முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸை எப்படி புத்துருவாக்குவது?


காங்கிரஸ் கட்சியின் தலைமையை காந்தி குடும்பம் விட்டு விலக வேண்டும் எனும் கோரிக்கையை வைக்கிறார்களில் ஒரு கவனிக்கத்தக்க குரல் ராமசந்திர குஹா.



காந்தியின் வரலாற்றை எழுதியவர், காந்தி காலத்து காங்கிரஸின் லட்சிய போதத்தை கொண்டாடியவர் எனும் வகையில் அவரது கோரிக்கைக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. ஆனால் நடைமுறையில் இது எந்தளவுக்கு காங்கிரஸுக்கு உதவும்? சோனியா குடும்பம் விலகும்பட்சத்தில் மாற்றுத் தலைமை எதுவாக, எப்படியாக இருக்க வேண்டும்?


1) காங்கிரஸ் ஒரு குடும்பக் கட்சி எனும் பிம்பத்தை உடைக்க இது உதவும் என்கிறார் குஹா - இது ஓரளவுக்கு உண்மையே. ஆனால் இது மட்டுமே அல்ல உண்மை. பாஜகவின் பணபலம் அதை நேரடியாகவும் தேர்தல் பாண்டுகள் வழி மறைமுகமாகவும் ஆதரிக்கும் கார்ப்பரேட்டுகளிடமும் உள்ளது. அதன் கருத்தியல், அதிகாரத் தலைமை ஆர்.எஸ்.எஸ்ஸிடம் உள்ளது. அதன் நடைமுறை செயலூக்கத் தலைமை மோடி, ஷா, நட்டா போன்றோர் வசம் உள்ளது. பாஜக பயன்படுத்துவது நிழலுலகில் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் கொரில்லா செயல்திட்டம் - முதலீடு செய்கிறவர் ஒருவர், திட்டமிடுகிறவர் இன்னொருவர், அதை செயல்படுத்துவபர்கள் இன்னொரு பக்கம், இச்செயல்பாடுகளின் முகமாக முன்வைக்கப்படும் தலைமை வேறு. நிலைமை சாதகமாக இல்லை என்றால், ஆட்சிக்கு வர முடியவில்லை என்றால் இந்த துண்டுத்துண்டான முதலீட்டாளர்கள், செயல்பாட்டாளர்கள்தலைவர்கள் ஆளுக்கொரு திசைக்கு போய் அடுத்து எப்போது மழைபெய்யும் எனக் காத்திருப்பார்கள். காங்கிரஸ் போன்ற மரபான கட்சிகளின் கட்டமைப்பு வேறு - அவர்கள் தமது பணபலத்தை சொத்தாக மாற்றி ஒரு குடும்பத்துடன் குவிப்பார்கள்; தேர்தலுக்காகவும் கட்சி செலவுகளுக்காகவும் பணத்தை தேவையான போது செலவு செய்வார்கள். இயல்பாகவே எங்கு சொத்து குவிகிறதோ அதிகாரமும் அங்கேயே குவியும். இது வாரிசு ஆட்சிக்கு வழிவகுக்கும். பாஜகவும் தவறான வழிகளில் பணமீட்டும், ஊழல் பண்ணும், சொத்தைக் குவிக்கும், ஆனால் அது சில தனிமனிதர்களிடம் மட்டும் சேர்ந்து, அந்த தனிமனிதர்களே அதிகார மையமாகவும் இருந்து சுலபத்தில் அடையாளம் காணப்படும் வகையில் இருக்காது. மோடி-அதானி பினாமி கூட்டணி, ஷாவும் அவரது மகனும் போன்ற விதிவிலக்குகளை தவிர்த்தால் பாஜகவின் தவறுகள், முடிவுகளுக்கு நீங்கள் எந்த அதிகார மையத்தையும் சுலபத்தில் குற்றம் சாட்ட முடியாது. ஒரு அமீபாவைப் போல உருமாறிக் கொண்டே இருக்கும் அதிகார, நிதி மையங்களைக் கொண்டது அக்கட்சி. மோடி ஓய்வு பெற்ற பிறகு அவர்களது கார்ப்பரேட் முகவராக மற்றொரு அதானி தோன்றுவார். இது ரொம்ப இயல்பாக நடந்தேறும் என்பதே அக்கட்சியின் தனியியல்பு

ஆக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் தலைமையை துறப்பது பெருமளவில் காங்கிரஸின் பிம்பத்தை மாற்றாது. அடுத்த கட்ட தலைமை என்பது மீண்டும் காங்கிரஸ் குடும்ப வாரிசுகளாலே அமைந்திருக்கும். வேட்பாளர்களும் அவர்கள் இடையில் இருந்து தான் தேர்வாவார்கள்.


