"க்ரியா பதிப்பகத்தை பற்றி யோசிக்கையில்,90களில் பெற்ற முதன்மை இடத்தை 2000த்துக்கு மேல் அதனால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும்.என்னதான் புத்தக வடிவம் அச்சு நேர்த்தி அட்டைப்பட அழகு எல்லாம் இருந்தாலும்,ஒரு மொழியின் அந்தக் காலகட்டத்தின் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகள் ஆகியவை ஒரு பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்படும்போதுதான் அதன் Pre -eminence ஐத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.க்ரியாவைப் பொறுத்தவரை ஜேஜே சில குறிப்புகளுக்குப்பின்,அதிகமும் மொழிபெயர்ப்பு நூல்களும், தமிழ் அகராதியும்,ஐராவதம் மகாதேவனின் தமிழ் epigraphyயம் தான் பிரதானமாக நினைவுக்கு வருகின்றன.
இமையம்,திலீப் குமார் ந.முத்துசாமி ஆகியோரின் புத்தகங்கள் க்ரியாவில் தொடர்ந்து வெளிவந்தன.இவர்கள் நல்ல எழுத்தாளர்கள் நல்ல படைப்புகளைத் தந்தவர்கள் என்பதில் சந்தேகமில்லை.ஆனால் , ஒரு போதும் தமிழின் முதல் வரிசை படைப்பாளிகள் என்று சொல்ல முடியாது. க்ரியா ஏன் அசோகமித்திரன்,நாஞ்சில்நாடன் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் சாரு நிவேதிதா, யுவன் சந்திரசேகர்,(இன்னும் சிலர் கூட)ஆகியோரது புத்தகங்களை வெளியிடவேயில்லை என்பது புரியவில்லை.ஒரு முதன்மையான பதிப்பகம் என்றால் முதன்மையான எழுத்தாளர்களது புத்தகங்கள் அவர்களிடமிருந்து வந்திருக்க வேண்டுமல்லவா? இது ஏன் நடக்கவில்லை என்பது தெரியவில்லை.
க்ரியாவில் தமிழின் முதன்மையான எழுத்தாளர்களின் புத்தகங்கள் வராததனாலேயே,2000க்கு மேல் அப்பதிப்பகத்தினை நாடிப் போவது குறைந்துதான் போனது.கலைஞன்,காலச்சுவடு, உயிர்மை, கிழக்கு நற்றிணை,வம்சி போன்ற பதிப்பகங்கள் இதில் முன்னிலை பெற்றன. அதற்கு ராமகிருஷ்ணன் அவர்களின் தனிப்பட்ட இலக்கிய ரசனை காரணமாக இருந்திருக்குமா என்றெல்லாம் ஊகிக்கத்தான் வேண்டியிருக்கிறது..போகன் தனது பதிவில் சொல்லியிருந்தபடி க்ரியா ராமகிருஷ்ணனின் பதிப்பக அனுபவங்கள் பதிவாகாமல் போனது பெரிய இழப்புதான்."
- Suresh Venkatadri
இதையே தான் நானும் என் அஞ்சலியில் சொல்லி இருந்தேன். சுரேஷ் வெங்கடாத்ரி ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து இப்போது சொல்லி இருக்கிறார். இந்நேரம் விக்ரமன் பட லா லா லா அஞ்சலிக்காரர்கள் வேற சோலி பார்க்க போயிருப்பாங்க. அதனால் சுரேஷ் துணிந்து கிளம்பி இருக்கிறார்.
ஆனால் இப்போதாவது உண்மையை ஒருவர் சொல்லியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. க்ரியா ராமகிருஷ்ணன் காலவதியாகி 30 வருடங்கள் ஆகின்றன என்பது உண்மை. யுவன், ஜெ.மோவை விடுங்கள் கடந்த இரு பத்தாண்டுகளின் இளைஞர்களையும் அவர் கண்டுகொண்டதில்லை.
ஆரம்பகால நவீனத்துவ இலக்கியத்துடன் அவரது வாசிப்பு சுருங்கியிருக்கலாம் அல்லது சமகால எழுத்து மீது ஒரு ஒவ்வாமை இருந்திருக்கலாம்.
நான் க்ரியா ராமகிருஷ்ணனின் பிரசுரத் தேர்வை அவரது அழகியல் தேர்வின், அரசியல் நோக்கின் மற்றொரு முகமாகவே பார்க்கிறேன். டேவிட் ஷுல்மெனின் புத்தகம் (Tamil) வெளியான போது தமிழ் இலக்கியத்தை பிராமணிய சார்பு, சம்ஸ்கிருதமய இலக்கியமாக அவர் சுருக்கி விட்டதாய், திராவிட இயக்கத்தின் பங்கு, பௌத்த சிந்தனையாளர்களின் பங்கை அவர் இருட்டடிப்ப்பு செய்ததாய் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இதை ஒட்டி பேராசிரியர் அழகரசன் ஒரு முக்கியமான ஆங்கிலக் கட்டுரையை எழுதினார். அதில் அவர் இவ்வாறு கூறுகிறார்: "Though it is wrong to expect references to all modern Tamil writers in such a short account of Tamil language / literature by an Indologist, it is surprising to note that of the six modern writers that he refers to, four were published by the same publisher."
இக்கட்டுரைக்கு ஷுல்மென் பதிலெழுத விவாதம் சூடுபிடித்தது. இதைப் பற்றி சில நண்பர்களிடம் உரையாடிய போது
ஷுல்மெனுக்கு ராமகிருஷ்ணன் செய்த பரிந்துரைகளும் இந்த திராவிட விரோத, பௌத்த இருட்டடிப்பு செய்யும் சாய்வு ஏற்பட ஒரு முக்கிய காரணம் எனக் கூறினர். இதற்கு என்னிடம் நேரடியான ஆதாரம் இல்லை எனினும் ஒரு புரிதலுக்காக இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
க்ரியா ராமகிருஷ்ணனை ஒரு புனிதராக கட்டமைக்காமல் அவரது இலக்கிய அரசியலையும் பேசுவது அவசியம். அவர் கராறாக எடிட் செய்வதனால் சமகால பெரும்படைப்பாளிகளும் இளம் எழுத்தாளர்களும் அவரை அண்டவில்லை என்பது அபத்தமான முட்டுக்கொடுத்தல். பெரும்பாலான படைப்பாளிகள் எடிட்டிங்கை வரவேற்பவர்களே. அப்படி க்ரியாவிடம் சென்று உடன்பட முடியாமல், ஈகொ பிரச்சனையால் யாரும் வெளியேறியதாய் தெரியவில்லை. ராம்கிருஷ்ணன் போர்ச்சூழல் இல்லாமலே தொடர்ந்து ஒரு பங்கருக்குள் வாழ்ந்து வந்தது, இலக்கிய அழகியலைப் பொறுத்து அவர் ஒரு கட்டத்தில் இறுகிப் போனது ஆகியவையே காரணங்கள்.
இறுதியாக, இவை க்ரியா மீதான என் விமர்சனம், குற்றச்சாட்டல்ல. இதற்கு ராமகிருஷ்ணன் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. இது வாசகர்களின் புரிதலுக்காக எழுதப்படுவது. ராமகிருஷ்ணன் உயிருடன் இருந்த போது ஏன் இதை எழுதவில்லை என தூக்கிக் கொண்டு வராதீர்கள். எனக்கும் அவருக்கும் எந்த தனிப்பட்ட பஞ்சாயத்தும் இல்லை. அவரை நான் பார்த்ததோ ஒரு வினாடி பேசியதோ கூட இல்லை.
கருத்துகள்