முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

A Life on Our Planet - வெள்ளைக்காரனின் குற்றவுணர்வுக்கான வடிகால்



நெட்பிளிக்ஸில் பார்க்கக் கிடைக்கும் ஒரு முக்கியமான ஆவணப்படம் A Life on Our Planet. கடந்த அரை நூற்றாண்டில் மட்டுமே எவ்வளவு வேகமாய் நமது உலகம் பல்லுயிர் இருப்பை இழந்து வெற்றிடமாக மாறி வந்துள்ளது, எப்படி ஒரு வனத்தில் உள்ள சிறிய தாவரத்தில் இருந்து மரம் வரை அழிக்கப்படும் போது, அதனால் இயற்கையின் பரஸ்பர ஆதரவு சங்கிலியின் கண்ணியை உடைத்திடும் போது, எப்படி பல உயிரினங்கள் கூடவே அழிகின்றன எனும் பதறச் செய்யும் சித்திரத்தை அளிக்கிறது. என் மனத்தில் தங்கிய ஒரு காட்சி தன்னைச்சுற்றி மரங்கள் வெட்டப்பட ஒரு மரத்தின் மீதிருக்கும் குரங்கு தனித்து விடப்பட்டு குழம்பி எங்கே போவதெனத் தெரியாமல் பார்ப்பது. இது போல பல அழகான கூர்மையான காட்சிகளைக் கொண்டு பிரமாதமாக எடிட் செய்யப்பட்ட ஆவணப்படம்; சூழலியலின் அடிப்படைகளைத் தெரிந்து கொள்ள ஆர்வமேற்படுத்தும் துவக்கப்புள்ளியாக இதைப் பார்க்கலாம்.


அதே நேரம் இப்படம் மீது எனக்கு கடுங்கோபமும் உண்டு.

இதைத் தொகுத்தளிக்கும் ஆட்டன்போரோ சூழலியல் பிரச்சனையின் மையமான முதலீட்டியத்தைப் பற்றி பேசாமல் அதை ஏதோ மனிதப்பொறுப்பு சார்ந்த சிக்கலாக மாற்றுகிறார் என்பது ஏமாற்றமளித்தது. அந்த அரசியல் நீக்கம் ஒரு மோசமான அரசியல்:

 உலகம் முழுக்க இயற்கையை இந்தளவுக்கு கண்மூடித்தனமாய் அழித்தது நம்மைப் போன்ற தனிமனிதர்கள் அல்ல, பெரும்பணக்காரர்களான ஒரு சில முதலீட்டாளர்களும் அவர்களுக்காக மூன்றாம் உலக நாடுகளின் முந்தானையை விரிக்கிற (ஜியின் அரசைப் போன்ற) அரசாங்கங்களும், கூடவே இவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் தாராளமயமாக்கலின் ஆதவரவாளர்களான பொருளாதார நிபுணர்களுமே. ஆனால் அவர்கள் எந்த பொறுப்புணர்வும், குற்றவுணர்வும் இன்றி இதைப் போன்ற ஆவணப்படங்களுக்கு முதலீடு செய்து இது தனிமனிதர்கள் தம் ஆசைக்காக செய்கிற பாவம் என குற்றவுணர்வை நம் மீது திருப்பி விடுகிறார்கள். 


நீங்கள் வலதுசாரியாகவும் சூழலியவாதியாகவும் ஒரே சமயம் இருக்க முடியாது. ஆட்டன்போரோ போன்றோர் இயற்கையை அழித்து நாம் பெற்ற வளர்ச்சி, முன்னேற்றம் என கருதுவது நகரமயமாக்கலின் பளிச்சென்ற சில சௌகர்யங்களை மட்டுமே என்பது இன்னும் அருவருப்பாக இருக்கிறது. இவரது முன்னோர்கள் நமது கீழைத்தேய நாடுகளுக்கு படையெடுத்து வந்து இயற்கையை அழித்து, மனிதர்களைக் கொன்று, அடிமைகளாய் கைப்பற்றி தம் நிலங்களில் வேலை வாங்கி, நமது அத்தனை செல்வங்களையும் அள்ளிக்கொண்டு போய் அதை முதலீடு செய்து வல்லரசுகளாய் வளர்ந்தார்கள். அதற்கு அடுத்து, அவர்கள் பின்னை காலனியவாத காலத்தில் உலகம் முழுக்க இரண்டாவதாய் வியாபாரிகளைக் கொண்டு படையெடுத்து இயற்கையை கருவறுத்து மீண்டும் செழித்தார்கள். ஆட்டன்பரோ போன்றோர்களுக்கு இது குறித்து எந்த அக்கறையும், வெட்கமும் இல்லை. இதைத் தொடாமலே இயற்கை ஏதோ மக்களின் பொறுப்பின்மையால் தானாய் அழிகிறது எனும் கணக்கில் பேசுவார்கள்.

அடுத்து, கடந்த அரை நூற்றாண்டில் காலனிய நாடுகள் பொருளாதார வளர்ச்சியினால் ஆட்டன்பரோவின் முன்னோர்கள் இங்கு உருவாக்கிய கடும் வறுமை உள்ளிட்ட சமூகப்பிரச்சனைகளில் இருந்து மீண்டும் வந்திருக்கிறோம். நமக்கு முன்னேற்றம் என்பதற்கு உள்ள பொருள் சமத்துவம், மாற்றம், விடிவு என்பது. ஆனால் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளின் பால்புட்டிகளுக்கு உள்ள அளவுகோல் வேறு. அவர்களுக்கு நகரமயமாக்கல், பெரிய கட்டிடங்கள், விஞ்ஞானம் கையளிக்கும் வசதிகளே முன்னேற்றம். இந்த வித்தியாசம் முக்கியம். ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சிக்காக நாம் நமது வாழ்வுரிமைகளை இழந்து, வாழ்விடங்களை தொலைத்து நகரத்தில் நாயாய் உழைக்கிறோம். இன்னொரு பக்கம் நம் காற்றை, நீரை முழுக்க காலி செய்யும் பெருமுதலாளிகளுக்கு எதிராக போராடுகிறோம். இரண்டுக்கும் நடுவில் மாட்டித் தவிக்கிறோம். ஆனால் இதைப் பற்றி எந்த அறிதலும் அக்கறையும் இன்றி ஆட்டன்பரோ போன்றவர்கள் ஒரு வசதியான இடத்தில் உட்கார்ந்து மூன்றாம் உலக நாடுகளில் இயற்கை அழிக்கப்படுவதைப் பற்றி விமர்சிக்கிறார்கள்.

அதனாலே அணுவுலைகளால் தம் அன்றாட வாழ்க்கையையும் ஆரோக்கியமும் பாதிக்கப்பட, குடித்த நல்ல தண்ணீர் கூட இல்லாமல் நம் மக்கள் அரசுக்கு எதிராக போராடி உயிர்விடுவதைப் பற்றி இவர்கள் மூச்சு விடாதிருக்கிறார்கள். உலகம் முழுக்க சூழல் நசிவது, அதனால் குரங்கு, பறவை, பூச்சி சாவதைத் தாண்டி இவரைப் போன்றவர்களுக்கு நம்மைப் போன்ற மனிதர்கள் மீது எந்த அக்கறையும் இல்லை என்பதையும் நினைக்க கோபம் வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...