2) காங்கிரஸ் தன் அடுத்த கட்ட தலைமையில் இருந்து ஒரு புதிய கட்சித்தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என் குஹா கோருகிறார். இது கட்சியை புத்துணர்வூட்டி, வாக்காளர்களுக்கு நம்பிக்கையேற்படுத்தும் என்கிறார். ஆனால் இதில் ஒரு ஆபத்து உள்ளது - 1930களில் இருந்தே சங்கிகள் காங்கிரஸில் ஊடுருவி இருக்கிறார்கள். ஹிந்து சபாவுக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ், அதற்குப் பின்னர் பாஜக என பாதி ஹிந்துத்துவா மீதி காங்கிரஸ் கொள்கை என இருக்கிற தலைவர்கள் காங்கிரஸில் அதிகம். வல்லபாய் பட்டேலில் இருந்து பிரணாப் முகர்ஜி வரை இவ்விசயத்தில் ஒரு நீண்ட மரபு உள்ளது. பாபர் மசூதி இடிப்பை அரங்கேற்றி பாஜகவின் ஆட்சி அதிகாரப் பாதையை அமைத்துக் கொடுத்தவரே பாஜக பினாமியான நரசிம்ம ராவ் தானே. எப்போதெல்லாம் வலுவான தலைமையும் தேர்தல் வெற்றியும் அமையுமோ அப்போதெல்லாம் இந்த ஸ்லீப்பர் செல்கள் அமைதியாவார்கள். ஆனால் காங்கிரஸ் பலவீனமாகும் இவர்கள் கட்சியை ஆக்கிரமிக்க முயல்வார்கள். அண்மையில் நாம் பார்த்த காங்கிரஸ் தலைமைக்கு எதிரான கலக நடவடிக்கைகள் வெளியில் இருந்து பாஜக அரங்கேற்றியதே. இதை சோனியா அறிந்திருப்பதால் தான் அவர் இவர்களிடம் கோபம் கொண்டார். இவர்களது கோரிக்கைகளை பொருட்படுத்தி விவாதிக்காமல் இருந்தார். இப்போது காந்தி குடும்பத்தினர் வழிவிடுவது சங்கிகள் காங்கிரஸ் தலைமையை சுலபத்தில் கைப்பற்ற, அமித் பாயின் சாட்டைக்கு ஒடுங்குகிற பீ டீமாக காங்கிரஸ் மாற வழிவகுக்கும்.


3) வேறென்ன வழி? காங்கிரஸ் தனக்கு வெளியே உள்ள மாநிலக் கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி அங்கிருந்து ஒரு தலைவரையும் துணைத்தலைவரையும் தேர்ந்தெடுக்கலாம்; அதாவது காங்கிரஸை ஒரு கட்சி எல்லை கடந்த ஒரு கூட்டமைப்பாக மாற்றி, சரத் பவார், தேஜஸ்வி யாதவ், ஸ்டாலின், பிணறாயி, சந்திரசேகர் ராவ், உத்தவ் தாக்கரே, கேஜ்ரிவால், மம்தா போன்றவர்களை ஆலோசகர்களாக பிரதான பொறுப்பில் நியமிக்கலாம். அவர்களை வெளியில் இருந்து இயக்கும் கொள்கைத் தலைவர்களாகக் கொண்டு, அவர்களின் பரிந்துரைப்படி புதிய காங்கிரஸ் அல்லாத தலைவர்களை செயல்பாட்டுத் தலைமையாக. கொண்டு வரலாம். இந்த இரு நிலைத் தலைமைக்குப் பின்னால் ஒரு மறைமுக / மாய அதிகார மையமாக சோனியாவின் குடும்பம் இருக்கலாம். புதிய தலைமைக்கு தம் கட்சியின் தொண்டர்கள், சிறிய தலைவர்கள் பணிந்து செல்லும்படி சோனியா செய்யலாம். காங்கிரஸுக்கும் பிராந்திய, முற்போக்கு தேசியக் கட்சிகளுக்கும் இடையில் அதிகாரப் பகிர்வு சுலபமாக அமைவதை அவர் உறுதி செய்யலாம்.

