படை தாக்குதல் நிகழ்ந்த போது, குண்டுகள் வெடித்து வாழிடங்கள் அழிந்த போது ஜெர்மானியர்களில் மிதவாதிகள் கூட ஹிட்லர் சொன்னது நிச்சயமாய் உண்மைதான் என நம்பத் தொடங்கினார்கள். அவர்கள் மொத்தமாய் ஹிட்லரின் காலடியில் தலைவணங்கி தம்மை ஒப்படைத்தார்கள். ஜெர்மனி முழுக்க யூதர்கள் கொத்துக் கொத்தாய் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்ட போது அந்த கொடுஞ்செயல்திட்டங்களை செயல்படுத்த பொதுமக்களும் முன்வந்தார்கள். அவர்கள் ஹிட்லரின் மக்கள் படை ஆனார்கள் (ஆர்.எஸ்.எஸ்ஸின் குண்டர் படையைப் போல). இதை நான் ஒரு சந்திரமுகி அலை என்பேன்.

 இந்த அலையில் யாரெல்லாம் நிலையற்று உணர்கிறார்களோ அவர்களெல்லாம் அடித்து செல்லப்படுவார்கள். கடந்த பத்தாண்டுகளில் வலதுசாரி தலைமைகள் உலகமெங்கும் பெற்றுள்ள பெரும் எழுச்சி இப்படியான சந்திரமுகி அலையினால் தோன்றியதே. இதில் சுவாரஸ்யம் என்னவெனில் ஒரு அதிகாரமிக்க மக்கள் தொகுப்பு தம்மை ஒடுக்கப்பட்டவர்களாக, ஆபத்தின் விளிம்பில் இருப்பவர்களாக கற்பனை பண்ணிக் கொள்வது தான். அமெரிக்காவில் நிறைய வெள்ளையர்கள் இப்படி இந்தியர்கள், கறுப்பர்கள், லத்தீன் அமெரிக்கர்கள், குடியேறிகள், ‘அந்நியர்களால்தாம் முற்றுகை இடப்பட்டுள்ளதாய், தம் வாழ்வாதாரத்தை, அதிகாரத்தை, மரியாதையை இவர்களிடத்து இழக்க நேர்வதாய், ஒருநாள் சொந்த நாட்டிலேயே தாம் ஒழிக்கப்படுவோம் என நம்புகிறார்கள். கிறுத்துவர்களில் பலர் தமது சம்பிரதாயங்கள் சீரழிக்கப்படுவதாய் அஞ்சுகிறார்கள். அதனாலே தமிழக பாஸ்டர்கள் சிலரே டிரம்புக்கு ஆதரவு தெரிவித்ததைப் பார்த்தோம். இவர்கள் ஒட்டுமொத்தமாய்வேட்டைய ராஜாவைக்கொன்றால் தம் பிரச்சனை சரியாகி விடும் என நினைக்கிறார்கள். இம்முறை தேர்தலில் பைடன் வெற்றிபெற்றாலும் அவருக்கு எதிராக ஒரு பெரும் தரப்பு வெள்ளையின மேலாதிக்கத்துக்காக டிரம்புக்கும் கணிசமான வாக்குகளை அளித்துள்ளது. இவர்கள் கொடுக்கும் நம்பிக்கையில் தான் டிரம்ப் இப்போதும் தானே வென்றதாய் கோருகிறார். வெள்ளை மாளிகைக்குள் சந்திரமுகியாய் உலவுகிறார். உண்மையான பிரச்சனை அமெரிக்க ஏகாதிபத்யத்தின் நவமுதலாளித்துவ கட்டமைப்பின் சரிவில் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பண வீக்கம் அதிகமாகி உள்ளதில் ஒரு பக்கம் பெரும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிட, மத்திய வர்க்கம் கடும் அழுத்தத்தில் கடன் சுமை மிக்கவர்களாக ஆகி உள்ளனர். இந்த கொரோனா காலத்தில் அமெரிக்காவில் அடிப்படை சிகிச்சைக்கே வழிவகை இல்லாமல் மக்கள் தவித்தனர். இந்த பொருளாதார அழுத்தத்தின் தாக்கத்தை நேரடியாக அல்ல, கலாச்சார, சமூக உளவியல் ரீதியாகவே மக்கள் பொதுவாக உணர்கிறார்கள் என்பது வினோதம். அதாவது மக்கள் பொருளாதார கட்டமைப்புகள் குறித்து விவாதிக்குமளவுக்கு முதிர்ச்சி பெற்றவர்கள் அல்ல. அவர்கள் தமது கடும் அழுத்தத்துக்கான காரணமாக ஒரு மற்றமையை மனதளவில் கட்டமைக்கிறார்கள்; இதை வலதுசாரி தலைமை ஊதி வளர்க்கிறது. ஒரு லத்தீன் அமெரிக்கர், கறுப்பரைக் காட்டி இவர்களால் தான் உங்கள் வாழ்க்கை அலங்கோலமாகி விட்டது எனச் சொன்னால் அவர்களின் பழங்குடி மனது அதை உடனடியாய் ஏற்றுக் கொள்கிறது. இப்படித் தான் ஒருவிதத்தில் வலதுசாரி தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் எழுச்சி பெற்று தலைமைப் பொறுப்பை அடைகிறார்கள்