 

 இதன் மூலம் காங்கிரஸ் என்றால் ஒரு கட்சி அல்ல, பல பிராந்திய, முற்போக்கு கட்சிகளின் கூட்டமைப்பு எனும் பிம்பத்தை உருவாக்கலாம். தலைமையை சில ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் கொண்டு வந்து அனைத்து மாநிலங்களின் பிரதான கட்சிகளும் அதிகாரத்தைப் பகிரும் நிலையில் மாற்றலாம். இதனால் கிடைக்கும் பயன்கள் என்ன?

1) பலவிதமான கட்சித் தலைவர்களை சுழற்சி முறையில் உள்ளே கொண்டு வரும் போது ஊழல், குடும்ப அரசியல் என காங்கிரஸை ஒரு புள்ளியில் ஆணியடித்து நிறுத்தி விமர்சிக்க முடியாமல் போகும்.

2) கட்சி நிதியும் சொத்தாக, முதலீடாக பல கைகளில் மாறி மாறி வருவது - பாஜகவின் முதலீட்டாளர்களைப் போன்றே - கட்சியமைப்பை லகுவாக, சுலபத்தில் குற்றம் சாட்ட முடியாத ஒன்றாக மாற்றும்.

3) மேலும், கட்சி இந்தியா முழுக்க பரந்து விரிந்திருப்பதான தோற்றம் கிடைக்கும்.

4) எமெர்ஜென்ஸி, போபர்ஸ், சீக்கிய படுகொலைகள் போன்ற முந்தைய வரலாற்று சாபங்களை கடந்து செல்ல முடியும்.

5) மாநிலத்தில் மட்டும் வலுவாக இருக்கும் கட்சிகளுக்கு கட்டமைப்பு இன்றியே தேசம் முழுக்க அதிகாரத்தைப் பரப்ப இது உதவும்.

6) பாஜகவுக்கு எதிரான சிறிய கட்சிகளை, தலைவர்களுக்கு தம் கட்சியை காங்கிரஸுடன் இணைக்காமலே, தங்களுடைய பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பி காங்கிரஸ் அதிகார மட்டத்தில் பதவிகளைப் பகிர்ந்திட நல்வாய்ப்பாக இது அமையும். .தா., வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழகம் போன்ற மாநிலங்களையும், தில்லியையும் தாமே ஆள்வதாய் காங்கிரஸ் கருத முடியும்; மாநிலத் தேர்தல்களின் போது இடங்களுக்காக கெஞ்ச வேண்டியிராது. திமுகவோ கம்யூனிஸ்டுகளோ சிவசேனாவோ வென்றால் அது காங்கிரஸின் வெற்றியாகவே இருக்கும். மத்தியில் நாளை காங்கிரஸ் ஆட்சியமைத்தால் அது இம்மாநில சக்திகளின் ஆட்சியாக இருக்கும். கூட்டணிக்கும் இதற்கும் ஒரு நுட்பமான வித்தியாசம் உள்ளது - புரிந்துணர்வின், சமரசத்தின் அடிப்படையில் அமைவது கூட்டணி. ஆனால் இது ஒரு பல்-கட்சி பிரதிநுத்துவ கட்சியமைப்பாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில்லாத மாநில வாக்காளர்களை ஈர்க்க இது உதவும்


சுருக்கமாக சொல்வதானால், காங்கிரஸுக்குத் தேவை காந்திகளை வெளியேற்றுவது அல்ல, கட்சி தன் கொள்கையை மாற்றாமலே அடையாளத்தை, செயல்முறையை, உள்கட்டமைப்பை முழுக்க மாற்றியமைப்பது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கவிதை: பயணப் படிமங்களின் இணைகோட்டு சந்திப்பு