பத்தொன்பதாவது நூற்றாண்டில் காலனிய மனோபாவம் இங்கிலாந்தில் உச்சத்தில் இருந்தபோது தான் அங்கு ஏற்றத்தாழ்வுகளும் மிகக்கொடுமையாக இருந்தன. எந்த அளவுக்கு என்றால் கடனைத் திரும்ப செலுத்த முடியாத பலரும் சிறைக்கு செல்வார்கள். அவர்களின் பிள்ளைகள் பள்ளிக்குப் போக முடியாமல், சோற்றுக்காக புகைபோக்கிகளுக்குள் நுழைந்து சுத்தம் செய்யும் பணிகளை செய்தனர். (சார்லஸ் டிக்கன்ஸ் தனது பல நாவல்களில் இந்த சூழலை வர்ணிக்கிறார்.) இதே கட்டத்தில் தான் காலனிகளில் அடிமைகளாக உள்ள மக்களைக் காட்டி இனவாத ஆதிக்க அதிகாரத் தரப்பினர் இம்மக்களிடம் தற்பெருமையை, தாம் மேலானவர் என ஒரு உயர்வு மதிப்பான்மையை உண்டு பண்ணினர். சொந்த சமூகத்தில் உள்ள கடும் ஏற்றத்தாழ்வை காணாமல் இருக்க காலனி ஆதிக்கப் பெருமை அந்த கால ஆங்கிலேயர்களுக்கு உதவியது. இது இனப்பெருமையின் அடிப்படையிலான மற்றொரு சந்திரமுகி அலை. இம்மக்களுக்கு வேட்டைய ராஜா நம்மைப் போன்ற காலனியின் பிரஜைகள் தாம். இன்று இதே இனவெறுப்பு தான் மற்றொரு வடிவை மேற்கில் எடுக்கிறது.


இனி இந்தியாவுக்கு வருவோம்


இந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பு கதையாடலை உற்பத்தி பண்ணி பிரச்சாரம் செய்ததில் ஜெர்மானியர், பிரஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர் உள்ளிட்ட இந்தியவியல் (Indolology) வரலாற்றாசிரியர்கள், கோட்பாட்டாளர்களுக்கு முக்கிய பங்குண்டு. காலனிய ஆதிக்கவாதிகளை காலனி மக்களின் மீட்பர்களாக கட்டமைக்க இது உதவியது. வெள்ளையர்கள் இந்தியாவில் தொடர்ந்து இந்து-முஸ்லீம் பிரிவினை நீறுபூத்திருக்கும்படி பல ஆட்சி முடிவுகளை எடுத்தார்கள். இஸ்லாமியர் இந்தியாவில் படையெடுத்து வந்து பல அழிவுகளை ஏற்படுத்தி, இந்துக்களை கொடுமைப்படுத்தி கோயில்களை இடித்தார்கள், பின்னர் வந்த வெள்ளையர்களோ முகலாய ஆதிக்கத்தில் இருந்து இந்தியர்களை மீட்டனர் என இன்று இந்துத்துவர் பேசும் கதையாடலை உருவாக்கி உலவ விட்டது இந்த காலனியாதிக்க இந்தியவியல் வரலாற்றாசிரியர்களே. உருது இஸ்லாமியரின் மொழி, இந்தி இந்துக்களின் மொழி என ஒரு கதையாடலை சுதந்திரத்துக்கு சில பத்தாண்டுகளுக்கு முன்பு வெள்ளை ஆட்சியாளர்கள் உண்டு பண்ணினார்கள். இதே வெள்ளையர்கள் தம் காலத்தில் பாபர் மசூதி பிரச்சனையை இரு தரப்புக்கும் சாதகமில்லாத வகையில் இரு நூற்றாண்டுகளாக தக்க வைத்தார்கள். இறுதியாக இந்தியா-பாக் பிரிவினையை தோற்றுவித்தார்கள். அரசியலில் இருந்து விலகி இங்கிலாந்துக்கு சென்றிருந்த ஜின்னாவை திரும்ப அழைத்து வந்து முஸ்லீம் லீக்கை வலுப்படுத்தி காங்கிரஸுக்கு மாற்று அலை ஒன்றை இஸ்லாமியர்கள் இடத்து உருவாக்க முயன்றார்கள். இதுவே இந்து மகாசபையினருக்கு சாதகமாய் ஒரு சூழலை இங்கு உருவாக்கியது. நீங்கள் இரண்டு விசயங்களை இங்கு கவனிக்கலாம்:

1) சுதந்திரத்துக்கு முன்பான சில பத்தாண்டுகளில் மிகப்பெரிய சமூக நிலை மாற்றங்கள் (அதிகார கட்டமைப்பில், படிநிலையில், பொருளாதாரத்தில், கலாச்சாரத்தில்) இந்தியாவில் நிகழ்ந்தன. உலகப் போர், ஆட்சி மாற்றம் குறித்த பதற்றம் ஒரு சுனாமி அலையாய் இங்கு அடித்தது. இதன் உச்சமே பிரிவினையின் போதான கடும் வன்முறை, மக்களின் கூட்டுக்கொலைகள், பெண்கள் மீதான பலாத்காரங்கள், நிலங்களை இழந்து மக்கள் இடம்பெயர்ந்து பிச்சைக்காரர்களாக முகாம்களில் இருக்கும் நிலை. இஸ்லாமியருக்கான ஒரு தேசம் தோன்றியதாய் உணர்ந்த பெரும்பான்மை இந்துக்கள் தாம் ஒரு பேரழிவின் விளிம்பில் இருப்பதாய் உணர்ந்தனர். இஸ்லாமிய வெறுப்பலை இங்கு தீவிரமாய் எழுந்த காலமானது இங்கு தடுமாற்றங்கள், அச்சம், குழப்பம் அதிகமாய் விளைந்த ஒரு காலம் என்பதை கவனிக்க வேண்டும். இந்த கொந்தளிப்புகள் ஒரு கூட்டு மனநோயாகின்றன. அந்த மனநோயின் அறிகுறியே வலதுசாரி எழுச்சி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

விஜய்யைப் போன்ற பாசிஸ்டுகளை ஏன் ‘நெறிப்படுத்த’ இயலாது? - ஆர். அபிலாஷ்

நண்பர்கள் விஜய்யை திருத்தி நல்வழிப்படுத்தலாம் , அவர் வலதுபக்கம் திரும்பாமல் அவரைத் தடுக்கலாம் என்றெல்லாம் நம்புவதைப் பார்க்கும்போது எனக்கு ஹிட்லரின் வரலாறு நினைவுக்கு வருகிறது . அதை அனைவரும் கட்டாயம் படிக்கும்படி நினைவுபடுத்துகிறேன் . அவர் ஆட்சிக்கு வந்த புதிதிலும் இப்படித்தான் அவர் மிதமான தேசியவாதியாக இருப்பார் , அவரை நல்வழிப்படுத்தலாம் என்று இடதுசாரிகள் உட்பட நம்பினார்கள் . போகப்போக அவரது அரசியலே வேறு என்று புரிந்துகொண்டனர் . அவர் இடதையும் , இடது - மையத்தையும் முழுமையாக அழித்தொழித்தார் . இவ்வரலாற்றைப் அறிந்து வைத்திருப்பது அடுத்தடுத்து தமிழ்நாட்டில் நடக்கப் போவதை கணிக்க நமக்கு உதவும் . ஜெர்மனியில் முதலாம் உலகப்போருக்குப் பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு மக்களாட்சி தோன்றியது . அதை வெய்மர் குடியரசு (1919–1933) என்று அழைத்தார்கள் . எபர்ட் என்பவர் முதல் ஜனாதிபதியாகவும் ஹிண்டெனெப்ர்க் என்பவர்தான் கடைசி ஜனாதிபதியாகவும் விளங்கினார் . இந்த காலகட்டம் முக்கியமானது . முதன்முதலாக சமத்துவம் , சுதந்திரம் , தாராளமயம் கொடிகட்டிப் ...

ஏன் அவர் ஜோசப் விஜய் அல்ல, ‘ஹிட்லர்’ விஜய்

  விஜய்யின் பதவி ஏற்பு நிகழ்வு மட்டுமல்ல , அவரது பிரச்சாரக் கூட்டங்களைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஹிட்லர்தான் நினைவுக்கு வந்தார் . கூடவே மோடியும் . பிரச்சாரத்துக்கு வீர வசனங்கள் , உணர்ச்சிகரமான பேச்சு , பாடல்கள் இயல்புதானே . ஒருவேளை அவரது சினிமா பின்னணி காரணமாக இப்படி நிகழ்ந்திருக்கலாம் என சிலர் கருதலாம் . ஆனால் அத்துடன் சேர்ந்தேதான் பாசிசத் தலைமையும் உருவாகிறது என்று மறந்துவிடக் கூடாது . இத்தகைய தலைமைக் கட்டமைப்பில் ஒவ்வொரு அணுவிலும் ஒரு சேதி ஒளிந்திருக்கும் . இத்தகைய தலைவர்களின் முதற்பண்பே அவர்கள் வெறுப்புப் பேச்சையே அடிப்படையாகக் கொண்டிருப்பர் என்பது .  வெறுப்பு : வெறுப்பென்றால் தனிப்பட்ட வெறுப்பு அல்ல . இது ஒரு உள்ளீடற்ற வெறுப்பு . இதை யார் வேண்டுமானாலும் தமக்கு ஏற்ற வகையில் பொருள்படுத்திக் கொள்ள இயலும் . எவ்வளவு முறை நிரப்பினாலும் நிரம்பாத பலூனைப் போல இந்த வெறுப்பு பெரிதாகிக் கொண்டே இருக்கும் . தான் அதிகாரத்தையும் தன் எதிரிகளையும் நொறுக்குவதாக விஜய் கோரும்போது அவரது ' ரசிகத் திரளுக்கு ...