மொழி சங்கேத சொற்களால் ஆனது. இச்சொற்கள் ஒன்றை ஒன்று பிரதிபலிக்கின்றன என்று நமக்கு தெரியும். இந்த சங்கேதக் குறிகளை இணைய வைத்து, மோதவிட்டு கவிதையின் சில சாத்தியங்களை படைப்பாளியால் அடைய முடியும். இத்தகைய செயல்முறைகளில் ஒன்றை தேடிக் கண்டுபிடிப்பது தான் இக்கட்டுரையின் நோக்கம். பள்ளிக் காலத்தில் ஜாலவித்தைக்காரர்கள் வந்து போன பின் அவர்களின் சூட்சுமத்தை கண்டுபிடித்து விட்டதாய் அந்தரங்கமாய் மட்டும் குசுகுசுத்துக் கொள்வோம். அடுத்த முறை வரும் போது மர்மம் விலகாமல் அதிக ஆர்வமுடன் அவரை சூழ்ந்து கொள்வோம். அறிதல் மர்மத்தை அதிகமாக்கும். கொல்லாது. ஒரு கனவை மீட்டெடுப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும்? கவிதையின் அரூப இயக்கத்தை பொதுவயமாக வடிக்க முயல்வதும் அதற்கே. கோயில் கருவறையின் மென்வெளிச்சத்தில் நுண்பேசியின் படக்கருவியை இயக்கி சாத்தி வைத்து விட்டு இயக்கத்தை அறிவோம். அறிதல் அபச்சாரமில்லை. பயணப் படிமம் என்பது காக்னிடிவ் பொயடிக்ஸ் எனும் சமகால விமர்சனத்தின் ஒரு முக்கிய கருவி. இக்கருவியை மனுஷ்யபுத்திரனின் “காலை வணக்கங்கள்” எனும் ஒரு கவிதையில் சொருகப் போகிறோம். முதலில் கருவியை பழகுவோம். அன்றாட மொழியில் ஒன்று ம...

நினைவில் இருந்து அழிக்கப்பட்ட நாட்களின் தடங்கள்

2010 டிசம்பர் 24-26 வரை சென்னை நவீன மாநகரத்தில் எனக்கு நடந்தவை ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு படிப்பறிவற்ற நபருக்கு கூட நடக்க முடியாதவை. எனது விருப்பத்தையும் மீறி எனக்கு தகுந்த சிகிச்சை மறுக்கப்பட்டது; மரணத்தின் விளிம்பு வரை கொண்டு செல்லப்ப்பட்டேன். இரண்டாம் கோமா நிலைக்கு சென்றேன்.

கவனம் திருப்பும் ஆயுதம் - ஹிட்லர், மோடி, விஜய்: ஒற்றுமையும் வேறுபாடும்

  தவெக ஒரு 'ஆட்டத்திருப்பக்' கட்சி அல்ல கவனம் திருப்பும் (distracting) கட்சி எனத் தோன்றுகிறது. ராஜ்தீப் சர்தேசாய் தன் யுடியூப் அலைவரிசையில் மோடியின் ‘திமாகி நக்சல்’ பேச்சுச் சேட்டையைப் பற்றிப் பேசும்போது அது ஒரு திட்டமிடப்பட்ட கவனத் திருப்பல் பேராயுதம் (weapon of mass distraction) என்கிறார். அமெரிக்கா முன்பு சதாம் ஹுசைன் அணுகுண்டு வைத்திருப்பதாகச் சொல்லி இராக் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து பேராபத்து ஆயுதங்கள் குறித்து உலகம் முழுக்க விவாதங்கள் நடந்தன. ஆனால் அவை உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தை மறைத்து மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக உருவாக்கப்பட்ட பிரச்சாரம் மட்டுமே எனப் பின்னர் தெரிய வந்தது. உலகம் முழுக்க வலதுசாரிகள் இத்தகைய கவனம் திருப்பும் பேராயுதங்களைக் கொண்டே மக்களைக் கட்டுப்படுத்தி தம் வசம் வைத்திருக்கிறார்கள், தமது மோசமான நிர்வாகம் குறித்து விவாதம் எழாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்கிறார் சர்தேசாய். அவர் மோடி அண்மையில் தனக்கெதிராக ஜென் ஸீ போராட்டம் தனது நிர்வாகக் கோளாறுகளை முன்வைத்து நடந்தபோது கவனத்தைத் திருப்பும் வண்ணம் கோட்பாட்டுத் தீவிரவாதிகள் பலர் இன்று உள்ளார்...